முகப்பு /செய்தி /சிறப்புக் கட்டுரைகள் / கணித்தமிழ் வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கை - அரசியல் கட்சிகள் கவனிக்குமா?

கணித்தமிழ் வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கை - அரசியல் கட்சிகள் கவனிக்குமா?

தமிழ் கணினி

தமிழ் கணினி

பல நாட்டுத் தமிழர்கள்  இணையத்தமிழுக்கு வளம் சேர்த்து வந்தாலும் தனி மாந்தர்களால் செய்ய இயலாதவற்றை அரசின் முன்னெடுப்புகள் தான் செய்ய இயலும். இவை தேர்தல் அறிக்கையாக எதிர்வரும் தேர்தலில் பேசப்பட்டு, மேம்படுத்தி உரியவை செயல்பாட்டிலும் வரவேண்டும்

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

இது தேர்தல் காலம்; ஜனநாயகத்தின் உச்சபட்ச அதிகாரத்தை மக்கள் பெறும் காலம். எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்று கனவுகளும் வாக்குறுதிகளும் சந்திக்கும் காலம். இக்காலகட்டத்தில்  கணினித் தமிழ் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய கனவுகளை இங்கே மாதிரி தேர்தல் அறிக்கையாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியும் தமிழ் வளர்ச்சியும் ஒருசேரும் புள்ளி இணையத்தமிழ் வளர்ச்சியாகும்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக அரசு செய்யக்கூடிய இந்த திட்டங்கள் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும்.

பயன்படுத்தல்

  • அரசு அலுவலகங்களைவிட அரசு இணையத்தளங்களே மக்கள் அதிகமுறை கடந்து வந்திருப்பார்கள். ஆனால் பெரும்பாலான தளங்கள் தமிழில் இல்லை. எனவே மாநில, மத்திய அரசின் இணையத் தளங்கள் அனைத்திலும் தமிழ்  இடைமுகம் இருக்க வேண்டும்.
  • அரசின் செய்திக் குறிப்புகள், வெளியீடுகள் என அனைத்திலும் ஒருங்குறி பயன்பாட்டை உறுதி செய்யவேண்டும். இதனை ISO 19005-1 தரத்தில் pdf, odf அல்லது doc வடிவில் வெளியிட வேண்டும். இதனால் இயல்மொழிப் பகுப்பாய்வு நுட்பங்களிலும் பயன்படுத்த முடியும்.
  • மக்களாட்சியின் அடிப்படை சட்டம் ஆனால் சட்டங்கள் எளிய மொழியில் எளியவருக்குக் கிடைப்பதில்லை. ஆகவே சட்டங்களையும், நீதிமன்றத் தீர்ப்புகளையும் தமிழில் கிடைக்கும் வகையில் செய்யவேண்டும். தீர்ப்பும், சட்டமும் எந்த மொழியிலிருந்தாலும் அதனைத் தமிழில் மொழிபெயர்த்து இணையத்தில் வெளியிட வேண்டும்.
  • முனைவர்கள், ஆய்வாளர்கள் என்று கல்விப் பின்புலமும், தொழில்நுட்ப வல்லுநர்கள் என்று தொழில் பின்புலமும் கொண்டவர்களை இணைக்கும் பாலமாக ஆண்டுதோறும் இணையத் தமிழ் மாநாட்டினை அரசு நடத்த வேண்டும்.
  • சொல்வங்கிகள், சொல்லடைவுகள், பல்துறைக் களஞ்சியங்கள் என இணைய வளங்களை அதிகரிக்க வேண்டும். சொற்குவை போன்ற திட்டங்களின் படைப்புகளைப் பல வடிவங்களில் வெளியிட்டுப் பல அமைப்புகளும், தளங்களும் பயன்படுத்த வழிகோலவேண்டும்.
  • கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் அரசு வெளியிட்ட தமிழ்க் களஞ்சியம் என்ற மாபெரும் தொகுதி அதன் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை. அதனை இந்தக் கணினி யுகத்தில் புதுப்பித்து இணையத்தில் தமிழுக்கு வளமான களஞ்சியத்தை உருவாக்க வேண்டும்.
  • இந்தப் பத்தாண்டின் முக்கியத் தொழில்நுட்பமான இயல்மொழிப் பகுப்பாய்வினையும் செயற்கை நுண்ணறிவினையும்(AI) பயன்படுத்திப் பல வீட்டு உபயோகப் பொருட்கள் உருவாக உள்ளன. அதற்கு முன்னரே கருவிகளில் மக்களின் தமிழ்ப் பயன்பாட்டை அதிகரிக்கவேண்டும். தானியக்கப் பண வழங்கியிலிருந்து, கைப்பேசி வரை தமிழகத்தில் விற்பனையாகும் அனைத்து மின்னணுச் சாதனங்களிலும் தமிழ் இடைமுகத்தைக் கட்டாயமாக்க வேண்டும்.
  • விக்கிப்பீடியா, அமேசான், கூகிள் போன்ற பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இட்டு, அதன் தளங்களில் தமிழ் வளங்களை அதிகரிக்க முனைய வேண்டும்.

கற்பித்தல்

  • தமிழ்க் கணினிப் பயன்பாட்டில் கற்பிக்கும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் கல்வித்துறையின் ஐ.சி.டி.(ICT) கொள்கை வகுக்க வேண்டும். தொழில் படிப்புகள் முதல் கலை அறிவிய வரை கல்லூரிப் பாட நூல்கள் தமிழில் இணையத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும்.
  • தமிழ்த் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வைத் தரும் கணித்தமிழ்ப் பேரவைகளை விரிவு படுத்தி அனைத்துக் கல்லூரிகளிலும் தொடங்க வேண்டும். சமூகப் பணி புரியும் தேசிய மாணவர் படை போல கல்லூரி தோறும் இணையத் தமிழ்ப் பங்களிப்பு செய்ய இந்தப் பேரவை பயன்பட வேண்டும்.
  • கல்வித் தொலைக்காட்சி இன்னும் பல மாணவர்களை அடைய உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியும் இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கைக்கணினியும்(tab) விலையில்லாமல் கொடுக்கலாம். கூடவே கற்றல் வழங்கல் மற்றும் பயன்பாட்டு  மென்பொருட்களை அதில் பொதித்துக் கொடுப்பதன் மூலம் மாணவர்கள் இன்னும் சிறப்பாகக் கற்றுக் கொள்ளமுடியும்.
  • 100% கணினிக் கல்வியறிவைப் பெற்ற மாநிலமாக உருவாக்கக் கொள்கை வகுக்க வேண்டும். வயது வந்தோருக்கான அறிவொளி இயக்கம் போலத் தற்காலத் இணையப் பயன்பாட்டைக் கற்று அமைப்பை உருவாக்க வேண்டும்.
  • தமிழிணையக் கல்விக் கழகம் வழியாகத் தமிழ் கற்பிக்கப்பட்டு வந்தாலும், இதனை உலகளவில் தமிழ் கற்பிக்கும் தனித்தளமாக மேம்படுத்த வேண்டும். udemy, coursera போல நவீன வடிவங்களில் கற்றல் அனுபவத்தைத் தரவேண்டும்.  ஒவ்வொரு மாநிலத்திலும், நாட்டிலும் இதற்கான வகுப்பறைகளையும் பிற கல்வி நிலையங்களுடன் சேர்ந்து ஏற்படுத்தலாம்.
  • மாவட்டம் தோறும் நூலகங்களில் மின்னூல்கள் படிக்கக் கைக்கணினிகளையும், பல்லூடகப் பயன்பாட்டுச் சாதனங்களையும் அதிகப்படுத்தல்  வேண்டும். அச்சுப் பத்திரிக்கைகள் போல இ- பத்திரிக்கைகளையும் சந்தா செலுத்தி நூலகத்தில் கிடைக்கச் செய்ய வேண்டும்.
  • சூதாட்டம், கடன் செயலி போன்றவற்றால் நிகழும் தற்கொலைகளுக்குத் தீர்வாக சைபர் குற்றப்பிரிவின் வழியாகவோ தனி அமைப்பின் மூலமோ போலிச் செயலிகள், பாதுகாப்புக் குறைபாடுகள், இணையக் குற்றங்கள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கண்டுபிடித்தல்

  • பல்கலைக் கழகங்களில் இயற்கை மொழிப் பகுப்பாய்வு, மின்னுருவாக்கம், மென்பொருளுருவாக்கம் போன்ற துறைகளில் ஆய்வுகளை ஊக்கப்படுத்த வேண்டும். அதன் வெளியீடுகளைத் திறமூலமாக வெளியிட்டு அனைவருக்கும் பயன்படச் செய்ய வேண்டும்.
  • கால் நூற்றாண்டாகப் பெரும்பாலும் ஏட்டளவில் மட்டுமே கணித்தமிழ் ஆய்வுகள் செய்யப்படுகின்றன. அதற்குச் செயல்வடிவத்தைக் கொடுக்க கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆர்வலர்கள் என்று யாவரும் பயன்படும் வகையில் கணித்தமிழுக்கான ஆய்வு மையம் அமைக்க வேண்டும். இதன் மூலம் பொருட்செலவில்லாமல் தமிழில் மென்பொருட்களை யாரும் வெளியிட முடியும்.
  • இளைய தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த மாவட்டம் தோறும் அனைத்து வசதிகளுடன் தகவல் தொழில்நுட்ப இன்குபேட்டர் மையங்களை அமைக்க வேண்டும்.
  • ஆண்டுதோறும் புத்தாக்க சவால்(Hackathon) போட்டிகளை, கல்லூரி, தன்னார்வலர், தனியார் என்று பல நிலைகளில் நடத்த வேண்டும்.
  • துளிர் நிறுவனங்கள்(startup) தொடங்கவும், தொடர்ந்து இயங்கவும் ஊக்கப்படுத்த வேண்டும்.

மேம்படுத்தல்

  • நூலகங்கள், அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனை, அரசு அலுவலகம் எனக் கணினிமயமாக்க வேண்டும். இது அவற்றின் திறனை மட்டும் மேம்படுத்தாமல் தமிழ்ப் பயன்பாட்டையும் உறுதி செய்யும்.
  • சிறந்த நூலுக்குப் பரிசளிப்பதைப் போலச் சிறந்த இணையத்தளத்திற்கும், சிறந்த மின்னூலுக்கும் பரிசளிக்க வேண்டும்.
  • கட்டற்ற வளங்களை ஊக்குவிக்க வேண்டும்.
  • விக்கிமீடியா திட்டங்கள், அரசு இணையத்தளங்கள், சர்வதேச அறிவுத் தளங்கள் என முக்கிய வளங்களைத் தரவுக் கட்டணமின்றி பயன்படுத்தத் தரவு அட்டைகளை அறிமுகப் படுத்தலாம்.
  • தினமும் அதிகரிக்கும் மின்கழிவுகளைக் கையாளவும் முறைப்படுத்தவும் சரியான திட்டங்களை அமல்படுத்த வேண்டும். இந்த விழிப்புணர்வைப் பள்ளியிலிருந்தே கொண்டுவந்தால் சுற்றுச்சூழலுக்கு அதிகப் பாதிப்பினைத் தவிர்க்கலாம்.
  • அரசின் அனைத்து இணையச் சேவைகளும் கைப்பேசி ஒத்திசைவாகவும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒத்திசைவாக https://www.w3.org/TR/WCAG20/ இந்த வழிகாட்டலைப் பின்பற்றி இருக்க வேண்டும்.
  • இருளா, குறும்பா, படுக போன்ற அருகிவரும் தமிழ்நாட்டு மொழிகளுக்குப் புத்துயிர் அளிக்க அவற்றைக் கணினிமயப்படுத்த வேண்டும்.

இணையத்தில் வளராத மொழிகள் அனைத்தும் அடுத்த தலைமுறையைத் தாண்டாது என்பது இன்றைய விதி. பல நாட்டுத் தமிழர்கள்  இணையத்தமிழுக்கு வளம் சேர்த்து வந்தாலும் தனி மாந்தர்களால் செய்ய இயலாதவற்றை அரசின் முன்னெடுப்புகள் தான் செய்ய இயலும். இவை தேர்தல் அறிக்கையாக எதிர்வரும் தேர்தலில் பேசப்பட்டு, மேம்படுத்தி உரியவை செயல்பாட்டிலும் வரவேண்டும்.

(கட்டுரையாளர் நீச்சல்காரன், மென்பொருள் வல்லுநர், தமிழ் கணினி வளர்ச்சி ஆர்வலர்)

top videos

    First published:

    Tags: Tamil Computing, TN Assembly Election 2021