• HOME
  • »
  • NEWS
  • »
  • special-articles
  • »
  • 22 ஆண்டு கால ஸ்டெர்லைட் ஆலை: மகாராஷ்டிரா முதல் தூத்துக்குடி வரை

22 ஆண்டு கால ஸ்டெர்லைட் ஆலை: மகாராஷ்டிரா முதல் தூத்துக்குடி வரை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு (கோப்புப் படம்)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு (கோப்புப் படம்)

  • News18
  • Last Updated :
  • Share this:
    தமிழகத்தில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலை 4-வது முறையாக மூடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்கள் நிராகரித்த ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் தொடங்கப்பட்டதற்கான காரணமும், ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.

    மஹாராஷ்டிர மக்களால் விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை:  

    லண்டனை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனம் இந்தியாவில் தாமிர உருக்கு ஆலை தொடங்க திட்டமிட்டது. இதையடுத்து பீஹார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த  வேதாந்தா நிறுவன உரிமையாளர் அனில் அகர்வால் 1992-ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் 700 கோடி ரூபாய் செலவில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க திட்டமிட்டார். இந்த ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டங்களால் நிலை குலைந்த மகாராஷ்டிர அரசு, ஆலை பணிகளை நிறுத்த உத்தரவிட்டது.  இதையடுத்து கர்நாடகா, கேரளாவில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்க திட்டமிடப்பட்ட நிலையில், போபால் விஷ வாயு கசிவு சம்பவத்தை கருத்தில் கொண்டு அந்த மாநில அரசுகள் அனுமதி மறுத்தன.

    தமிழகத்தில் கால்பதித்த ஸ்டெர்லைட் ஆலை: 

    1994-ம் ஆண்டு  தமிழகத்தில் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதி அளித்தார்.  அதன்படி  1994ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி ஆலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடியில் ஆலையை தொடங்கிய அனில் அகர்வாலுக்கு எதிராக பொதுமக்கள் பெருமளவில் போராட்டம் நடத்தினர்.   1996-ம் ஆண்டு முதல் ஆலை செயல்பட தொடங்கியது.  சுமார் இரண்டு ஆண்டுகள் மக்கள் எழுச்சியுடன் போராடினர். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு போராட்டத்தின் வீரியம் குறைந்தது.

    750 கோடி வரி ஏய்ப்பு செய்த ஸ்டெர்லைட் நிறுவனம்:

    இதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் 750 கோடி வரி ஏய்ப்பு செய்த வழக்கில் துணைத் தலைவர் வரதராஜன் கைது செய்யப்பட்டார்.  அவரின் கைதைத் தொடர்ந்து ஆலைக்கு எதிரான போராட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.அப்போதைய மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.  அந்த சமயத்தில் 'ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம்' சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    உயர்நீதிமன்ற உத்தரவை தடை செய்த உச்சநீதிமன்றம்: 

    2013-ம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக- டை-ஆக்சைடு வெளியேறியதால் தூத்துக்குடி மக்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர்.  பீகாரை சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.  மேலும், நச்சுக் காற்றால், மரங்களின் இலைகளும் பூக்களும் கருகிய நிலையில், உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது. இதை எதிர்த்து ஆலை சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி அளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில், விதிமீறல் மீறிய ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்தும் ஆலை தொடர்ந்து இயக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆலை விரிவாக்கப் பணிகள்: 

    ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்து வந்த இந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன. விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் அருகேயுள்ள குமரெட்டியாபுரம் பகுதி மக்கள் போராட்டத்தை தொடங்கினர்.  ஆலை இயங்குவதற்கான வருடாந்திர லைசென்ஸை மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது. இதையடுத்து ஆலை விரிவாக்கப் பணிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது. கடந்த ஏப்ரல் 25ல் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு அளித்தார்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 

    இதையடுத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பேரணியாக சென்றவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தமிழக வரலாற்றில் மிக கொடூரமான நிகழ்வாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அரசாணை வெளியிட்டால் மட்டுமே உயிரிழந்தவர்களின் உடல்களை பெற்றுக் கொள்வதாக இறந்தவர்களின் உறவினர்கள் அறிவித்தனர்.

    ஆலையை மூட அரசாணை: 

    தொடர்ந்து, ஆலைக்கான மின்சார இணைப்பும், குடிநீரும் துண்டிக்கப்பட்டது. மேலும் ஆலை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை மே 28 ல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்பின் சில மணி நேரங்களில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆலைக்கு சீல் வைத்தார். 22 ஆண்டு கால ஸ்டெர்லைட் ஆலையின் பயணம் முடிவுக்கு வந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:செலீனா
    First published: