Home /News /special-articles /

ஆயிரம் கதை சொல்லும் ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரம் கதை சொல்லும் ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

எம்ஜிஆரின் அடுத்த 15 திரைப்படங்களில் எல்லாம் திரைக்கதை வசனம் ஆர் கே சண்முகம் பெயரே இடம்பெற்றிருந்தது. மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? சினம் கொண்ட சிக்கத்திடம் தோற்று ஓடும் என்ற எவர்கிரீன் வசனம் இன்றளவும் எல்லா தளங்களிலும் பிரபலம்.

மேலும் படிக்கவும் ...
சமூக ஊடகங்கள் கோலோச்சிக்கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில், தகவல்களைப் பெறுவதில் Podcastக்கு தனி இடம் உண்டு. Podcast என்பது ஒரு ஆடியோ பைல், தமிழில் கேட்பொலிக் கோப்பு என்கின்றனர். நான் கேட்ட அப்படியொரு Podcast தகவலைத்தான் இங்கே பகிர்ந்திருக்கிறேன்.

1950 கால கட்டத்தில் பி ஆர் பந்துலு, தயாரிப்பாளர், இயக்குநர் என தமிழ் திரைவானில் ஜொலித்தவர். தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உச்சம் தொட்டுக்கொண்டிருந்த வேளை அது,  அதன் பின்னணியில் பக்கபலமாக இருந்தவர் இந்த பந்துலுவிதான், சிவாஜி கணேசனை வைத்து தொடர்ந்து ஹிட் அடித்த பந்துலுவுக்கு எம்ஜிஆரைக் கொண்டு ஒரு புதிய படம் செய்ய வேண்டும் என விருப்பம்.

தனது விருப்பத்தைத் தெரிவிப்பதற்காக, எம்ஜிஆரிடம் நேரம் பெற்றுக்கொண்டு ராமாவரம் தோட்டத்திற்குச் சென்றிருக்கிறார். எம்ஜிஆரும்  பந்துலுவை முகமலர்ச்சியோடு வரவேற்றார். அப்போது தனது உள்ளக்கிடக்கையை பந்துலு தெரிவிக்க, கதையை வாங்கிப் படித்துப் பார்த்த எம்ஜிஆர் உடனடியாக சம்மதம் தெரிவித்த கையோடு, ஒரு லட்ச ரூபாய் அட்வான்ஸ்  கொடுத்து உறுதி செய்யக் கேட்டிருக்கிறார். ஆச்சர்யத்தில் உறைந்து போன பந்துலு, சற்றே நெளிந்து திடீரென ஒரு லட்ச ரூபாய்க்கு நான் எங்கே போவேன் எனக் கூறியிருக்கிறார்.

நீங்கள் சம்மதிப்பதீர்களா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளவே இப்போது வந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார் பந்துலு. அப்படியா, சரி, 10,001 கொடுங்கள் என்றிருக்கிறார் எம்ஜிஆர், அதற்கும் பந்துலு யோசிக்க, கடைசியில் ஒரு  ரூபாயாவது கொடுத்து அட்வான்ஸ் போட்டுக்கொள்ளுங்கள் என எம்ஜிஆர் இறங்கிவர, அதுவும் கையில் இல்லாமல் தனது கார் டிரைவரிடம் ஓடிச்சென்று ஒரு ரூபாயைப் பெற்று அதனை எம்ஜிஆரிடம் கொடுத்திருக்கிறார்.
இப்படியாக அப்படம் உறுதியாகி இருக்கிறது.

1950களில் எம்ஜிஆர் படம் என்றால் உயர்தொழில் நுட்ப வல்லுநர்கள், சிகை அலங்கார கலைஞர்கள் என காஸ்ட்லியான ஒரு பெரும் பட்டாளமே இடம்பெறுவது வழக்கமாம். இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வசனகர்த்தா ஆர் கே சண்முகம், தயாரிப்பாளர் பந்துலுவிடம் எப்படியும் வேறு ஒரு காஸ்ட்லியான திரைக்கதை எழுத்தாளரை எம்ஜிஆர் நியமித்து விடுவார், நான் வேறு படத்திற்கு கதை எழுதச் செல்கிறேன் எனச் சொல்ல, அதற்கு பந்துலு இசைவு தெரிவிக்கவில்லை.

இந்தநிலையில்,  ஆர்கே சண்முகத்தின் கதை வசனம் எம்ஜிஆரிடம் கொடுக்கப்படுகிறது. அவர் படித்து விட்டு எந்தக் கருத்தும் சொல்லவில்லை. இதனால், தயாரிப்பாளர் உள்ளிட்ட படம் சார்ந்த குழுவினருக்கும் ஒரு கலக்கம்… மறுநாள் சூட்டிங் என அறிவிக்கப்படுகிறது, படக்குழுவினர் அனைவரும் ஒருவித கலக்கத்தில் இருக்கின்றனர்.

எம்ஜிஆரின் கார், சூட்டிங் நடைபெறும் இடத்திற்கு வருகிறது, காரில் இருந்து இறங்கிய அவர், எடுத்த எடுப்பிலேயே இப்படத்திற்கு கதை எழுதியது யார் எனக் கேட்க சூட்டிங் ஸ்பாட் முழுவதும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது. பந்துலு, இவர்தான் என ஆர்கே சண்முகத்தை கைகாட்ட விறுவிறுவென அவர் அருகில் சென்ற எம்ஜிஆர் சரக்கென கட்டித்தழுவிக் கொள்கிறார்… எப்படி உங்களால் இப்படி ஒரு வசனத்தை எழுத முடிந்தது என பெருமிதப்பட்டார். இனிவரும் தனது படங்களுக்கெல்லாம் நீங்கள்தான் எனது ஆஸ்தான வசனகர்த்தா என்று அறிவித்தார்.

எம்ஜிஆரின் அடுத்த 15 திரைப்படங்களில் எல்லாம் திரைக்கதை வசனம் ஆர் கே சண்முகம் பெயரே இடம்பெற்றிருந்தது.
மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா? சினம் கொண்ட சிக்கத்திடம் தோற்று ஓடும் என்ற எவர்கிரீன் வசனம் இன்றளவும் எல்லா தளங்களிலும் பிரபலம். அந்த வசனத்திற்கு சொந்தக்காரர்தான் ஆர் கே சண்முகம். 1965ல் திரைக்கு வந்து சக்கை போடு போட்ட அப்படம் ஆயிரத்தில் ஒருவன்.
இதுபோல் இன்னும் இன்னும் பல சுவாரஸ்யங்களால் நிரம்பியது காலத்தால் அழியா காவியமான ஆயிரத்தில் ஒருவன்
174 நிமிடங்கள் ஓடக்கூடிய இத்திரைப்படம், 2014ல் டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டது நினைவிருக்கலாம்
Published by:Murugesh M
First published:

Tags: MGR

அடுத்த செய்தி