Home /News /special-articles /

கார்ட்டூனிஸ்ட்; மராத்திய இன அரசியல்; இந்துத்துவா! பால்தாக்கரேவின் பயணம்

கார்ட்டூனிஸ்ட்; மராத்திய இன அரசியல்; இந்துத்துவா! பால்தாக்கரேவின் பயணம்

பால் தாக்கரே

பால் தாக்கரே

பல பாலிவுட் நடிகர்களைக் கடுமையாக விமர்சித்த தாக்கரேவின் சாம்னா பத்திரிகை, தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை மனதார பாராட்டியது.

  • News18
  • Last Updated :
- ஜீவசகாப்தன்

மகாராஷ்டிரா அரசியலில் புயலைக் கிளப்பிவரும் சிவசேனாவின் நிறுவனர் பால்தாக்கரே அதிரடி அரசியலால் இந்திய அரசியலைத் திரும்பிப் பார்க்கவைத்தவர். அவரைப் புரிந்துகொள்வதிலிருந்து அவருடைய கட்சியின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் அரசியல், பொருளாதாரம், சமூக காரணிகளில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் அமைப்பு சிவசேனா. அரை நூற்றாண்டு காலமாக மராத்திய அரசியல்வாதிகளுக்கும், மராத்தியர் அல்லாத மக்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக் கொண்டே இருந்தவர் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே. சிவசேனாவை தொடக்கிய காலம் தொட்டு, தனது இறுதிக்காலம் வரை தான் கொண்ட மராத்திய மண்ணின் மைந்தர்கள் என்ற அரசியலில் வீரியமாக செயல்பட்டவர். தான் கொண்ட அரசியல் நிலைப்பாட்டிற்காக, அமிலம் கலந்த வார்த்தைகளால் எதிர் தரப்பினரை விமர்சிப்பது அவரது பாணி.

மகாராஷ்டிரா ஜோதிராவ் பூலே, டாக்டர் அம்பேத்கர் போன்ற அடித்தட்டு மக்களுக்கான அரசியல் பேசிய பல ஆளுமைகளைத் தந்த மண். முற்போக்கு கருத்தியலுக்கும், விடுதலை அரசியலுக்கும் நெருக்கமான தொடர்புள்ள மாநிலம் மகாராஷ்ட்டிரா. ஆனால், பால்தாக்கரேவின் அரசியல் எழுச்சி என்பது, மராத்திய மண்ணில் வலதுசாரி தன்மை மிகவும் இயல்பானது என்று கருதுமளவிற்கான சூழலை உருவாக்கியது .

பால்தாக்கரேவின் முழக்கம் என்ன? மராத்திய மண் மராத்தியர்களுக்கே! இதுதான் பால்தாக்கரேவின் முழக்கம்! இது ஒரு வகையில், தமிழகத்தில் சமூக நீதி இயக்கங்கள் கையிலெடுத்த முழக்கம்தானே.! பெரியாரின் கோட்பாடும் இதுதானே! என்ற கேள்விகள் எழலாம். உண்மைதான். தமிழ் நாடு தமிழருக்கே! என்ற முழக்கத்தை இந்திய துணைக்கண்டத்தில் முதன் முறையாக எழுப்பியவர் பெரியார்தான். தமிழக நிலப்பரப்பில் இருக்கும் மார்வாடி, மலையாள முதலாளிகளுக்கு எதிராக 1950-களிலேயே மாநாடு நடத்திய ஒரே இயக்கம் திராவிடர் கழகம். ஒரே தலைவர் பெரியார்.

இந்தியா பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுபடாத காலகட்டத்திலேயே, மொழி அடிப்படையில் தேசங்கள் அமைய வேண்டும். தமிழ்நாடு தனியாக வேண்டும் போன்ற முழக்கங்களை எழுப்பியவர் பெரியார். ஆனால், அவரை இனத்தூய்மைவாதம் பேசுகிறார். தமிழ் பாசிச உணர்வுடன் இயக்கம் நடத்துகிறார் என்று யாரும் விமர்சிப்பதில்லை. இடதுசாரிகள் உட்பட முற்போக்காளர்கள் அனைவரும், பெரியாரை காலத்தின் தேவை என்றும், சமூகநீதி தலைவர் என்றும் புகழாரம் சூட்டுகின்றனர். ஆனால், பெரியாரைப் போலவே, தன்னுடைய மாநில நலனிற்காகவும், தன்னுடைய மராத்திய மக்களின் பொருளாதார நலன் பாதிக்கப்படுவதற்காகவும் குரல் கொடுத்த பால் தாக்கரேவை பாசிஸ்ட் என்றும், இனவாதி, என்றும் விமர்சிப்பது சரியா ? போன்ற கேள்விகள் நம் முன் நிற்கின்றன.

கேசவ் தாக்கரே என்னும் பிரபல எழுத்தாளரின் மகனாகப் பிறந்தவர்தான் பால்தாக்கரே. கேசவ் தாக்கரே சம்யுக்த மகாராஷ்டிரா என்னும் இயக்கத்தில் தீவிரமாக இயங்கியவர். மராத்தி மொழி பேசும் மக்களுக்காக மகாராஷ்டிரா என்னும் மாநிலம் உருவானதில் மிகப் பெரும் பங்காற்றியவர். மும்பை மகாராஷ்டிராவின் தலைநகரானதிலும் கேசவ் தாக்கரேவின் பங்கு அதிகம். அவரின் தொடர்ச்சியாக தனது அரசியல் பாதையை வகுத்தார் பால சாஹேப் தாக்கரே என்னும் பால்தாக்கேர. கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவராக சித்தரிக்கப்படும் பால் தாக்கரே தனது வாழ்க்கையைத் தொடங்கிய இடம் பத்திரிகையாளராக.அரசை விமர்சித்து துணிச்சலாக கேலிச் சித்திரம் வரையும் கார்டுனிஸ்ட்டாகத்தான் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அன்றைய ஆளும் கட்சியை எதிர்த்து அவர் வரைந்த கேலிச் சித்திரங்கள் அவருக்கு பணி இழப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தன. பால்தாக்கரேவின் கேலிச் சித்திரங்கள் ”டைம்ஸ் ஆப் இந்தியாவின்” ஞாயிறு பதிப்புகளில் மிகவும் பிரபலம். 50-களின் தொடக்கத்தில் பத்திரிகைகளில் பணிபுரிந்த தாக்கரே, 60-ம் ஆண்டு தனது சகோதரருடன் இணைந்து, மர்மிக் என்னும் கேலிச்சித்திர வார இதழைத் தொடங்கினார். தன்னுடைய கருத்தை அப்பட்டமாக தெரிவிக்க துடிக்கும் அவரது இயல்பினால், மற்றவர்களின் கீழ் அவரால் வேலை பார்க்க முடியவில்லை.

தாக்கரே தொடங்கிய மர்மிக் இதழ் மராத்தியர் அல்லாதவர்களைக் குறி வைத்தே இயங்கத் தொடங்கியது. குறிப்பாக, மராத்தியர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டுவதில் மராத்தியரல்லாதவர்களின் பங்கு என்ன ? என்ற பரப்புரையை பக்கம் பக்கமாக செய்தது. குறிப்பாக, தென்னிந்தியர்கள், மற்றும் குஜராத்தி வணிகர்களை இலக்காகக் கொண்டு அந்த பத்திரிகை இயங்கியது. அதனைத் தொடர்ந்து நாம் மராத்தியர் என்ற முழுக்கத்தை முன் வைத்து 1966-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ம் தேதி சிவசேனாவைத் தொடங்கினார் பால் தாக்கரே.

சிவசேனா தொடங்கிய அந்த காலகட்டதில், மும்பையின் நிலையை நாம் தெரிந்துக் கொள்ளவேண்டும். இந்தியாவின் காஸ்மோபாலிடன் நகரங்களில், பல்வேறு தேசிய இனங்கள் கலந்து வாழும் நகரங்களில், முதன்மையானது மும்பை. மராத்திய சினிமா ரசிகர்களை இந்தி நடிகர்கள் ஆட்கொண்டிருந்தார்கள். மராத்திய சினிமாக்களை விட, இந்தி மொழி சினிமாக்கள் மராத்திய மண்ணில் பேசு பொருளாகியது. இந்தி சினிமா கதாநாயகர்களே மராத்திய மண்ணின் சூப்பர் ஸ்டார்களாக கொண்டாடப்பட்டனர். இந்தி சினிமாவின் தலைநகராக மும்பை மாறியிருந்தது. பெரும்பணக்காரர்களாக மார்வாடிகளும், வட இந்தியர்களும் மராத்திய மண்ணில் வலம் வந்தனர். அவர்களின் நிரந்தர அடையாளமாக மும்பை மாறியிருந்தது. இந்த சூழலில்தான் சிவசேனாவைத் தொடங்கினார் பால்தாக்கரே.

“மராத்திய மண்ணின் மைந்தனுக்கு சமூக ,பொருளாதார அடையாளமே இல்லாத நிலை உள்ளது. மராத்தியர் என்ற பாரம்பரிய பெருமை மிக்க இனம் தன் இருத்தலை இழந்து வருகிறது” என்ற அரசியலை பால்தாக்கரே முன் வைத்தார். மராத்தியர் என்ற பெருமிதத்தை மக்களிடம் விதைத்தார். அதே சமயம் நாம் பாதிக்கப்படுகிறோம், சுயத்தை இழக்கிறோம் என்பது போன்ற அவரது கட்டுரைகள் மராத்திய இளைஞர்களை ஈர்த்தது. பால்தாக்கரேவின் ஈர்ப்பு மிக்க கட்டுரைகள் சாம்னா பத்திரிகையில் பிரசுரமாகும். பால்தாக்கரேவின் கட்டுரைகளுக்கு மராத்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது.சிவசேனா தொடங்கிய அந்த காலகட்டத்தில் தமிழர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இந்தியாவின் அறிவுசார் சூழலில் முதன்மையான இடத்தை வகிக்க கூடியவர்கள் தமிழர்கள். வளர்ச்சியடைந்த மாநிலங்களான மும்பை, பெங்களூர் போன்ற பகுதிகளாகட்டும், தலைநகரான டில்லியாகாட்டும் அங்கு தமிழர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். இந்தியாவின் தன்மையையும் தமிழர்களின் பாரம்பரியத்தையும் இணைத்து பார்க்கும் நுட்பம் தெரிந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியும். அந்த வகையில் இந்தியாவின் வர்த்தக தலைநகராக விளங்கிய மும்பையில் தொழில்நுட்ப அறிவும், ஆங்கில புலமையும் மிகுந்த தமிழர்கள் இடம்பெற்றது மிக இயல்பான ஒன்று. ஆனால், பால்தாக்கரே மராத்தியர்களின் இடத்தை தமிழர்களும், மலையாளிகளும் ஆக்கிரமித்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்த பிரச்சாரத்தால், தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில், ”சிவசேனா தசரா பேரணி” ஒன்றை நடத்தினார் பால்தாக்கரே. அந்த பேரணியில், தமிழர்களை அடித்து துரத்தும் நடவடிக்கைகள் தொடங்கின. அதில் அதிகம் பாதிக்கப்பட்டது சாமான்ய தமிழர்கள்தான். தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் தொழிலாளர்கள், நடைபாதை கடை வியாபாரிகள், தமிழில் பெயர் பலகை வைத்திருக்கும் வணிகர்கள் என அடையாளம் கண்டு தாக்குதல் நடத்தினர். மலையாளிகள் வைத்திருக்கும் டீ கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சிவசேனா நடத்திய இந்த பேரணிக்கு சில காங்கிரஸ் தலைவர்களும் ஆதரவு தந்தனர் என்பது வரலாறு.

சிவசேனா தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்திலும் மிகப் பெரும் புரட்சி நடந்துக் கொண்டிருந்தது. ஆம். மொழிப் புரட்சி. தமிழைக் காக்கும் முயற்சி, தமிழர்களின் பொருளாதாரத்தைக் காப்பாற்றும் போராட்டம் என தமிழக வீதிகளிலும் பரபரப்பு தொற்றியிருந்தது. அன்றைய காங்கிரஸ் அரசு, இந்தியை அலுவல் மொழியாக அறிவித்ததைத் திரும்ப பெறக்கோரி தமிழகமே போர்க்கோலம் பூண்டிருந்தது. மாணவர்கள் தன்னியல்பாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டாலும், இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை உருவாக்கியதில் தி.மு.கவின் பங்கு கணிசம்.

மாணவர்களின் தற்கொலைச் செய்திகள் ஆங்காங்கே தமிழர்களைக் கொதித்தெழச் செய்தது. அரசின் துப்பாக்கி ரவைகள் தமிழ் மாணவர்களின் உயிர் பலிக் கேட்டுக் கொண்டிருந்தன. மகாராஷ்ட்டிராவில் பால்தாக்கரேவும் இனத்திற்கான உரிமையைத்தான் கோருகிறார். ஆனால், பால்தாக்கரேவின் இலக்கு, இந்தியைத் திணித்த மத்திய அரசாங்கம் கிடையாது. வெளிமாநிலத்திலிருந்து பிழைக்க வந்த வட இந்தியர்களும் தமிழர்களும்தான். இந்தி மொழியை தேசிய மொழியாக அலுவல் மொழியாக ஏற்றுக் கொள்வதில் பால்தாக்கரேவிற்கு எந்த தயக்கமும் இல்லை. இந்தி எதிர்ப்பு போராட்டங்களையும் நடத்தியதில்லை. ஆனால், வட இந்தியாவைச் சேர்ந்த பானி பூரி தொழிலாளர்கள், கட்டிட வேலைப் பார்க்கும் உதிரி தொழிலாளர்களை எதிரிகளாக சித்தரித்தே பால்தாக்கரேவின் பேச்சுக்களும், தலையங்க கட்டுரைகளும் இருந்தன.

66-ல் கட்சித் தொடங்கிய பால்தாக்கரே குறுகிய காலத்தில் மகாராஷ்டிராவின் அடையாளமாக மாறிப்போனார். சிவசேனாவின் இலக்கு பட்டியலில், இசுலாமியர்களும் இருந்தனர். மராத்திய மண்ணிலே பிறந்திருந்தாலும் இசுலாமியர்களை மண்ணின் மைந்தர்களாக ஏற்கவில்லை. இசுலாமியர்கள் குறித்து அவ்வப்போது பால்தாக்கரே தெரிவிக்கும் கருத்துக்கள் தேசிய அளவில் விவாதங்களை கிளப்பின.

80-களின் தொடக்கத்தில், ’இசுலாமியர்கள் புற்றுநோயைப் போன்றவர்கள். அதற்கு நாம் சிகிச்சை செய்தேயாக வேண்டும்” என்று பேசினார் பால்தாக்கரே. மேலும் பாபர் மசூதி இடிப்பையொட்டி மிகப்பெரிய அளவில் கலவரங்கள் நடைபெற்ற மாநிலம் மகாராஷ்டிரா. அப்போதைய மும்பை மாநகரம் கலவரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. மும்பையில் நடந்த கலவரங்கள் குறித்து விசாரிக்க ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை, இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக பால்தாக்கரே இருந்தார் என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியது. அந்த அறிக்கையை இந்துக்களுக்கு எதிரான அறிக்கை என்று ஒற்றை வரியில் விமர்சித்துவிட்டு நகர்ந்தார் பால் தாக்கரே.

ஒரு கட்டத்தில், ”இசுலாமியத் தீவிரவாதம் வளர்ந்து வருகிறது. அதை எதிர்கொள்ள ஒரே வழி இந்து தீவிரவாதம்தான்” என்று பால்தாக்கரே எழுதினார். மேலும், “இந்தியாவையும், இந்துக்களையும் பாதுகாக்க தற்கொலைப் படை தேவை என்று எழுதி ஒட்டு மொத்த இந்தியாவையும் மும்பை பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் பால் தாக்கரே. மராத்தியர்களின் மண் சார்ந்த அரசியலில் தன் பயணத்தை தொடங்கிய பால்தாக்கரே இசுலாமிய எதிர்ப்பை தீவிரப்படுத்தினார்.

வீர சிவாஜியை தனது முன்னோடியாக சித்தரித்து இசுலாமியர்கள்தான் முதன்மையான எதிரிகள் என்று வரையறுத்தார். தமிழகத்தில் எழுந்த இன எழுச்சி, மதவாத, சாதிய எதிர்ப்பு மனநிலையில் தமிழர்கள் என்ற மனநிலையில் சங்கமித்தது. ஆனால் சிவசேனா மராத்தியர் அரசியலை இந்து ராஷ்டிரா அரசியலுடன் இணைத்தார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தோற்றுவித்தவர்கள் மகாராஷ்டிரா மண்ணைச் சேர்ந்தவர்கள். நாக்பூரில்தான் அவர்களுக்கான கருத்தியல் பயிற்றுவிக்கப்பட்ட களம். அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ் கருத்தியல் பால்தாக்கரேவிற்கு நெருக்கமானது. ஆகையால், இந்து ராஷ்ட்டிரம் என்பதே அவரது இலக்காக இருந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தனக்கு இருக்கும் கருத்தியல் நெருக்கம்தான் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள உதவியது.

பால்தாக்கரே இறந்த பிறகு கூட, அடுத்த குடியரசுத் தலைவர் யார் ? என்ற கேள்வி எழுந்த போது, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்தை குடியரசுத் தலைவராக்கவேண்டும் என சிவசேனா எம்.பியும் மூத்த தலைவருமான சஞ்சய் ராவுத் வேண்டுகோள் விடுத்தார். தனது கட்சியைச் சேர்ந்தவர்களை பரிந்துரைக்காமல், ஆர்.எஸ்.எஸ் தலைவரைக் குடியரசுத்தலைவராக வேண்டும் என்று கேட்கும்போதே, சிவசேனாவிற்கும் இந்துத்துவ அமைப்பிற்குமிடையேயான நெருக்கத்தை புரிந்துக் கொள்ள முடியும். அதனால்தான்,எப்போதெல்லாம் பா.ஜ.கவிற்கும் சிவசேனாவிற்குமிடையே பிரச்சனைகள் ஏற்படுதோ, அப்பொதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் தலையிட்டு தீர்த்து வைக்கிறது. இன்று தமிழகத்தில் அ.தி.மு.க, பீகாரில் நிதிஷ்குமார் என பல்வேறு மாநிலக் கட்சிகளுடனும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறது.

ஆனால், கொள்கை அடிப்படையிலான கூட்டணி என்றால், அது சிவசேனாவுடனான கூட்டணிதான். பால்தாக்கரேயின் இந்துத்துவ பாசம், இசுலாமியர் எதிர்ப்பு, தென்னிந்திய எதிர்ப்பு என எல்லாவற்றையும் விட முக்கியமான அம்சம் ஒன்று விவாதிக்கப்பட வேண்டும். அது பால்தாக்கரேவின் கம்யுனிச எதிர்ப்பு. அவர் கம்யுனிஸ்ட் கட்சிக்கு எதிர்ப்பாளர் கிடையாது. சோசலிச கொள்கைக்கே எதிரானவர்.
மகாராஷ்டிராவில் வீரியமாக செயல்பட்டு வந்த இடதுசாரி தொழிற்சங்கங்களை ஒடுக்கியதில் பால் தாக்கரேவிற்கு மிக முகாமையான பங்கு உண்டு. 1967-ம் ஆண்டு அப்போதைய மாநில அரசிற்கு ஆதரவான அமைப்பாகவே சிவசேனா இருந்தது. அப்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக, அந்த கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. இதற்கு சிவசேனாதான் காரணம் என கம்யுனிஸ்ட்டுகள் குற்றம் சாட்டினர். அதன் பிறகு, தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்தார் பால்தாக்கரே.

மகாராஷ்டிராவின் முக்கியமான தொழிற்சங்கத் தலைவரும், தொழிலாளர்கள் மத்தியில் பிரபலமானவருமான அறியப்பட்ட கிருஷ்ண தேசாய் கொலை செய்யப்பட்டதிலும் சிவசேனாவிற்கு தொடர்பிருப்பதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டினர். மராத்திய இனத்திலிருக்கும் தேசிய முதலாளிகளுக்கு இடையூறாக தொழிற்சங்கங்களும், கம்யூனிஸ்ட்டுகளும் செயல்படுகிறார்கள் என்ற பரப்புரையை பால் தாக்கரே தீவிரப்படுத்தினார். 70-களின் தொடக்கத்தில் தாக்கரே செய்த பரப்புரை, மராத்திய முதலாளிகளுக்கும், மராத்திய தூய்மைவாதம் பேசுவோர்க்கும் சாதகமாக அமைந்தது. மராத்திய மண் வளர்ச்சி பெற வேண்டுமானால்,தொழிற்சங்கங்கள் ஒழிய வேண்டும் என்ற மனநிலையை ஏற்படுத்தினார். இந்த பரப்புரையும் மராத்தியர்கள் மத்தியில் சிவசேனாவிற்கு சாதகமான வளர்ச்சியைத்தான் கொடுத்தது.

கம்யுனிஸ்ட்டுகளுக்குப் பிறகு பால்தாக்கரேக்கு சவாலாக இருந்த இயக்கம் தலித் பேந்தர்ஸ். இந்த தலித் பேந்தர்ஸ் அமைப்பு தமிழகத்தில் மலைச்சாமி என்பவர் தலைமையில் இயங்கியது. அவரது மறைவிற்குப் பின்னர், திருமாவளவன் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றம் பெற்று, தமிழ்தேசிய பாதையில் சாதி ஒழிப்பு அரசியல் என்ற கொள்கை முழக்கத்துடன் செயல்பட்டு வருவதை தமிழ்நாடு அறியும். மகாராஷ்டிராவில், இந்தியக் குடியரசுக் கட்சி என்ற மற்றொரு தலித் அமைப்பு காங்கிரசிற்கும் சிவசேனாவிற்கும் ஆதரவாக செயல்பட, மற்றொரு தலித் அமைப்பான தலித் பேந்தர்ஸ் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தது. சிவசேனாவிற்கும் தலித் பேந்தர்ஸுக்குமிடையே ஏற்பட்ட கலவரங்கள் தலித் மக்களுக்கு எதிரான கலவரங்களாக மாற்றம் பெற்றன. 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு, மராட்வாடா பல்கலைகழகத்திற்கு அம்பேத்கர் பெயர் சூட்ட முடிவெடுத்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரே அரசியல் கட்சி சிவசேனா மட்டுமே. தலித் தலைவராக மட்டுமல்லாமல், எல்லா கட்சிகளும் ஏற்றுக் கொள்ளும் தலைவராக இருக்கும் அம்பேத்கரின் பெயரை பல்கலைக்கழகத்திற்கு சூட்டுவதற்கு வலதுசாரி, இடதுசாரி என எந்த அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், பால் தாக்கரே கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார்.

மராத்வாடா பல்கலைகழகத்தின் பாதிக்கு மட்டும் அம்பேத்கர் பெயரையும், மற்றொரு பகுதிக்கு சுவாமி ராமனந்த் தீர்த்தரின் பெயரையும் வைத்துக் கொள்ளலாம் என்ற சமரச தீர்வை நோக்கி அரசு இறங்கி வந்தது. ஆனால், பால் தாக்கரே பாதி அளவிற்கு கூட அம்பேத்கர் பெயரை வைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அரசின் இந்த முடிவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு நடத்தினார் பால் தாக்கரே.

அம்பேத்கர் எதிர்ப்பு செயல்பாடுகள் மூலமாக, தலித் அல்லாத இதர சமூகத்தினரின் வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்பது சிவசேனாவின் திட்டம். மகாராஷ்டிராத்திலுள்ள எந்த கட்சியும் இவ்வளவு வெளிப்படையாக அம்பேத்கர் எதிர்ப்பை பேசவில்லை. ஆகையால், தலித் அல்லாதார் குறிப்பாக கிராமங்களிலுள்ள சாதி உணர்வாளர்களின் வாக்குகளைக் கைப்பற்றினார் பால்தாக்கரே.

தலித் எதிர்ப்பு நடவடிக்கைகளின் மூலம் தலித் அல்லாதர் வாக்குகளைப் பெற்ற பால்தாக்கரேவிற்கு ராம்தாஸ் அத்வாலே என்ற தலித் தலைவரும் ஆதரவு தெரிவித்தார். அவர் இன்றளவும் சிவசேனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் தலித் அமைப்பைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஆவார்.

தமிழர்கள், பீகாரிகள், மலையாளிகள், இசுலாமியர்கள், சொந்த மாநிலத்திலிருக்கும் பட்டியல் சமூகத்தினர் என தாக்கரே பல்வேறு தரப்பினருடனும் மோதல் போக்கைக் கடைபிடித்தார். இத்தைகயை செயல்பாடுகள் ஒருபுறமிருந்தாலும், அவரது கட்சி வளர்ந்து கொண்டேதானிருந்தது. 95-ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடித்தனர். அப்போது, பால்தாக்கரே எந்த பதவியையும் வகிக்காமல், பின்னால் இருந்து அரசை இயக்குபவராக இருந்தார். கட்சி, அமைப்புகள் மட்டுமல்ல எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், அவர்களை விமர்சிக்க தயங்கமாட்டார் தாக்கரே. சச்சின் டெண்டுல்கர் ஒரு முறை மும்பை இந்தியா முழுமைக்கும் சொந்தம் என்று கூறியதற்கு, தனது சாம்னா பத்திரிகையில் மராத்திய மனங்களிலிருந்து சச்சின் விலகிவிடுவார் என்று கடுமையாகக் கண்டனங்களைப் பதிவு செய்தார்.

பல பாலிவுட் நடிகர்களைக் கடுமையாக விமர்சித்த தாக்கரேவின் சாம்னா பத்திரிகை, தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை மனதார பாராட்டியது. ரஜினிகாந்த் தன்னை வாழ வைத்த தமிழ் மண்ணுக்கு உண்மையாக இருக்கிறார். அதே போல் மற்ற பாலிவுட் நடிகர்களும் தங்களை வளர்த்து விட்ட மராட்டிய மண்ணிற்கு உண்மையாக இருக்க வேண்டும் எனறு கேட்டுக் கொண்டார். ஒரு முறை பால்தாக்கரேவை சந்தித்து விட்டு வந்த ரஜினிகாந்த், நான் மராட்டியப் பெற்றோருக்கு பிறந்தவன், பெரியவர் பால் தாக்கரே கடவுளுக்கு ஒப்பானவர் என்று பாராட்டினார்.ஆரம்பத்தில் தமிழர்களுக்கு எதிரான, பட்டியல் சமூகத்திற்கு எதிரான கட்சியாக பார்க்கப்பட்ட சிவசேனாவிற்கு, பிற்காலத்தில் தமிழர்களும், பட்டியல் சமூகத்தினரில் குறிப்பிட்ட அளவிற்கு ஆதரவு தந்தனர். அவர்களை தங்கள் கட்சிக்குள் சேர்த்துக் கொண்டார் தாக்கரே. மும்பையைப் போலவே தமிழகத்திலும் தமிழ் சேனா என்ற பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் தாக்கரே போன்று பிற மாநில எதிர்ப்பு அரசியல் எடுபடவில்லை.

பால்தாக்கரே மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொறுத்த வரை தவிர்க்க முடியாத சக்தி. கட்சி, கொள்கைகளைத் தாண்டி பலரும் அவரது உதவியை நாடியிருக்கின்றனர். அவரது இறுதி ஊர்வலம் ஒரு அடி கூட நகர முடியாமல் பல மணி நேரம் அப்படியே நிற்குமளவிற்கு மக்கள் வெள்ளத்தில் தவித்தது. பால்தாக்கரே மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தி.

 

Also see:

Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி