Home /News /special-articles /

எம்.ஜி.ஆருக்கு நாடோடி மன்னன் விழா, ஜெயலலிதாவுக்கு நாட்டிய நாடகம், கருணாநிதிக்கு டெசோ மாநாடு- தமுக்கத்தில் எழுதப்பட்ட வரலாறுகள்

எம்.ஜி.ஆருக்கு நாடோடி மன்னன் விழா, ஜெயலலிதாவுக்கு நாட்டிய நாடகம், கருணாநிதிக்கு டெசோ மாநாடு- தமுக்கத்தில் எழுதப்பட்ட வரலாறுகள்

தமுக்கம் (wikipedia)

தமுக்கம் (wikipedia)

மதுரையின் அடையாளங்கள் பலவும் மண்ணுக்குள் புதைந்து போக, நாயக்கர் காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள், அரண்மனை, புது மண்டபம் போன்ற சில  அம்சங்கள் மட்டுமே இன்றும் மிச்சலும் மீறலுமாக நிின்று கொண்டிருக்கின்றன. 

கண்ணகி காலத்து மதுரை, சங்க காலத்து மதுரைக்குச் சான்றாக, நரிமேடு, பழங்காநத்தம் போன்ற பெயர்கள் மட்டும் அடையாளங்களாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் இருக்கின்ற அடையாளங்களைப் பாதுகாப்பதும், அடுத்த தலைமுறைக்கு அந்த வரலாற்றைக் கொண்டு செல்வதும் முதன்மையான பணி. அந்த வகையில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட தமுக்கம் மைதானம் இன்றும் மதுரையின் மத்திய பகுதியில் இருக்கிறது.

அப்பேர்பட்ட மதுரையின் பாராம்பரியமான அடையாளமான தமுக்கம் மைதானம்  மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த செய்தி மதுரை மக்களையும், வரலாற்று ஆய்வாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்குள்ளாகவே, தமுக்கம் மைதானம் மூடப்படும் தேதியையும் அறிவிக்கப்படவே, மூர்ச்சையாகி நிற்கின்றனர் மதுரை வாசிகள்.

நாயக்கர் மரபில் முதல் பெண் ஆட்சியாளர் ராணி மங்கம்மாள். தனது கணவர் சொக்கநாத நாயக்கரின் மறைவிற்குப் பிறகு ஆட்சியாளரானார் மங்கம்மா. பெண் அரியணைக்கு வரக்கூடாது என்ற நாயக்கர் கால ஆட்சி மரபை உடைத்து அரியணை ஏறியவர். அந்த மங்கம்மாள் ஆட்சி காலத்தில் தனது அரண்மனையின் உப்பரிகையில் இருந்து பார்த்தால் தெரியும் வண்ணம் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட மைதானமே தமுக்கம் மைதானம்.

தமுக்கம் என்பது “தமுகமு” என்ற தெலுங்கு சொல்லின் திரிபு. நாயக்கர் மன்னர் கட்டமைத்ததால், தெலுங்கில் பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வைத்த தமுகமு என்ற தெலுங்குச் சொல் காலப்போக்கில் மருவி  தமுக்கம் என்று மாறிவிட்டது. இன்று மிகப்பெரும் வெற்றிடமாக காணப்படும் அந்த மைதானத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு என்னென்ன வீர விளையாட்டுகளெலெல்லாம் நடைபெற்றது என்பதை கேட்டால், இன்றைய தலைமுறை அதிசயித்துப் போகும்.

ராணி மங்கம்மா தனது போர் படை வீரர்கள், தளபதி சகிதம் கம்பீரமாக தனது அரண்மனையில் அமர்ந்திருப்பார். அந்த உப்பரிகையிலிருந்து தமுக்கம் மைதானத்தில் நடைபறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை ரசிப்பார். ஆராவாரம் செய்வார். ராணி பார்த்துக் கொண்டிருக்கிறார், நம்மை ரசித்துக் கொண்டிருக்கிறார் என்ற  உணர்வுடன் விளையாட்டு வீரர்கள் அதிக உற்சாகத்துடன் களம் காண்பார்கள். ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, மல்யுத்தம், சிலம்பாட்டம், இளவட்டக்கல் தூக்குதல், உறியடித்தல் போன்ற விளையாட்டுக்களும் நடைபெறும்.

எம்ஜிஆர் முதன்முறையாக தயாரித்த படம் நாடோடி மன்னன். முதன் முறையாக இரட்டை வேடம் ஏற்ற படம். தனது கட்சியான திமுக கொடியை திரையில் காண்பித்த படம் நாடோடி மன்னன். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு எம்ஜிஆர் தொடர்ந்து வசூல் மன்னனாக பயணித்தார். அந்த படத்தின் வெற்றி விழா, 1958-ம் ஆண்டு ஆகஸ்ட் 22 ம் தேதி  மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

சித்திரை திருவிழாவிற்கு வருவது போன்ற கூட்டம் அன்று  தமுக்கம் மைதானத்தில் கூடியது. திமுக என்ற  கட்சி அப்போது தவழும் குழந்தை.  நடந்துக் கொண்டிருப்பதோ, காமராஜர் ஆட்சி. ஆனால் மதுரை தமுக்கம் மைதானத்தில் மக்கள் வெள்ளம். எம்ஜிஆர் என்ற தங்களது நாயகனை காண்பதற்கு. தங்களது நாடோடி மன்னனின் வெற்றிக் கொண்டாட்டத்தில் தாங்களும் இணைந்துக் கொள்கிறோம் என்பதை சொல்வதற்காக திமுக தொண்டர்கள், எம்ஜிஆர் ரசிகர்கள், பெண்கள், சிறுவர்கள் என தமுக்கம் மைதானமே  மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.

இந்த பட வெற்றி விழாவிற்கு நாயகன் எம்ஜிஆர் எப்படி வந்தார் தெரியுமா? எப்படி வந்தார் என்று சொல்வதை விட, எப்படி வரவழைக்கப்பட்டார் தெரியுமா ? மதுரை ரயில் நிலையத்திலிருந்து, மதுரை தமுக்கம் மைதானத்திற்கு நான்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ராஜகுமாரன் போல் உட்காரவைக்கப்பட்டு, ஊர்வலமாக  வந்தார் எம்ஜிஆர்.  வரும் வழியெல்லாம் மக்கள் ஆரவாரம்.

ஒரு நாயகன், ஒரு தலைவன், ரசிகர்களின் மன்னன்  உருவான தருணங்கள் அது. எம்ஜிஆர் அழைத்து வரப்பட்ட அந்த சாரட் வண்டியின் முன்பு, 110 பவுன் எடை கொண்ட தங்க வாள் ஒன்று எடுத்துச் செல்லப்பட்டது. அந்த தங்கவாளை அண்ணா தமுக்கத்தில் நடைபெற்ற அந்த வெற்றி விழாவில், எம்ஜிஆருக்கு பரிசளித்தார்.

திராவிட இயக்க நடிகரான எம்ஜிஆருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், எம்ஜிஆரின் தலைவருமாகிய அண்ணா வாளினை பரிசளித்தார் என்பது திமுக வரலாற்றிலும், எம்ஜிஆரின் திரையுலகப் பயணத்திலும் மிக முக்கியமான நிகழ்வு. அந்த நிகழ்வில் அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் என பலரும் கலந்துக் கொண்டனர்.

எம்ஜிஆர் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த போது, உலகத் தமிழ் மாநாடு நடத்த திட்டமிட்டார். அப்போது அவர் தேர்ந்தெடுத்த இடம் மதுரை தமுக்கம் மைதானம்தான். 20 ஆண்டுகளுக்கு முன்பு எந்த தமுக்கம் மைதானத்தில்  அரசியல் அடையாளம் பெற்றாரோ, அதே நாடோடி மன்னன் வெற்றி மேடையில்தான் தமிழகத்தின் நிஜ மன்னாதி மன்னனாக உருப்பெற்ற எம்ஜிஆர் உலகத்தமிழ்மாநாடு நடத்தினார். அந்த மாநாட்டில் மற்றொரு முக்கிய நிகழ்வும் நடைபெற்றது.

அந்த மாநாட்டில்தான், “காவிரி தந்த கலைச் செல்வி “என்ற பெயரில் நாட்டிய நாடகம் ஒன்றை நடத்தினார் ஜெயலலிதா. எம்ஜிஆர் நடத்தும் மாநாட்டில் ஜெயலலிதா நாட்டியம் அரங்கேறுவது பெரிய செய்தியா ? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அப்போது அது பெரிய செய்திதான். ஏனென்றால், ஜெயலலிதா அப்போது அரசியலிலில் இல்லை. ஆகவே, ஜெயலலிதாவிற்கு மறு அறிமுகம் கிடைத்த மாநாடு அது. அதற்குப் பிறகுதான் ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தார். அந்த வகையில் ஜெயலலிதாவிற்கு முக்கியமான மாநாடு அது. எம்ஜிஆருக்கு மட்டுமல்ல, ஜெயலலிதாவிற்கும் அரசியல் வருகைக்கு காரணமாக அமைந்த அந்த மாநாடு நடைபெற்றதும் தமுக்கத்தில்தான்.

அப்படி அதிமுகவின் வரலாற்றிலும், எம்ஜிஆரின் ஆட்சியிலும், ஜெயலலிதாவின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத இடம் வகித்த ஐந்தாம் உலகத் தமிழ்மாநாடு நடைபெற்ற சுவடுகளை சுமந்து நிற்கிறது தமுக்கம் மைதானம்.

எம்ஜிஆருக்கு மட்டுமல்ல, திமுகவும் வரலாற்று சிறப்பு மிக்க மாநாடுகளை தமுக்கம் மைதானத்தில்தான்  நடத்தியிருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சியில் ஈழத்தமிழர்களின் பிரச்சனைகளை இந்தியாவின் பிற மாநில மக்களுக்கும் எடுத்துரைக்கும் வண்ணம்  டெசோ மாநாடு நடத்தப்பட்டது.  திமுக தலைவர் கருணாநிதி, காமராஜர் காங்கிரஸ் தலைவராக இருந்த பழ.நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் அந்த மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. பிற மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்டு அந்த மாநாட்டினை சிறப்பித்தனர். தமுக்கத்தில் நடைபெற்ற அந்த மாநாடு, தேசியச் செய்தியானது.

விளையாட்டுப் போட்டிகளுக்காக  உருவாக்கப்பட்ட  தமுக்கம் மைதானத்தின் கடைசி நிகழ்வும் விளையாட்டுப் போட்டிதான் என்பதை கவித்துவத்துடன் சொல்வதா, வருத்தத்துடன் பதிவு செய்வதா,.?  ஒரு வரியில் சொல்வதென்றால், சரித்திரம் ஒன்று தன் வரலாறு எழுதுவதை நிறுத்திக் கொள்கிறது.

Also see:


 
Published by:Karthick S
First published:

அடுத்த செய்தி