”ஓர் பாலின ஈர்ப்பு குற்றமில்லை”: சட்டம் ஏற்றுக்கொண்டது.. சமூகம்?

கோப்புப் படம்

ஓர் பாலின ஈர்ப்பு தவறு இல்லை என்று சட்டம் உறுதிப்படுத்தியிருந்தாலும், சிவில் சமூகம் அதை ஏற்றுக்கொள்ள எல்.ஜி.பி.டி. பிரிவினர் நீண்ட நெடிய பண்பாட்டு புரட்சி நடத்த வேண்டும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கியுள்ளது. ஓர் பாலின ஈர்ப்பு குற்றம் என்னும் இந்திய தண்டனை சட்டம் 377 பிரிவை ரத்து செய்து, பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. மிக நீண்ட போராட்டத்திற்கு பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டடுள்ளது. சட்டம் குற்றமில்லை என்று கூறினாலும் சமூக அங்கீகாரம் என்பது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

ஓரினச்சேர்க்கை வழக்கு கடந்து வந்த பாதை:

ஓர் பாலின ஈர்ப்பு குறித்து இந்தியாவில் பலவிதமான சர்ச்சைகளும் விவாதங்களும் தொடர்ந்து கொண்டே வருகின்றன. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவில், இயற்கைக்கு மாறான பாலினச் சேர்க்கை தண்டனைக்குரியது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து ஓர் பாலின ஈர்ப்புள்ளவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் ஓர் பாலின ஈர்ப்பு குற்றமில்லை என 2009-ல் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து 2013-ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

இதை எதிர்த்து ஓர் பாலின ஈர்ப்புள்ளவர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் நீதிமன்றமே முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஓர் பாலின ஈர்ப்பு என்பது குற்றமில்லை என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் 6-ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பை ஐநா பொதுச்செயலாளர் அண்டோனியோ கட்டரெஸ் உட்பட பல தரப்பினரும் வரவேற்றுள்ளனர். மேலும் தனிமனித உரிமையையும் அடையாளத்தையும் மறுப்பது நடை பிணமாக்குவதற்கு சமம் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஓர் பாலின ஈர்ப்பு திருமணம் குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இருவர் விரும்பி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றம் என்று கருத முடியாது. இருப்பினும் இவர்களின் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே 25 நாடுகளில் ஓர் பாலின ஈர்ப்பு அங்கிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியாவிலும் இது ஒரு தண்டனைக்குரிய குற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஓர் பாலின ஈர்ப்புள்ளவர்கள் குறித்தும் அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்தும் சமூதாய பார்வை எப்படி இருக்கிறது என்று ஆய்வு செய்ய வேண்டிய தருணம் வந்துள்ளது. ஒருவருக்கு இயற்கையானது என கருதப்படும் ஒன்று மற்றொருவருக்கு இயற்கைக்கு மாறானதாக இருக்கும். எனவே இதுகுறித்து மாணவர்கள், ஐடி ஊழியர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளிடம் இது குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.

ஐடி ஊழியரான வினோதினி ``ஓர் பாலின ஈர்ப்புள்ளவர்களுக்கு வழங்கப்பட்டத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து வழங்கப்பட்ட தீர்ப்புக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் இந்திய மக்கள் தொகை குறையும் அதுமட்டும்மல்லாமல் ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க முடியும். மேலும், எதிர்பாலினத்தவரிடம் மட்டுமே பாலியல் ரீதியான தொந்தரவுகள் இருந்து வந்த நிலையில், தற்போது கூடுதலாக ஒரே பாலினத்தவரிடம் பாலியல் தொந்தரவுகள் ஏற்படாமல் இருந்தால் இது தவறு இல்லை” எனக் கூறினார்.

ஊடகவியலாளர் கவின் மலர் கூறுகையில்  “இந்த தீர்ப்பு மகிழ்ச்சிகுரியது. வரவேற்கக்கூடியது. நெடுங்காலமாக எல்ஜிபிடி-யினர் எதிர்பார்த்த தீர்ப்பு. இந்த தீர்ப்பின்மூலம் உச்சநீதிமன்றம் அவர்களுடைய அடிப்படை உரிமையை உறுதி செய்திருக்கிறது என்பதுதான் என்னுடைய கருத்து. ஒரு ஊடகவியலாளரான என் பார்வையில், ஊடகங்கள் இந்த வழக்கு குறித்து ஆரம்பத்திலேயே இருந்து ஒரு பொது புத்தியாகதான் செயல்பட்டது. ஊடகங்கள் பொது புத்தியாக செயல்படக்கூடாது என்பது அடிப்படை நெறி.


ஊடகவியலாளர் கவின் மலர்.

ஆனால் அதை எத்தனை பேர் கடைபிடித்தனர் என்று தெரியவில்லை. ஆனால் சமீபகாலமாக கொஞ்சம் கொஞ்சமாக இது குறித்த விழிப்புணர்வு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. அந்த விழிப்புணர்வின் ஒரு பகுதிதான் இந்த தீர்ப்பு. மேலும் நீதிதுறையின் இந்த தீர்ப்பு மூலமாக பொது சமூகத்தில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். குறிப்பாக மக்கள் மனத்தில் மாற்றம் நிகழ வேண்டும். அதற்கு இந்த தீர்ப்பு உதவும் என்று நம்புகிறேன். இதுவரை அறுவறுப்பாக பார்த்தவர்களின் மனங்கள் மாறுவது சற்று கடினம். அதற்கு ஊடகங்களும் சரியான பாதையில் இதை எடுத்து செல்லும் செயல்பாட்டாளர்களும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. மேலும் சமீபத்தில் ஏற்பட்டுள்ள சிறிய மாற்றங்கள் விரைவில் முழுமையாக மாறும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

சென்னையில் உள்ள குடும்ப தலைவியான லாவண்யா, ``ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நமது கலாச்சாரம். அதுவே இயற்கையானதும்கூட. ஒரு ஆண் ஆணை திருமணம் செய்து கொள்வதும், ஒரு பெண் பெண்ணை திருமணம் செய்து கொள்வதும் வெளிநாட்டுக் கலாச்சாரம். நம் இந்திய கலாச்சாரத்திற்கு இது ஒத்து வராது. ஓர் பாலின ஈர்ப்பு என்பது முற்றிலும் இயற்கைக்கு எதிரானது. ஆனாலும் இதில் விருப்பம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதனை தங்களது குடும்பத்தினரிடம் கூறி பல போராட்டங்களுக்கு பிறகு சேர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இதை வெளியே சொல்ல மறுகின்றனர்” எனக் கூறினார்.

உளவியல் மருத்துவர் டாக்டர் சுபா சார்லஸ் கூறுகையில், ``இந்த தீர்ப்பு வரவேற்க்கதக்கதுதான். ஆனால் இயற்கையானது அல்ல. குழந்தை பெற்றுக்கொள்வதுதான் இயற்கை. மரணம் கூட இயற்கையானதுதான். ஆனால், அதை சரி செய்ய முயற்சிக்கிறோம். எல்ஜிபிடியின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அதே சமயத்தில் இதை சரி செய்ய வேண்டுமே தவிர ஆதரிக்ககூடாது. அந்த உணர்வுகளை மேலும் மேலும் தூண்டக் கூடாது” என கூறினார்.

கல்லூரி இளைஞர் சரவணன், ``ஓர் பாலின ஈர்ப்பு குற்றமில்லை என்பது இயற்கைக்கு எதிரானது. இயற்கை ஆதாம் ஏவாலைதான் படைத்தது. ஆதாம் ஆதமை படைக்கவில்லை. இந்த தீர்ப்புக்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். மக்கள் தொகையை குறைக்க வேண்டும் அல்லது நாட்டை அழிக்க நடக்கும் பெரிய அளவிலான சதித்திட்டமாகக்கூட இருக்கலாம். 5 அறிவுள்ள மிருகங்கள் எதிர் பாலினத்துடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்ளும். அதுவே இயற்கையானது. மேலும், இது தமிழ் கலாச்சாரத்தை முற்றிலுமாக அழிக்க வழங்கப்பட்ட தீர்ப்பு. தற்போது குறைவாக உள்ள ஓர் பாலின ஈர்ப்புள்ளவர்களை ஆதரிப்பதினால் காலப்போக்கில் இதன் எண்ணிக்கை அதிகமாகக்கூடும். இதை ஆரம்பத்திலேயே தடுக்கவில்லை என்றால் நம் மூன்றாம் தலைமுறையினர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் இதற்கு முக்கிய காரணம் சரியான நேரத்தில் திருமணம் நடக்காததே” என்று கூறினார்.

விவசாயி ராஜ்குமார் கூறுகையில்,  ``ஓர் பாலின ஈர்ப்பு என்பது என்ன என்றுகூட தெரியாமல் இருந்த கிராம மக்கள் பலர், 377 பிரிவு என்றால் என்ன என கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். மேலும், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் அனைவரும் இது குறித்த விவரங்களை தெரிந்துகொண்டனர். இந்த தீர்ப்பு இயற்கைக்கு எதிரானது. மேலும் இந்த தீர்ப்பானது குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தொடர்ந்து நடத்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கும் தொந்தரவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்காமல் கமா போட வைத்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பண்டைய காலம் முதலே மக்கள் வாழும் முறைகளும் மூடநம்பிக்கைகளும் மாறிக்கொண்டடேதான் உள்ளன. ஆனால் எதிர்பாலினத்தவர் மீது கொள்ளும் பாலியல் என்பது மட்டும் மாறாமல் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆதாம் ஏவாள் காலத்தில் இருந்து செக்ஸ் என்பது மாறாமல் உள்ளது. அதை மாற்ற நினைத்தால், அது அழிவின் ஆரம்பம்” என்று கூறினார்.

ஓர் பாலின ஈர்ப்புள்ள மாலினி ஜீவரத்தினம் கூறுகையில்,  ``இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தீண்டாமை, ஆணவக்கொலை ஆகியவற்றுக்கு எதிராக சட்டங்கள் இருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்தான் இந்த தீர்ப்பிலும் இருக்கும். சட்டத்தை சாதகமாக்கியதை போல், சமூக அங்கீகாரம் பெறவும், பொது சமூகத்திற்கு உணர்த்தவும் பணியாற்ற வேண்டியது அவசியமான ஒன்று.மாலினி ஜீவரத்தினம்.


இச்சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.. மனிதம் முக்கியமா? புனிதம் முக்கியமா? என்பதை இந்த சமூகம் முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் இங்குள்ள ஏற்றத்தாழ்வுகள் குறையும். சமத்துவம் பிறக்கும்” என்று கூறி முடித்தார்.

ஓர் பாலின ஈர்ப்பு தவறு இல்லை என்று சட்டம் உறுதிப்படுத்தியிருந்தாலும், சிவில் சமூகம் அதை ஏற்றுக்கொள்ள எல்.ஜி.பி.டி. பிரிவினர் நீண்ட நெடிய பண்பாட்டு புரட்சி நடத்த வேண்டும். தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல் என்று எழுதப்பட்ட பாடப்புத்தகங்களை விடுதலை அடைந்த அரை நூற்றாண்டு காலம் படித்தும், சாதியின் வேர்களும், மத ரீதியிலான துவேஷங்களும் இன்னும் சமுதாயத்தில் பரிணமித்த வண்ணமே உள்ளதை பார்த்து வருகிறோம். ஆகவே சமத்திற்கான போராட்டம் என்பது ஒரு தொடர் செயல்பாடு. இதன் போக்கும், மாற்றங்களும் எப்படி இருக்கும் என்பதை வரலாறு பதிவு செய்யாமல் போகாது.

- செ.வைஜெயந்தி, உதவி ஆசிரியர், நியூஸ்18தமிழ்.காம்
Published by:Saravana Siddharth
First published: