• HOME
 • »
 • NEWS
 • »
 • special-articles
 • »
 • `கலைத்துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும்!’ - சமூக வலைதளத்தை கலக்கும் மாயவரம் இதயராஜா

`கலைத்துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும்!’ - சமூக வலைதளத்தை கலக்கும் மாயவரம் இதயராஜா

இதயராஜா

இதயராஜா

நான் ‘ஏழை’ என்று எழுதும் போதெல்லாம் அது நான் ஒரு சமூகத்தின் சார்பாக எழுதுவதாக புரிந்துகொள்ளப்படுகிறது.

 • Share this:
  காதலை, ஹைக்கூ முதல் முழு நீளப் பாடல்கள் வரை பல மெட்டுக்களில் பல வடிவங்களில் பேஸ்புக் உலகில் கொஞ்சு தமிழ் கொண்டு அள்ளித்தெளிப்பவர் தான் இந்த மாயவரம் இதயராஜா.

  மயிலாடுதுறையில் உள்ள மேலப்பெரும்பள்ளத்தைச் சேர்ந்தவர் இந்த இதயராஜா(33). எம்.ஏ, எம்.பில், எம்.எட் வரை படித்துள்ள இவர் சின்ன வயதிலிருந்தே கவிதைகள் எழுதுவது, பாடல்கள் பாடுவது, சொந்தநடையில் எழுதுவது என்னும் போக்கிலேயே தன்னை வளர்த்துக்கொண்டதாகச் சொல்கிறார். ஒரு கிராமியப் பாடகராகவும், பட்டிமன்ற பேச்சாளராகவும் பல ஊர்த் திருவிழாக்களிலும் கலந்துகொள்கிறார்.

  இவரது ‘கவிக்கொம்பன்’ ‘மாயவரம் இதயராஜா’ பேஸ்புக் ஐடிக்களை பின் தொடர்பவர்கள் ஐயாயிரம் பேருக்கும் மேல் இருக்கிறார்கள். ‘நச்’ என்று ஒரு காதல் கவிதை உடன் ஒரு அழகியின் போட்டோ இப்படித்தான் இருக்கும் இவரது பதிவுகள். ஒவ்வொரு கவிதையும் படிக்கும் அந்த நேர ஸ்வாரஸ்யத்துக்கான, ‘அட!’ என்று சொல்லவைக்கும் வகையைச் சார்ந்தது.

  இப்படி பேஸ்புக்கில் எழுதத் தொடங்கியதன் காரணம் பற்றி கேட்ட போது, “நான் இதுவரை இரண்டு கவிதை புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். பி.ஏ படிக்கும் போது என் முதல் கவிதைத் தொகுப்பை ‘யுக பாரதி’ அவர்கள் தான் என் கல்லூரியில் வெளியிட்டார்கள். கதைகளும், கவிதைகளுமாக 5,6 புத்தகங்களை எழுதிவைத்திருக்கிறேன். ஹைக்கூக்கள் மட்டும் ஆயிரத்துக்கு அதிகமாக எழுதி வைத்திருக்கிறேன். பாடல்கள் எழுதுவது என்பது ஒரு பிரச்சனையே இல்லை எனக்கு. இப்போது ஒரு சூழல் சொன்னால் கூட உடனே உங்களுக்கு அதற்கேற்றாற் போல எழுதித் தந்துவிடுவேன். பிரச்சனை அதை வெளியே கொண்டு வருவது தான். அங்கு பொருளாதாரம் என்ற தடை என்னைப் போன்றவர்களை முடக்குகிறது. அனால் ஏதாவது ஒருவிதத்தில் நம்மை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தொடங்கியது தான் என் முகநூல் கவிதைப் பக்கம்” என்றார்.

   

  எழுத்தின் மீதான ஆர்வம் பற்றி கேட்கையில், “சின்ன வயது முதல் பல போட்டிகளில் கலந்துகொண்டுள்ளேன். நாளிதழ்களில் துணுக்குக் கதை, கவிதை, தகவல்கள் எழுதி நிறைய வெளிவந்துள்ளது. வானொலியிலும் ‘கதையும் கானமும்’ என்ற தலைப்பில் என் கதை வெளிவந்துள்ளது உடன் வேறு வேறு நிகழ்ச்சிகளில் கவிதைகளும் வந்திருக்கின்றன. கடைசியாகக் கூட ஒரு பிரபல தொலைக்காட்சியில் பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்றேன். ஆனால் அந்த மாதிரி ஒரு தடவை போவதற்கே நகையை அடகு வைக்க வேண்டிய நிலை. அதனால் அதைத் தொடர்வதை விட்டுவிட்டேன்.” என்றார்.

  அதென்ன உங்களுக்கு காதல் பாடல்கள் மேல் இத்தனை ஈர்ப்பு? என்றதற்கு “என் திருமணம் காதல் திருமணம். பத்து வருடம் காதலித்தேன். பூம்புகார் கலைக்கல்லூரியில் நான் படித்த காலகட்டத்தில் என் காலேஜை கட் அடித்து விட்டு என் மனைவி நிரோஷா-அப்போதைய காதலி அவளின் டி.பி.எம்.எல். கல்லூரிக்கு சென்றுவிடுவேன். அவளுக்காக நாள் முழுவதும் காத்திருப்பேன். காத்திருக்கும் வேளையில் அவளுக்காக மெட்டமைத்து கவிதை, பாட்டு எழுதி வைப்பேன். அப்படித் தான் தொடங்கியது தான் என் காதல் கவிதைகள்.

  இதயராஜாவுக்கு தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. படிப்புக்கேற்ற வேலை ஏதும் கிடைக்காமல் தற்போது பொருளாதாரத்தில் நலிவடைந்தே உள்ளார். கொரானாவுக்கு முந்தய காலத்தில், ஒரு சின்ன உணவகம் ஒன்றை வைத்து அதன்மூலம் குடும்பச் சூழலை உயர்த்த முனைந்தார். ஆனால் கொரோனா கால ஊரடங்கு அதனை முடக்கி அவரின் சூழலை இன்னும் பின்னுக்குத் தள்ளியது என்கிறார்.

  தன் முதல் ரசிகர் தன் மனைவி தான் என்றும், இப்போது கூட தினமும் இரவு உணவுக்குப் பின்னர் தன் புதிய பாடல்களை அவரிடம் தான் முதலில் பாடிக்காட்டுவேன் என்று பெருமையோடு பகிர்ந்தார்.

  ஏன் நீங்கள் சமூகம் சார்ந்து, பிரச்னைகளை பற்றி எல்லாம் எழுதுவதில்லை என்று கேட்டதற்கு. “எனது வெளிவந்த புத்தக தலைப்புகளே, ‘ஈரத்துணி மற்றும் உழவனின் எதிர்பார்ப்புகள்’ சமூக நலன் சார்ந்து, விவசாயப் பிரச்சனை சார்ந்து தான் எழுதத் தொடங்கினேன், ஆனால் நம் சமூகத்தில் ஆழ்ந்திருக்கும் சாதிய கண்ணோட்டமானது, நான் ‘ஏழை’ என்று எழுதும் போதெல்லாம் அது நான் ஒரு சமூகத்தின் சார்பாக எழுதுவதாக புரிந்துகொள்கிறது.”என்றார்.

  தொடர்ந்து, “நான் முன்னர் உங்களிடம் சொன்னேன் ‘யுக பாரதி’ என் முதல் நூலை வெளியிட்டார் என்று. பூம்புகார் கல்லூரி வரலாற்றிலேயே என் புத்தகம் தான் முதலாக வெளிவந்த கவிதைப் புத்தகம். ஆனால் அந்த புத்தக வெளியீட்டின் போது அந்தப் பகுதியைச்சேர்ந்த ஆதிக்க சாதி ஆட்கள் என் நண்பர்கள் வைத்த ப்ளஸ், போஸ்ட்டரை கிழித்தனர். எனக்கு 23 வயது அப்போது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் அது. இதையெல்லாம் ஒட்டி எடுத்த முடிவு தான் முதலில் காதல் பாடல்கள் எழுதி பிரபலமாவது, பின்னர் சமூகநலன் சார்ந்து எழுதலாம் என்று.”

  தன் லட்சியமாக, அவர் எதை வைத்திருக்கிறார் என்று கேட்கையில், கலைத்துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும், தன்னிடம் இருக்கும் திறமைகளை உலகிற்கு காட்டவேண்டும் என்பதே என்கிறார் காதல் கவிஞர் மாயவரம் இதயராஜா.

  - இனிய நந்தன்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ram Sankar
  First published: