கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் தேவகவுடாவின் கை ஓங்கும்

news18
Updated: April 24, 2018, 7:15 PM IST
கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் தேவகவுடாவின் கை ஓங்கும்
தேவகவுடா
news18
Updated: April 24, 2018, 7:15 PM IST
கர்நாடகாவில் தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், அடுத்த அரசை அமைப்பதில் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் முக்கிய பங்காற்றும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

கர்நாடகாவிலுள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 12-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள்  மே 15-ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்நிலையில், ஊடகங்கள் சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது எனவும், தொங்கு சட்டப்பேரவை அமையும் எனவும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், புதிய அரசு அமைவதில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முக்கிய பங்காற்றும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம், அக்கட்சி சித்தராமையா, எடியூரப்பா இருவரில் யாரை ஆதரிக்கப்போகிறது? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

அதேசமயம், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸும், பாஜகவும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: தேவகவுடா மற்றும் அவரது மகன் ஹெச்.டி.குமாரசாமியுடன் சித்தராமையாவுக்கு தனிப்பட்ட விரோதம் உள்ளது. இதன் காரணமாகவே, காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையிலான உறவு பாதிக்கப்பட்டது.

கவுடா குடும்பத்தார் மீது சித்தராமையா நீண்டகாலமாகவே தாக்குதல் தொடுத்து வருகிறார். மேலும், ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரங்களின்போது கவுடா குடும்பத்தாரை தாக்கிப் பேசுமாறு அவர் வற்புறுத்தி வருகிறார்.
Loading...
இதில், எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஒருவேளை, தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், மீண்டும் ஆட்சியமைக்க மதச்சார்பற்ற ஜனதா தளத்திடம் தான் ஆதரவு கேட்க வேண்டும். ஆனால், அவர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடும் என்றார் அவர்.

காங்கிரஸ் தலைமை தேர்தலுக்கு முன்பே கவுடா குடும்பத்தாரிடம் பேச வேண்டுமென கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கருதுகின்றனர். அப்போதுதான், அவர்கள் தொங்கு சட்டப்பேரவை போன்ற சூழலில் காங்கிரசை ஆதரிப்பார்கள் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.

எனினும், சித்தராமையா ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆட்சியைப் பிடிப்பதற்குத் தேவையான 113 இடங்களை எளிதாக கைப்பற்ற முடியும் என நம்பும் அவர்கள், தற்போதைய நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினால், அது கட்சிக்கு எதிராக மாறும் என்று நினைக்கின்றனர்.

மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளமானது பாஜகவின் ’பி - டீம்’ என குற்றம்சாட்டும் சித்தராமையா ஆதரவாளர்கள், தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் அக்கட்சி பாஜகவைத் தான் ஆதரிக்கும் என்று திடமான நம்புகின்றனர்.

பாஜகவைப் பொருத்தவரை கடந்த 2006-07-இல் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறந்துவிடவில்லை. பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதை எப்போதுமே எதிர்த்து வருகிறார்.

குறிப்பாக, பெங்களூரு மாநகராட்சித் தேர்தலின்போது மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதை அவர் கடுமையாக எதிர்த்தார். அரசியலில் இருந்தே ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டாலும், கவுடா குடும்பத்தாருடன் கூட்டு சேரமாட்டேன் என்றும் அப்போது அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தேவகவுடா அளித்த பேட்டியில் ’எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளையுமே நாங்கள் எதிர்க்கிறோம். எங்களுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம்’ என்றார்.

2019 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பாஜகவுடன் கூட்டு சேர வேண்டாம் என சமாஜவாதி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை தேவ கவுடாவை வலியுறுத்தி வருகின்றன.

தேசிய அளவிலான மூன்றாவது அணியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைய வேண்டும் என அக்கட்சிகள் விரும்புகின்றன.

இந்த தேர்தலில் தங்களுக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும் என காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே நம்புகின்றன. தொங்கு சட்டப்பேரவை அமைந்தால், தங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என இவ்விரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இந்நிலையில், தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் ’கிங் மேக்கர்’ ஆகிவிடலாம் என தேவ கவுடா நினைக்கிறார். இவர்களில், யாருடைய கனவு நனவாகப் போகிறது என்பது மே 15-ஆம் தேதி தெரியவரும்.

- DP Satish, Senior Editor
First published: April 24, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்