• HOME
 • »
 • NEWS
 • »
 • special-articles
 • »
 • கஜா பாதித்த டெல்டாவின் நிலையும், மக்களின் தேவையும்!

கஜா பாதித்த டெல்டாவின் நிலையும், மக்களின் தேவையும்!

கஜா புயலால் முறிந்த மரங்கள்

கஜா புயலால் முறிந்த மரங்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும், அது தான் உடனடித் தேவையாக இருக்கிறது

 • News18
 • Last Updated :
 • Share this:
  சோதனை மேல் சோதனை என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ டெல்டா விவசாயிகளுக்கு முற்றிலும் பொருத்தமாக இருக்கிறது.

  குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகம் நெல் சாகுபடி செய்யும் டெல்டா மாவட்டங்களில் காவிரி தடைபட்டதால், கடந்த 6 ஆண்டுகளாக ஒரு போக சாகுபடியே கேள்விக்குறியாகியது.
  நடப்பாண்டில் தாமதமாக இருந்தாலும், ஆறாண்டு தண்ணீரையும் சேர்த்து மொத்தமாகக் கொண்டு வந்தது காவிரி. மகிழ்ச்சியோடு சாகுபடிப் பணிகளை மேற்கொண்டனர் விவசாயிகள்.
  கல்யாணம், காது குத்து, வீடு கட்ட, மேல் படிப்பிற்கு என எதற்கும் கடன் வாங்க வேண்டாம் என்று நம்பிக்கையோடு இருந்தவர்களை அடியோடு புரட்டிப் போட்டது கஜா புயல்.

  கடந்த நவம்பர் 16-ம் தேதி மிக மோசமான பேரிடருடன் விடிந்தது. தாண்டவமாடிச் சென்ற புயலினால் வீடுகளின் கூரைகள் பெயர்த்து வீசப்பட்டன. வீட்டைச் சுற்றியிருந்த மரங்கள் விழுந்தன. குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கும் கால்நடைகள் குற்றுயிரும் குலையுயிருமாயின, பல செத்து மடிந்தன. நேரடியாக பாதிக்கப்பட்டும் அதிர்ச்சியிலும் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் சேதத்தையும் திருச்சி, கருர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பகுதி சேதத்தையும் ஏற்படுத்தியுது கஜா புயல்.

  மொத்தம் 2.21 லட்சம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. விழுந்த தென்னை மரங்கள் ஒரு கோடிக்கு மேல் என்று விவசாயிகளும், 40 லட்சம் என்று சொல்லி, தற்போது 70 லட்சம் என்று அரசும் சொல்கிறது. மொத்தம் 4.50 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கான மரங்கள் அடியோடும், முறிந்தும் விழுந்து கிடக்கின்றன.

  குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் இப்படியொரு பேரிடரை, இவ்வளவு சேதத்தை யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தங்களது வளங்கள் அனைத்தையும் இழந்து, மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மின் இணைப்பு கொடுப்பதற்கு மட்டும் மின்வாரிய ஊழியர்கள் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உட்பட பல்வேறு துறையினர் அர்ப்பணிப்போடு தொடர்ந்து களத்தில் உள்ளனர்.

  அமைச்சர்கள், அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தினார்கள். ஆனால், களத்தில் உள்ளவர்களுக்கு மேல் பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை பன் மடங்கு அதிகம். ஆகையால் உடனடி உதவி, நிவாரணப் பொருட்கள் கிடைக்காதவர்கள் அமைச்சர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டும், சாலை மறியல் போராட்டங்களை நடத்தியதையும் பார்த்தார்கள்.

  கஜா புயல் தாக்கி ஒரு மாதமாகிவிட்டது. இப்போது எப்படி இருக்கிறது நிலை? இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பிவிட்டார்களா? என்று கேட்டால், பெருமூச்சு மட்டுமே வருகிறது. பாதிப்புகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டு, வங்கிக் கணக்கில் வரவும் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், பாதிப்புகளுக்கு ஏற்ப நிவாரணம் அறிவிக்கப்படவும் இல்லை. அறிவித்த நிவாரணம் முழுமையாக கிடைக்கவும் இல்லை என்கிற குரல்கள் கேட்கின்றன.

  குறிப்பாக, தென்னை விவசாயிகள் விழுந்த 1 மரத்திற்கும் அதை அப்புறப்படுத்தவும் ரூ.20,000 கேட்கும் நிலையில், ரூ. 1,100 அரசு அறிவித்துள்ளது. இதனால், நம்பிக்கையிழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே முதல் கட்டமாக தென்னை மரம் ஒன்றுக்கு ரூ. 5,000 உடனே வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்கிறார்கள். இதே போல் வாழை, மா, பலா, தேக்கு மற்றும் நாட்டு மரங்களையும் முழுமையாக கணக்கில் கொண்டு வர வேண்டும். கணக்கெடுப்பு முழுமையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள் சங்கத்தினர்.

  புயலுக்கு 2, 3 வாரங்களுக்குப் பிறகு நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தலைஞாயிறு, திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டத்தில், கறம்பக்குடி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை என நகர்ப்புற பகுதிகளில் தற்போது மின்சாரம் கிடைத்துவிட்டது. ஆனால், பல கிராமங்களில் இன்னும் மின்சாரம் வரவில்லை. மின்சாரம் கிடைக்க இன்னும் ஒரு மாதம் ஆகும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

  மின்சாரம் கிடைப்பது இருக்கட்டும், பாதிப்புகளை கணக்கெடுக்கவே இன்னும் வரவில்லை என்கிறார்கள் பல கிராமங்களில். அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ அமைப்புகள், இளைஞர் குழுக்கள் மூலம் இப்போதும் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாதது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெரும் தேக்கத்தை அளித்துள்ளது. பல இடங்களில், “கஜா புயல் கடுமையாக பாதித்த பகுதி, நிவாரண உதவி வேண்டும்” என்கிற பதாகைகள் இப்போதும் முகத்தில் அறைந்து கொண்டிருக்கின்றன.

  இவ்வளவு பணிகள் நடைபெற்றாலும் உதவி கேட்டு இப்போதும் கையேந்திக் கொண்டுதான் உள்ளனர் என்பது வேதனையாக இருக்கிறது. கிராமங்களில் அனைத்துக் கட்சிகளைக் கொண்ட குழுவை அமைத்து, அந்தக் குழுக்கள் மூலம் மக்களின் தேவையறிந்து, நிவாரணப் பணிகளை மேலும் விரைவுபடுத்த வேண்டியது அவசியமானதாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது கிடைக்கும் உதவிகள், மேற்கொள்ளப்படும் பணிகள் தற்காலிகமானவையே, சற்று ஆறுதலே, நிரந்தரமாக மீண்டு பழைய நிலைக்கு டெல்டா திரும்ப 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும். அதற்கேற்ப திட்டங்களைத் தீட்டி, விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

  மத்திய அரசு இனியும் ஆராய்ந்து கொண்டிருக்காமல், கேட்டதை விட கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும். முழுமையாக வீடிழந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம், சேதத்திற்கு ரூ.4 ஆயிரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதுமானதல்ல என்பது ஒருபுறமிருக்க, முழுமையாக வீடு சேதமடைந்தும் ரூ.4 ஆயிரம் மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது என்கிறார்கள். எனவே பாதிப்பிற்கு பாரபட்சமின்றி நிவாரணம் வேண்டும் என்கிறார்கள் பாதிக்கப்பட்ட மக்கள். பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனதில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். ஆம், நம்பிக்கை அது தான் உடனடித் தேவையாக இருக்கிறது.

  - ஜோ மகேஸ்வரன்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Prabhu Venkat
  First published: