‘கத்துவா சிறுமி’ : வெறுப்பு அரசியலின் நிகழ்கால ரத்த சாட்சியம்

‘கத்துவா சிறுமி’ : வெறுப்பு அரசியலின் நிகழ்கால ரத்த சாட்சியம்
  • Share this:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா பகுதியில் வாழும் பகர்வால் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

கல்வியின் வாசனையே அறியாத குழந்தை புல்வெளிகள்தான் பிடித்தமான இடம். இங்கு குதிரைகளை மேய்ப்பதும், விளையாடுவதும் அந்த சிறுமியின் வழக்கமான வேலை.

எப்போதும் போல கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அதிகாலையில் குதிரைகளை மேய்க்க சென்ற அந்த 8 வயது சிறுமி,  அதன் பின் வீடு திரும்பவில்லை. 7 நாட்கள் கழித்து ஜனவரி 17 ஆம் தேதி முகத்தில் காயங்களுடன், கை கால்கள் முறிக்கபட்ட நிலையில் தூக்கியெறியப்பட்ட அவளது பிணம் கண்டெடுக்கப்பட்டது.


அவள் மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதை உள்ளூர் ஊடகங்கள் கூட பதிவு செய்ய மறுத்த நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகுதான் நாட்டின் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்கான காரணம் அந்த நிலத்தில் நடக்கும் அரசியல்.

இந்தியாவின் மற்ற பகுதிகளில் சாதாரணமாக அரங்கேறும் இன்னொரு பலாத்கார சம்பவமல்ல கதுவாவில் நடைபெற்ற இந்த சம்பவம்.  அப்பகுதியில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருப்பதாக தெரிகிறது.  அந்த சிறுமி  முஸ்லிம் பகர்வால் இனத்தை அந்த பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்காக பொது நிலங்களில் அவர்கள் கால்நடைகள் மேய்ப்பதை இந்து அமைப்பினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றும், அங்கு நாடோடி இனத்தவரான பகர்வால்களின் ஜனத்தொகை அதிகரிப்பதையும் அவர்கள் விரும்பவில்லை என்றும் தெரியவருகிறது.

எனவே அவர்களை அச்சுறுத்தி அங்கிருந்து வெளியேற்றவும், அவர்களது நிலங்களை அபகரிக்கவும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட கொடூரம்தான் இந்த பாலியல் பலாத்காரம் என்று உள்ளூர்வாசிகள் கருதுகின்றனர்.அந்த சிறுமி காணாமல் போனவுடன் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. ஆனால், ஆரம்பத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பின் 7 நாட்கள் கழித்து ஜனவரி 17-ல் தூக்கியெறியப்பட்ட அவளது சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஜனவரி 19 ஆம் தேதி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஜம்முவில் பல இடங்களில் மாணவர் குழுக்கள் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதன்பின் குற்றவாளிகளை பிடிக்க இரண்டு அதிகாரிகள் நியமிக்கபட்டனர். அவர்களில் ஒருவர்  அந்த சிறுமியை வன்புணர்சசிக்கு ஆளாக்கியவர் என்பது பின்னர் தெரியவந்தது அதிர்ச்சிகரமான செய்தி.

ஜம்முவில் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி மாநிலத்தை ஆளுகிறது. அங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் விக்கர் ரசூலும், குலாம் முகமது சரூரியும் ஏற்கெனவே கூறிவந்தனர். இந்நிலையில் ஜனவரி 23 ஆம் தேதி, மாநில குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி.

விசாரணையில் கோயில் ஒன்றில் அந்த சிறுமி கட்டிவைக்கப்பட்டு பல நாள்கள் மயக்க மருந்து தரப்பட்டு தொடர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கபட்டது தெரியவந்தது. கோவிலின் பாதுகாவலர் ஓய்வுபெற்ற அரசு அலுவலர் சாஞ்சி ராம் (60) இந்த கொலையை திட்டமிட்டுள்ளார். சாஞ்சி ராமின் மகன் விஷால், இளைய வயதினரான அவரது சகோதரி மகன், காவல்துறை அதிகாரிகள் சுரேந்தர் வர்மா, ஆனந்த் தத்தா, திலக் ராஜ் மற்றும் கஜூரியா ஆகியோர் உதவியோடு ஆசிபாவைக் கடத்தி கொல்லுமாறு இந்தக் குற்றத்தை அவர்கள் திட்டமிட்டுச் செய்ததாக குற்றப்பத்திரிகை கூறுகிறது.

ஆனால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு போலீசார் நீதிமன்றத்தில் நுழைவதை இந்து அமைப்புகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் தடுத்தனர். காவல்துறையினரை நீதிமன்றத்திற்குள் நுழையவிடாமல் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. சாலைகளை மறித்து டயர்கள் கொளுத்தப்பட்டன.

காவல்துறையினர் அந்த சிறுமியைத் தேடி சென்றபோது, கோவிலுக்குள் நுழையக்கூடாது என்றும், அங்கு யாரும் இல்லை என்றும் சாஞ்சி ராம் கூறியிருக்கிறார். ஆனால் அந்த நேரத்தில், கட்டப்பட்ட கைகளுடன் பசியுடன் கோவிலுக்குள் பிளாஸ்ட் பைகளின் மேல் படுத்திருந்திருக்கிறாள், 8 வயது சிறுமி. விசாரணையில் 8 பேர் கூட்டாக சேர்ந்து திட்டமிட்டு இந்த கொடூர செயலை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அவர்களை மாநில அரசு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 8 பேரும் இந்துக்கள் என்பதாலும், காவல்துறையில் இருந்தவர்களில் சில முஸ்லிம்கள் என்பதாலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்து அமைப்பினரால் அங்கு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அப்போராட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட பேரணியை, பாஜகவின் இரண்டு அமைச்சர்கள் தலைமை ஏற்று நடத்தியுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்தப் பேரணியில் கையில் தேசியக்கொடியை ஏந்திச் சென்றுள்ளனர். பெண்கள் பலர் நெடுஞ்சாலைகளில் சாலை தடுப்புகளை வைத்து மறியல் செய்துள்ளனர். போராட்டத்தில் பங்கு பெற்ற பெண்களில் ஒருவர், “பகர்வால்கள் எங்கள் மதத்திற்கு எதிரானவர்கள் எனவும் குற்றவாளிகளை விடுவிக்கவில்லை என்றால் எங்களை நாங்களே கொளுத்தி கொள்வோம்” எனவும் கூறியுள்ளார்.

எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள்தான் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டால் நீதி கிடைக்காது என்று அந்த சிறுமியின் ஆதரவானவர்கள் கருதுகின்றனர்.

வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது என்று போராடும் கிராம மக்கள்


நிர்பயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவி டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லபட்டபோது இந்தியாவே அதற்கு எதிராக கிளர்ந்து எழுந்தது. அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையே ஆட்டம் காண வைத்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்கு நிர்பயா விவகாரத்தை முன்வைத்து நடத்தபட்ட பெரும்போராட்டங்களும் முக்கியக் காரணமாக அமைந்தன. காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று பாஜக தீவிரமாக பிரச்சாரம் செய்தது. வர்மா கமிஷன் பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடும் தண்டனைகளை பரிந்துரைத்தது. இந்தியாவின் மகள் என்று வர்ணிக்கப்பட்ட நிர்பயாவுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்று மக்கள் விரும்பினார்கள்.

நிர்பயாவுக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டங்களை ஒருங்கிணைத்ததிலும், அதை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக மாற்றியதிலும் பாஜகவுக்கும், அதன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பிக்கும் அதிக பங்கு உள்ளது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்து இந்தியாவின் மகள்களின் நிலையில் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடவில்லை. பாலியல் கொடுமைகள் எப்போதும் போல எங்கெங்கும் பரவலாக நிகழ்ந்து வருகின்றன. சமீபத்தில், உத்திரப் பிரதேசம் மாநிலம் உன்னா பகுதியில் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரை சிபிஐ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

யுத்தங்களில் பெண்கள் சிறைப்பிடிக்கப்பட்டு இப்படித்தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். மத வன்முறை கும்பல்கள் இப்படித்தான் பெண் உடலை சிதைக்கின்றன. இன வெறியர்கள் இப்படித்தான் தங்கள் வெறுப்பை தீர்த்துக்கொள்கிறார்கள். ஜாதி வெறியர்கள் பாலியல் வன்முறைகளுக்கு மட்டும் தீண்டாமை பார்ப்பதே இல்லை. வெறுப்பு அரசியலின் நிகழ்கால ரத்த சாட்சி அந்த சிறுமி.

- செலீனா
First published: April 13, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading