கடவுளின் மகனாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல...!

news18
Updated: June 16, 2018, 2:05 PM IST
கடவுளின் மகனாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல...!
அர்ஜுன் டெண்டுல்கர்
news18
Updated: June 16, 2018, 2:05 PM IST
சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு முதல்முறையாக இந்திய அணியின் அன்டர் 19 அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.

இலங்கையில் வரும் ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய 'அன்டர் 19' அணி,  5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 நான்கு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. இதில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு 4 நாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் இருக்கும் நிலையில், டெண்டுல்கரின் மகன் என்ற ஓரே காரணத்திற்காக அர்ஜுனுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டதாக ஒருதரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதேநிலையில், அர்ஜுன் டெண்டுல்கர் திறமையான வீரர் என்றும், அவர் திறமைக்கு தான் வாய்ப்பு கிடைத்ததாகவும், டெண்டுல்கரின் பெயருக்கு அல்ல என மற்றொரு தரப்பினரும் அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.  இது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த விவாத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது, இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவம் தான். பள்ளி பருவத்திலிருந்த அர்ஜுன் டெண்டுல்கர் இந்திய வெஸ்ட் சோன் அண்டர்-16 அணியில் இடம்பிடித்த செய்திதாள்களில் இடம்பிடித்தார். அப்போதும் இதே போல ஒரு சாரார் அவருக்கு ஆதரவாக பேசி வந்த நிலையில், மற்றொரு சாரார் மும்பை மாணவன் பிரணவ் தானவடேவுக்கு ஆதரவாக களமிறங்கினர்.

யார் என்றே அறியாத மும்பை மாணவன் பிரணவ் தானவடே, அப்போது முக்கிய கவனம் பெற்றது அவரது தனிப்பட்ட திறமைக்காக தான். பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி ஒன்றில், திறமையாக விளையாடி பிரணவ் ஒற்றை இன்னிங்சில் 1009 ரன்கள் குவித்திருந்தார். இது கிரிக்கெட் வரலாற்றில் பெரும் சாதனையாக கருதப்பட்டது. இத்தகைய சாதனை படைத்த பிரணவ்-வை தவிர்த்து விட்டு அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது இந்தியா முழுவதும் செய்தியானது.

அப்போது, ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மகன் என்பதற்காக பிரணவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், டெண்டுல்கரின் மகன் என்ற ஒரே காரணத்தால் தான் அர்ஜுனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தாகவும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

பிராணவ்-வுக்கு பதிலாக ஏன் அர்ஜுன்?

சமூகவலைதளங்களின் விவாதங்களுக்கு அப்பாற்ப்பட்டு இந்த விஷயத்தை நாம் அணுகினால், இதன் உண்மை காரணம் புரியும். இந்த உலக சாதனை பிரணவ் நிகழ்த்தியதற்கு முன்பே, வெஸ்ட் சோன் அண்டர்-16 அணிக்கான தேர்வு முடிந்து இருந்தது. சொல்லப்போனால், பிரணவ் சாதனையை படைப்பதற்கு முன்பே, அர்ஜுன் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்பது தான் உண்மை. இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரணவின் தந்தை

"பிரணவின் சாதனைக்கு முன்பாகவே அணிக்கான தேர்வு முடிந்துவிட்டது. ஆகையால் பிரணவால் அணியில் இடம்பெற முடியவில்லை. அர்ஜுனும் பிரணவும் நல்ல நண்பர்கள்" என்று அப்போது ஊடகங்களுக்கு பேட்டியே அளித்திருந்தார்.

கடவுளின் மகனாக இருப்பது சுலபமா?

சச்சினின் மகன் என்ற பெருமையும், செல்வாக்கும் ஒருபுறம் இருந்தாலும்,  தன் வயதையொத்த மற்ற வீரர்களை
விடவும் அர்ஜுனுக்குத்தான் இது சவாலான விஷயம். கிரிக்கெட் விளையாடுவது, அதில் சிறப்பது, பின் அணியில் இடம்பிடிப்பது என அனைத்தும் அர்ஜுனுக்கு அடுத்தடுத்தான சவால்கள்தான்.

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கடவுளாகவே கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அப்பேற்பட்ட கிரிக்கெட் ஜாம்பவானின் பெயரை தன் பெயருக்கு பின் தாங்கி, அந்த பெயருடன் கிரிக்கெட் விளையாடுவது அவ்வளவு சுலபம் அல்ல. அர்ஜுன் எவ்வாறு விளையாடுகிறார் என்பது சக வீரர்களுடன் மட்டும்தான் ஒப்பிட்டு பார்க்கபட வேண்டும், அதுதான் நிதர்சனம்.

ஆனால் கிரிக்கெட்டில் எளிதில் எவரும் தொட முடியாத சாதனையை படைத்த தந்தை சச்சினுடன்தான், களத்தில் போராடும் அர்ஜுனின் ஒவ்வொரு நொடியும் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது.  மற்ற வீரர்கள் சென்சுரி அடிக்கலாம், டக் அவுட் கூட ஆகலாம் ஆனால் அர்ஜுனுக்கு அந்த வசதி கிடையாது. அது நடந்தாலும் அவர் விமர்சனங்களை எதிர் கொள்வதற்கு பெரும் மனோபலம் வேண்டும்.

அர்ஜுனின் ஆட்டத்திறன் என்ன சொல்கிறது?

ஆறடி உயரம் கொண்ட அர்ஜுன், இடதுகை வேக பந்து வீச்சாளர்.  டெண்டுல்கர் தன்னுடைய இளம் பருவத்திலிருந்ததை விட  தற்போது அர்ஜுன் பிட்டாக இருக்கிறார். சரி, அர்ஜுன் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கபட்டதற்கான காரணங்களை தற்போது பார்ப்போம்...

1. அன்டர் 19 கோச்சான ராகுல் டிராவிட்-ன் ஆணைப்படி இந்த வருடத்தோடு 19 வயதை நெருக்கும் யாரும் இலங்கை சுற்று பயணத்திற்கு தேர்ந்தெடுக்கபடவில்லை. இது அர்ஜுனின் தேர்வை கொஞ்சம் சுலபமாக்கியது.

2.  அதிக விக்கெட் எடுத்திருப்பவர்கள் தரவரிசையில் அர்ஜுன் 43 வது இடத்தில்தான் இருக்கிறார். இருந்தும் அவருக்கு எதற்காக வாய்ப்பு வழங்கபட்டிருக்கிறது என்றால், அர்ஜுனுக்கு மேலே பட்டியலில் உள்ள பெரும்பாலானோர் ஸ்பின்னர்கள். அர்ஜுன் மட்டுமேதான் வேக பந்து வீச்சாளர், அதுவும் இடது கை வீச்சாளர் என்பது கூடுதல் சிறப்பு.

3. சமீபத்தில் நடந்த அன்டர் 19 வெஸ்ட் ஸோனுக்கும், ஈஸ்ட் ஸோனுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் அர்ஜுன் 37 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை
வீழ்த்தினார்.

4. உனாவில் நடந்து வரும் ஸோனல் போட்டிகளில் அர்ஜுன் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

5. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கூச் பெஹர் கோப்பை போட்டியில் ஒன்பது இன்னிங்சில் 18 விக்கெட்கள் வீழ்த்தியதோடு மட்டுமில்லாமல், ஒரே இன்னிங்சில் 44 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

சலுகைகள் அல்ல... அனைத்தும் அர்ஜுனின் கடின உழைப்பு!

2020-ல் நடக்க இருக்கும் ஜூனியர் உலகக்கோப்பை போட்டியிலும் தற்போது 18 வயதாகும் அர்ஜுனால் விளையாட முடியாது. இத்தனைக்கும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கை சுற்றுப்பயணத்தில், அர்ஜுன் ஒரு நாள் போட்டிகளுக்கான அணியில் கூட இடம் பெறவில்லை, 4 நாள் போட்டியில் விளையட மட்டும்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தையும் அவர் கடின உழைப்பின் மூலமே அடைந்திருக்கிறார்.

கிரிக்கெட்டின் இன்னொரு ஜாம்பவானான டான் ப்ராட்மேனின் ஒரே மகன் ஜான் ப்ராட்மேன். இவர் தன்னுடைய பெயரை டான் ப்ராடசன் என்று மாற்றிக்கொண்டார். இதற்கு அவர் கூறிய காரணம்,

" என்னை இவ்வுலகம் ஜான் என்ற தனி மனிதனாக பார்க்கவில்லை, ப்ராட்மானின் மகனாகத்தான் பார்த்தது" என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

இந்த வார்த்தைகளின் வலியை அனைவரும் உணர்வார்களா என்று தெரியவில்லை...... ஆனால் கண்டிப்பாக அர்ஜுனை போல பல்வேறு துறையில் பிரபலங்களாக விளங்குபவர்களின் வாரிசுகளுக்கு இந்த வார்த்தைகளின் வலி தெரியும்.

ஆம் கடவுளின் மகனாக இருப்பது அவ்வளவு சுலபமில்லை....

 

 
First published: June 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...