கோவில்களை பிராமணர்கள் மட்டும் தான் பராமரிக்க வேண்டுமா? – சத்குரு விளக்கம்

சத்குரு

யார் உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி, இந்து, முஸ்லிம், கிறித்துவர் , யூதர், சீக்கியர் - இவை எல்லாம் அர்த்தமற்றது.இன்றைய உலகத்தில், அதை ஒரு அமைப்பு முறையாக நிறுவ முடியும்.

  • Share this:
சத்குரு நீங்கள் இந்து கோவில்களை அரசின் பிடியிலிருந்து விடுவிப்பது பற்றி கூறி இருந்தீர்கள். ஏன் அப்படி விடுவிக்க வேண்டும். அப்படி அது நடக்கும் பட்சத்தில், கோவில் நிர்வாகத்தையும் கோவிலையும் யார் பார்த்து கொள்வார்கள்? பிராமணர்கள்தானா? அவர்களால்தான் கோவிலை நன்றாக பார்த்துக் கொள்ள முடியுமா? அல்லது அது பற்றி நீங்கள் வைத்திருக்கும் திட்டம் என்ன?

சத்குரு: நான் அது பற்றி பேசவில்லை. அரசியலமைப்பில் என்ன எழுதியிருக்கிறதோ அதைத்தான் சொல்கிறேன். நீங்கள் ஆன்மீகம் அல்லது மதம் சம்பந்தப்பட்ட இடங்கள் என்று சொல்வதை, எப்படி நடத்த வேண்டும் என்று அரசியலமைப்பில் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது. இல்லையா? அதைத்தான் வலியுறுத்துகிறேன். இது மத சார்பற்ற நாடு. எனவே அரசுகள் மதத்திலிருந்து விலகியிருக்க வேண்டும்.

எனவேதான் சொல்கிறேன், இந்து கோவில்கள் நிச்சயமாக அரசின் வசமிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டும். ஏனென்றால், இந்த கோவிலைச் சார்ந்த முக்கிய அம்சங்கள் எந்த மதத்துக்கும் சேர்ந்தது கிடையாது. இது ஒரு குறிப்பிட்ட மரபை சார்ந்தது. சிவன் கோவில்கள், விஷ்ணு கோவில்கள், கிருஷ்ணர் கோவில்கள், தேவி கோவில்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட சக்தி மையங்கள் இவை. உங்களது தேவைக்கேற்றபடி தேவையான இடத்துக்கு, தேவையான கோவிலுக்கு நீங்கள் போகலாம். அந்த இடத்தின் இயல்புக்கு ஏற்ற மாதிரி, வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் அதை நிர்வாகம் செய்தார்கள்.பிராமணர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமா?

இப்பொழுது கோவில்களை விடுவித்தால், பிராமணர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டுமா? தேவையே இல்லை. முதலில் சாதிகள் என்பதே மக்கள் செய்த வேலைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. மரவேலை செய்பவர், தங்கவேலை செய்பவர், இரும்புவேலை செய்பவர், வணிகர் அல்லது போர்வீரர் இப்படி ஒவ்வொருவருமே அவர்களின் தொழில்கள் அடிப்படையில் நாளடைவில் தனித்தனி ஜாதிகளாக்கப்பட்டனர். முன் காலத்தில் மக்களால் ஜாதிகளை மாற்றி கொள்ள முடிந்தது. நாளடைவில் துரதிர்ஷ்டவசமாக இந்த வித்தியாசங்களை மக்கள் பாகுபாடு செய்து பாரபட்சத்துடன் பார்க்க ஆரம்பித்தார்கள். இதை சுரண்டலுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இன்றைய காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட ஜாதிதான் மரவேலை செய்ய வேண்டும், ஒரு குறிப்பிட்ட நபர்தான் தங்க ஆசாரி ஆக வேண்டும் என்று எதுவும் இல்லை.

எல்லாரும் நகைக்கடை வைக்க முடியும். எல்லா வித மக்களும் இன்று தங்கநகைகளை வடிவமைக்கிறார்கள். ஏனென்றால் அவற்றை சொல்லி கொடுக்க பயிற்சி பள்ளிகள் வந்துள்ளன.
ஒருகாலத்தில், நீங்கள் போர் படையில் இருக்க வேண்டுமானால், சத்ரியனாக இருக்க வேண்டும். கோவிலுக்குள் இருக்க, பிராமணராக இருக்க வேண்டும். உங்களுக்கே தெரியும். இன்று, இந்திய இராணுவத்தில் நீங்கள் சேர, ஜாதி, மதம், இனம் எதுவுமே தேவையில்லை. இதே போன்று கோவில்களிலும் நடக்க வேண்டும். இதற்கு தேவையான ஒரே விஷயம் - பயிற்சி.

அதனால் பயிற்சி கொடுக்கக்கூடிய மையங்களை நாம் துவங்கலாம். நீங்கள் எந்த மதம், ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும், சேவை செய்யும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கேற்றபடி நாம் பயிற்சி மையங்களை உருவாக்கி, மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். சிவன் கோவில் என்றால் இப்படி, கிருஷ்ணர் கோவில் என்றால் இப்படி, விஷ்ணு கோவில் இப்படி செய்ய வேண்டும், தேவி கோவிலில் இதை இதை செய்ய வேண்டும் என்று பயிற்சி கொடுக்கலாம். யாரெல்லாம் அதை கற்றுக் கொண்டு தேர்வில் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் கோவிலை நடத்துவார்கள்.ஈஷா யோகா மையமே சிறந்த உதாரணம்

இதற்கு ஈஷா யோக மையமே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இங்கு பைரவி தேவி இருக்கிறாள். அங்கு நிறைய மிகத் தீவிரமான சடங்குகள் இருக்கிறது. பெண்கள் மட்டும் தான் இந்தக் கோவிலை நடத்த முடியும். ஆண்கள் கோவிலின் வெளிப்புற செயல்களை மட்டும் தான் கவனித்து கொள்கிறார்கள். அவர்கள் உள்ளே போக முடியாது. ஏனென்றால் கோவிலின் பிரதிஷ்டை அப்படி செய்யப்பட்டிருக்கிறது.

அதே போல இங்குள்ள தியானலிங்கத்தில் மாதத்தின் ஒரு பாதி, அதாவது சந்திர நாள்காட்டியின்படி மாதத்தில் ஒரு பாதி ஆண்களும், மற்றொரு பாதி, பெண்களும் கோவிலை பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் துறவிகள். இப்பொழுது, இங்கு உருவாகிக் கொண்டிருக்கும் காலபைரவருக்கான தலத்தை முற்றிலும் வேறு விதமான மனிதர்கள் பார்த்துக் கொள்வதை நீங்கள் கவனிப்பீர்கள். ஆம். ஏன் என்றால், அது உயிர்வாழும் மனிதர்களுக்கு மட்டுமில்லை, இறந்தவர்களுக்காகவும் உருவாக்கப்படுகிறது. அதனால் அந்த கோவிலை பார்த்துக் கொள்ள வேறு விதமான ஈடுபாடு, திறமை தேவை.

கோவில்கள் பிரார்த்தனை தலங்களாக இருந்ததில்லை. கோவில்களில், ஒருவர் பிரார்த்தனைகளை வழி நடத்தி, அவரை பின்தொடர்ந்து அனைவரும் போவது போலவும் இல்லை. எப்பொழுதுமே இருந்ததில்லை. பூசாரிகள் சடங்குகளை மட்டுமே செய்தார்கள். அதை நடத்திக் கொடுப்பதற்கு மட்டும்தான் அவர் இருந்தார். அவர் அந்த இடத்தை ஆட்சி செய்யவில்லை. அந்த இடத்தை அதிகாரம் செய்யவில்லை, போதனைகள் கொடுக்கவில்லை. அங்கு யாரும் போதனைகளோ, தத்துவங்களோ அல்லது சமூதாயத்தை தூண்டிவிடும் மாதிரியான செயல்களையோ செய்யவில்லை.இது உலகத்தின் எதிர்காலத்துக்கு ரொம்ப முக்கியம். அதனால் அவற்றை இந்து கோவில்கள் என்று மட்டுமே சொல்லாதீர்கள். மனிதர்கள் தன்னை முழுதும் மாற்றியமைத்து கொள்ளக் கூடிய ஆலயங்களாக அவை இருந்தன. தங்களின் உள்வளர்ச்சிக்காக மனிதர்கள் அந்த இடத்துக்கு போக முடியும். நான் என்ன சொல்கிறேன் என்றால் , மசூதிகளும் சர்ச்சுகளும் எல்லா இடங்களும் அப்படித்தான் இருக்க வேண்டும். மசூதியின் ஒரு அம்சம் எனக்கு பிடித்திருந்தால், அதற்காக நான் மசூதிக்கு போகக்கூடாதா என்ன? ஆனால் , இப்பொழுது எல்லாம் பிரிந்து கிடக்கிறது. ஒரு இடத்துக்குத் தான் போக முடியும் என்றால், அங்கு மட்டும் தான் போக முடியும்.

அதிர்ஷ்டவசமாக, ஈஷாவில் அதை முழுவதுமாக மாற்றி வைத்திருக்கிறோம். இங்கு ஈஷாவுக்கு - அனைத்து மதம், ஜாதி, இனம் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். யார் யார் இவர்கள் என்று நாங்கள் பார்ப்பதில்லை. உங்கள் அப்பா யார், தாத்தா யார் என்று எங்களுக்கு கவலை இல்லை. உங்கள் தாத்தா யாராக இருந்தாலும், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் எங்குப் போக விரும்புகிறீர்கள்? - இதுதான் ஆன்மீகத்துக்கு முக்கியம். பர்கா அணிந்த பல பெண்மணிகள் வருகிறார்கள். லிங்க பைரவியில் நிறைய சடங்குகள் இருக்கிறது. அது அவர்களுக்கு ஒத்து வராமல் இருக்கலாம். வெளியிலேயே பார்த்து விட்டு கடந்து போய் விடுவார்கள்.

ஆனால் , அவர்களுக்கு தியானலிங்கம் பிடித்திருக்கிறது. நமக்கு அவை அனைத்துமே பரவாயில்லை தான். யாரையும் அங்கு போங்கள், இங்கு போங்கள் என்று கட்டாயப்படுத்துவதில்லை. அந்த இடம் எதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதன் அடிப்படை நியதிகளை மனிதர்கள் கடைபிடிக்கும் வரையில், அதன் அடிப்படை நோக்கம், அந்த இடம் செயல்படத் தேவையான அடிப்படைகளை கடைப்பிடிக்கும் வரையில், எல்லா மனிதர்களையும் அந்த இடத்துக்குள் விட வேண்டும். கருவறைக்குள்ளேயும் அனுமதிக்க வேண்டும்.கருவறை உடனான தொடர்பு அனைவருக்கும் வேண்டும்

யார் உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி, இந்து, முஸ்லிம், கிறித்துவர் , யூதர், சீக்கியர் - இவை எல்லாம் அர்த்தமற்றது. அந்த மனிதர் அந்த இடத்தால் ஈர்க்கப்பட்டு, தேவையான விதத்தில் தன்னை தயார்படுத்திக் கொள்ள விருப்பமாக இருந்தால், இன்றைய உலகத்தில், அதை ஒரு அமைப்பு முறையாக நிறுவ முடியும். ஆனால் எவையெல்லாம் அமைப்பு முறையாக செயல்பட்டனவோ, அவற்றுக்கெல்லாம் ஜாதிச் சாயம் பூசி அழித்து விட்டார்கள்.

இன்றைக்கு, இரும்புக் கொல்லர்களுக்கு பயிற்சியளித்த இடங்கள் எல்லாம் இரும்புக் கொல்லர் ஜாதி என்று ஆகி விட்டது. ஆனால் , முன்னர் அது அமைப்புமுறையாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, பொற்கொல்லர்கள் தாங்கள் இரும்புக்கொல்லர்களை விட உயர்ந்தவர்கள் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். சமூகத்தில் இரும்புக்கொல்லர் இல்லாமல் வாழ முடியாது. பொற்கொல்லர் இல்லாமல் வாழ்ந்துவிட முடியும். இல்லையா? இந்த உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் பிற்காலத்தில் ஏற்பட்ட ஒரு விஷயம். கோவில்களில் இந்த வேற்றுமை இருந்ததே இல்லை. கோவில்களை, மனிதர்களின் உடல்தன்மையை கடந்த, வாழ்க்கையின் குறிப்பிட்ட அந்த பரிமாணம் மக்களுக்கு கிடைக்கும் விதத்தில், உணரும் விதத்தில் அமைத்தார்கள்.

இன்றைக்கு வெளிநாட்டினர் உள்பட, யாரேனும், கோவிலுக்கு வர விரும்பினால், உள்ளே வரவேண்டும் என்ற ஆசையில் உண்மையாகவே வருகிறார்கள். அந்த கோவிலை உணர விரும்புகிறார்கள். அதனால் நாடு, பாலினம், ஜாதி, மதம் எதுவுமே பொருட்டில்லை. இவை அனைத்தும் ஏற்கனவே பல கோவில்களில் நடந்திருக்கிறது ஏனென்றால், கோவில் எனும்போது, உங்கள் உடல்தன்மையை கடந்த ஒரு பரிமாணத்தோடு தொடர்பில் இருக்கிறீர்கள். இந்த வாய்ப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் திறக்கப்பட வேண்டும். நிர்வாகத்துக்கு மட்டுமில்லை, பயன்பாட்டுக்கு மட்டுமில்லை, கருவறையோடும் தொடர்பில் இருக்க ஒருவருக்கு வாய்ப்பு வேண்டும். அனைவருக்கும் அது கிடைக்க வேண்டும். அதை நான் பார்க்க விரும்புகிறேன்.

கோயில்களை பக்தியும் பொறுப்புமிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவர்களுக்கே எனது ஓட்டு: சத்குரு

இது கோவிலின் நன்மைக்காக மட்டும் சொல்லவில்லை. மனிதகுலத்துக்கே இது ரொம்ப முக்கியம். எந்தவித பாகுபாடும் இல்லாமல் மனிதகுலம் முழுதாக வளர ஆசை கொள்ள வேண்டும். நாம் இப்பொழுது எப்படி இருக்கிறோமோ, அந்த எல்லைகளைக் கடந்து, இன்னொரு பரிமாணத்தை தொட அனைவரும் விரும்ப வேண்டும். இதனால் தான், அரசின் வசமிருந்து கோவில்களை விடுவிக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன். ஏனென்றால், மறைந்து போன அசிங்கமான வரலாறு முழுமையாக அழியாதபடிக்கு அரசு கெட்டியாக தன்வசம் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதை முழுமையாக அழித்து விட்டு, பிரம்மாண்டமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான நேரம் வந்து விட்டது.
Published by:Sivaranjani E
First published: