அரசியலிலும் நடிக்கிறாரா உலக நாயகன்?

Sigamani Thirupathi | news18
Updated: June 18, 2018, 4:54 PM IST
அரசியலிலும் நடிக்கிறாரா உலக நாயகன்?
Sigamani Thirupathi | news18
Updated: June 18, 2018, 4:54 PM IST
டிப்பில் சிறந்தவர் உலக நாயகன் கமல்ஹாசன். அவர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளது மக்கள் தொண்டாற்றுவதற்கா? சினிமா மூலம் அடைந்த பிரபலத்தை முதலீடாக்கி குழம்பியுள்ள அரசியல் குட்டையில் மீன் பிடிக்கவா?

பிப்ரவரி 21-ல் கட்சியை தொடங்கிய போதிலும் இன்றைய தினம் வரை முழு நேர அரசியல் என்றில்லாமல் பகுதிநேர அரசியல்வாதியாக இருப்பது அவரது உரிமை. அவரது அரசியல் செயல்பாடு என்பது ட்விட்டர், ஃபேஸ்புக், அறிக்கை, பேட்டி என்ற அளவில் நிற்கிறது. ஒரு சுற்றுப்பயணமும் முடிந்துள்ளது.

ரஜினியோடு ஒப்பிட்டால் கமல்ஹாசன் கற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு பெற்றவர் என்று நம்புகிறார்கள் சிலர். அவர் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திப்பதன் மூலம் கற்றுக் கொள்ளும் முயற்சியில் இருக்கிறார் எனக் கூறுகிறார்கள். எல்லா வகை அரசியல்வாதிகளையும் சந்திப்பேன். ஆனால் நான் ‘நானாக’ இருப்பேன் என்ற நிலையை அவர் எடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் காவிரி நீர் உரிமைப் பிரச்னையில் அனைவரது அனுபவம், சட்டப் போராட்டத்தின்  பலன் போன்ற எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு மீண்டும் பேச்சுவார்த்தையே பலன் தரும் என்ற கமலின் நிலை அதிர்ச்சி தரக்கூடியது. கர்நாடக முதல்வர் குமாரசாமியை அவர் சந்தித்த போது நீர் திறக்க கேட்டுக் கொண்டாராம்.

கபினி அணை நிரம்பியதால் நீர் திறந்து விடப்பட்ட நிலையில் கமல், குமாரசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அணை நிரம்பினால் நீர் திறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பது சாதாரண அறிவு உள்ளவருக்கு கூடத் தெரியும். ஆனால் கமல் தன் முயற்சியால் நடந்து விட்டது போல் சித்தரிக்க முயல்வது ஏமாற்றும் வேலையில்லையா? கர்நாடகத்தில் பிரச்சினையின்றி விஸ்வரூபம்-2 வெளிவர குமாரசாமியிடம் முறையிடும் வணிக நோக்கத்தை மறைக்கிறாரா கமல்?

கொள்கை ரீதியாக திராவிடம் தென் மாநிலங்களின் இணக்கம் போன்ற அவரது பேச்சுகளில் உண்மைத்தன்மை உள்ளதா? தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் பிரச்னை, நிதி வழங்குவதில் பாரபட்சம் என்பது போன்ற பாதிப்புகளில் சிக்கியுள்ள போது இதற்கு அடிப்படையாக அமையும் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பு கொள்கை குறித்தோ – குறிப்பாக பாஜக ஆட்சியின் சர்வாதிகாரப் போக்கு குறித்தோ கமல் விமர்சிக்கவில்லை.

“சிலர் கூறுவது போல் திராவிடத்தை அழிக்க வேண்டிய அவசியம் கிடையாது. தேவையின்றி அதைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடவும் தேவையில்லை” என்ற பேச்சும் ஜனகனமன பாடலில் திராவிடம் உள்ளது; திராவிடம் கட்சிகளை சார்ந்தது அல்ல. அது தேசிய அளவிலானது. நான் சைவம் அல்ல; மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன். ஆனால் அதை சாப்பிடுவதை எதிர்க்க மாட்டேன் என்பது போன்ற பேச்சுகள் தெளிவற்றது மட்டுமல்ல. குழப்பம் தரக்கூடியது. தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகள் அனைத்தும் இறுகப் பற்றிக் கொண்டுள்ள இட ஒதுக்கீட்டுப் பிரச்னையில் அவரது நிலையை தெரிவிக்காமல் இருப்பதன் நோக்கம் என்ன?

திராவிடத்துக்கு அடுத்த படியாக மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயர் சார்ந்த குழப்பங்கள் குறிப்பிடத்தக்கது. காவி என் நிறம் அல்ல என்றவர், சில நாட்களில் கருப்புக்குள் காவியும் அடக்கம் என்ற விளக்கத்தையும் தந்தார். வலது, இடது என்றில்லாமல் மய்யமான நிலை எடுக்கும் அரசியல் கட்சி வரவேற்கத்தக்கதுதான். அதிலும் உறுதிப்பாடு இல்லை. என்னை இடது என்றால் சற்றே நகர்ந்து மையத்துக்கு வருவேன். வலது என்றாலோ அங்கிருந்து நகர்ந்தும் மையம் வருவேன் என்பது போன்ற கழுவுற மீன்ல நழுவுற மீன் பேச்சு சந்தர்ப்பவாதமானது.

விஸ்வரூபம் 2 ட்ரெய்லர்

 

விஸ்வரூபம்-2 ட்ரெய்லரில் எந்த மதத்தையும் சார்ந்து இருப்பது பாவமல்ல, ஆனால் `தேசத் துரோகியாக’ இருப்பது தப்பு என்று வசனம் வருகிறது.  ‘தேசத் துரோகி’ என்ற முத்திரை குத்தும் வேலையை செய்பவர்களுக்கு உதவக்கூடிய வசனம் இது. சாதியும் மதமும் அறவே கூடாது என கட்சி கொள்கையாக அறிவிப்பார்.  ‘தேசத்  துரோகி’ வசனத்தின் உள்நோக்கம் தெரிந்தே  பேசவும் செய்வார் கமல். இதன் மூலம் யாருக்குச் சேவகம் செய்கிறார்?

‘சிஸ்டம்’ கெட்டுப்போச்சு என்ற ரஜினிகாந்தின் பேச்சு போன்றதுதான் கமலின் “என் வீட்டு வாசலில் உள்ள குப்பையை – என் ஊரில் உள்ள குப்பையை முதலில் எடுக்க வேண்டும்” என்ற பேச்சும். தமிழ்நாட்டிற்குள்தான் சிஸ்டம் கெட்டுப் போச்சா என நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி கேட்கிறார். இதற்கு பதில் இல்லை. ரஜினியும் கமலும் ஒரு வகையில் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மத்திய அரசை விமர்சிக்காமல் ஒருசேர கள்ள மவுனம் கடைப்பிடிக்கிறார்கள்.

ஞாயிறன்று ‘பிக் பாஸ் -2’ நிகழ்ச்சி தொடங்கி விட்டது. இதில் பங்கேற்க வாய்ப்பு பெற்றவர்கள் யார் யார் என்பதன் மூலம் கமலின் ‘சார்புகளை’ விமர்சிக்கிறார்கள். சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் பாஜக-வில் சேர்ந்த வில்லன் நடிகர் பொன்னம்பலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களிடம் கைகுலுக்கும் போது தவறாமல் ஜெய் ஸ்ரீராம் எனச் சொல்கிறார். இது கமலுக்குத் தெரியாமல் நடந்ததா?.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நேரம் செலவழிப்பது, பணம் சம்பாதிப்பது தவறில்லை என கமல் பேட்டி ஒன்றில் சொல்கிறார். அரசியலுக்கு வந்த பின் எம்ஜிஆர் கூட சினிமாவில் நடித்தவர்தான். மக்களுக்கு உதவும் கொடையுள்ளம் அவரை உயர்த்தியது. சொந்தப் பணத்தையும் கட்சிக்காக அவர் செலவிட்டார். ஆனால் கமலும் ரஜினியும் அத்தகையவர்கள் அல்ல என்பதை மக்கள் உணர வேண்டும். இருவருக்கும் கோடிகளில் வரும் வருமானம்தான் முக்கியம். இருவரும் வாய்ப்பு கிடைக்கும் போது அரசியலுக்கு ‘கால்ஷீட்’ தருவார்கள். அரசியலிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார்கள். இங்கும் ’எங்கோ’ எழுதிக் கொடுத்த வசனங்களைப் பேசுவார்கள். இவர்களின் தந்திரங்களை அறியாத மக்கள் ஏமாறுவார்கள்.

- மூத்த பத்திரிகையாளர் சிகாமணி

First published: June 18, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...