பாடம் 21 | தெளிவுற்ற தலைமை

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

”சமூகம் குறுகிய பார்வை கொண்டதாக இருந்தாலும் அல்லது முன்னேற விருப்பமில்லாமல் இருந்தாலும், சமுதாயத்தை செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்ல அவர்கள் தயாராக இருக்க வேண்டும்”

  • News18
  • Last Updated :
  • Share this:
நண்பர்களே, நம் கட்டுரைத் தொடரின் கடைசி நாளுக்கு வந்துள்ளோம். இந்த 20 நாட்களில் பல முக்கியமான கற்றல் மற்றும் சிக்கல்களை நாம் விவாதித்தோம். இன்று நாம் விவாதிக்க போவது, எல்லாவற்றிலும் மிக முக்கியமானது என்று நான் நம்பும், தெளிவுற்ற தலைமை. நான் இதை வெறும் கட்டுரையாக கருதவில்லை, ஆனால் நம் அனைவருக்கும் தனித்தனியாகவும், நமது சமுதாயத்துக்காகவும், நம் நாட்டிற்கும் தேவைப்படும் ஒரு முக்கியமான கருப்பொருளாக கருதுகிறேன்.

  • இப்பொழுது வரை நாம் கொண்ட தலைமை:


தன்னலமற்று நமக்காக போராடி, நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த, நம்மை வழிநடத்திய, தொழில்நுட்ப ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ நம் தேசத்திற்கு பங்களித்த தலைவர்களைக் கொண்டிருக்கிறோம். அதனால்தான் ஒரு தேசமாக நாம் இங்கு முன்னேறியுள்ளோம். சுதந்திரம் கிடைத்ததும் மிகச் சிலரே நமக்கு தப்பிப்பிழைக்க ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்கள். சர் வின்ஸ்டன் சர்ச்சில், "இந்தியா என்ற ஒரு நாடு ஒரு பூமத்திய ரேகையை விட வேறல்ல" என்று சொன்னார். அவரது வார்த்தைகளின் ஆழமான பொருள் இதுதான்- இந்தியா என்பது தாளின் ஒரு வரியை விட பெரிது இல்லை. சுதந்திரம் அடைந்து சில நாட்களிலேயே, நம் மாறுபட்ட இனம், மத வேறுபாடு, பெரும் வித்தியாசங்கள் ஆகியவையால், இந்நாடு துண்டு துண்டாக போவது உறுதி. நாம் அவர் சொன்னது தவறு என்று நிரூபித்ததோடு மட்டுமல்லாமல், நம் பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்கொண்டுத் தாங்கி,  இப்போது உலக அரங்கின் உயரிய இடங்களை மெதுவாக ஆக்கிரமித்துள்ளோம். அதேபோல் நாம் COVID-19 தொற்றுநோயிலிருந்து தப்பித்து, முன்போலவே முழு செயலாற்றுவோம்.  இது ஏனென்றால், நாம் ஏற்கனவே நம்மை தூஷித்தவர்களுக்கு அவர்கள் சொன்னது தவறு என்று நிரூபித்துள்ளதால், இந்த நெருக்கடிகளிலிருந்து நாம் வெளியே வருவது மட்டுமல்லாமல், நாம் செழித்து வளருவோம்.

அதே போல, இந்நேரத்தில், நாம் தற்போதைய தலைமையின்  தரம் மற்றும் தலைவர்களின் தொகுப்பையும் பார்க்க வேண்டும் . ஒரு நாட்டில் தலைமை என்பது சமூகத்தினுடைய சிந்தனையின் ஆழத்தையும் அதன் முதிர்ச்சியையும் துல்லியமாக பிரதிபலிப்பதாக நான் எப்போதும் நம்புகிறேன். பெரும்பாலான துறைகளில் உள்ள தலைவர்களின் தற்போதைய தொகுப்புகள் உண்மையில் நமக்கு அதிக நம்பிக்கையைத் தருவதில்லை. மக்களையோ, இந்த பூமியை பற்றியோ சிந்தியாது  கார்ப்பரேட் தலைவர்கள் சுயநலமாக  இலாபங்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களாக மாறிவிட்டனர் . அதனால்தான் பல பெரிய நிறுவனங்கள் தோல்வியுற்றதையும், ‘வியாபார ஜாம்பவான்கள்’ தலைமறைவாக இருப்பதையும் நாம்  காண்கிறோம். அவர்கள் தாங்கள் கீழே செல்வது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான மக்களின் கனவுகளையும் அவர்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். நாம் ஏற்கனவே அதற்கான காரணங்கள் பற்றி விரிவாக விவாதித்துள்ளதால், மீண்டும் அதற்குள் செல்ல மாட்டோம். அரசியல் தலைவர்களைப் பற்றி பேசாமல் இருப்பதே சிறந்தது. ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, உள்ளூர் மட்டத்திலிருந்து ஒரு உயர் மட்டம் வரை, எல்லோருக்கும் மேலாக தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டு, தாங்கள் மட்டும் ஒரு தனி உலகில் வாழும் தலைவர்களை நாம்  காண்கிறோம்.

ஒரு துறையாக ‘அழுகிவிட்ட’ இந்த அரசியலில் நம் நம்பிக்கையை கிட்டத்தட்ட இழந்துவிட்டோம் . தன்னலமற்ற மற்றும் பொறுப்புணர்வுடன் சேவை செய்வதில் அதிக அக்கறை கொண்ட தலைவர்களின் தொகுப்பை பெறுவோம் என்று ஒரு சாதாரண மனிதர் நம்புவது என்பது ஒரு கானல் நீர் போலாகிவிட்டது. இதே தலைமையற்ற வெற்றிடத்தை பெரும்பாலான துறைகளிலும் இறுதியாக நம் வீடுகளிலும்  நாம் காண முடிகிறது. விவாகரத்து அதிகரிப்பதும், குடும்ப வன்முறை அதிகரிப்பதன் காரணம் என்ன? நாம் வாழும் காலங்களா? ஏனென்றால், ‘நாம்’ என்பதற்குப் பதிலாக ‘நான்’ என்ற சொற்களால் நமது தலைமை சுயநலமாக மாறிவிட்டது, மேலும் நம்முடைய முந்தைய தலைமுறையினரை விட நாம் நம்மை பற்றி மட்டுமே சிந்திக்கிறோம் . கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், காந்திகளும் , மண்டேலாக்களும் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் போன்றோரும் நம்மை  போலவே நினைத்துக் கொண்டிருந்தால், நாம் ஒரு சமூகமாக முன்னேறியிருப்போமா? எனக்கு சந்தேகம்.

  • தெளிவுற்ற தலைவர்களின் யுகம்:


அறிவு, மனிதாபிமானம் மற்றும் பொறுப்புணர்ச்சியுடன் உண்மையாக வழிநடத்தும், ஒரு புதிய இனத் தலைமை வணிக நிறுவனங்லிருந்து நமது அரசியல் வரை எல்லா மட்டங்களிலும் நமக்குத் தேவை. அவர்கள் நம்மை வழிநடத்த வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் தனிப்பட்ட வசதிகளை தியாகம் செய்ய தயாராக இருப்பதை விடவும், தங்களைப் பின்பற்றுபவர்களையோ அல்லது அவர்களுடைய மக்களையோ எப்போதும் முன்னிறுத்த வேண்டும். சமூகம் குறுகிய பார்வை கொண்டதாக இருந்தாலும் அல்லது முன்னேற விருப்பமில்லாமல் இருந்தாலும், சமுதாயத்தை செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்ல அவர்கள் தயாராக இருக்க வேண்டும்.

அந்த கடினமான முடிவுகளை எடுக்க அவர்கள் பயப்படக்கூடாது, தங்களின் தனிப்பட்ட கவுரவத்தைப் பற்றி கவலைப்படாமல் பெரிய கண்ணோட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். நான் இதைப் பற்றி பேசுவதற்கான காரணம் என்னவென்றால், தற்போதுள்ள நம் பிரச்சினைகளைப் பார்க்க புதியதோர் கண்களைக் கொண்ட புதிய தலைவர்கள் உலகிற்கு தேவை. இந்த சிக்கல்கள் மிகப் பெரியவை - புவி வெப்பமடைதல்; வர்த்தக கொள்கைகள்; பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி ; உலக மக்களில் 40% பசியுடன் இரவு உறங்க  செல்வது ; மதம் மற்றும் பிற செயற்கை வேறுபாடுகளின் அடிப்படையில் அரசியல் வேறுபாடு அதிகரித்திருப்பது, அவை நம் அனைவரையும் பணக்காரர் , ஏழை என்று பாராது நம்மை பதம் பார்த்து விடும் . இவை அனைத்தும் முன்னுரிமையின் பேரில் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் மற்றும் இப்பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கு அடுத்த நெருக்கடிக்கு நாம் செல்ல வேண்டியதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், இந்த தீர்வுகள் அனைத்தும் கீழிருந்து தொடங்கி மேலே செல்ல வேண்டும், மேலிருந்து கீழே வர வேண்டிய அவசியமில்லை.

வறுமை எங்கிருந்தாலும் அது எல்லா இடங்களிலும் வளமைக்கு அச்சுறுத்தல் என்றும், நம் வாழ்நாளில் வறுமையை வெளியேற்றுவதற்கு தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும் சொல்லும் இந்த மனநிலையை நாம் பெற வேண்டும். பணக்காரர்களாக, பெரும்பான்மையான ஏழைகளுக்கு நடுவில் அவர்களைப் பற்றி சிந்திக்காமல் வாழ்வது மனிதாபிமானமற்றது. இது சரி செய்ய, தெளிவுற்ற  தலைமை நம் அனைவரிடமிருந்தும் தொடங்க வேண்டும். நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வதற்கு பெரும் பதவியையும், பெயரையும்  கொண்ட தலைவர்களை நாம் இனி எதிர்பார்க்காது, எல்லோரும் ஒரு தலைவர் என்று நினைப்பதற்கு நம் எண்ணங்களை தீவிரமாக மாற்ற வேண்டும். நம்மிடையே அதிகமான தலைவர்களை உருவாக்குவதற்கான சாத்தியத்தையும் நாம் கவனிக்க வேண்டியிருக்கும்.

சூரிய ஒளி ஒரு சிறந்த கிருமிநாசினி ஆவதால் அச்சூரிய ஒளியை எங்கும் பரவ நாம் அனுமதிக்க வேண்டும், அது போல் நம்மைச் சுற்றியுள்ள அதிகமான மக்கள் சுய முன்னேற்றத்திற்கான அதிகாரம் பெற்றால் நாம் அச்சப்பட கூடாது. சுய முன்னேற்றத்திற்கான அதிகாரம் பெற்ற குறிப்பிட்ட அளவிலான ஆண்களும் பெண்களும் நாம் உருவாக்கியவுடன். உங்களுக்காக உழைக்கும் நபர்களைத் தலைவர்களாக ஆக்குங்கள். அவர்களை எப்போதும் வழிநடத்த வேண்டிய ஒரு பணியாளர் போல நடத்த வேண்டாம். அவர்களுக்கு அதிகாரம் அளித்துப் பாருங்கள், அவர்களுக்குள் இருக்கும் ‘அனுமனை’ கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் ஓட்டுநர் மற்றும் பணிப்பெண்களை ஒரு தலைவரைப் போல சிந்திக்கச் செய்யுங்கள், அவர்களின் சிந்தனை விரிவடைந்தால், அவர்களின் வாழ்க்கை மாறுகிறது, மேலும் அவர்கள் பொருளாதார ரீதியாகவும் மேம்படுவார்கள். இந்த நாடு  எல்லாவற்றையும் கொண்டுள்ளது, இங்கு வாழ நாம் உண்மையிலேயே பாக்கியவான்கள். இந்த உந்துதலால் தான், எனது சொந்த ஊரான கரூரில் (தமிழ்நாட்டில்),ஒத்த எண்ணம் கொண்ட நபர்களுடன் ஒரு அமைப்பைக் உருவாக்குவதற்காக ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த எனது வேலையை சமீபத்தில் விட்டுவிட்டேன். ‘வி தி லீடர்ஸ்’ (www.wetheleader.org) என்ற அமைப்பு, தலைவர்களை சமூகத்தின் வேர்களில் இருந்து உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் நாம் உருவாக்கும் தலைவர்கள் வணிகத்திலிருந்து அரசியல் வரை அனைத்து துறைகளிலும் ஊடுருவி எதிர்காலத்தில் நம் நாட்டை சிறப்பாக மாற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இறுதியாக, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு அதிகாரம் கொடுக்க நாம் பயப்பட வேண்டாம், ஆனால் அப்படி செய்வதை  ஒரு பாக்கியமாகவும் வெகுமதியாகவும் நாம் கருதுவோம்.

பின்குறிப்பு: இந்த 21 நாள் தொடரை உங்களுக்காக எழுதியது என் பாக்கியம். ஒவ்வொரு நாளும் எழுதுவது எளிதாக இல்லை. இந்த பயணத்தில் என்னுடன் பயணம் செய்து தங்கள் நேரத்தை வழங்கிய வாசகர்களுக்கு நன்றி. சரியான தமிழ் சொற்கள் மற்றும் வாக்கியங்களால் எனக்கு உதவியதற்காக சென்னையைச் சேர்ந்த பத்ரிநாத் நாராயணன் மற்றும் கோயம்புத்தூரைச்  சேர்ந்த அகிலா ஆகியோருக்கும், விஜயசாரதி தலைமையிலான சி.என்.என் நியூஸ் 18 கன்னட குழுவிற்கும் ,அசோக் தலைமையிலான தெலுங்கு இலக்க குழு, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி கட்டுரைகளுக்கு முறையே உதவிய ஸ்ரவன் மற்றும் ஆதித்யாவிற்கும்  என் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் கடின உழைப்புக்கு மிக்க நன்றி.

இது ஒரு சிறிய உலகமாதலால், நாம் மீண்டும் சந்திப்போம் (எழுதுவோம்). அதுவரை என் வணக்கங்கள்.

இந்த தொடரின் முந்தைய கட்டுரைகளைப் படிக்க கிளிக் செய்க...
Published by:Sankar
First published: