ஆடி மாதத்தின் சிறப்புகளும் விரதங்களும்!

ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்கள் வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அம்மாவாசை, ஆடி தபசு, ஆடி கீர்த்திகை ஆடி பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன. இந்த விரதங்கள் குறித்து விளக்குகிறார், பெருங்குளம் ஜோதிடர் ராமகிருஷ்ணன்

ஆடி மாதத்தின் சிறப்புகளும் விரதங்களும்!
.
  • News18
  • Last Updated: July 17, 2019, 4:42 PM IST
  • Share this:
ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஆடி முதல் மார்கழி மாதம் வரை உள்ள காலம் தட்சிணாயணக் காலம் என்றும் தை முதல் ஆனி வரை உள்ள காலம் உத்திராயணம் என்றும் அழைக்கப்படுகிறது. தட்சிணாயணக் காலம் என்றால் புண்ணிய காலம் ஆகும். சூரியன் மிதுனராசியில் இருந்து கடக ராசிக்கு எப்போது வருகிறாரோ அந்தநாள் ஆடி மாதத்தின் முதல்நாள் ஆகும். இது குறித்து விரிவாக விளக்குகிறார், பெருங்குளம் ஜோதிடர் ராமகிருஷ்ணன்.

ஆடி மாதத்தின் சிறப்புகள்: ஆடி மாதம் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த கடக ராசி என்பது சந்திரனின் ஆட்சி வீடாகும். சிவனின் அம்சமான சூரியன் சக்தியின் அம்சமான சந்திரனில் சஞ்சாரம் செய்கிறார். அதனால் இந்த மாதத்தில் சந்திரனின் ஆளுமை கூடுகிறது. அதனால் இந்த மாதம் சக்தியின் மாதமாக கருதப்படுகிறது.


அதன் காரணமாகதான் ஆடி மாதத்தில் அம்மனுக்கு உகந்த கூழ், வேப்பிலை, எலுமிச்சை வைத்து படையல் செய்து வருகிறோம். இதற்கு அறிவியல் பூர்வமான காரணங்களும் உள்ளன. இந்த மாதத்தில் கோடைக்காலம் முடிந்து பருவமழை வருவதால் பூமி உஷ்ணமாக இருக்கும். அந்த நேரத்தில் மேற்சொன்னவையைஅம்மனுக்கு படைத்து உண்டு வந்தால் உடல் நலம்பெறும் சீரான வெப்பநிலையை அடையும் என்பதே ஆகும்.

மேலும் ஆடி மாதத்தில்தான் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கியமான தினங்களும் வருகின்றன. ஆடி செவ்வாய், வெள்ளி, ஆடிப்பதினெட்டு, ஆடிப்பூரம் ஆடிப்பௌர்ணமி, அடி அமாவாசை, ஆடி தபசு, ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு என பல சிறப்பு வழிபாட்டு தினங்கள் உள்ளன.

ஆடி கிருத்திகை: மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் கூடுதல் சிறப்பு கொண்டது. இந்த வருடத்திற்கான ஆடி கிருத்திகை, ஆடி மாதம் 10-ம் தேதி ( 26 ஜூலை 2019) அன்று வருகிறது. இது முருகனுக்கு உகந்த தினம். முருகனை இந்த நாளில் வழிபாடு செய்வது நல்லது.ஆடி வாஸ்து பூஜை: ஆடி மாதம் 11-ம் தேதி ( 27 ஜூலை 2019) அன்று வாஸ்து பூஜை வருகிறது. ஆடி மாதத்தில் வாஸ்து பூஜை செய்து தை மாதத்தில் கிரஹபிரவேசம் செய்வது சிறப்பாகும். ஏனென்றால் தட்சிணாயணத்தில் வீடு கட்ட ஆரம்பித்து உத்திராயணத்தில் வேலையை முடிப்பது என்பது மிகுந்த நன்மையை அளிக்கும்.

ஆடி அமாவாசை: ஆடி மாதம் 15-ம் தேதி ( 31 ஜூலை 2019) அன்று ஆடி அமாவாசை நிகழ்கிறது. இந்த நாள் நம் முன்னோர்களை வழிபட மிகவும் உகந்த நாள். ஒவ்வொரு வருடமும் 3 முக்கியமான அமாவாசை வரும். அதில் முதலாவது ஆடி அமாவாசை, 2-வது புரட்டாசி மகாளய அமாவாசை, 3-வது தை அமாவாசை. இந்த நாளகளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நாம் செய்த கருமங்கள் நீங்கி நன்மை அளிக்கும்.

ஆடி பதினெட்டு: ஆடி மாதம் 18-ம் தேதி (03 ஆகஸ்டு 2019) அன்று ஆடி 18 வருகிறது. தமிழகத்தில் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக்கெடுத்து வருவதைத்தான் மக்கள் ‘ஆடிப்பெருக்கு’ என்று கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் சுமங்கலிகள் தாலி கயிறை மாற்றுவார்கள். அம்மனுக்கு படையல் வைத்து வழிபடுவார்கள். இந்தமுறை ஆடி 18-க்கு மறுநாள்ஆண்டாளுக்கு உரிய நட்சத்திரம், அதாவது ஆண்டாள் பிறந்த தினம் ஆடி 19 -ம் தேதி வருகிறது. அன்று பெண்கள் நோன்பு இருப்பது நல்லது.

கருட ஜெயந்தி: ஆடி மாதம் 20-ம் நாள் ஆகஸ்ட் 5-ம் தேதி ஆடி மாத வளர்பிறையில் நாக பஞ்சமி, கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த ஆண்டு நாக பஞ்சமி நாளில் நாக தோஷம் உள்ளவர்கள் ஆலயங்களில் நாக பிரதிஷ்டை செய்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபடுவார்கள். அதனால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கைக்கூடும். குழந்தை இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

வரலட்சுமி விரதம்: ஆடி மாதம் 24-ம் தேதி (9-ம் ஆகஸ்ட் 2019) அன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பெண்கள் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. தான தருமங்கள் செய்ய வேண்டும்.

ஆடி அறுதி: ஆடி மாதம் 32- ம் தேதி ( 17 ஆகஸ்ட் 2019) அன்று ஆடி அறுதி. ஆடி மாதத்தின் கடைசி நாளாகும். அன்றைய தினம்தான் விவசாயிகள் நாற்று நடுவார்கள். ஆடி மாதம் பிறக்கும் போது விதை விதைப்பதும் முடியும் போது நாற்று நடுவது வழக்கம். அடுத்த தினம் ஆவணி மாதம் பிறக்கும். பெண்கள் அருகில் உள்ள சிவன்கோவிலுக்கு சென்று வழிபட்டால் நினைத்தது நடக்கும்.

- பெருங்குளம் ஜோதிடர் ராமகிருஷ்ணன் (7845119542)
First published: July 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்