இந்தியாவில் நதி நீர் இணைப்பு சாத்தியமா?

மத்திய, மாநில அரசுகளிடம் நதிகளை இணைப்பது குறித்து அறிவியல் பூர்வமான அடிப்படை தரவுகள் ஏதுமில்லை.

இந்தியாவில் நதி நீர் இணைப்பு சாத்தியமா?
நதிகள் இணைப்பு
  • News18
  • Last Updated: April 9, 2019, 6:08 PM IST
  • Share this:
அரசியலுக்கு வருவதாக நீண்ட காலமாகக் கூறி வரும் ரஜினிகாந்த், பாஜக தான் தங்களது தேர்தல் அறிக்கையில் நதி நீர் இணைப்பு குறித்துக் கூறியுள்ளதற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

ரஜினியிடம் ஆதரவு கேட்ட கமல்ஹாசனுக்கு இது ஏமாற்றமாக இருந்தாலும் தற்போது இருக்கும் சூழலில் நதி நீர் இணைப்பு இந்தியாவில் சாத்தியமா? என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

நதி நீர் இணைப்பு குறித்து காங்கிரஸ் காட்சியோ, பாஜகவோ முதலில் பேசவில்லை. 1858-ம் ஆண்டு ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் பெரும்பாலான இந்தியப் பகுதிகள் இருந்த போதே பிரிட்டிஷ் பாசன பொறியாளர் ஆர்தர் காட்டன் நதி நீர் இணைப்பு குறித்து கூறியுள்ளார்.


151 ஆண்டுகளாகியும் தற்போது வரை இது சாத்தியப்படவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் மற்றும் கட்சிகள் இதை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கின்றனவா? என்று கூட கேள்வி எழுப்ப வைக்கிறது.

உதாரணத்திற்கு கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்குக் காவேரி நீரைப் பெறவே இத்தனை காலம் நாம் போராடி வந்த நிலையில் வட மாநிலங்களில் ஓடும் ஒரு நதியைத் தென் மாநிலம் வரை இணைத்தால் அப்போது எத்தனை மாநிலங்களுடன் நாம் போராடி நீரைப் பெற வேண்டும் என்ற சூழல் ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.  காவேரி மட்டுமில்லை இந்தியாவின் பல்வேறு நதி நீரை பங்கிடுவதில் சிக்கல்கள் உள்ளன.

நதிநீர் அதிகம் பாயும் மாநிலங்களிலிருந்து பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு நதியை இணைக்கலாம் என்ற கூறலாம். ஆனால் தற்போது நீர் பற்றாக்குறையில்லாமல் ஒரு நதியின் நீரை சில மாநிலத்தவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இதுவே நதிகள் இணைக்கப்பட்டால் தற்போது அதை பயன்படுத்தி வருபவர்களுக்குத் தேவையான நீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. இதற்கு யாராலும் உறுதியளிக்க முடியாது. தென் மாநிலங்களில் பஞ்சம் என்றால் வட மாநிலத்தவர்களுடன் போராடி நீரை பெற வேண்டும்.

தற்போது செலுத்தும் வரியையே நமக்குத் தேவையான நிதியாகப் பெற முடியாமல் உள்ள நாம் நதி நீரை எப்படி கேட்டுப் பெறுவோம்.

அப்படியானால் நீங்கள் நதி நீர் வீணாகக் கடலில் சென்று கலந்தால், வெள்ளம் வந்தால் சந்தோஷமா என்று கேட்கலாம். ஒரு நதி கடலில் சென்று கலந்தால் மட்டுமே அந்த கடற்கரை ஓரம் உள்ள மக்களால் அங்குத் தொடர்ந்து வாழ முடியும்.

இல்லையென்றால் கடற்கரை ஓரம் உள்ள மண்ணில் உப்பு அதிகரித்து அந்த மண் விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியாத சூழலுக்குத் தள்ளப்படும். அதை மறித்துப் பிற மாநிலங்கள் பயன்படுத்தும் நிலைக்குக் கொண்டு வந்தால் அதை வைத்து அரசியல் நடைபெறும். அதுமட்டுமில்லாமல் சில நதிகள் நமது அண்டை நாடுகளுடனும் நாம் பகிர்ந்து வருகிறோம். அதற்கும் சிக்கல் ஏற்படும்.

சர்வதேச நதி நீர் பங்கீடு ஒப்பந்தங்களின் படி மேலிருந்து கீழே ஒரு நதியின் நீர் பாய்கிறது என்றால், அதை கடைசி வரை அனைத்து நாடுகளும் பகிர வேண்டும். அப்படியென்றால் சர்வதேச ஒப்பந்தத்தில் உள்ள நதி நீரை பகிர்வதில் சிக்கல் ஏற்படும்.

ஒருவேலை இல்லை நதி நீரை பங்கிடுவதில் சிக்கல் ஏதும் எழாது. இந்தியாவில் உள்ள நதி நீரை இணைக்கலாம் என்று கூறினாலும் எவ்வளவு செலவாகும்? என்ற கேள்வியும் உள்ளது.

2001-ம் ஆண்டு இமய மலையில் தோன்றும் நதிகள் மற்றும் தீபகற்ப ஆறுகளை இணைக்க 5,60,000 கோடி ரூபாய் செலவாகும் என்று தெரிவித்திருந்தனர். 2019-ல் இந்த நதிகளை இணைக்க வேண்டுமெனில் எவ்வளவு செலவாகும் என்று நினைத்துப் பாருங்கள். 2002-ம் ஆண்டு 27.54 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் இன்று 75.56 ரூபாயாக விற்கப்பட்டு வருகிறது.

2018-2019 நிதியாண்டில் இந்தியாவின் நிதி பற்றாக்குறை 3.3 சதவீதமாக உள்ளது. 2019-2020 இடைக்கால பட்ஜெட்டில் நடப்பு நிதியாண்டுக்கு 24.42 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். 3.4 சதவீதம் நிதி பற்றாக்குறை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நதிகளை இணைப்பதால் விவசாய நிலங்களுக்குத் தேவையான சத்துக்கள் பாதிப்படையும் என்று மிஹிர் ஷா தலைமையிலான நீர் சீர்திருத்தங்கள் தொடர்பான ஏழு நபர் கமிட்டி சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியுள்ளது.

உபரி நீர் உள்ளதாகக் கூறப்படும் நதி தோன்றும் இடங்களில் கடந்த சில ஆண்டுகளாக மழை குறைந்து வருகிறது என்று ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி பாம்பே உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளிடம் நதிகளை இணைப்பது குறித்து அறிவியல் பூர்வமான அடிப்படை தரவுகள் ஏதுமில்லை என்று இது குறித்து ஆய்வு செய்து வரும் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது 151 ஆண்டுகளாகக் கூறப்பட்டு வரும் இந்த நதி நீர் இணைப்பு திட்டமானது அரசியல் லாபத்திற்காகவும், கட்டுக்கதையாகவுமே தொடரும் என்றே கூறத்தோன்றுகிறது.

மேலும் பார்க்க:
First published: April 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading