Home /News /special-articles /

கர்நாடக கட்டாய மதமாற்ற தடை சட்டமும் அதன் இன்றைய அவசியமும்...

கர்நாடக கட்டாய மதமாற்ற தடை சட்டமும் அதன் இன்றைய அவசியமும்...

Religious conversion

Religious conversion

இந்தியாவில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் இயற்றப்பட்டது இதுவே முதல் முறை அல்ல. 1960-களின் பிற்பகுதியிலிருந்து சில மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

    சமீபத்தில் கர்நாடக மாநில அரசு கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கர்நாடகா சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது. இச்சட்டம் விரைவில் கர்நாடகா சட்டசபை மேல்சபையில் தாக்கல் செய்யப்படும். கர்நாடகா சட்டமேலவையில் பா.ஜ.க தற்போது பெரும்பான்மைக்கு ஒரு இடம் மட்டுமே குறைவாக உள்ளதால், இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இச்சட்டத்தை மதமாற்ற தடை சட்டம் என அழைப்பதே தவறு. இது கட்டாய மதமாற்ற தடை சட்டமாகும். இச்சட்டம் இயற்றப்பட்டால் மதமாற்றங்கள் செய்யவே முடியாது என பொருள் அல்ல, மதமாற்றம் செய்பவர்கள் குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதே இச்சட்ட ஷரத்தின் நோக்கம்.

    கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் எந்த ஒரு மதத்தையோ அல்லது சிறுபான்மை இனத்தையோ மனதில் வைத்து கொண்டு வரப்படுவதில்லை. மதமாற்றம் செய்து கொண்டவர் எந்த ஒரு வற்புறுத்தலும், சட்டவிரோதமும் இல்லாமல் மதமாற்றம் செய்து கொண்டதை நிரூபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. வற்புறுத்தியும், ஆசை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள். தமிழகத்தில் கூட கடந்த 1981-ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ஏராளமான பட்டியலின மக்கள் வற்புறுத்தலின்பேரில் இஸ்லாமிய மதத்துக்கு மாறினர். 1982-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் ஏற்பட்ட கலவரத்துக்கு மதமாற்ற முயற்சிதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. அதனால்தான் இன்றைக்கு பல மாநிலங்களில் இந்தச் சட்டம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Also read:  ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பின் நன்மைகள் - ஒரு பார்வை

    இந்தியாவில் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள்

    இந்தியாவில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் இயற்றப்பட்டது இதுவே முதல் முறை அல்ல. 1960-களின் பிற்பகுதியிலிருந்து சில மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

    நாட்டிலேயே மத மாற்றத்திற்கு எதிராக சட்டம் இயற்றிய முதல் மாநிலம் ஒடிசா. 1967-ஆம் ஆண்டில், ஒரிசா மத சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில், “எந்தவொரு நபரும் நேரடியாகவோ அல்லது வேறுவிதமாகவோ, எந்த ஒரு மதத்தைச் சேர்ந்த நபரையும் மற்றொரு மதத்திற்கு வலுக்கட்டாயமாக அல்லது தூண்டுதல் மூலமாகவோ மாற்ற முயற்சிக்கக் கூடாது” என அறிவுறுத்தப்பட்டது.

    மத்தியப் பிரதேச மாநிலம் இதைப் பின்பற்றி, 1968-ஆம் ஆண்டு சட்டத்தை இயற்றியது. இதன்படி, எந்தவொரு நபரும் நேரடியாகவோ அல்லது வேறுவிதமாகவோ, ஒரு மத நம்பிக்கையிலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்ற முயற்சிக்கக்கூடாது.

    அருணாச்சல பிரதேசம் மாநிலம் 1978-இல் அருணாச்சல பிரதேச மத சுதந்திரச் சட்டத்தை இயற்றியது. 2018-ஆம் ஆண்டில், பெமா காண்டு அரசாங்கத்தால் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

    சத்தீஸ்கர் மாநிலம் 2000-ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் இருந்து பிரிந்த பின்னர் மத்திய பிரதேச அரசாங்கத்தின் மதமாற்ற எதிர்ப்பு மசோதாவைத் தக்க வைத்துக் கொண்டது. பின்னர் சத்தீஸ்கர் மத சுதந்திர (திருத்தம்) சட்டம், 2006 நிறைவேற்றப்பட்டது. இது இன்னும் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

    Also read:  4.2 மில்லியன் பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டும் பயனில்லை; கோவிட்-19 புயல் நெருங்கிவிட்டது - இஸ்ரேல் பிரதமர் கவலை

    முன்னாள் முதல்வர் ஜெயலலித்தா தலைமை தாங்கிய தமிழக அரசு 2002-ஆம் ஆண்டு தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை இயற்றியது. ஆனால், 2004-ஆம் ஆண்டு இச்சட்டத்தை திரும்பப் பெறப்பட்டது.

    குஜராத் மாநிலம் குஜராத் மத சுதந்திரச் சட்டம், 2003 இயற்றியது. அது பின்னர் திருத்தப்பட்டது.

    சமீபத்திய மதமாற்ற எதிர்ப்பு சட்டங்கள்

    ஹிமாச்சலப் பிரதேச அரசாங்கம் 2006-ஆம் ஆண்டில் இமாச்சல பிரதேச மத சுதந்திரச் சட்டத்தை நிறைவேற்றியது. அது பின்னர் 2019-ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. இதன்படி, ஒரு மதத்தைச் சேர்ந்த ஒருவரால் திட்டமிடப்பட்ட நோக்கத்திற்காக செய்யப்படும் எந்தவொரு திருமணமும், மேலும் திருமணத்திற்கு முன்போ அல்லது அதற்குப் பின்னரோ மற்றவரை மதம் மாற்றுவதும் குடும்ப நீதிமன்றத்தால் செல்லாது என அறிவிக்கப்படலாம்.

    ராஜஸ்தான் மாநிலம் 2006-இல் ராஜஸ்தான் மத சுதந்திர மசோதாவை இயற்றியது. ஆனால் அந்த மசோதா மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜார்க்கண்ட் மத சுதந்திரச் சட்டம், 2017-ஐ நிறைவேற்றியது. இது ஒடிசா மற்றும் மத்திய அரசால் இயற்றப்பட்ட சட்டங்களைப் போன்றது.

    உத்தரகாண்ட் மாநிலம் 2018-ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மத சுதந்திரச் சட்டத்தை நிறைவேற்றியது. சமீபத்தில் உத்தர பிரதேச அரசு சட்ட விரோதமாக மதமாற்ற தடைச் சட்டம் 2020-ஐ இயற்றியது. இந்தச் சட்டம் மற்றும் அவசரச் சட்டம் ஆகிய இரண்டும் திருமணத்திற்காக கட்டாய மதமாற்றத்தை தண்டிக்கின்றன.

    Also Read:  உணவில் இருந்த எலியின் கண்கள் - சூப்பர் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிய இளைஞருக்கு அதிர்ச்சி

    கர்நாடக மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

    மதம் மாற விரும்புபவர்கள் 2 மாதங்களுக்கு முன்பே அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

    மதம் மாறினால், அவர்களின் அடிப்படை சாதியின் மூலம் கிடைக்கும் இட ஒதுக்கீட்டின் பலன்கள் உள்பட அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் சேரும் மதத்தில் கிடைக்கும் சலுகைகளை பெற முடியும்.

    இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

    சிறுவர்கள், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை மதம் மாற்ற முயற்சி செய்தால் அத்தகையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதே போல் கூட்டு மதமாற்றம் செய்தாலும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

    Also read:  தீவிர மதுவிலக்கை அமல்படுத்தும் தாலிபான்கள்.. 3000 லிட்டர் மதுவை ஆற்றில் ஊற்றி அழித்தனர்

    மதமாற்ற எதிர்ப்பு சட்டத்தின் அவசியம்

    கட்டாய மதமாற்றம் நடைபெறுவது அண்மை காலத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச சதிச்செயல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதமாற்றம் கட்டாயத்தின் பெயரிலும், பண முதலீடுகள் மூலமாகவும், மிரட்டியும், மற்றும் போலி வாக்குறுதிகள் மூலமாகவும் செய்யப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி எந்த ஒரு குடிமகனும் அவருக்கு பிடித்த மதத்தை தேர்வு செய்வதை அரசு என்றைக்கும் தடுப்பதில்லை. வற்புறுத்தலின் பேரிலும், மோசடியாகவும் செய்யப்படும் மதமாற்றங்களை தடுக்கவே இத்தகைய சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

    இந்தியா முழுக்க முதன்முதலில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்திய அதே காங்கிரஸ் கட்சி இன்று வாக்குவங்கி அரசியலுக்காக கர்நாடகாவில் எதிர்ப்பது உச்சபட்ச சந்தர்ப்பவாத அரசியல் மட்டுமே, அவர்கள் எதிர்ப்பில் நேர்மையும் இல்லை, உண்மையும் இல்லை.

    கட்டுரையாளர் - எஸ்.ஜி.சூர்யா , தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர்

    (கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரையே சேரும்..)

     

     
    Published by:Arun
    First published:

    Tags: Christian conversion, Religious conversion

    அடுத்த செய்தி