தேர்தல் அறிக்கைகள் நடைமுறைக்கு வருமா? ஏக்கத்தோடு எதிர்பார்க்கும் விவசாயிகள்!

நாட்டின் பெரும்பான்மை மக்களின் தொழிலாக மட்டுமின்றி முக்கிய தொழிலாகவும் முதுகெலும்பாகவும் உள்ள விவசாயத்தை மேம்படுத்த திட்டங்கள் பல இருக்கின்றன. ஆனாலும் விவசாயிகளின் தற்கொலைகள் பெரும் முரணாக தொடர்கிறது.

தேர்தல் அறிக்கைகள் நடைமுறைக்கு வருமா?  ஏக்கத்தோடு எதிர்பார்க்கும் விவசாயிகள்!
விவசாயி (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: March 25, 2019, 12:00 PM IST
  • Share this:
உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று சொல்லப்படுகிற இந்திய பொதுத் தேர்தல் காலம் இது. தேர்தல் களத்தில் வேட்பாளர்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் வழக்கத்தை விட கூடுதல் எதிர்பார்ப்புடன் தேர்தல் களம் அமைந்துள்ளது. கட்சிகளின் அணிகள் மாறி, காட்சிகள் மாறியுள்ளது ஒருபுறமிருக்க.

இந்தியாவின் மூத்த தலைவர், திமுகவின் முகமாக அரை நூற்றாண்டு காலம் இருந்த மு.கருணாநிதி, கால் நூற்றாண்டாக அதிமுகவின் எல்லாமுமாக இருந்த, கடந்த தேர்தலில் மோடியா? லேடியா? என்று சவால் விட்டு அதிமுகவை இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக்கிய ஜெ.ஜெயலலிதா… என இரு பெரும் ஆளுமைகளும் இல்லாத தேர்தல்.

மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை மார்ச் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. அன்றைய தினமே அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. ஒரே நாளில் வெளியிடப்பட்ட இரு பெரும் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் நிறைய ஒற்றுமைகளும் இருக்கின்றன.


நீட் விலக்கு, தமிழ் மத்திய அலுவல் மொழி, கல்விக் கடன் தள்ளுபடி, 7 தமிழர் விடுதலை உள்ளிட்டவற்றில், செய்யும் இடத்தில் உள்ள ஆளும் கட்சியும் செய்யக் கோரும் இடத்தில் உள்ள எதிர்க் கட்சியும் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருப்பதும் பலருக்கு வியப்பை அளித்துள்ளது. இது கூட ஒரு வகையில் ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, இரு கட்சிகளுமே விவசாயிகள், விவசாயத்திற்கு கொடுத்துள்ள முக்கியத்துவம். ஹைட்ரோகார்பன், மீதேன் போன்ற எண்ணெய் எடுப்புத் திட்டங்களை வேளாண் விளை நிலைத்தில் திணித்து, செயற்கையான வறட்சியை உருவாக்காதீர்கள் என்று இத்திட்டங்களை கைவிடக் கோரி நெடுவாசலில் தொடங்கி, கதிராமங்கலத்தில் தொடர்ந்து, இப்போது திருக்காரவாசல் வரை நீண்டுள்ளன மக்கள் போராட்டங்கள். வேளாண் மண்டலத்தை பாதுகாக்க காவிரியில் தடையில்லாமல் தண்ணீரும் வரவேண்டும். தமிழ்நாட்டின் தார்மீக உரிமையும் தொடர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தலைநகர் டெல்லியில் நிர்வாணப் போராட்டம் வரை நடத்திய விவசாயிகளைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு, தேர்தல் அறிவிப்பிற்கு சில வாரங்களுக்கு முன்பாக 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ஆறாயிரம் ரூபாய் என்று அறிவித்தது. தமிழ்நாடு அரசும் விவசாயிகள் உள்ளிட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஒரு முறை சிறப்பு நிதியாக இரண்டாயிரம் ரூபாய் அறிவித்தது. இவை விவசாயிகளின் வாக்குகளுக்காகவே, அவர்களின் வறுமையை ஒழிக்க அல்ல என்கிற விமர்சனமும் எழுகிறது.வாரனாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 111 விவசாயிகளும், தமிழக நிலம், நீர் பாதுகாப்பு இயக்கத்தினர் காவிரி டெல்டாவில் 100 வேட்பாளர்கள் களம் இறங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், காவிரிப் படுகை மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்குவோம் என்கிற அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் பெரிதும் கவனத்தைப் பெற்றுள்ளது. அமமுக, மதிமுக, பா.ம.க, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளும் இதை சொல்லியுள்ளன. விவசாய மேம்பாட்டுக்கான வாக்குறுதிகளை அளித்துள்ளன.

போராட்டக் களங்களில் எழுப்பப்பட்ட விவசாயிகளின் முழக்கம் இப்போது முக்கியக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. இது தற்காலிக ஆறுதலைத் தருகிறது என்கிறார்கள் விவசாயிகள் சங்கத் தலைவர்கள்.

மேலும், வேளாண் உற்பத்திப் பொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி விலை நிர்ணயம், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை, நதிகள் இணைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வேளாண் கடன் தள்ளுபடி என்பதை தாண்டியும் நிரந்தரத் தீர்வை நோக்கியும் கட்சிகள் சிந்தித்துள்ளதைக் காட்டுகிறது.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் தொழிலாக மட்டுமின்றி முக்கியத் தொழிலாகவும் முதுகெலும்பாகவும் உள்ள விவசாயத்தை மேம்படுத்த திட்டங்கள் பல இருக்கின்றன. ஆனாலும் விவசாயிகளின் தற்கொலைகள் பெரும் முரணாக தொடர்கின்றன.

கவர்ச்சிகரமான பல திட்டங்கள், அறிவிப்போடு நின்று விடுகின்றன. நடைமுறையில் உள்ள திட்டங்கள் பல பெரும் ஊழல், முறைகேட்டுக்கே வழி வகுத்துள்ளதே கசப்பான உண்மையாக இருக்கிறது. எனவே திட்டங்கள் இருந்தாலும், பயன்கள் மட்டும் விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. இவற்றையும் கருத்தில் கொண்டு, கட்சிகளின் தேர்தல் அறிக்கையின் அறிவிப்புகள் நடைமுறைக்கும் வர வேண்டும். இதுவும் வெற்று அறிக்கையாக சம்பிரதாய சடங்காக இருந்து விடக்கூடாது என்று ஏக்கத்தோடு எதிர்பார்த்திருக்கிறார்கள் விவசாயிகள். ஏனெனில் விவசாயிகள் வாக்காளர்கள் மட்டுமல்ல.​

Also See..

First published: March 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading