Home /News /special-articles /

பாடம் 1: அசைவின்மையின் சக்தி

பாடம் 1: அசைவின்மையின் சக்தி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

அன்பு நெஞ்சங்களே,

வரும் 21 நாட்களில் உங்கள் ஆர்வத்தையும், சிந்தனையையும் தூண்டும்படி எழுத ஒரு சிறிய முயற்சி செய்கிறேன். நம்மை பாதிக்கக்கூடிய விஷயங்களில் மனதை செலுத்தாமல், புது வகையான சாத்தியக்கூறுகளை நோக்கி மனதை செலுத்த சிறு முயற்சி இதுவாகும்.

உங்களுக்கு இவை படிக்க பிடிக்கும் என்று நினைக்கிறன்.

அசைவின்மையின் சக்தி :
நூறாண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கக்கூடிய நிகழ்வுகளில் ஒன்றான இந்த கொரோனா வைரஸ் - கோவிட் -19 என்பது, நஸ்ஸிம் நிக்கோலஸ் தலேப் சொன்னது போல் ஒரு பிளாக் ஸ்வான் (Black Swan) நிகழ்வாகும் (கணிக்கமுடியாத, சரியான எதிர்நுட்பத்தை உருவாக்க முடியாத நிகழ்வு). இந்த lockdown'ஐ விட்டு நாம் வெளியே வரும்போது, நம்முடைய சராசரி வாழ்க்கை பெரிதும் மாறி இருக்கும், பாதிக்கபட்டு இருப்போம், முக்கியமாக, உலகம் முன்னைப்போல் இருக்காது . நிச்சயமாக பொருளாதார பாதிப்படைந்தும், சிலரை இழந்தும், ஏற்கனவே உள்ளது போல, முக்கியமாக மக்களின் மீது நம்பிக்கையற்றும் இருக்க ஆரம்பிப்போம் .

அண்ணாமலை


இச்சூழ்நிலையை எல்லோரும் பார்ப்பதுபோல் அல்லாமல், சற்றே தைரியத்துடன் நாம் வேறு விதமாக பார்ப்போமா ?
1. கடைசியாக எப்பொழுது, மிகுந்த நாட்களுக்கு , நம்முடைய குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும்படி நாம் தள்ளப்பட்டோம்?
2. கடைசியாக எப்பொழுது , "நேரம்” என்ற உணர்வை இழந்தோம்?
3. கடைசியாக எப்பொழுது, நாம் நம்மை பற்றிய எண்ணத்தை விட்டோம்? - இதுவரை வாழ்க்கை என்பது நம்மை பற்றியே இருந்தது அல்லவா? - நம் வேலை , நம் வாழ்க்கை , நம் ஊதியஉயர்வு , நம் முதலாளியை மகிழ்விக்க கடும் முயற்சி என .....
4. கடைசியாக எப்பொழுது, வாழ்க்கை நம் கட்டுப்பாட்டை மீறி சென்றது? ஒரு மனிதனாக, நமது வாழ்க்கை நம் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம் என்றே வாழ்கிறோம் அல்லவா ?

ஒரு புதிய வருங்காலத்தை உருவாக்குவதற்கும் , மனதின் அழுத்தங்களை விட்டு விலகுவதற்கும் , பழைய செய்கைகளை தகர்த்து வெளி வருவதற்கும் இதுவே நல்ல தருணம் . நாம் விரும்பும் பட்சத்தில், இதை நாம் கட்டாயமாக செய்யலாம் .

கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் நான் ஒரு liaison officer'ஆக(L.O) இருந்தபோது இது நடந்தது . LO என்பவர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒரு பிரதிநிதியாக செயல்பட வேண்டும் . அவருடைய முக்கியமான வேலை, ஒரு யாத்ரிகளின் குழுவை டெல்லிலிருந்து கைலாஷிற்கு அழைத்து சென்று திரும்ப டெல்லிக்கு கூட்டி வர வேண்டும் . உத்தரகண்டிலிருந்து திபெத்தை நோக்கி இந்த குழு சரியாக ஜூலை 20, 2018 அன்று தன் பயணத்தை துவங்கியது. இது ஒரு மிக கடினமான மற்றும் நன்றாக திட்டமிடப்பட்ட 23 நாள் பிரயாணம். ஆகஸ்ட்11, 2018 அன்று டெல்லி திரும்பி வருவதே எங்கள் திட்டம் . திரும்பி பெங்களூரு வரும் வரையிலான எனது பயண திட்டத்தை நான் சரியாக செய்திருந்தேன். எங்கள் பயணத்தின் மூன்றாவது நாள் என்ன நடந்தது என்பது நினைவு கூற தக்கது .

மிகுந்த மேகம் சூழ்ந்ததனால் MI-7 ஹெலிகாப்டரால் எங்களுக்கு முன்னாள் சென்ற குழுவை நேரத்தில் சேர்க்க முடியவில்லை (பிட்டோகரிலிருந்து குஞ்சிவரை - இரண்டும் உத்தரகாண்டில் உள்ளன). கேரளாவில் மிகுந்த வெள்ளம் வந்ததால் , பல ஹெலிகாப்டர்கள் அங்கே நிவாரண பணிக்கு சென்று விட்டன. நாங்கள் குஞ்சியை அடைந்த நேரத்தில், ஏழு நாட்கள் கூடுதல் நேரம் பிடித்தது. நாங்கள் ஏற்கனவே எங்கள் கால அட்டவணையில் இருந்து விலகி இருந்தோம். நாங்கள் குஞ்சியை அடைந்ததும் (திபெத்துக்குள் நுழைவதற்கு லிபுலெக் பாஸ் மீது ஏறுவதற்கு முன்பு இந்தியப் பக்கத்தில் உள்ள கடைசி கிராமம்), எங்கள் சீன விசா காலாவதியானது. மீண்டும், குஞ்சியில் தங்குவதென முடிவு எடுக்கப்பட்டது, நான் குழுவை கவனித்துக்கொள்ள , எனது இணை LO விசாவை மறுபரிசீலனை செய்ய இரண்டு வெவ்வேறு ஹெலிகாப்டர்கள் வழியாக புதுடெல்லிக்கு திரும்பினார். குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர், இந்த யாத்திரைக்கு (வேண்டுதலுக்காக) வருவதற்கு பிச்சை எடுத்து வந்த ஒருவர், அறுபது ஆண்டுகளாக தனது கிராமத்திலிருந்து ஒருபோதும் வெளியேறாத ஒரு ராஜஸ்தானி பெண்மணி, ஹரியானாவிலிருந்து வந்த மிக ஏழையான மெக்கானிக் வரை - அனைவருக்கும் இது சங்கடமாக இருந்தது. சிலருக்கு அது வீட்டிற்கான ஒரு பொருளாதார வாய்ப்பை இழந்ததாகவோ , சிலர் தங்கள் குழந்தைகளை அந்த கூடுதல் நேரத்திற்காக வீட்டில் காத்திருக்கச் செய்வதாகவோ (எங்களுடன் வந்த நான்கு பெண்களுக்கு 10 வயதுக்குக் குறைவான குழந்தைகள் இருந்ததால்), சிலருக்கு அது அவர்களின் வேலை நிமித்தமான வாக்குறுதிகளை தவற விடுவதாகவும் தோன்றியது . எனது மூன்று வயது மகனிடமிருந்து நான் விலகி இருப்பதும், எனது உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து விலகி இருப்பதும் எனக்கு வேதனை அளித்தது. நாங்கள் அனைவரும் செய்த தவறு என்னவென்றால், நம்முடைய கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் சரி எது , தவறு எது என்றும் , கட்டுப்பாடு மற்றும் ஒரு கால அட்டவணையில் இயங்கும் வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் வாழ்வை பற்றி கொண்டிருந்தோம் .

விசா வந்த நேரத்தில், குஞ்சியில் (எங்களுக்கு பின்னால் புறப்பட்ட இரண்டு குழுக்களுடன் சேர்ந்து) மூன்று குழுக்கள் இருந்தன. ஒருவர் இவ்வளவு நேரம் தங்கியிருக்க 16,000 + அடி உயரத்தில் உள்ள குஞ்சி நல்ல இடமல்ல. தினசரி இரண்டு மணிநேரம் மட்டுமே கிடைக்கும் மின்சாரம், ஒரு செயற்கைக்கோள் தொலைபேசியைத் தவிர வேறு ஏதும் இல்லாத நிலைமை, உட்கார்ந்து வானத்தைப் பார்த்து கொண்டு மேகம் சற்றே விலகி ஹெலிகாப்டர்கள் தரையிறக்க அனுமதிக்குமா என்று யோசிப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. தொடர்ச்சியாக யாத்ரியிகள் தங்களுடைய விரக்தியை L.O மீது கொட்டினார். L.Oகள் கடவுளால் சபிக்கப்பட்டதைப் போல கருத்துகள் கூறப்பட்டன. 17 நாட்கள் இப்படி இருப்பதை கற்பனை செய்து பாருங்கள்!

இறுதியாக, கடினமான லிபுலேக் பாஸில் ஏறிய பிறகு நாங்கள் திபெத்துக்கு குழுவை கொண்டு சேர்த்தோம் . நாங்கள் செய்த பரிக்ரமா உட்பட கைலாஷைச் சுற்றி வர ஐந்து நாட்கள் இருந்தன. அடிக்கடி, இந்த கேள்வியை நானே கேட்டுக்கொண்டே இருந்தேன், நாங்கள் ஏன் இவ்வளவு நேரம் காத்திருக்கிறோம்? கைலாஷைப் பார்ப்பதற்கு முன்பு நாம் ஏன் இத்தகைய கஷ்டங்களை அனுபவித்தோம்? இது உண்மையில் மதிப்புக்குரியதா? கைலாஷைச் சுற்றியுள்ள பரிக்ரமத்தின் மூன்றாம் நாளில் எனக்கு பதில் கிடைத்தது. இது ஒரு அற்புதமான தருணம் போல இருந்தது. கைலாஷ் ‘கடவுள்’ அல்ல, அவரை நாம் அறிந்த வடிவத்தில் ‘சிவன்’ அல்ல. கைலாஷ் என்பது அமைதியும், எதிர்பார்ப்புகளிலிருந்து முற்றிலும் விடுபட்ட இடமும் ஆகும். இது ஒன்றுமில்லாத ஒரு இடமாகும், அதே நேரத்தில் எல்லாம் கொண்ட இடமும் ஆகும் (ஈஷா அறக்கட்டளையின் சத்குரு பொழிப்புரைபடி). கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மனம் இல்லாதபோது, இந்த ஒன்றுமில்லாத தன்மையையும் எல்லாம் கொண்ட இடமுமாக இருத்தலை முழுமையான அமைதியின் போது மட்டுமே உணர முடியும். இது மிகவும் கடினமான இடம்.

நமது யோகா சூத்திரத்தில், பதஞ்சலி ,யோகாவை அசைவின்மை எனவும் , யம (நெறிமுறை விதிகள்), நியமா (நல்ல பழக்கவழக்கங்கள்), ஆசனம் (தியான தோரணை), பிராணயாமா (மூச்சின் கட்டுப்பாடு), பிரத்யஹாரா (உணர்வு உறுப்புகளின் கட்டுப்பாடு) , தாரணா (செறிவு), தியானா (ஆழ்ந்த தியானம்) மற்றும் இறுதியாக சமாதி (ஒன்றுணர்தல் மற்றும் ஒரு tranceஇல் இருப்பது) என எட்டு விதமாக பிரித்துள்ளார். இவை அனைத்தும் முற்போக்கான நிலைகள் மற்றும் ஒவ்வொன்றும் மற்றொன்றை உருவாக்குகின்றன. ப்ரத்யஹாராவுக்கு மேலே எந்த கட்டத்தையும் அடைய முழுமையான அமைதி சார்ந்த அசைவின்மை தேவை.

அசைவின்மை என்றால் என்ன?
அசைவின்மை என்பது எதிர்பார்ப்புகளிலிருந்து விடுபட்டு இங்கே, இப்பொழுது வாழும் மனநிலையாகும். கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படாமல், நிகழ்காலத்தைப் பற்றி சிந்தித்து, எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்குவது . அப்பொழுதுதான் நாம் உண்மையிலேயே ஒரு முழு மனிதராக, முழுமையான மனிதராகவும் ஆக முடியும் .

எதிர்பார்ப்புகள் மற்றும் பற்பல திட்டங்களுடன் நாங்கள் அனைவரும் யாத்திரைக்காக அங்கு வந்துள்ளோம் என்பதை நான் நன்றாக உணர்ந்தேன். அமைதி, அசைவின்மை இல்லாததால், நமக்குள் உள்ளார்ந்த ‘நம்மை’ உணரமுடியாது. வாழ்க்கையை பற்றிக்கொண்டு இருப்பது சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டது எனக்கு மிகவும் சக்திவாய்ந்த தருணம். அட்டவணைகளுடன் அதைக் கட்டுப்படுத்த முயற்சித்தது வீண். நம்முடைய அகங்காரத்திலிருந்தும், கர்வ உணர்வு மற்றும் சுய முக்கியத்துவம் போன்றவற்றிலிருந்து வெளியே வரவும் இது தருணம் . நாம் அசைவின்மைக்குள் நுழையும் நாளே வாழ்க்கை தொடங்குகிறது, அதற்கு முன் அல்ல.

முடிவாக…

இறுதியாக, நாங்கள் செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லியை அடைந்தோம் (எங்கள் முதல் அட்டவணையில் இருந்து 26 நாள் தாமதம்). கற்றுக்கொண்ட பாடங்கள் வாழ்நாளில் மறக்க முடியாதவை. குழுவில் உள்ள அனைவருக்கும் சிலவற்றைக் கற்றுக்கொள்வதற்கு ஒரு சக்திவாய்ந்த பாடம் இருந்தது. நாம் நம்மை கற்பனை செய்து கொள்வது போல உலகிற்கு நாம் அவ்வளவு முக்கியமல்ல என்பதை உணர்தல், மற்றவர்களுக்கு இது ஒருவரின் கடந்த கால வாழ்க்கையின் சுமை பற்றி எண்ணாமல் வாழ்க்கையை ஒரு சாத்தியக்கூறாகப் பார்ப்பது, பலருக்கு, ‘இங்கே’ மற்றும் ‘இப்போது’ ஆகியவற்றில் நம் வாழ்க்கையை உண்மையாக வாழ்வது பற்றிய விழிப்புணர்வாக மாறியது .

K. அண்ணாமலை, முன்னாள் IPS அதிகாரி, கர்நாடக அரசு .
Published by:Karthick S
First published:

Tags: Lockdown

அடுத்த செய்தி