தமிழ்நாட்டின் பேச்சு மேடைகளில் அதிகம் நகலெடுக்கப்பட்ட உடல்மொழி இவருடையதாகத்தான் இருக்கும். தனது நற்றமிழாலும் நாவன்மையாலும் அரசியல் களத்தை கட்டிப்போடும் வல்லமை வாய்ந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 79வது பிறந்தநாள் இன்று.
வைகோ என்றால் சொல்வல்லன், சோர்விலன், புரட்சிப்புயல், ஆவேசம் கொள்பவர், ராசி இல்லாதவர், தோற்றுப் போன அரசியல்வாதி, சரியான தருணங்களில் தவறான முடிவு எடுப்பவர், கொள்கைக் குன்று என பல்வேறு கருத்துக்கள் நம் உள்ளங்களில் உதிக்கும்.
திமுக மாணவரணி தொண்டராக தொடங்கி மதிமுக தலைமையாக உருவெடுத்தது வரை பல நெருப்புக் களங்களை கண்டவர். 1964 ல் மாணவப் பருவத்தில் பேரறிஞர் அண்ணா முன்னிலையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு கருத்தரங்கில் பேசியபோதே கவனம் ஈர்த்தவர் வைகோ. இன்று, 2022 ல் மாமனிதன் வைகோ என்ற நிலையை அடைந்திருக்கிறார். தலைமைக்கு சொல்லப்படாத ஈழப்பயணமும், திமுக தலைவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் என்ற செய்தியும், 90 களின் அரசியல் களத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியவை.
திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு வஞ்சகம் காரணம் அல்ல, வாரிசை முன்னிறுத்த வேண்டும் என்பதே காரணம் என்று தன்மீதான புகாரை மறுத்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டவர் வைகோ. திமுகவின் ‘செங்குத்துப் பிளவு’ மதிமுக, செயல்பாட்டுக் களங்களில் சோபித்திருக்கலாம், ஆனால், அரசியல் களத்தில் பெரிதாக சோபிக்கவில்லை என்ற பார்வையும் உண்டு.
தமிழக அரசியல் நகர்வுகளில் ஆர்வம் கொண்டவர்கள், அதனை உற்றுநோக்குபவர்கள் வைகோவின் அரசியல் பயணத்தை நிச்சயம் அறிந்திருப்பர். அதனைக் கடந்து வைகோ சில முக்கியமான விடயங்களை சாதித்திருக்கிறார் என்பதும் மறுப்பதற்கு இல்லை. ‘மே 1’ தொழிலாளர் தினத்தை நாடு முழுவதும் அரசு பொது விடுமுறையாக அறிவிக்க காரணமாக இருந்தவர். தான் சிறையில் இருந்தபோது தொண்டர்களுக்கு எழுதிய 18,000 க்கும் மேற்பட்ட கடிதங்கள், அரசியல் ரீதியிலான சந்திப்புகள் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றவர். ‘நடைபயண நாயகன்’ வைகோ தனது பொதுவாழ்வில் இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான கிலோமீட்டர் பயணம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழீழ ஆதரவு, எழுவர் விடுதலை, ஸ்டெர்லைட், மதுவிலக்கு, முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ, கச்சத்தீவு என்றால் உடனே நினைவுக்கு வரும் முகங்களில் முக்கியமானவர் வைகோ. வைகோவின் அரசியல் நிலைப்பாடுகளை, கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பு தலைவர்களும் அவருடைய சொல்லின் வலிமையையும், செயல்பாட்டின் வீரியத்தையும் ஆமோதிப்பர்.
குடியரசு முன்னாள் துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமாக இருந்த வெங்கையா நாயுடு சமீபத்தில் கூறிய வார்த்தைகளை இங்கே குறிப்பிடலாம். ‘இந்தியாவில் உள்ள வலிமைமிக்க பேச்சாளர்களில் வைகோவும் ஒருவர், இதை சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை’
வைகோ, அரசியல் களத்தில் விமர்சனத்துக்கு உட்பட்டவர்தான். ஆனால், செயல்பாட்டுக் களத்தில் வீழ்த்தமுடியாதவர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mdmk leader vaiko, Vaiko