Home /News /special-articles /

இந்திய அரசியலமைப்பு சாசனமும், விவாதங்களின்றி நிறைவேறும் சட்டங்களும்... குடியரசு தின சிறப்பு கட்டுரை

இந்திய அரசியலமைப்பு சாசனமும், விவாதங்களின்றி நிறைவேறும் சட்டங்களும்... குடியரசு தின சிறப்பு கட்டுரை

இந்திய அரசியல் அமைப்பு

இந்திய அரசியல் அமைப்பு

கருத்து மோதல்களுடனும், நீண்ட விவாதத்துடன் நிறைவேற்றப்பட்டு , இன்றைய தினம் நடைமுறைக்கு வந்த நமது அரசியலமைப்பு சாசனத்தை நாம் அதே போல் கொண்டாடுகிறோமா என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

'கருத்துக்களின் மோதலே சுதந்திரத்தின் மணியோசை' என்ற மேற்கோள், மக்களாட்சியில் மாற்றுக்கருத்துக்களை எவ்வாறு அணுக வேண்டும் என்றும், கருத்து மோதல்கள் ஜனநாயக நாட்டில் எவ்வளவு, அவசியமானது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

இந்தியாவில் அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த தினத்தை குடியரசு தினமாக நாம் கொண்டாடுகிறோம். 73 ஆவது ஆண்டு குடியரசு தினம் கொண்டாடப்படும் இத்தருணத்தில் அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்தும், நம் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் மாற்றுக்கருத்துகளை எப்படி கையாண்டார்கள் என்பதையும் பார்க்கலாம்.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க வரைவு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு தன்னுடையை , முதல் வரைவு அரசியலமைப்பை நவம்பர் 4, 1948 அன்று சபையில் முன்வைத்தது. இதன் மீதான தொடக்க ஆலோசனை 5 நாட்கள் நடைபெற்றது. அதாவது நவம்பர் 9,1948 வரை நடைபெற்றது.

இரண்டாம் அமர்வில், வரைவு அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நவம்பர் 15, 1948 யில் தொடங்கிய விவாதம் , அக்டோபர் 17, 1949 வரை நீடித்தது.

இந்த அமர்வில் 7653 திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டது. அதில் 2473 திருத்தங்களும் ஏற்கப்பட்டது.

அரசியல் நிர்ணய சபை 165 நாட்கள் கூடியுள்ளது. வரைவு அரசியலமைப்பில் உள்ள ஒவ்வொரு பகுதிகள் மீதும் 101 நாட்கள் விவாதம் நடைபெற்றுள்ளது.

வரைவுக் குழுவின் தலைவர் என்ற அடிப்படையில், உறுப்பினர்களின் கேள்விகளை பெரும்பாலும் எதிர்கொண்டு பதிலளித்தவர் சட்ட மேதை அம்பேத்கர். இந்த விவாதங்களில் அவர் சரியாக 2,67,544 வார்த்தைகளை பயன்படுத்தி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

டாக்டர் அம்பேத்கருக்கு அடித்தப்படியாக வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி 97,638 வார்த்தைகளை பயன்படுத்தி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக இருந்த நேரு இந்த விவாதங்களில் பங்கேற்று 73,804 வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

நமது அரசியலமைப்பு சட்டம் நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமை மீது மட்டுமே 16 நாட்கள் விவாதம் நடைபெற்றுள்ளது.

பிறகு நவம்பர் 26,1946ல் இந்த வரைவு அரசியலமைப்பு அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

உலகின் மிக நீளமான அரசியல் சாசனம், நீண்ட விவாதங்களுக்கு பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 299 உறுப்பினர்களில் , 284 பேரின் கையெழுத்துடன் ஏற்கப்பட்டுள்ளது.

ஆனாலும், இந்த அரசியல் நிர்ணய சபை சில விமர்சனத்தையும் எதிர்கொண்டது, இங்கிலாந்து பிரதமராக இருந்த வின்சண்ட் சர்ச்சில், இந்திய அரசியல் நிர்ணய சபை இந்தியாவில் உள்ள ஒரு சமூகத்தினர் மட்டுமே பங்கேற்றிருப்பதாக விமர்சித்திருந்தார். அதே போல லார்ட் விஸ்கவுண்ட் சைமன் இது இந்துக்களின் அமைப்பு என்றும் விமர்சனம் செய்திருந்தார்.

கருத்து மோதல்களுடனும், நீண்ட விவாதத்துடன் நிறைவேற்றப்பட்டு , இன்றைய தினம் நடைமுறைக்கு வந்த நமது அரசியலமைப்பு சாசனத்தை நாம் அதே போல் கொண்டாடுகிறோமா என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

அண்மையில் , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் இல்லாமலேயே சட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து கவலை தெரிவித்திருந்தார்.

அதே போல குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவும் நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வ விவாதங்கள் நடைபெறாதது குறித்து சுட்டிக்காட்டியிருந்தார்.



உதாரணமாக, 2021ல் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19,2021ல் தொடங்கி, ஆகஸ்ட் 11, 2021 வரை நடைபெற்றது. உறுப்பினர்களின் தொடர் அமளியால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டாலும், இந்த தொடரில் மட்டும் 15 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. 17 நாட்கள் நடைபெற்ற கூட்டத்தில் நிலுவையில் இருந்த மசோதாக்களுடன் சேர்த்து 18 மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதில் ஒரு சில மசோதாக்கள் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது. கடந்த 14,15, 16 வது மக்களவைகளை ஒப்பிடும் போது, 17வது மக்களவையில் மசோதாக்கள் மிக விரைவில் நிறைவேற்றப்படுகின்றன. உதாரணமாக, கடந்த மக்களவையில் எதிர்கட்சிகள் எதிர்க்கும் சில மசோதாக்கள் பல தருணங்களில் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படும்.



14வது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாக்களில் 60%, 15வதில் 71%,16 வதில் 27%வீதமும் நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் 17 வது மக்களவையில் இந்த எண்ணிக்கை 12% ஆக குறைந்துள்ளது. கீழ்காணும் அட்டவணையில் மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது எவ்வளவு நேரம் நடைபெற்றது என்பதை அறியமுடியும்.

125 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா, பல சவால்களை கடந்து பல துறைகளில் சாதனை படைத்து வருகிறோம். இதற்கு நம் ஜனநாயக அமைப்பும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரமே காரணம். ஆங்கிலேயர்களிடம் இருந்து நாம் சுந்திரம் பெற்ற போது, நம்மை நாம் எப்படி ஆளப்போகிறோம் என்று எள்ளி நகையாடினார்கள்.

ஆனால் இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளையும், படைத்து வருகிறோம். அதற்கு அடித்தளமிட்ட அரசியலமைப்பு சட்டம் நமக்கு காட்டியுள்ள வழியை முறையாக கடைப்பிடிப்போம் என்று அனைவரும் இந்த குடியரசு நாளில் உறுதியேற்போம்.
Published by:Musthak
First published:

Tags: Republic day

அடுத்த செய்தி