முகப்பு /செய்தி /சிறப்புக் கட்டுரைகள் / நரசிம்மராவின் ஒற்றை ஆலோசனையால் அசாம் முதல்வரின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை.. ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் வாழ்க்கை வரலாறு...

நரசிம்மராவின் ஒற்றை ஆலோசனையால் அசாம் முதல்வரின் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை.. ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் வாழ்க்கை வரலாறு...

Himanta Biswa Sarma

Himanta Biswa Sarma

Himanta Biswa Sarma - From Boy Wonder to CM | தங்கள் அமைப்பில் இருந்து துரோகம் இழைத்து காங்கிரஸில் சேர்ந்த ஹிமாந்தாவை விட்டுவிடக்கூடாது என பழிதீர்க்க துடித்த AGP கட்சி தலைவர்கள் ஒரு பக்கம், சிறிது காலத்திலேயே முதல்வரிடம் நற்பெயர் பெற்று காங்கிரஸில் அபார வளர்ச்சி அடைந்த ஹிமாந்தாவை காலி செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒரு பக்கம் என ஹிமாந்தாவின் அரசியல் வாழ்வு கரடுமுரடான பாதையில் பயணிக்கிறது.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

- எஸ்.ஜி.சூர்யா

எனது நண்பர் அஜித் தத்தா எழுதியுள்ள புத்தகம் "Himanta Biswa Sarma - From Boy Wonder to CM". தற்போதைய அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஷ்வா ஷர்மாவின் வாழ்க்கை வரலாற்று நூல் 

2015-ஆம் ஆண்டு ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தாலும், இன்று பா.ஜ.க தொண்டர்களால் பெரிதும் விரும்பப்படும் முதல்வராக ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளார். 2016-ஆம் ஆண்டு முதல் வடக்கு - கிழக்கு ஜனநாயகக் கூட்டணி (NEDA) அமைப்பின் தலைவராகவும், 2021 மே மாதம் முதல் அஸ்ஸாம் முதல்வராகவும் வெகுசிறப்பாக செயலாற்றிக் கொண்டு இருக்கிறார்.

2016-ஆம் ஆண்டு வரை பா.ஜ.க வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றில் கூட ஆட்சியில் இல்லை. ஆனால் இன்று 8 வடகிழக்கு மாநிலாங்களிலும் பா.ஜ.க-வின் கூட்டணி ஆட்சிதான். எப்பேற்பட்ட சாதனை? வடகிழக்கில் எல்லாம் பா.ஜ.க வளரவே வாய்ப்பில்லை என்ற பேச்சையெல்லாம் மாற்றி 8 மாநிலங்களிலும் ஆட்சிக்காட்டிலில் இன்று பா.ஜ.க அமர்ந்து இருப்பதற்கு ஹிமாந்த பிஸ்வா ஷர்மா மிகப்பெரிய காரணம்.

205 பக்கங்களில் இவ்வளவு அழகாக, சுவாரஸ்யமாக ஒரு முழுநீள வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ள எனது நண்பரும் நூலாசிரியருமான அஜித் தத்தாவுக்கு முதல் வாழ்த்துக்கள்.

"பள்ளி மாணவனாக இருக்கும் போதே ஹிமந்தாவின் அரசியல் வாழ்வு துவங்கி விடுகிறது. அந்தக்காலக்கட்டத்தில் பங்களாதேசில் இருந்து வந்த அகதிகளை வெளியேற்ற வேண்டும் என போராட்டங்கள் அஸ்ஸாம் முழுக்க புயலை கிளப்பின. அந்த போராட்டத்தின் வடிவமாய் அனைத்து அசாம் மாணவர் சங்கம் (AASU - All Assam Students' Union) துவங்கப்பட்டது. ஹிமந்தா தனது மாணவ பருவத்தில் இச்சங்கத்தில் உறுப்பினராக பின்பு மாணவர் தலைவராக குறுகிய காலத்தில் வளர்ச்சி பெறுகிறார். 12 வயது இருக்கும் போதே இவர் பொதுக்கூட்டங்களில் பேசிய பேச்சுக்கள் அஸ்ஸாமில் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

Himanta Biswa Sarma

பள்ளிக்காலம் முடிந்து அஸ்ஸாமில் மிகவும் பிரபலமான காட்டன் கல்லூரியில் சேர்கிறார் ஹிமாந்தா. அங்கும் மாணவர் அரசியலில் துடிப்புடன் செயல்பட, AASU அமைப்பின் பிரதிநிதியாக கல்லூரி மாணவர் சங்க பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார். அப்பகுதியின் மிகப்பெரிய மாணவர் தலைவராக உருவெடுக்கிறார். இவர் செயல்பட்ட AASU அமைப்பு என்பது அப்போது அங்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியின் நேர் எதிர் கொள்கை கொண்ட அமைப்பு. AASU அமைப்பு அஸ்ஸாமின் மிகப்பெரிய மாணவர் அமைப்பாக உருவெடுக்கவே, அதில் மிகவும் பிரபலமான தலைவராக ஹிமாந்தா உருவாகி வந்தார்.

இந்நிலையில் ஹிமாந்தா அங்கம்வகித்த AASU அமைப்பு அஸோம் கன பரிஷத் (AGP) என்ற கட்சியாக உருமாறி 1985 அஸ்ஸாம் சட்டசபை தேர்தலை சந்தித்து அபார வெற்றி பெறுகிறது. இந்த தேர்தல் வெற்றியில் இளைஞர்களை ஒருங்கிணைத்த ஹிமாந்தாவின் பங்கு போற்றத்தகுந்ததாக இருந்தது.

Himanta Biswa Sharma

5 ஆண்டுகள் கழித்து 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் AGP கட்சி படுதோல்வி அடைந்து காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. அப்போது அஸ்ஸாம் முதல்வராக இருந்த ஹிதேஷ்வர் சைகியாவின் பார்வை துடிப்பான இளைஞர் தலைவராக உருவெடுத்து வந்த ஹிமாந்தாவின் மீது விழுகிறது. AASU மாணவர் அமைப்பின் ஆணிவேராகவும், AGP கட்சியின் இளந்தலைவராகவும் திகழும் ஹிமாந்தாவை எப்படியாவது காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என முடிவு செய்து பல்வேறு செயல்களில் ஈடுபடுகிறார் முதல்வர் சைகியா. அதில் ஒன்று மாணவர் போராட்டங்களை நடத்தி வந்த ஹிமாந்தாவை கைது செய்து சிறையில் அடைத்து சித்தரவதை செய்வது. பின்பு ஒருக்கட்டத்தில் ஹிமாந்தா சைகியாவின் தலைமையில் 1992-ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்து அப்பகுதி மக்களுக்கும், மாணவர்களுக்குமான நற்பணிகளை செய்து வருகிறார். முதல்வர் ஹிதேஷ்வர் சைகியாவின் நம்பிக்கை மிகுந்த தளபதியாக அஸ்ஸாம் அரசியலில் ஒரு கலக்கு கலக்குகிறார் ஹிமாந்தா.

தங்கள் அமைப்பில் இருந்து துரோகம் இழைத்து காங்கிரஸில் சேர்ந்த ஹிமாந்தாவை விட்டுவிடக்கூடாது என பழிதீர்க்க துடித்த AGP கட்சி தலைவர்கள் ஒரு பக்கம், சிறிது காலத்திலேயே முதல்வரிடம் நற்பெயர் பெற்று காங்கிரஸில் அபார வளர்ச்சி அடைந்த ஹிமாந்தாவை காலி செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஒரு பக்கம் என ஹிமாந்தாவின் அரசியல் வாழ்வு கரடுமுரடான பாதையில் பயணிக்கிறது.

Himanta Biswa Sharma

இதைத்தொடர்ந்து 1996-ஆம் ஆண்டு அஸ்ஸாம் தேர்தலில் முதல்வர் சைகியாவின் ஆசீர்வாதத்துடன் அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தி பகுதியில் உள்ள ஜகுல்பாரி சட்டசபை தொகுதியில் தனது 27 வயதில் முதல் அரசியல் தேர்தலை சந்திக்கிறார் ஹிமாந்தா. பல்வேறு மூத்த தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி இத்தேர்தலில் அவருக்கு காங்கிரஸ் கட்சியில் இருந்து முதல்வரின் அழுத்தத்தால் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் அவரின் துரதிஷ்டவசம், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஹிதேஷ்வர் சைகியா உயிரிழக்கிறார். இதுதான் சரியான நேரம் என்று காத்திருந்த அஸ்ஸாம் மாநில மூத்த காங்கிராஸ் தலைவர்கள் ஹிமாந்தா அத்தேர்தலில் தோற்பதை உறுதி செய்வதுடன், அரசியல் களத்தில் இருந்தே அப்புறப்படுத்த அனைத்து வேலைகளையும் செய்தனர்.

Himanta Biswa Sharma With Modi

ஒருக்கட்டத்தில் தனது அரசியல் வாழ்வு முடிந்தே விட்டது என கருதிய ஹிமாந்தா தான் பயின்ற சட்டத்தொழிலை செய்யலாம் என டெல்லிக்கு குடிபெயர்கிறார். அப்போது, பிரதமராக 5 ஆண்டுகள் பதவி வகித்து விலகியிருந்த நரசிம்மராவை சந்திக்கிறார். அப்போது நரசிம்மராவ் சொன்ன ஒரே ஒரு ஆலோசனை ஹிமந்தாவின் அரசியல் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது.

என்ன ஆலோசனை அது? அதை எப்படி பின்பற்றி இன்று வடகிழக்கு மாநிலங்களின் அசைக்க முடியாத சக்தியாக ஹிமாந்த உருவானார்? போன்றவற்றை தெள்ளத்தெளிவாக விவாரிக்கிறது இந்த அருமையான புத்தகம்.

2001-ஆம் ஆண்டு முதன்முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன், கல்லூரி காலாங்களில் சந்தித்து, தோழியாக இருந்த உள்ளூர் தொழிலதிபரின் மகளான ரிங்கி புயானை திருமணம் செய்துக் கொண்டார் ஹிமாந்தா.

எந்த அரசியல் பின்புலனும் இல்லாமல் தனது, அறிவாலும், ஆற்றலாலும், கடின உழைப்பினாலும், விடா முயற்சியினாலும் இன்று அஸ்ஸாம் மாநில முதல்வராக உயர்ந்துள்ளார் ஹிமாந்தா. அரசியல் ஆர்வம் உள்ள, அரசியலில் சாதிக்க துடிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும் ஹிமாந்தாவின் வாழ்க்கை ஒரு மிகச்சிறந்த உதாரணம் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

ஹிமாந்தாவின் பயணம் இதோடு முடிந்துவிடவில்லை, நாளை இதை விட மிகப்பெரிய உயரங்களுக்கு கூட ஹிமாந்தா செல்வாதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இருப்பினும், அவர் முதல்வரான வரலாறு என்றும் போற்றப்படத்தகுந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வரலாறை தெரிந்துக்கொள்ள இதைவிட சிறந்த நூல் ஒன்றும் இருப்பதற்கான வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம்.!"

Himanta Biswa Sharma

 -   கட்டுரையாளர் - எஸ்.ஜி.சூர்யா , தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர்

(கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் கருத்தாகும். நியூஸ்18 பொறுப்பாகாது)

First published:

Tags: Assam, BJP