திருப்பதி டூ மதுரை; லட்டு வித்தியாசம் எட்டு

திருப்பதி டூ மதுரை; லட்டு வித்தியாசம் எட்டு
திருப்பதி லட்டு
  • News18
  • Last Updated: November 8, 2019, 4:44 PM IST
  • Share this:
திருப்பதியில் வழங்கப்படும் லட்டுவிற்கும் மதுரையில் வழங்கப்படும் லட்டுவிற்கும் எட்டு வித்தியாசங்கள் உள்ளது. அவை எது மாதிரியான வித்தியாசம் என்பதை பார்க்கலாம்.

லட்டுக்கு பெயர் போன திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலை பின்பற்றி தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் வரக்கூடிய பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று முதல் துவங்கியுள்ளது.

திருப்பதி கோவிலுக்கு நிகராக தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில் மீனாட்சி அம்மன் கோவில் என்பதால் பக்தர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக திருப்பதி பாணியில் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் கையில் எடுத்தது. லட்டு வினியோகம் இன்று முதல் துவங்கிய நிலையில் திருப்பதி லட்டுவிற்கு மதுரை லட்டுவிற்கும் எட்டு வித்தியாசங்கள் இருப்பதை அறிய முடிகிறது.


அடையாளம், தயாரிப்பு, கலவை, சுகாதாரம், எடை, சுவை, வினியோகம், காப்புரிமை என எட்டு வித்தியாசங்களை நம்மால் அடையாளம் காண முடிகிறது.

முதலாவது அடையாளம்; திருப்பதிக்கு மொட்டை என்பதை கடந்து லட்டு என்கிற அளவிற்கு திருப்பதி லட்டு தனக்கான அடையாளத்தை பெற்று விட்டது. 1715ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி சீனிவாச பெருமாளுக்கு பிரசாதமாக லட்டு படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது; ஆனால் இதுவரை எந்த அம்மன் கோவிலிலும் லட்டு படைக்கப்பட்டதாக தரவுகள் இல்லை. மாறாக புட்டு மட்டுமே மீனாட்சி அம்மன் கோவிலின் அடையாளமாக உள்ளது.

அடுத்தது தயாரிப்பு; திருப்பதியை பொருத்தவரை நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் லட்டுகள் வரை தயாரிக்கப்படுகின்றன. இதற்காக பிரத்யேக இயந்திரங்கள் மாற்று ஏற்பாட்டுடன் திருமலை தேவஸ்தானம் வைத்துள்ளது. ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலை பொருத்தவரை ஒரே ஒரு இயந்திரம் மட்டுமே லட்டு தயாரிப்பிற்கு உள்ளது. அதுவும் சோதனை ஓட்டத்தின் போதே மூன்று முறை பழுதாகி சரிசெய்யப்பட்டது. நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் லட்டுகள் மட்டுமே அந்த இயந்திரத்தில் தயாரிக்க முடியும்; மாற்று இயந்திரம் கைவசம் இல்லை.அடுத்ததாக லட்டு கலவை; திருப்பதி லட்டுவில் கல்கண்டு, முந்திரி, உலர் திராட்சை, பாதாம் பருப்பு, ஏலக்காய் அதனுடன் சரிக்கு சரியாக நெய் சேர்க்கப்படும். ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலில் வழங்கப்படும் லட்டு, வழக்கமாக பேக்கரிகளில் தயாரிக்கப்படும் சுமார் ரக லட்டாகவே உள்ளது. திருப்பதி லட்டுவில் சேர்க்கப்படும் ருசி கூட்டும் வஸ்துகள் கலவை மீனாட்சி அம்மன் கோவில் லட்டுவில் மிகக்குறைவு.

அடுத்தது சுகாதாரம்; திருப்பதி திருமலை தேவஸ்தானம் தயாரிக்கும் லட்டுகளை பரிசோதிக்கவும், தரம் அறியவும் தனியாக பரிசோதனை கூடங்கள் உள்ளன. ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுகளை பரிசோதிக்க அது மாதிரியான பரிசோதனை கூடங்கள் இல்லை.

அடுத்தது மிக முக்கியமானது எடை; திருப்பதியில் வழங்கப்படும் லட்டுவின் எடை 175 கிராம். மீனாட்சி அம்மன் கோவிலில் வழங்கப்படும் லட்டுவின் எடை 30 கிராம் மட்டுமே. கிட்டத்தட்ட 5 மடங்கிற்கு மேல் எடை அதிகம் கொண்டதாக திருப்பதி லட்டு உள்ளது. சுவையை பொறுத்தவரை ஏற்கனவே கலவையில் குறிப்பிட்ட ருசி கூட்டும் பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்ட திருப்பதி லட்டு முன் மீனாட்சி அம்மன் கோவில் லட்டுவின் சுவை சுமார் ரகம் தான். வினியோகத்தை பொறுத்தவரை ஒருவருக்கு ஒரு லட்டு இலவசம் என்கிற முறையில் திருப்பதியில் வினியோகம் நடைபெறுகிறது.

இதே நடைமுறை தான் மீனாட்சி அம்மன் கோவிலிலும் என்றாலும் கூடுதல் லட்டு வேண்டுமென்றால் ஒரு லட்டுவிற்கு ரூபாய் 25 வீதம் பக்தர்கள் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மீனாட்சி அம்மன் கோவிலில் பணம் செலுத்தி லட்டு பெறும் திட்டம் எதுவும் இல்லை.

இறுதியாக எட்டாவது வித்தியாசமாக காப்புரிமை. 300 ஆண்டுகளுக்கு முன்பே நைவேத்தியம் செய்ததாக கூறப்படும் திருப்பதி லட்டுவிற்கு 2009ம் ஆண்டில் தான் அதற்கான காப்புரிமையை திருப்பதி தேவஸ்தானம் பெற்றது. அது இன்று வரை திருப்பதியின் அடையாளமாகவும் பெயர் சொல்லும் பிரசாதமாகவும் விளங்கிவருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு வழங்குவதே சரியா, தவறா என்கிற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதற்கான காப்புரிமையை பெறுவது என்பது எட்டாக்கனியாகவே தோன்றுகிறது.

ஆனாலும் மேற்கூறிய வித்தயாசங்களை எல்லாம் பூர்த்தி செய்வோம் என்கிற நம்பிக்கை இருப்பதாக அரசு தரப்பிலும் கோவில் நிர்வாகம் தரப்பிலும் கூறுகின்றனர்.
First published: November 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading