எழுவரையும் விடுதலை செய் - அரிபரந்தாமன்

News18 Tamil
Updated: June 15, 2018, 7:51 PM IST
எழுவரையும் விடுதலை செய் - அரிபரந்தாமன்
News18 Tamil
Updated: June 15, 2018, 7:51 PM IST
21.02.1991- அன்று சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படு கொலை செய்யப்பட்டார். கொலை செயலில் நேரடியாக ஈடுபட்ட தணு, சிவராசன், சுபா ஆகிய மூவரும் கொல்லப்பட்டார்கள்.

இந்த வழக்கை மத்தியஅரசின் புலனாய்வு துறை புலனாய்வு செய்தது. புலன் விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட 26 பேரும் கடும் சித்திரவதைக்குள்ளானார்கள். குற்றம்சாட்டப்பட்ட 26 பேரும் கொலை செயலை செய்தவர்களுடன் உடந்தையாக இருந்து சதி செய்தார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு தடா விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. தடா நீதிமன்றம் அந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளுக்கும் - 26 பேருக்கும் – 28.01.1998 அன்று தூக்கு தண்டனை வழங்கியது.

தூக்கு தண்டனை வழங்கப்பட்டவர்கள் எவரும் கொலை செயலில் நேரடியாக ஈடுபட்டதாக குற்றச்சாட்டு கிடையாது.
தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட 26 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த அமர்வுக்கு தலைமை தாங்கியவர் நீதிபதி கே.டி. தாமஸ் அவர்கள்.

உச்ச நீதிமன்றம் 11-05-1999 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில் விசாரணை நீதிமன்றம் 26 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியது, “நீதித்துறை பயங்கரவாதம்” என்று கூறி உள்ளது உச்ச நீதிமன்றம்.
உச்ச நீதிமன்றம், தூக்கு தண்டனை வழங்கப்பட்ட 19 பேரை விடுதலை செய்தது; நால்வருக்கு - நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு - தூக்கு தண்டனையை உறுதி செய்தது; மூவருக்கு - ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோருக்கு - தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

இதில் முதல் பிரச்னையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நால்வர் காப்பாற்றப்படவேண்டும். எனவே, தமிழ் இயக்கங்கள் இதில் பல முயற்சிகள் எடுத்தன. அதில் பல தலைவர்கள் அரும் பணி ஆற்றினர். குறிப்பாக, ஐயா நெடுமாறன் அவர்கள் தலைமை ஏற்று செயல்பட்டார்.
Loading...
இந்நிலையில், இந்த நால்வரும் தமிழக ஆளுநருக்கு 17.10.1999 தேதியிட்ட கருணை மனு அளித்தனர். அதில் தூக்கு தண்டனையை மாற்றி தருமாறு வேண்டினர்.
தமிழக அமைச்சரவை, அரசமைப்பு சட்டப் பிரிவு 161-ன் கீழ் உள்ள இறையாண்மை அதிகாரத்தை பயன்படுத்தி கருணை மனுவை ஏற்று தூக்குத்தண்டனையை மாற்றி உத்தரவிடலாம்.
அப்போது முதல்வராக இருந்தவர் தி.மு.க. தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்கள். அப்போது ஆளுநராக இருந்தவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திருமிகு. பாத்திமா பீவி. அவரே நீதிபதியாக இருந்தபோது கருணை மனுவின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய / மாநில அமைச்சரைவைக்குத் தான் உண்டு என்றும் ஜனாதிபதியோ, ஆளுநரோ முடிவெடுக்கமுடியாது என்றும் தீர்ப்பளித்திருக்கிறார்.

ஆனால் 29.10.1999 தேதிய உத்தரவின் மூலம், ஆளுநர் கருணை மனுவை தள்ளுபடி செய்தார். இதுவும் ஒரு அரசியல்தான்.
உடனே நால்வரும் சென்னை உயர்நீதி மன்றத்தை அனுகினர். அவர்களின் ரிட் மனுவை அனுமதித்து ஆளுநரின் உத்தரவை உயர் நீதிமன்றம் 25.11.1999 அன்று ரத்து செய்தது. தமிழக அமைச்சரவை கருணை மனுவின் மேல் முடிவெடுக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் ஆளுநர் கருணை மனுவில் உத்தரவு போடவேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியது.
தமிழக அமைச்சரவை நளினியின் தூக்கு தண்டனையை மட்டும் மாற்றி ஆயுள் தந்தையாக குறைத்தது. அதுவும் சோனியா காந்தி அவர்கள் நளினிக்கு குழந்தை இருப்பதால் அவருக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டாம் என்று கருத்து கூறி இருந்தார். அதனடிப்படையில்தான் "தமிழ் இனத் தலைவர்" திரு. கருணாநிதி அவர்களின் அமைச்சரவை நளினிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மற்ற மூவருக்கும் கருணைமனு நிராகரிக்கப்பட்டு, தூக்கில் போடுவதற்கு வழிவகுத்தது. இதனடிப்படையில் அரசாணை எண் 406, உள்துறை தேதி 24.04.2000 -ஐ தமிழக அரசு பிறப்பித்தது.

எனவே நால்வரில் ஒருவர் காப்பாற்றப்பட்டார். மற்ற மூவருக்கும் தூக்கு தண்டனை என்ற வருத்தமான நிலைதான் உண்டானது.
உடனே இந்த மூவரும் குடியரசு தலைவருக்கு கருணை மனுவை 26.04.2000 தேதியில் அனுப்பினர். அப்போது, காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து குடியரசு தலைவராக திரு. கே. ஆர். நாராயணன் அவர்கள் தேர்ந்தெடுக்கபட்டிருந்தாலும் இந்த கருணைமனுவை மத்திய அமைச்சரைவைக்கு அனுப்பாமல் கருணைமனு நிலுவையில் இருக்குமாறு செய்தார். இவரின் அச்செயல் இம்மூவரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியது. அவரின் இச்செயலுக்கு தமிழ் சமூகம் கடமைப்பட்டுள்ளது.

2002 ஆம் ஆண்டில் திரு. அப்துல்கலாம் அவர்கள் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் அவர் பதவி வகித்த 5 ஆண்டுகள் முழுக்க கருணைமனுவை மத்திய அமைச்சரைவைக்கு அனுப்பாமல் கருணைமனு நிலுவையில் இருக்குமாறு செய்தார். அவரின் இச்செயல் இம்மூவரை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியது. எனவே அவருக்கும் தமிழ் சமூகம் கடமைப்பட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டில் திருமதி பிரதிபா பட்டில் குடியரசு தலைவரானார். அவர் காங்கிரஸ் அரசால் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் சில வருடங்கள் கருணைமனுவை நிலுவையில் வைத்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் அரசு கொடுத்த நிர்பந்தம் காரணமாக அவர் மத்திய அமைச்சரைவைக்கு கருணைமனுவை அனுப்பினார். திரு. மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை கருணை மனுவை நிராகரித்தது. எனவே இதை பிரதிபா பட்டில் அவர்கள் 12.08.2011 தேதிய உத்தரவில் தெரியப்படுத்தினார்.
எனவே 2000- தில் தமிழக அமைச்சரவை கருணைமனுவை நிராகரித்தபோது உண்டான அதே நிலைமைக்கு மூவரும் மீண்டும் தள்ளப்பட்டனர். அவர்களை தூக்கில் போடுவதற்கு நாள் குறிக்கப்பட்டது.

11 ஆண்டுகள் கருணைமனுவை நிலுவையில் வைத்திருந்தபோது ஒவ்வொரு நாளும் அந்த மூவரும் மரண வேதனையில் துன்பப்பட்டனர். எனவே 11 ஆண்டுகள் தினமும் செத்து பிழைத்து கொண்டிருந்த சூழலுக்காக தூக்கு தண்டனை ரத்து செய்யபட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் 2011-ல் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனைக்கு தடை கொடுத்தது.

மத்திய அரசு இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றலானது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இந்த அமர்வுக்கு தலைமை தாங்கியவர் அப்போதைய தலைமை நீதிபதி திரு. சதாசிவம் அவர்கள். ஏற்கெனவே 21.01.2014 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அந்த அமர்வு வழங்கியது. அதில் பலரின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பு அளித்தது. அந்த வழக்குகளில் குடியரசு தலைவர் பல ஆண்டுகளாக எக்காரணமுமின்றி கருணை மனுவை நிலுவையில் வைத்திருந்ததால் தூக்கு தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனையாக குறைப்பதாக தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பினை ஒட்டி அதே அமர்வு 18.02.2014 அன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை இந்த வழக்கில் வழங்கியது. அதில் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை மாற்றப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகாலம் அவர்கள் தூக்கின் விளிம்பில் இருந்தனர்.
மீண்டும் திரு. கே. ஆர். நாராயணன், திரு. அப்துல்கலாம், திருமதி. பிரதிபா பட்டில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. சதாசிவம் அவர்களின் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு ஆகியோரே இந்த மூவரின் தூக்கு தண்டனையை மாற்றியதில் தமிழ் சமூகத்தினால் பாராட்டக்குரியவர்கள்.

நளினிக்கு தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக 24.04.2000-தில் மாற்றப்பட்ட பின்னர், தமிழக அரசு அரசாணை எண் 873, உள்துறை, தேதி 14.09.2006 அன்று வெளியிட்டது. அதில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்போரை விடுதலை செய்திருந்தது. நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோர் 15 ஆண்டுகளாக சிறையில் இருந்தாலும் அந்த அரசாணையில் அவர்களுக்கு விடுதலை மறுக்கப்பட்டு இருந்தது.
2001 – 2006 காலத்தில் ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவின் அ.தி.மு.க அரசும் இந்த நால்வரையும் விடுதலை செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை; எந்த உத்தரவும் போடவில்லை. மாறாக 1991-1996 மற்றும் 2001-2006-ல் ஆட்சி புரிந்த ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க அரசு ராஜிவ் காந்தி குற்றம் சாட்டபட்டவர்களின்- தண்டணை பெற்றவர்களின்பால் மிக கடுமையான போக்கையே கடைப்பிடித்தது.

மேற்சொன்ன அரசாணை எண் 873 பிறப்பிக்கப்பட்டது, தி.மு.க. தலைவர் திரு. கருணாநிதி முதல்வராக இருந்த போதுதான். அந்த அரசாணையை எதிர்த்து நளினி அவர்கள் ரிட் மனு தாக்கல் செய்தார்; அவரையும் விடுவிக்க வேண்டும் என்று கோரினார். அவருடைய ரிட் மனு 24.09.2008 அன்று தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பேரில் மேல்முறையீடு செய்தார். அவருடைய மேல்முறையீடும் 06.04.2010 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
மத்திய அரசின் புலனாய்வு துறை ராஜிவ் கொலை வழக்கில் புலனாய்வு செய்து வழக்கு நடத்தியதால் மத்திய அரசின் ஒப்புதலும் நளினியின் விடுதலைக்கு தேவை என்றும், விடுதலை செய்யப்பட்ட 472 பேரும் மத்திய அரசின் புலனாய்வு துறையினால் புலனாய்வு செய்யப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும் தமிழக அரசு அதன் தரப்பை நீதிமன்றத்தில் கூறியது. அதை ஏற்றே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அக்காலத்தில், திரு. மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு தி.மு.க.வை நம்பியே இருந்தது. தி.மு.க. சண்டைபோட்டு பல மத்திய அமைச்சர்களை பெற்றது. ஆனால் சண்டை போட்டு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய தி.மு.க.விற்கு மனமில்லை. இத்திசையில் தி.மு.க. எதுவும் செய்யவில்லை.
18.02.2014 அன்று மேற்சொன்ன வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியதும், அன்றே தமிழக சட்டசபை ஒருமனதாக தீர்மானம் இயற்றி எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானித்தது.

19.02.2014 அன்று தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் எழுவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவு குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட உத்தரவு. அதில் மூன்று நாட்களில் எழுவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அதற்கான தகவலை மத்திய அரசிற்கு தெரிவிப்பதாகவும் கூறி இருந்தார். எழுவரும் 24 நீண்ட ஆண்டுகள் சிறையில் இருந்து விட்ட நிலையில் விடுதலைக்கான முடிவை தமிழக அரசு எடுத்தது.
குற்றவியல் நடைமுறை சட்டத்தில் விடுதலை செய்வதற்கு முடிவெடுக்கப்படும் வழக்கை மத்திய புலனாய்வு துறை விசாரித்திருந்தால், மத்திய அரசிடம் ஆலோசனை (Consultation) பெற வேண்டும் என்று அச்சட்டம் கூறுவதை ஒட்டி, மத்திய அரசிற்கு தகவல் அளிப்பதாக அதில் கூறப்பட்டது.

ஜெயலலிதா அவர்கள் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் விடுதலை செய்து உத்தரவு போட்டதற்கு பதிலாக, அரசமைப்பு சட்டம் மாநிலங்களுக்கு வழங்கும் இறையாண்மை அதிகாரத்தின் கீழ் விடுதலை செய்து உத்தரவு போட்டு இருந்தால் எந்த சிக்கலும் இல்லை. எழுவரும் உடனே விடுதலை அடைந்து இருப்பர். சொத்து குவிப்பு வழக்கை திறமையான வரக்குரைஞர்கள் மூலம் எதிர்கொண்ட ஜெயலலிதா அவர்களுக்கு அரசமைப்பு சட்டம் வழங்கும் இறையாண்மை அதிகாரம் பற்றி தெரியாது என்று கொள்ளமுடியாது. எழுவரின் விடுதலையில் உண்மையான அக்கறையின்மையையே இது காட்டுகிறது.

உடனே காங்கிரசின் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி, அந்த மூன்று நாட்களுக்குள் விடுதலை செய்வதற்கு தடை பெற்றுவிட்டது. மத்தியஅரசின் ஒப்புதல் (concurrence) இல்லாமல் மாநிலஅரசு, குற்றவியல் சட்டத்தின் கீழ் மத்திய புலனாய்வு துறை புலனாய்வு செய்த வழக்குகளில், குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுதலை செய்யமுடியாது என்ற வாதத்தை முன்வைத்தே தடைபெற்றது. அதாவது குற்றவியல் நடைமுறை சட்டத்தில் உள்ள ஆலோசனை (consultation) என்பது ஒப்புதல் (concurrence) என்று வாதிட்டது மத்திய அரசு.

தடை கொடுத்த தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகளின் உச்ச நீதிமன்ற அமர்வு, அந்த வழக்கில் முக்கியமான சட்ட பிரச்னைகள் - அதிலும் குறிப்பாக மாநில அரசின் மத்திய அரசின் அதிகாரம் பற்றிய பிரச்னைகள்¬ - எழுப்படுவதால், அந்த சட்ட பிரச்னையை 5 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு விசாரிக்க பரிந்துரைத்து 25.04.2014 -ல் உத்தரவு போட்டது.
மேற்சொன்ன உச்ச நீதிமன்ற அமர்வின் முன், தமிழக அரசின் சார்பில் வாதாடிய திரு. திவேதி அவர்கள், எழுவரும் 24 ஆண்டுகள் சிறையில் இருப்பதால் தமிழக அரசு விடுதலை செய்யவேண்டும் என்று எடுத்த முடிவை மத்திய அரசு ஆட்சேபிக்க முடியாது என்றார். குறிப்பாக காங்கிரஸ் அரசு மகாத்மா காந்தி கொலை வழக்கில் சதி செயலுக்காக ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு 16 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின், விடுதலை அளித்தது என்பதை சுட்டி காட்டினார். இருப்பினும் காங்கிரஸ் மத்திய அரசு எடுத்த கடும் நிலைப்பாட்டால் வழக்கு 5 நீதிபதிகள் அமர்வின் விசாரணைக்கு மேற்கூறியவாறு சென்றது.

இந்நிலையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீண்ட விவாதங்களுக்குப் பின் 02.12.2015 அன்று சட்ட பிரச்சனை சம்மந்தமாக தேதியிட்ட தீர்ப்பளித்தது. அதில் மாநில அரசு மத்திய அரசு புலனாய்வு செய்த வழக்கில், மத்திய அரசின் ஒப்புதல் இன்றி விடுதலை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது. குற்றவியல் நடைமுறை சட்டத்தில் மத்திய அரசின் ஆலோசனை (Consultation) பெற வேண்டும் என்பதை, மத்திய அரசின் ஒப்புதல் (Concurrence ) பெற வேண்டும் என்று குற்றவியல் நடைமுறை சட்டத்தை வியாக்யானம் செய்தது. இத்தீர்ப்பை வழங்கியது நீதிபதி திரு. இப்ராகிம் கலிபுல்லா அவர்கள்.

இருப்பினும் அத்தீர்ப்பில், மாநில அரசு அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று தெளிவாக கூறியிருந்தது.
மேற்சொன்ன சட்ட பிரச்சனை சம்மந்தமான தீர்ப்பின் அடிப்படையில் தீர்மானிக்க வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பியது.
இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருக்கும் போது, 2014 ஆம் ஆண்டு மே மாதம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது. பா.ஜ.க அரசுதான் அதற்கு பின்னர் மேற் சொன்ன வழக்கை நடத்தியது. அவர்களும் காங்கிரசின் வழியிலேயே சென்று , எழுவரின் விடுதலையை கடுமையாக எதிர்த்து வாதாடினர். மாநில அரசின் விடுதலை செய்வது என்ற முடிவிற்கு பா.ஜ.க. ஒப்புதல் அளித்திருந்தால், எழுவரும் விடுதலையாகி இருப்பர். ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக வாதாடியும், மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மூன்று பேர்கள் 16 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டனர் என்று கூறியும் பயனில்லை.
எனவே இன்று எழுவர் விடுதலை ஆகாமல் சிறையில் இருப்பதற்கு மத்தியில் ஆண்ட காங்கிரசு அரசும், இப்பொது ஆளும் பா.ஜ.க அரசும் காரணம். 1996-2001 மற்றும் 2006-2011 வரை தமிழகத்தை ஆண்ட தி.மு.க. அரசும் எழுவர் விடுதலையில் ஒன்றும் செய்யவில்லை என்பது வரலாறு.

02.12.2015 தீர்ப்பிற்குப்பின், அத்தீர்ப்பு கூறியபடி ஜெயலலிதா அவர்கள் அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 161 வழங்கும் இறையாண்மை அதிகாரத்தை பயன்படுத்தி எழுவரை விடுதலை செய்திருக்கலாம். 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போதுகூட அவர் செய்யவில்லை.
02.12.2015 தீர்ப்பிற்குப்பின் 02.03.2016-ல் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் மத்தியஅரசின் ஒப்புதல் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பிவிட்டு வாளாவிருந்தது. தமிழ் நாட்டில் தமிழ் இனம், இதை பெரும் பிரச்சனையாக்கி தமிழக அரசு எழுவரை விடுதலை செய்யும்படி பேரியக்கம் ஏதும் நடத்தவில்லை. அதாவது ஜல்லிக்கட்டு மாதிரி ஒரு இயக்கம் நடத்தவில்லை. அப்படி இயக்கம் நடத்தப்பட்டிருந்தால் காங்கிரசும் ,பா.ஜ.கவும் குற்றவியல் நடைமுறை சட்டப்படியே எழுவரின் விடுதலைக்கு ஒப்புதலே கொடுத்திருக்கும். எனவே, தமிழ் இனம்தான் எழுவரும் 27 ஆண்டுகள் இன்னும் சிறையில் வாடுவதற்கு காரணம்.
மகாத்மா காந்தி 30.01.1948 ல் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கும் முன் அவரை சுட்ட அதே கும்பல், 20.01.1948 இல் வெடி குண்டை வெடிக்கச் செய்து, அவரை கொலை செய்ய முயற்சித்தது. அதில் மகாத்மா காந்தி உயிர்தப்பினார்.

30.01.1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நேரடி செயலில் ஈடுபட்ட நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே என்ற இருவருக்கும் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. அவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.
30.01.1948 அன்று மகாத்மாவை சுட்டுக் கொலை செய்த குற்றத்தில், கோபால் கோட்சே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா ஆகிய மூவரும் சதி செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இதில் 20.01.1948 அன்று வெடி குண்டின் மூலம் மகாத்மாவை கொலை முயற்சி செய்த குற்றத்திலும், விஷ்ணு கார்கரே மற்றும் மதன்லால் பாவா பங்கேற்றவர்கள்.
ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கோபால் கோட்சே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா ஆகிய மூவரையும், பிரதமர் நேரு மறைந்த பின் 5 மாதங்களில் விடுதலை செய்தது காங்கிரஸ் அரசு. அவர்கள் 13.10.1964ல் விடுதலை செய்யப்பட்டனர்.
அதாவது, 16 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் மகாத்மா காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் காங்கிரஸ் அரசால் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஆனால், ராஜிவ் காந்தி கொலை வழக்கில், சதி செய்த குற்றத்திற்காக எழுவரும் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களின் விடுதலை தமிழ் இனத்தின் கையில்தான் உள்ளது.
மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற மூன்று பேருக்கும், இந்துத்துவ சக்திகள் 16 ஆண்டுகளில் விடுதலை பெற்றுத்தந்தனர். இன்றுபோல் அன்று (1964 -இல் ) இந்துத்துவ சக்திகள் ஆட்சி கட்டிலில் இல்லை. ஆனால் காங்கிரசை நிர்பந்தம் கொடுத்து அவர்கள் காரியத்தை சாதித்தனர். தமிழ் இனத்தால் அதேபோன்று காரியத்தை சாதிக்க முடியவில்லை.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் , வழக்கு விசாரணை தடா சட்டத்தின் கீழ் நடந்தது. தடா சட்டத்தின் கீழ் நடைபெறும் வழக்குகளில், காவல் துறையிடம் அளிக்கப்படும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்கப்படும். மற்ற குற்ற வழக்குகளில் இது சாட்சியமாகாது.
உச்ச நீதிமதின்றம் ராஜிவ் காந்தி கொலை வழக்கிற்கு தடா சட்டம் பொருந்தாது என்று 11.05.1999 தேதிய தீர்ப்பில் தெளிவாக கூறியிருந்தது. ஆனால் காவல் துறையிடம் அளிக்கப்பட்ட வாக்குமூலம் மட்டுமே சாட்சியமாக இருந்த நிலையில் தண்டனையை ஏழு பேருக்கு அளித்தது. தடா சட்டம் பொருந்தாது என்று முடிவெடுத்ததால் மீண்டும் வழக்கை விசாரணை நீதிமன்றத்திற்கு அனுப்பி இருக்க வேண்டும். இதுவும் குறைந்தபட்சம் எழுவரின் விடுதலைக்கு ஒரு காரணமாக கொள்ளலாம்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை வழங்கிய அமர்வுக்கு தலைமை ஏற்ற நீதிபதி திரு. கே.டி. தாமஸ் அவர்கள் மேற்குறிப்பிட்ட குறைபாட்டை இப்போது சுட்டி காண்பித்து எழுவரின் விடுதலையை கோரியுள்ளார். அவர், சோனியா காந்திக்கு சமீபத்தில் எழுதிய கடிதத்தில், புலனாய்வில் பல குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காண்பித்து, சோனியா காந்தி அவர்களும், அவரது மகனும் மகளும் அரசுக்கு கடிதம் எழுதி எழுவரை விடுதலை செய்யுமாறு கேட்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கில், தலைமை புலனாய்வு அதிகாரியாக செயல்பட்ட திரு. ரகோத்தமன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்கின் புலனாய்வு குறைபாடுகளுடன் கூடியது என்று மிக விரிவாக எழுதியுள்ளார். அரசியல் கட்சியின் பிரபலங்கள் புலனாய்வில் தவிர்க்கப்பட்டார்கள் என்றார். என்னுடன் கலந்துகொண்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எழுவரையும் விடுதலை செய்யலாம் என்று கூறினார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் புலனாய்வு அதிகாரியாக இருந்தவரும் வாக்குமூலங்களை குற்றவாளிகளிடம் இருந்து பெற்றவருமான திரு. தியாகராசன் அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து வாக்குமூலங்கள் சரியான படி பதிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

குறிப்பாக மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட மூன்று பேரை 16 ஆண்டுகளில் விடுதலை செய்தபோது மேற்சொன்ன மாதிரியான காரணிகள் ஏதும் இல்லை. ஆனால் மேற்சொன்ன பல காரணிகள் இருந்தும் எழுவரும் சிறையில் 27 ஆண்டுகளாக வாடுகின்றனர்.
02.12.2015 பின்னர் உரிய நடவடிக்கை எடுத்து மூன்று நீதிபதிகள் அமர்வு உடனே விசாரிக்க வேண்டும் என்று கூட தமிழக அரசு முயற்சி ஏதும் செய்யவில்லை. நீதிமன்றம் என்றாலே தாமதமான நீதிதான் என்பது நடைமுறை உண்மையாகிவிட்டது.
2 ஆண்டுகளுக்கு பின்னர் 23.01.2018 அன்று உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. 19.02.2014 அன்று தமிழக அரசு மூன்று நாட்களில் எழுவரின் விடுதலை சம்மந்தமாக மத்தியஅரசு அதன் கருத்தை தெரிவிக்ககோரி இருந்தது. விசாரணைக்கு வந்த போதும் மத்தியஅரசு அதன் கருத்தை தெரிவிக்க வில்லை. இப்போது சுமார் 4 ஆண்டுகள் கடந்து விட்டது.

மகாத்மா காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர்களை 16 ஆண்டுகளில் விடுதலை பெற நடவடிக்கை எடுத்த இந்துத்துவா சக்திகள் இப்போது ஆட்சியில் உள்ளது. அவர்கள் எழுவர் விடுதலை எதிர்த்து மே 2014 முதல் வழக்காடினர்.
தமிழக அரசு அரசமைப்பு சட்டத்தின் கீழ் உடனடியாக இறையாண்மை அதிகாரத்தை பயன்படுத்தி இப்போதாவது தாமதம் இன்றி எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும். ஏற்கனவே 27 ஆண்டுகள் எழுவரும் சிறையில் இருந்து விட்டனர்.

உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில் கைதிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில், உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளதைப் போல் தமிழக அரசு அரசமைப்பு சட்டம் 161 கீழ் உள்ள இறையாண்மை அதிகாரத்தின் படித்தான் விடுதலை செய்யவேண்டும். அதை இப்பொழுதே தமிழக அரசு செய்ய வேண்டும்.

  • கட்டுரையாளர்: அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)

First published: June 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...