Home /News /special-articles /

பாடம்-2: இடுக்கணைத் தாண்டி வளர்வோம் !

பாடம்-2: இடுக்கணைத் தாண்டி வளர்வோம் !

நீங்கள் புயலிலிருந்து வெளியே வரும்போது, ​​நீங்கள் உள்ளே நுழைந்த அதே நபராக இருக்க மாட்டீர்கள். இதுதான் புயல் செய்யும் மாற்றம்

நீங்கள் புயலிலிருந்து வெளியே வரும்போது, ​​நீங்கள் உள்ளே நுழைந்த அதே நபராக இருக்க மாட்டீர்கள். இதுதான் புயல் செய்யும் மாற்றம்

நீங்கள் புயலிலிருந்து வெளியே வரும்போது, ​​நீங்கள் உள்ளே நுழைந்த அதே நபராக இருக்க மாட்டீர்கள். இதுதான் புயல் செய்யும் மாற்றம்

பெரும்பாலும் மேல்நோக்கி செல்லும் பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம். தவிர்க்க முடியாத தளர்ச்சிகளையும் நாம் வெறுக்கிறோம். அந்த கடினமான நேரங்களை தேவையற்ற ஊடுருவலாக நாம் கருதுவதோடு இல்லாமல் , நம் வாழ்க்கையின் பயணத்தை மெதுவாக்குகின்றன என்று நினைக்கிறோம். ஆனால் சாதனையாளர்களின் வரலாற்றைப் பார்த்தால், இடுக்கண் என்பது ஒருவர் உண்மையில் வளரும் காலம் என்று ஊகிக்க முடியும். வெற்றி எப்போதும் கொண்டாடப்படுகிறது, ஆனால் தோல்வி அல்லது ஒரு துன்பத்தை சந்திப்பதன் மூலமே ஒருவர் சாதிக்கக் கற்றுக்கொள்கிறார்!

 

அமெரிக்காவின் கென்டக்கிக்கு அருகிலுள்ள ஒரு ஊரின் மிக சிறிய அறையில் 1809 இல் பிறந்த ஒரு மனிதர், பெரும்பாலான மனிதர்களை விட சோகத்தையும், சோதனைகளையும் கண்டிருக்கிறார். அவரது இளைய சகோதரர் தாமஸ் ஜூனியர் 1912 இல் பிறந்த சில நாட்களுக்குப் பிறகு இறந்தார். பின்னர் தன் 9 வயதில் தாயை இழந்தார், அவரை கவனித்துக்கொண்டிருந்த அவரது சகோதரி தனது தாயின் மறைவுக்குப் பிறகு 19 வயதில் காலமானார். அவரது முதல் காதலி ஆன் ரூட்லெட்ஜ் அவர்கள் காதலிக்கும் பொழுதிலேயே இறந்தார். மேரியுடனான அவரது திருமணத்திற்குப் பிறகு, 1846 இல் பிறந்த அவரது இரண்டாவது மகன் எட்வர்ட் 1850 இல் இறந்தார். 1847 இல் பிறந்த அவரது மூன்றாவது மகன் வில்லியம் 11 வயதில் இறந்தார். 1853 இல் பிறந்த அவரது இளைய மகன் தாமஸ் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். துன்பத்தை மிக நெருக்கமாக பார்த்த இந்த நபர் தன்னை பலப்படுத்துவதற்கான ஒரு வழியாக இவ்வனைத்தையும் பயன்படுத்தினார். அவர் அந்த கடினமான காலங்களை விஞ்சி இரண்டு முறை அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் ஆபிரகாம் லிங்கன்!!! அமெரிக்காவின் ஒரு சிறந்த ஜனாதிபதி மற்றும் தேர்ந்த அரசியல்வாதி. அவர் உள்நாட்டுப் போரின் போது இருந்த மிகப் பெரிய தார்மீக, அரசியலமைப்பு மற்றும் அரசியல் நெருக்கடி நேரத்தில் மிக சிறப்பாக தனது தேசத்தை வழிநடத்தினார்.

பெரும்பாலான தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் மற்றும் பிற  தலைவர்களின் வாழ்க்கையை நாம் புரிந்து கொள்ள முயற்சித்தால், அவர்களை உருவாக்க  உதவிய திருப்புமுனைகளை நாம் காணலாம், . இந்த திருப்புமுனைகளில் பெரும்பாலானவை இடுக்கணை சுற்றியுள்ளன. தான் நிறுவிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ்,  திரும்பி வர ஒரு வழியைக் கண்டுபிடித்து, பின்னர் மீண்டும் அந்நிறுவனத்தை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றினார். தனது ஆரம்ப வணிக இழப்புகள், தான் நினைத்த ஆட்டோமொபைல் புரட்சியை உருவாக்குவதைத் தடுக்க அனுமதிக்காத ஹென்றி ஃபோர்டைப் போல; ஒரு ஏழை மாணவராகவும், கற்றல் குறைபாடுகள் உள்ளவருமான  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பின்னாளில் இயற்பியலில் நோபல் பரிசு வென்றதை போல; ஹாரி பாட்டர் வெளியிடப்படுவதற்கு முன்பு வெறும் நிராகரிப்புகளை மட்டுமே எதிர்கொள்ள வேண்டிய ஜே.கே. ரவுலிங்கைப் போல... இந்த பட்டியல் முடிவற்றது!! பெரும் சாதனைகளை செய்ய துணிபவர் யாரும் இவ்வகையிலேயே மீண்டு மீண்டும் வருவதைக் காண்கிறோம்.

அவர்களுடைய மற்றொரு மனோபாவம்  என்னவென்றால், அவர்கள் வெற்றியை ஒருபோதும் வெற்றியாகவும் தோல்விகளை தோல்விகளாகவும் பார்க்கமாட்டார்கள். அவை இரண்டையும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகவே பார்க்கின்றனர்.  வெற்றி மற்றும் தோல்வி இரண்டிலிருந்தும் சிறந்ததை எடுக்க அவர்களின் மனநிலை வளர்க்கப்படுகிறது. கற்றல்களை ஏணிப்படிகளாக பயன்படுத்தி உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர்.

உடுப்பியில் நடந்த ஒரு சம்பவம் எனக்கு நினைவிற்கு வருகிறது. நான் அதன் காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தபோது, ​​குவைத்தில் உள்ள சிறையிலிருந்து தனது கணவரை அழைத்து வர விண்ணுலகையும் மண்ணுலகையும் நகர்த்திய ஒரு பெண் இருந்தார் .  குவைத்துக்கு போதை மாத்திரைகள் கொண்டு வந்த குற்றச்சாட்டில் அவரது கணவர் குவைத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். குவைத்தில் உள்ள ஒரு இதய நோயாளிக்கு எடுத்துச் செல்லுமாறு யாரோ ஒருவர் கேட்டுக் கொண்டதால் மங்களூர் விமான நிலையத்திலிருந்து இவர் மாத்திரைகளை எடுத்து சென்றதாக சொன்னது கவனிக்கப்படாமல் போனது. இந்த பெண்ணுக்கு உதவுவதற்காக இந்திய தூதரகத்துடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துவதைத் தவிர என்னால் அதிகம் உதவ முடியவில்லை. உடுப்பிக்கு அருகிலுள்ள தனது சொந்த ஊரிலிருந்து ஒருபோதும் வெகுதூரம் சென்றிராத இந்த பெண், மிகுந்த தைரியத்தை தனக்கு தானே உண்டாக்கி கொண்டு, டெல்லிக்குச் சென்று தனது நாடாளுமன்ற உறுப்பினரிடமும், பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும் தன் கணவருக்காக  மன்றாடினார் . பின்னர், அவர் தனக்கு  தெரிந்த மக்களிடமிருந்து பணத்தை திரட்டி, குவைத்துக்கு பறந்து, அங்குள்ள உள்ளூர் சங்கங்களை அணிதிரட்டி சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டார். இறுதியாக,  இந்திய தூதரகத்தின் உதவியோடு, அவர் தனக்கு ஆதரவாக கணவரின் வழக்கை வென்று அவரை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வந்தார்.

​​இது என் உள்ளத்தை தொட்ட கதை. இந்த பெண் தனது வாழ்க்கையில் மிகவும் அதிர்ச்சிகரமான மற்றும் பாதகமான சூழ்நிலையை சந்திக்க நேர்ந்தது. தனது அன்புக்குரியவரும், தன் குடும்பத்தை காப்பாத்துபவருமான தன கணவர் சிறையில் அடைபட்டிருக்கிறார். அவருக்கு இரண்டு வழிகள் இருந்தன - ஒன்று- இந்நிலைமையை ஒரு விதியாக ஏற்றுக்கொள்வது அல்லது சிலிர்த்து எழுந்து சக்தியைக் கொண்டு போராடுவது. வானத்தையும் பூமியையும் நகர்த்துவதற்கான இரண்டாவது வழியை அவள் தேர்ந்தெடுத்தாள். அவள் தனது நீதிக்கான தேடலில், தான் வெளிநாட்டு பயணம் செய்ததில்லை என்பதையோ ,ஒரு மொழியையோ அல்லது நாட்டையோ நமக்கு தெரியாது என்பதையோ யோசிக்கவில்லை . அதற்கு பதிலாக அவள் இடுக்கண்களுக்கு ஆளாகி அதை மீற முடிவு செய்தாள்.

கடந்த சில நாட்களாக, சமூக ஊடகங்களில் மிகவும் துன்பகரமான சில செய்திகளை நான் காண்கிறேன். மஸ்கட்டைச் சேர்ந்த ஒரு இளம் தந்தை தனது மூன்று மாத குழந்தை கேரளாவில் இறந்துவிட்டார் என்றும் அவர் இந்தியாவுக்குப் பறக்க ஒரு வழியை விரும்புகிறார் என்றும், யாரோ ஒருவர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த சந்தர்ப்பங்களில் - பெற்றோர் அல்லது தாத்தாவைப் போல - அவர்களை\காண  தீவிரமாக பயணம் செய்ய விரும்புகிறார்கள். பாஸ்களுக்குகாக போலீஸ் உதவி கோரும் இரண்டு அழைப்புகளும் எனக்கு வந்தன. சந்தேகத்திற்கு இடமின்றி, இவை அனைத்தும் அவர்களுக்கு முற்றிலும் வேதனையான தருணங்களே. அவர்களில் பெரும்பாலோருக்கு எனது உண்மையான உதவி செய்ய முடியாத  சூழ்நிலையை வெளிப்படுத்தினேன். என்னால் முடிந்த இடத்தில், அவர்களுக்கு உதவ என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். Lockdown ஆகிய இந்த 21 நாட்களில் மக்கள் எந்தத் துன்பத்தை, இடுக்கணை எதிர்கொள்வார்களோ அதனால் நொறுங்கி போகாமல் வெளிவருவார்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் இந்த இடுக்கணை மிஞ்சுவோம்; முன்னிலும் சிறப்பாக நாம் வெளி வருவோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இந்த  ஒரு வாக்குறுதியை நாம் நமக்கு தர வேண்டும் .

புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளரான ஹருகி முராகமியின் படைப்பின் ஒரு வாசகத்தோடு இதை முடிக்க விரும்புகிறேன்

"புயல் ஓய்ந்ததும், நீங்கள் அதை எவ்வாறு எதிர்கொண்டீர்கள், எப்படி தப்பிப்பிழைத்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவில் இருக்காது. புயல் உண்மையில் முடிந்துவிட்டதா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயம். நீங்கள் புயலிலிருந்து வெளியே வரும்போது, ​​நீங்கள் உள்ளே நுழைந்த அதே நபராக இருக்க மாட்டீர்கள். இதுதான் புயல் செய்யும் மாற்றம்  ".

Also see:
Published by:Karthick S
First published:

Tags: Lockdown

அடுத்த செய்தி