• HOME
  • »
  • NEWS
  • »
  • special-articles
  • »
  • ‘அழுகை... அழுகை ஊரெங்கும் அழுகை...’ நோய்க்கு முதல் மருந்து எது? - மருள் நீக்கியாரின் விளக்கம்

‘அழுகை... அழுகை ஊரெங்கும் அழுகை...’ நோய்க்கு முதல் மருந்து எது? - மருள் நீக்கியாரின் விளக்கம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஊரும் உலகமும், நாடும் நகரும் கொரோனா தொற்று நோயில் சிக்கித் தவிக்கின்றது. இதில் இருந்து மீண்டு வரவேண்டும் என மக்கள் போராடி வருகின்றனர்.

  • Share this:
மக்கள் நோய்த் தொற்றால் பரிதவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் நோய் பரவலும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. ஊரெங்கும் மரண ஓலங்கள் கேட்கின்றன. இறந்தவரின் உடல்கள் எரியூட்டுவதற்கு நீண்டநேரம் காத்துக்கிடக்கின்றன. இவை எல்லாம் தொடரும் காட்சிகளாக இருக்கின்றன. மக்களோ பயத்தில் இருக்கின்றனர்.

இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், இந்த துன்பங்களை நினைத்தவாறு கவலை தோய்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக மருள் நீக்கியார் சென்று கொண்டிருந்தார். ஊர் மக்களுக்கு பல நல்ல ஆலோசனைகளை சொல்லிவரும் அவரிடம் இது குறித்து கேட்டறியலாம் என எண்ணி அவரை நோக்கிச் சென்றார்.

“வணக்கம் மருள் நீக்கியாரே, ஊரே இப்படி நோய்க்கு இரையாகிக் கிடக்கின்றதே, இதற்கெல்லாம் விடிவு காலம் இல்லையா?” என்று வருத்ததுடன் கேட்டார். அவரின் வேதனையை உணர்ந்த மருள் நீக்கியார், அவருக்கு ஆறுதல் கூறி பேசத் தொங்கினார்.

“இந்த உலகம் இது போன்ற எத்தனையோ வியாதிகளைப் பார்த்திருக்கின்றது. அதனை எதிர் கொண்டு போராடி வென்று வந்துள்ளது. எந்த நோயும் மனித இனத்தை அழித்தவிட்டதாக சரித்திரம் இல்லை. அனைத்து சிக்கல்களுக்கும் மனிதன் தனது செயல் மூலம் தீர்வு கண்டு வந்திருக்கிறான். என்ன வியாதி என்றே தெரியாமல் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்த காலமும் இருந்தது. ஆனால், இப்போதோ இது என்ன நோய் இதன் தன்மை என்ன? இதில் இருந்து எப்படி தற்காத்துக் கொள்வது என்றெல்லாம் கச்சிதமாக அறியும் விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. இவை நம் காலத்து மக்களுக்குக் கிடைத்த பாக்கியம்.

ஆனால், நம் நாட்டில் ஒரு வியாதி தொடர்ந்து இருந்து வருகின்றது. அந்த வியாதி மற்ற வியாதிகளின் பலம் அதிகரிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது, அதுதான் மனநோய். அவநம்பிக்கை, பயம், செயல் அழிந்து நிற்பது முதலியன. நாம் பெரும்பாலும் மாத்திரை, மருந்துகள் என புற மருந்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறோம். அகமும் நோய் தீக்கும் முக்கிய காரணியாக இருப்பதை மறந்துவிடுகிறோம். இரண்டும் சேர்ந்துதான் நோயை வெல்லும் அருமருந்தாக செயல்படுகின்றது.

நம்பிக்கையை மட்டுமே பிரதானப்படுத்துவது, அல்லது மாத்திரை மருந்துகளை மட்டுமே பிரதானமாகக் கொள்வது என இரண்டு எதிர் முணைகளுக்குச் செல்லும் போக்கும் அதிகரித்துள்ளது. இரண்டும் இணைந்து ஒன்றுபட்டு செயலாற்றும்போது மட்டுமே நம்மால் வெற்றியை அடையமுடியும். முதலில் பதற்றத்தையும் பயத்தையும் விட்டொழிக்க வேண்டும். அனைத்து துறையினரும் தங்களின் கடமைகளை நன்கு உணர்ந்து செயலாற்ற வேண்டும். கவலை பட்டுக்கொண்டே இருப்பதால் எந்த நன்மையும் விளைந்துவிடப் போவதில்லை.

பயமும், அவநம்பிக்கையும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடுவதாக சொல்வார்கள். எந்த வித நோயையும் வெல்வதற்கு நம்பிக்கை எனும் அகமருந்து மிகவும் முக்கியமானது. அதேபோல பிற புற மருந்துகளும் முக்கியமானவை. மக்கள் கவலையில் இருக்கும் போது இலக்கியங்களும், கலைகளும் அவர்களுக்கு நம்பிக்கை தரவேண்டும்.”என்று கூறிய மருள் நீக்கியார், தனது கண்களை அகல திறந்து சுற்று முற்றும் பார்வையிட்டார். பின்னர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். உடனே ஓர் பாடலை பாடத் தொடங்கினார்.

“அன்பான சொற்களே எழுந்து வருக
ஆதரவு கரம் நீட்டி மக்களை அள்ளி அணைக்க!
மருந்தாகும் மொழிகளே உயிர் பெற்று எழுக
மக்கள் படும்பாட்டைக் கண்டு நம்பிக்கை தருக!

வரலாற்று உண்மைகளை வாயார மொழிக
எல்லாமும் மாறும் என்ற தீபஒளி பரவ!
எந்நோய்க்கும் முதல் மருந்து மனமருந்து என்பர்
இந்நோயை வெல்ல நல் மருந்தை தருக!

மகிஷாசுர மர்த்தினிகள் மர்த்தனம் புரிந்து
தீமையைக் கண்டு திட்டமிட்டு வென்று
நல் வாழ்வை அன்போடு கரம் சேர்த்த நாடு!

அழுகை அழுகை ஊரெங்கும் அழுகை
துயரம் துயரம் திசை எங்கும் மரணம்
எல்லாம் மாறும் இன்பங்கள் சூழும்
கலங்காதிரு மனமே துன்பங்கள் விலகும்.

இரவே நிலையாய் இருப்பதும் இல்லை
விடியாத பொழுதை நாம் காணவில்லை!
கல் கொண்டு கனி உண்டு வாழ்ந்தவன் மனிதன்
கடல் கண்டு கரையறிந்து நிலம் சேர்ந்த தீரன்.

தேவைகள் நம்மை விடுவதும் இல்லை
தீராத துன்பம் என்று உலகத்தில் இல்லை...
விடை கண்டு மடை கொண்டு விளைவித்த மனிதன்
உணர்வற்று வீழ்தல் நியாயம் இல்லை!

Must Read : வெற்றிப் புன்னகை... ஒரு தாயின் வைராக்கியம்!

 

எழுந்து வா! உயிரின் ஒளியே வாழ்வின் மொழியே
நடந்து வா! மக்கள் தேடும் கலையே மருந்தாகும் சுவையே!” என்று பாடிக் கொண்டே அங்கிருந்து கிளம்பினார் மருள் நீக்கியார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: