• HOME
  • »
  • NEWS
  • »
  • special-articles
  • »
  • தவறை திருத்தும் வழிமுறை: ஒரு ஞானியின் அறிவுரை #MotivationStory

தவறை திருத்தும் வழிமுறை: ஒரு ஞானியின் அறிவுரை #MotivationStory

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தவறுகள் மன்னிக்கப் படலாம். ஆனால் அவ்வளவு எளிதில் மறக்கப்படுவதில்லை.

  • Share this:
அந்த சம்பவம் நடந்து ஒருநாள் முடிந்துவிட்டது. ஆனாலும் இன்னும் மனம் அமைதி பெறவில்லை. இரவு முழுவதும் தூக்கம் இன்றி பெருமூச்செறிந்தவாறு புரண்டு கொண்டிருந்தார் ஒருவர். அவரின் நெஞ்சம் பதைபதைத்துக் கொண்டே இருந்தது.

"தவறு நடந்துவிட்டது. அந்த தவறுக்கு நீதான் பொறுப்பு" என அவர் மனம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தது. அவசரகதியில் தவறு செய்துவிட்டாய் என்றது மனது. இப்படியாக ஒருவித குற்ற உணர்வு அவரை வட்டமிட்டுக் கொண்டே இருந்தது.

அவர், அந்த ஊர் மக்களின் ஆலோசகராகத் திகழும் மருள்நீக்கியார் என்பவரை சந்தித்து ஆலோசனை கேட்டார்.

அவர், "வேலை சொய்யும்போது, தவறுகள் நடக்கத்தான் செய்யும். ஆனால் அந்த தவறு திரும்பத் திரும்ப நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் ஓர் நல்ல வேலையாளுக்கு அழகு. எங்கே, எதனால் தவறு நடந்தது என்பதை திறந்த மனதுடன் கண்டறிய வேண்டும்.

தவறு நடந்தது நடந்ததுதான். இனி அதை எதுவும் செய்ய முடியாது. அதன் விளைவுகளை நிச்சயம் அனுபவித்துதான் ஆகவேண்டும்.

நமக்கு எவ்வளவோ அனுபவங்கள் இருக்கலாம். திறமைகள் இருக்கலாம். பல்வேறு சாதனைகளை படைத்திருக்கலாம். பாராட்டுகளைப் பெற்றிருக்கலாம். அப்படிப்பட்ட தருணங்களில் பிறர் கூறும் நற் சொற்களையும் நம்பிக்கையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி இருக்கும். அதை நாம் ஏற்றுக் கொண்டிருப்போம். அதே போலத்தான் தவறு செய்தபோது எடுக்கப்படும் நடவடிக்கை களையும் நாம் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தவறுகள் மன்னிக்கப் படலாம். ஆனால் அவ்வளவு எளிதில் மறக்கப்படுவதில்லை. உங்கள் மீதான சந்தேகப் பார்வை அவ்வளவு எளிதில் விலகப் போவதும் இல்லை. 'செயல்..' செயல்தான் எல்லாவற்றுக்கும் தீர்வு. வெறும் சொற்கள் அல்ல. ஆம், உங்களை நீங்கள் செயலில் நிரூபிக்க வேண்டும். செய்த தவறு மீண்டும் நிகழாதவாறு செயல் மூலம் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சில நேரம், கவனக் குறைவுகள், நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடக் கூடும்.

99 வேலைகளை சிறப்பாக செய்திருந்தாலும், பிழைபுரிந்த ஒன்று, மற்றவைகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, அடிபட வைத்துவிடும். அந்த வலிமை தவறுக்கு இருக்கின்றது. அதை மாற்றும் வல்லமை செயலுக்கு இருக்கின்றது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், செய்த தவறை மறைக்க எண்ணி கூடுதல் தவறுகள் செய்யாமல் இருக்க வேண்டும். நாம் செய்த தவறுக்கு மற்றவர்கள் மீது பழி சுமத்தக் கூடாது. வன்மமோ, ஈகோவோ இன்றி தவறுகளை நேர்மையான உன் செயல் மூலம் வெல்ல வேண்டும்." என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: