ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், இப்போது உலகமே செமி கண்டக்டர்கள் மூலமாகத்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. கார்கள், தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், மொபைல்கள் என நம்மை சுற்றியுள்ள எல்லா சாதனங்களும் செமி கண்டக்டர்கள் இல்லாமல் தயாரிக்க முடியாது. அப்படிப்பட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த செமி கண்டக்டர் தயாரிப்புக்கு பெரிய அளவில் எதிர்காலம் உள்ளது. சுருக்கமாக சொன்னால், எந்த நாடு இப்போதே செமி கண்டக்டர் உற்பத்திக்கான ஆயத்த பணிகளை மேற்கொள்கிறதோ, எதிர்காலத்தில் அவை அசைக்க முடியாத உலக சக்தியாக மாறும்.
அந்த வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் தொலைநோக்குடன் SPECS என்ற திட்டத்தையும், Production Linked Incentive (PLI) எனப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்க திட்டத்தை செமி கண்டக்டர்கள் தயாரிப்புக்காக தொடங்கியுள்ளது.
செமி கண்டக்டர்கள் - உலகளாவிய தேவை
செமி கண்டக்டர் எல்லா இடத்திலும் தேவை என்பதால், ஒரு வருடத்திற்கு சுமார் ஒரு லட்சம் கோடி அளவில் சிப்புகள் தேவைப்படுகிறது. இவற்றை அவ்வளவு எளிதில் தயாரிக்க முடியாது. மிக அதிக சுத்தம், அறிவு, கவனம், பொருள் செலவு, உழைப்பு, காலம், பண முதலீடு என செய்ய வேண்டும். உலக தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யும் திறன் எந்த நாட்டிடமும் தற்போது இல்லை. உலகில் மொத்த தேவை பூர்த்தி செய்ய ஒரு சில கம்பெனிகள் மட்டுமே உள்ளன. அதில் தைவான் நாட்டைச்,சேர்ந்த TSMC எனப்படும் Taiwan Semi Conductor Manufacturing Company தான் உலகின் மொத்த தேவையில் பாதிக்கும் மேல் பூர்த்தி செய்கிறது. இப்போதைக்கு உலக செமிகண்டக்டர் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவது தைவான் நாடு மட்டுமே.
முதலீடுகளை விரட்டிய காங்கிரஸ்
Fairchilds என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் சிப்புகளை உற்பத்தி செய்ய 1970-ஆம் ஆண்டு வாக்கில் காங்கிரஸ் அரசிடம் அனுமதி கேட்டது. ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தைவான் நிறுவனம் போல, SIL Semiconductor India Limited என்ற ஒரு பொதுத்துறை நிறுவனத்தை உருவாக்கி, நஷ்டத்தில் இயக்கியது. பின்னர் விபத்து காரணமாக முற்றிலுமாக அதன் இயக்கம் நின்று போனது. இந்தியாவில் சிப்புகள் தயாரிக்க எந்த வெளிநாட்டு கம்பெனியுடன் ஒப்பந்தம் போடவில்லை. அப்போதே விழித்துக்கொண்ட சீனா, தொண்ணூறுகளில் செமிகண்டக்டர் உற்பத்தியை தொடங்கியது. ஆனால் காங்கிரஸ் தனக்கு ஆதாயம் இல்லை என்பதால், இந்த துறையை மொத்தமாக நசுக்கியது.
இந்தியாவிற்கு சாதகமான சூழல்
தைவான் நாட்டால் மட்டுமே உலகளாவிய தேவையை பூர்த்தி செய்து விட முடியாது. அதுவும் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக உற்பத்தி பெருமளவில் சரிந்து விட்டது. இயற்கை பேரிடர் காரணமாக தைவான் நாடு பெரிய அளவில் பாதிப்பை சந்தித்ததன் காரணமாக செமி கண்டக்டர்களின் விலை தாறுமாறாக உயர்ந்து விட்டது. சரியான நேரம் பார்த்து திட்டமிட்ட பிரதமர் மோடி அரசாங்கம், இந்தியாவில் செமி கண்டக்டர்கள் மற்றும் காட்சிப்படுத்தும் மின்னணு சாதனங்கள் உற்பத்திச் சூழலை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்சார்பு இந்தியா தொலைநோக்குத் திட்டத்தை மேலும், தீவிரப்படுத்தவும், மின்னணு சாதனங்கள் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான உலகளாவிய குவிமையமாக இந்தியாவை நிலை நிறுத்தவும் நீடித்து உழைக்கவல்ல செமி கண்டக்டர் மற்றும் காட்சிப்படுத்தும் மின்னணு சாதனங்கள் உற்பத்திச் சூழலை மேம்படுத்த விரிவானத் திட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
செமி கண்டக்டர் மற்றும் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு உலகளாவிய போட்டித் தன்மையுடன் ஊக்கத்தொகையை இந்தத் திட்டம் வழங்கும். ரூ.76,000 கோடி (பத்து பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர்) ஒதுக்கீட்டுடனான மின்னணு சாதனங்கள், உபகரணங்களை ஒன்றிணைத்தல், முழுமையாக தயாரிக்கப்பட்ட பொருள்கள் உட்பட இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பகுதிக்கும் மத்திய அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக செமி கண்டக்டர்களை அடித்தளமாகக் கொண்டு மின்னணு சாதனங்கள் உற்பத்திக்கான குவி மையமாக இந்தியாவை நிலைநிறுத்த ரூ.2,30,000 கோடி (30 பில்லியன் அமெரி்க்க டாலர்) நிதியுதவி வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
நாட்டில் இதுவரை செய்யாத முயற்சியாக செமிகண்டக்டர் தயாரிக்க ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை மத்திய மோடி அரசு தீட்டியுள்ளது. இந்த தருணத்தை பயன்படுத்திக் கொண்டால், இந்தியா மிகப்பெரிய சக்தியாக மாறும், என்று மத்திய அரசு கணித்து, இந்த செயல் திட்டத்தை தொடங்கியிருப்பதை நிச்சயம் பாராட்ட வேண்டும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயர்வதும் மட்டுமின்றி, பல லட்சம் இளைஞர்களுக்கு எளிதாக வேலைவாய்ப்பை வழங்க முடியும்.
கட்டுரையாளர் - எஸ்.ஜி.சூர்யா , தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Made in India, Modi