ஹோம் /நியூஸ் /சிறப்புக் கட்டுரைகள் /

புதிய பூதத்தைக் கிளப்பிய எல்.முருகன்: அதிமுக கூட்டணியில் சலசலப்பு!

புதிய பூதத்தைக் கிளப்பிய எல்.முருகன்: அதிமுக கூட்டணியில் சலசலப்பு!

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

எல்.முருகன், தமிழக பாஜக மாநில தலைவர்

கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து எல்.முருகன் பேசி வந்தால், பாஜக தலைமை அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டி வரும்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை, கூட்டணி பேச்சு வார்த்தைகள், தொகுதிப் பங்கீடு,தேர்தல் பிரச்சாரம் என, பரபரப்பாகக் காணப்படுகின்றது தேர்தல் களம். அதே சமயம், அரசியல் சலசலப்புகளுக்கும் காரசாரமான விவாதங்களுக்கும், வாதப் பிரதி வாதங்களுக்கும் பஞ்சமில்லை.

திமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார்.

சில வாரங்களுக்கு முன்னர், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனால் யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற, நீண்டநாள் கேள்விக்கு விடைகிடைத்தது. அத்துடன், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் அட்சிகளுடன் கூட்டணி என்றும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கருந்து தெரிவித்த பாஜகவினர், அதிமுகவுடன் கூட்டணி தொடர்வதாக தெரிவித்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக பாஜக ஏற்றுக் கொண்டதாக நம்பப்பட்டது. அதிமுக கூட்டணியில், அங்கம் வகிக்கும் பாஜக சில வாரங்களுக்கு முன்னர், தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசியதாகவும், அப்போது பாஜக அதிக இடங்களைக் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. அத்துடன் முக்கிய இலாக்காக்களை கேட்பதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தேசிய தலைமை முடிவுசெய்யும் என்று கூறி, புதிய பூதத்தைக் கிளப்பினார் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன். இது, அதிமுக கூட்டணிக்கு பாஜக கொடுக்கும் நெருக்கடியாகவே பார்க்கப்படுகின்றது.

இது தொடர்பாக ஜெயங்கொண்டத்தில் பேசிய எல்.முருகன், 'வரும் சட்டமன்றத் தேர்தலில் தற்போதுள்ள கூட்டணி தொடரும். ஆனால், யார் தலைமையில் தேர்தலைச் சந்திப்பது, யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை பாஜகவின் தேசியத் தலைமைதான் முடிவு செய்யும். அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதற்காக நானும் அவரைச் சந்தித்து எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். ஆனால், யார் தலைமையில் தேர்தலைச் சந்திப்பது, முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதைக் கூடிய விரைவில் பாஜகவின் தேசியத் தலைமை முடிவு செய்து அறிவிக்கும்.

எனது தலைமையிலான வேல் யாத்திரையைத் தமிழக அரசு தடுத்தது ஏன் என்பது கேள்வியாக இருக்கிறது. ஆனால், வேல் யாத்திரை மூலம் எங்களுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. வேல் யாத்திரை மூலம் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய நாங்கள் இதுவரை 20 மாவட்டங்களில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டோம்.' என்று கூறினார். இது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான பனிப்போராகவே பார்க்கப் படுகின்றது.

எல்.முருகனின் இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த, அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி 'கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து எல்.முருகன் பேசி வந்தால், பாஜக தலைமை அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டி வரும்' என எச்சரித்தார். இவ்வாறு எல்.முருகனின் இந்தப் பேச்சு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இது தொடர்பாக கருத்து கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், 'பாஜகதான் அதிமுகவின் முதலாளி. அதனால்தான் பாஜக தலைவர் எல்.முருகன் நாங்கள்தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வோம் எனச் சொல்கிறார். இதுவரை எல்லோருக்கும் தெரிந்த, மறைமுகமாக இருந்த விஷயம் தற்போது வெளியே வந்துள்ளது' என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், எல்.முருகன், தான் கூறிய கருத்துக்கு விளக்கம் அளித்துப் பேசியுள்ளார். இது குறித்து, தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவித்துள்ளார்கள். ஆனால் எங்கள் தேசியத் தலைமையும், நாடாளுமன்றக் குழுவும் அதை பரிசீலனை செய்து உரிய நேரத்தில் முடிவு அறிவிப்பார்கள் என்றார். மேலும், நாங்கள் எந்த இடத்திலும் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லவில்லை.’ என்று கூறியுள்ளார்.

ஆனாலும் நெருப்பில்லாமல் புகையுமா என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன. எனவே, அதிமுக-பாஜக கூட்டணி சுமுகமாக செயலாற்றுமா அல்லது, மாடுபிடி சண்டையாக நீளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும், கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூட்டணி தர்மத்தை கடைபிடித்து இணக்கமாக நடந்து கொள்வது கூட்டணியின் பலத்தை அதிகரிக்கும் என்ற நிலையில், நடந்த இந்த சலசலப்புகள், 'யாகாவாராயினும் நாகாக்க' என்ற திருக்குறளை நினைவு படுத்துவதாக இருக்கின்றது.

First published:

Tags: AIADMK Alliance, BJP, L Murugan, TN Assembly Election 2021