• HOME
  • »
  • NEWS
  • »
  • special-articles
  • »
  • விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்! 

விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள்! 

கல்பனா சாவ்லா

கல்பனா சாவ்லா

அமெரிக்காவில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
பிப்ரவரி 1 அன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. தனது 40வது வயதில் மறைந்த கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண்மணி ஆவார். கொலம்பியா விண்கலம் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தபோது கல்பனாவும் மற்ற ஆறு குழு உறுப்பினர்களும் இறந்திருந்தனர். கொலம்பியா விண்வெளி விண்கலம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அவர்கள் தரையிறங்குவதற்கு 16 நிமிடங்களுக்கு முன்பு வெடித்து சிதறியது. 

பின்னர் ஆங்காங்கே கல்பனா மற்றும் அவரது குழு உறுப்பினர்களின் கருகிய உடல்கள் அடையாளம் காணப்பட்டன. கல்பனாவின் விருப்பப்படி, அவரது உடல்கள் உட்டாவின் சீயோன் தேசிய பூங்காவில் வைக்கப்பட்டன. மிகவும் தைரியமான மங்கையாக வலம் வந்த கல்பனாவைப் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே, 

கல்பனா 1982 இல் அமெரிக்காவிற்கு வந்து 1991 ல் அமெரிக்க பிரஜையானார். 1988 ஆம் ஆண்டில் அமெஸ் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றத் தொடங்கினார். கல்பனா இந்தியாவில் இருந்தபோது, கர்னல் தாகூர் பால் நிகேதன் பள்ளியில்  படித்தார். கல்பனாவின் வேண்டுகோளின் பேரில் சம்மர் ஸ்பேஸ் எக்ஸ்பீரியன்ஸ் ப்ரோக்ராமில் பங்கேற்க நாசா, கல்பனாவின்  பள்ளியை அழைத்தது. 

1998 முதல், ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மாணவர்கள் நாசாவுக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு கல்பனா தனது இல்லத்தில் இரவு உணவிற்கு அழைத்து உபசரித்தார். அவரது நினைவாக பல கல்வி நிறுவனங்கள் மற்றும் விருதுகள் கல்பனாவின் பெயரை தாங்கி நிற்கின்றன. கல்பனாவின் தியாகத்தைப் போற்றும் வகையில் தமிழகத்தின் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் வீர தீர சாகசச் செயல் புரியும் இளம் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும் என அறிவித்தார். 

அதன்படி 2011 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசு கல்பனா சாவ்லா விருதினை 2004ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் துறையில் இளங்கலை முடித்தார் கல்பனா. 

இதற்கு பிறகு, கல்பனா இரண்டு முதுநிலை பட்டங்களைப் பெற்றார். 1986 ஆம் ஆண்டில் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில்  விண்வெளி பொறியியலில் PhD முடித்தார். கல்பனா 1983-ம் ஆண்டு ஜீன் பிஎர்ரே ஹாரிசன் என்ற விமானப் பயிற்சி ஆசிரியரை மணம் முடித்தார். அதன் மூலம் 1990-ம் ஆண்டில் அமெரிக்கரானார். ஹாரிசன் ஆகாய விமான ஓட்டும் கலையைப் பற்றி எழுதும் ஒரு வல்லுனரும் ஆவார். கல்பனா மார்ச் 1995-ல், நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் சேர்ந்தார். 1996-ம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 

கொலம்பிய விண்வெளி ஊர்தியான STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19-ம் நாள், 1997-ம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984-ல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற அழியா பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.4 மில்லியன் மயில்கள் கடந்து பூமியைச் சுற்றி சிதறி இருக்கும் 252 கோளப்பாதைகளை வலம் வந்துள்ளார். 

கல்பனா, கொலம்பியா விண்கலம் STS-87 விமானத்தில்  தனது முதல் விண்வெளி பயணத்தில் இருந்தபோது, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்தர் குமார் குஜ்ராலுடன் பேசிய அவர், விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இமயமலை படங்களை அவருக்குக் காட்டினார். கல்பனா சாவ்லாவை கௌரவிக்கும் பொருட்டு அவரது மறைவிற்கு பிறகும் பல பெருமைகள் அவருக்கு கிடைத்துள்ளது. அவர் வாழ்ந்த அமெரிக்காவில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்றளவும் அந்த சாலை நடைமுறையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: