தோனியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப்பாடம்!

News18 Tamil
Updated: July 7, 2018, 9:07 PM IST
தோனியிடம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப்பாடம்!
News18 Tamil
Updated: July 7, 2018, 9:07 PM IST
2016 டி20 உலகக் கோப்பையில் வங்கதேச அணியுடனான ஆட்டம்... இந்திய அணி நிர்ணயித்த இலக்கை நோக்கி வங்கதேசம் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்தது. அனுபவமற்ற ஹர்திக் பாண்டியா வீசிய இறுதி ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் பறந்தன. கோலி உள்ளிட்ட வீரர்கள் ஆட்டம் முடிந்தது என்பது போல மண்டையை இடதுவலமாக ஆட்டி, சோகத்தை வெளிப்படுத்தினர்.

3 பந்துகளில் வெறும் 2 ரன்கள் அடித்தால் வங்கதேசம் வெற்றி பெற்றுவிடும். கைவசம் உள்ளதோ 4 விக்கெட்டுகள். அந்த அணியின் முன்னணி வீரர்கள் முஷ்பிகுர் ரஹீம், மெகமதுல்லா ஆகியோர் களத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்களும் தலையில் கைவைத்து, நம்பிக்கையை இழந்து உட்கார்ந்து விட்டனர். மறுபுறம் வங்கதேச ரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். ஆனால் ஒருவர் மட்டும் நம்பிக்கையை இழக்காமல் வீரர்களை மாற்றி, மாற்றி ஃபீல்ட் செட் செய்து கொண்டிருந்தார். அவர் தான் தோனி.

கடைசி பந்துக்கு முன்பாக தனது கையில் இருந்த ஒரு கிளவுஸை அகற்றிவிட்டு, ஒரு கிளவுஸ் உடன் நம்பிக்கையை அகற்றாமல் இருந்தவர் தோனி மட்டுமே. அவர் கிளவுஸை கழற்றியதற்கு பலன் கிடைத்தது. ஆம். கடைசி பந்தை பேட்ஸ்மேன் அடிக்க முயன்று, மிஸ்ஸாகி, அது தோனியிடம் தஞ்சம் புகுந்தது. பந்தை பிடித்த தோனி சிறிதும் யோசிக்காமல் சிறுத்தையின் கால்களை கடன் வாங்கிக் கொண்டு அதிவேகமாக ஓடிச்சென்று ரன் அவுட் செய்தார். இந்தியா வெற்றி. (மேலே உள்ள 4 வரிகளை நீங்கள் படித்து முடிப்பதை விட 10 மடங்கு வேகத்தில் தோனி ஓடியிருப்பார்.)

இது சாதாரண ஒரு ஆட்டம் போல உங்களுக்கு தெரியலாம். ஆனால் தோனியின் எந்தவொரு ஆட்டமும் சாதாரண ஆட்டமல்ல. தோனி எடுத்த ஒவ்வொரு முடிவிலும் பல்வேறு மேனேஜ்மெண்ட் பாடங்கள் உள்ளதாகவே கருத வேண்டும்.  மேலே குறிப்பிட்ட மேட்ச்சை எடுத்துக் கொண்டால், இறுதிவரை நம்பிக்கையை இழக்காமல் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையே தோனி நமக்கு கற்றுத் தருகிறார்.

இந்த ஒரு மேட்ச் மட்டுமல்ல. தோனி எடுத்த முடிவால் இந்தியா ஜெயித்த அல்லது தோற்ற ஆட்டங்களை எடுத்துக் கொண்டால் அதில் அனைவருக்குமான பாடங்கள் உள்ளன.2007 உலகக் கோப்பையில் ஜோகிந்தர் சர்மாவை கடைசி ஓவர் வீச வைத்தது... 2011 உலகக் கோப்பையில் யுவராஜுக்கு முன்பாக தான் களமிறங்கியது... அதே யுவராஜின் பந்துவீச்சை சரியான நேரத்தில் பயன்படுத்தியது... தொடக்க காலத்தில் அதிரடியாக, கண்ணை மூடிக்கொண்டு பேட்டை சுற்றிக்கொண்டிருந்த தோனி, கேப்டனான பிறகு அணியின் நலனுக்காக மிக பக்குவமாக ஆடுவதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டது, 2013 சாம்பியன்ஸ் ட்ராபியில் இஷாந்த் சர்மாவுக்கு முக்கியமான ஓவரை கொடுத்தது... கோலிக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தது... மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த ரோகித் ஷர்மாவை தொடக்க வீரராக களமிறக்கியது... டி20 போட்டிகளில் அபாரமாக ஆடி இந்திய அணிக்கு தேர்வான முரளி விஜய்யை ஒரு தேர்ந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக உருமாற்றியது... ஐ.பி.எல். தொடரில் அம்பத்தி ராயுடுவை தொடக்க வீரராக இறக்கியது... ஒரு மிகச் சாதாரண அணியை வைத்து சி.எஸ்.கே.வை கோப்பை வெல்ல வைத்தது... தான் களத்தில் இருக்கும்போது, தன்னுடன் ஆடும் சக வீரருக்கு நம்பிக்கை வார்த்தைகள் கொடுத்து அவரையும் ஆட வைப்பது, கேப்டன் மட்டுமே அணி அல்ல, ஒவ்வொரு வீரருமே அணிக்கு முக்கியம் என உணர வைத்தது... மிக முக்கியமாக அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் நம்பிக்கையை விதைப்பது என கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி எடுத்த ஒவ்வொரு முடிவையும் வைத்து ஒரு தன்னம்பிக்கை புத்தகமே எழுதலாம்.

உள்ளூர் போட்டியோ, உலகக் கோப்பையோ எதை வென்றாலும் சரி. தோனியின் முகத்தில் சிறு புன்னகைதான் இருக்கும். மற்றபடி வெற்றியின் க்ரெடிட்டை மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு தான் ஓரமாக ஒதுங்கி விடுவார். தான் பெற்ற வெற்றியை ஆசை தீரக் கொண்டாடாமல், அடுத்து பெறப்போகும் வெற்றிக்கான பயிற்சிக்கு ஆயத்தமாக வேண்டும் என்பதையும் தோனி சொல்லாமல் சொல்லிவிடுவார். இதே விஷயம் தோல்விக்கும் பொருந்தும்.

இங்கிலாந்து தொடரில் சச்சின், சேவாக், லட்சுமணன் உள்ளிட்ட அனைத்து முன்னணி வீரர்களும் சொதப்ப இந்தியா தொடரை மோசமாக இழந்தது. இத்தனைக்கும் அந்த தொடரில் பின்வரிசையில் களமிறங்கி தோனியும் சில, பல ஆஃப் செஞ்சுரிக்களை அடித்திருப்பார். ஆனால் ஒட்டுமொத்த விமர்சனமும் தோனியின் மீது. இருந்தபோதிலும், விமர்சனங்களை மற்றவர்கள் மீது திருப்பாமல், யார் மீதும் பழி போடாமல், தோல்விக்கு தானே பொறுப்பேற்றுக் கொண்டார். கேப்டன் என்பதையும் தாண்டி தோனியை ரசிப்பதற்கான காரணிகளில் அதுவும் ஒன்று.

அனைத்து வித்தைகளையும் கற்றறிந்த உலகின் சிறந்த வீரர்கள் இருந்தாலும், ஒரு போரில் வென்றுவிடுவோம் என உறுதியாக நம்மால் கூறிவிட முடியாது. ஆனால் வழிநடத்துவதற்கு ஒரு சிறந்த தளபதி இருந்தால் போதும், நூறு சாதாரண வீரர்களை வைத்துக் கொண்டே எப்பேர்ப்பட்ட போரையும் வென்று விடலாம். அதை தான் தோனி செய்து வந்தார். ஒரு வீரரின் தனித்துவத்தை, அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில் தோனி வல்லவர்.

அப்படிப்பட்ட வல்லவரான தோனி, கோலி என்னும் அர்ஜுனனுக்கு ஒரு கிருஷ்ணராக இருந்து 2019 உலகக் கோப்பையை வெல்ல உந்து சக்தியாக இருப்பார் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

2011ல் சச்சினுக்காக உலகக் கோப்பையை வென்று தந்த தோனிக்காக, 2019ல் உலகக் கோப்பையை வென்று தோனியை தோளில் தூக்கிச் செல்வாரா கோலி?

-  கோ.ர. மணிகண்டன்

First published: July 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...