”எழுத்தறிவித்தவன் இறைவன்... பகவானே எழுத்தறிவித்தால்?”: ஆசிரியர் தின சிறப்பு பேட்டி

ஆசிரியர் பகவான்

 • News18
 • Last Updated :
 • Share this:
  எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். ஆனால் அந்த இறைவனே, அதாவது பகவானே எழுத்தறிவித்தால்…

  ஆசிரியர் பகவானுக்கு அறிமுகம் தேவையில்லை. திருவள்ளூர் மாவட்டம், வெளியகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவந்த பகவானை இடமாறுதல் செய்வதாக அறிவிப்பு வெளியானவுடன் மாணவர்கள் கதறி அழுதனர். பகவானை பணியிடமாற்றம் செய்யக்கூடாது என்று அவர்கள் போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றனர்.

  ஆசிரியர் தினத்தையொட்டி, நியூஸ் 18 இணையதளப் பிரிவுக்கு பகவான் சிறப்பு பேட்டி அளித்தார். பேட்டியின் தொகுப்பு இதோ.

  மாணவர்களை தாக்கும் ஆசிரியர்கள் என்ற காலம்போய், ஆசிரியர்களை தாக்கும் மாணவர்கள் என்ற காலம் வந்துள்ளதே? அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  நீங்கள் சொல்வது உண்மைதான். தற்போது மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் சற்று குரல் உயர்த்தினாலும், சில பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதற்கு பயந்தே, ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதில்லை.

  ஆசிரியர்களின் கரங்கள் தற்போது கட்டப்பட்டுள்ளன. அவர்களின் அதிகாரம் குறைந்துள்ளது அல்லது குறைக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஆசிரியர்களைப் பார்த்து மாணவர்கள் பயப்படத் தேவையில்லை.

  அன்பு, அரவணைப்பு சார்ந்த கற்பித்தலை ஆசிரியர்கள் மேற்கொள்ளும்போது அவர்களுக்கு பிரம்பு தேவைப்படாது. அறிவு சார்ந்த கற்றல், கற்பித்தலை இதயம் சார்ந்த செயல்பாடாக கொண்டு சென்றால், நீங்கள் கேட்ட கேள்விக்கு இடமே இருக்காது.

  உங்களைப் போன்ற பல பகவான்கள் உருவாவதற்கு சமூகம் என்ன செய்ய வேண்டும்?

  உண்மையில், இங்கு ஒரு பகவான் மட்டும் இல்லை. என்னைப் போன்ற பல பகவான்கள் நாட்டில் உள்ளனர். அவர்கள் மறைந்து கொண்டும், வெளியில் தெரியாமலும் உள்ளனர், அவ்வளவுதான். மேலும், என்னை உருவாக்கிய ஆசிரியர்கள் அனைவருமே பகவான்கள்தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ஆசிரியர்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

  வகுப்பு தொடங்கியவுடன் ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தை திறந்து இயந்திரம்போல் பாடம் நடத்தக்கூடாது. மாணவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் திறன் ஆசிரியர்களிடம் தற்போது குறைவாக இருப்பதாக கருதுகிறேன்.

  வருகைப் பதிவேட்டின்போது, மாணவர்கள் ’பிரசன்ட் சார்’ என சொல்லும்போதே அவர்களின் மனநிலையை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் வகுப்பு முடிந்து வெளியே செல்லும்போது, பிரச்னை இருப்பதாக கருதும் சில மாணவர்களை நான் தனியே அழைத்து அவர்களின் குடும்பப் பின்னணி குறித்தும், பிரச்னைகள் குறித்தும் விசாரிப்பேன். என்னால் முடிந்த தீர்வுகளையும் அவர்களுக்கு நான் அளிப்பேன். நம் மீது ஆசிரியர் இவ்வளவு அக்கறை வைத்துள்ளாரே, அவர் சொல்படி நாம் ஏன் நடக்கக்கூடாது? என அந்த மாணவர்கள் நினைத்து அதன்படி நடக்கின்றனர். மாணவர்கள் – ஆசிரியர் இடையே நல்லுறவு நிலவ வேண்டியது அவசியம்.

  பணியிட மாறுதலுக்கான உத்தரவு வந்தபோது, ஆசிரியர் பகவான் வெளியேறாதவாறு கதறி அழுத மாணவர்கள்.


  உங்களது பள்ளிப் பருவத்தில் நீங்கள் எப்படி? படிப்பில் படுசுட்டியா? ஆசிரியர்களிடம் அடி வாங்கிய அனுபவம் ஏதேனும் உண்டா?

  பொதுவாக நான் படிப்பில் சராசரி மாணவன்தான். பள்ளிப் பருவத்தில், சில ஆசிரியர்களைப் பார்த்து பயந்திருக்கிறேன். மேலும், சில ஆசிரியர்களிடம் அடியும் வாங்கியிருக்கிறேன்.

  8-ம் வகுப்பு வரை ஓரளவுக்கு நன்றாக படித்தேன். 9, 10-ம் வகுப்பு சமயத்தில் பல நண்பர்கள் கிடைத்தனர். இதனால் வெளியில் சுற்றிவிட்டு பள்ளிக்கு தாமதமாக செல்வேன். இதனால், தண்டனை பெற்ற அனுபவம் உண்டு. பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும்போது படிப்பில் கவனம் செலுத்தினேன்.

  உங்களது பணியில் நீங்கள் திருப்தியாக உள்ளீர்களா?

  நிச்சயமாக. என்னைப் பொறுத்தவரை ஆசிரியர் பணி என்பது ஆத்மார்த்தமான பணி. பிற துறைகளில் இயந்திரம் சார்ந்து பணி செய்வர். ஆனால், ஆசிரியர் பணி என்பது மனம் சார்ந்தது. நான் எனது பணியை முழு ஈடுபாட்டுடன் செய்து வருகிறேன்.

  மாணவர்களுக்கு ஏதேனும் கூற விருப்புகிறீர்களா?

  தற்போது தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அவற்றில் மொபைல் ஃபோன் மிகவும் முக்கியமானது. மாணவர்கள் மொபைல் ஃபோனுக்கு அடிமையாகிவிடக் கூடாது. தவறான விஷயங்களுக்காக அல்லாமல், நல்ல விஷயங்களுக்காக மட்டுமே மொபைல் ஃபோனை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.

  - டி.எஸ்.கோபிநாத், சீனியர் சப் எடிட்டர்.
  Published by:DS Gopinath
  First published: