விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க முயற்சிக்கிறதா மத்திய அரசு- என்ன சொல்கிறார்கள் விவசாயிகள்

டெல்லி சலோ போராட்டம்

போராட்டக்காரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் அரசுத் தரப்பு ஈடுபடுவதாகவும், அதற்கான முன்னேற்பாடாகத்தான் அமைச்சரின் இந்த பேச்சு இருக்கிறது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

  • Share this:
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் நடத்திவரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றது. இதுவரை மத்திய அரசுடன் விவசாய சங்கங்கள் நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தேல்வி அடைந்துள்ளன. இதைனைத் தொடர்ந்து விவசாய சங்கத்தினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர். அவர் விவசாய சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்றும் அதில் திருத்தங்கள் செய்து, எழுத்துப் பூர்வமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், விவசாய சங்கத்தினர் அமித் ஷாவின் கருத்தை ஏற்க மறுத்துவிட்டனர். அத்துடன், மத்திய அரசுடன் நடக்க இருந்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறாது என்றும் அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும்வரையில் போராட்டம் தொடரும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். அதன்படி, டிசம்பர் 14-ம் தேதி நாட்டிலுள்ள பல்வேறு சுங்கச்சாவடிகளிலும், மாவட்ட தலைநகரங்களில் உள்ள பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டுட்டும் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை ஆதரித்து, தமிழகம் உள்பட நாடு முழுவதிலும் ஆங்காங்கே போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்நிலையில், வேளாண் சட்டங்களில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் குறித்த எழுத்துப் பூர்வமான அறிக்கையை மத்திய அரசு விவசாய சங்கங்களிடம் வழங்கியது. அதில், குறைந்தபட்ச ஆதார விலை பழையபடியே தொடர இருப்பதாகவும், மண்டி அமைப்புகள் எந்த பாதிப்பும் இன்றி முன்பு இருந்தபடியே, தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டிகளுக்கும், தனியார் சந்தைகளுக்கும் சமமான வரிவிதிக்கப்படும் எனவும் அதில், குறிப்பிடப்பட்டுள்ளது. 2020, மின்சார சட்டத்திருத்த மசோதாவின் படி, விவசாயிகள் செலுத்திவரும் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அதில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தனியாருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு, நீதிமன்றங்கள்வரை செல்லவும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த, பாரதிய விவசாய சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகெய்த், “வேளாண் சட்டங்களை முழுமையாக ஏன் மத்திய அரசு திரும்ப பெறவில்லை என” கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளை விமர்சித்துள்ள ராகுல் சாந்தி, ‘மோடியின் ஆட்சியில் சீர்த்திருத்தங்கள் என்பவை திருட்டுக்கு இணையாக உள்ளன. அதனால்தான் இந்த அரசாங்கம் ஜனநாயகத்தை துறக்க விரும்புகிறது’ என்று குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையில், “பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த தர்னா நடத்தப்படும் என்றும் எங்கெல்லாம் அதானி, அம்பானிக்கு சொந்தமான கார்பரேட் நிறுவனங்கள் உள்ளதோ அங்கெல்லாம் எங்களுடைய போராட்டங்களை நடத்துவோம்” என்று விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் இத்தகைய போராட்டத்திற்கு பின்னால் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இருப்பதாக மத்திய அமைச்சர் கூறினார். அமைச்சரின் இந்தப் பேச்சு விவசாயிகளின் போராட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கான முயற்சி என்று போராட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மசோதாவை திரும்பப் பெறும் நடவடிக்கையை மேற்கொள்ளாமல், போராட்டக்காரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் முயற்சியில் அரசுத் தரப்பு ஈடுபடுவதாகவும், அதற்கான முன்னேற்பாடாகத்தான் அமைச்சரின் இந்தப் பேச்சு இருக்கிறது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Published by:Suresh V
First published: