ராஜபக்சே, ரணில், சிறிசேனா மூவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: கொளத்தூர் மணி சிறப்புப் பேட்டி!

கொளத்தூர் மணி

Sri Lanka political crisis: தமிழர்களுக்கு எதிராக ராஜபக்சே மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளை ரணிலும், சிறிசேனாவும் அமைதியாகச் செய்கிறவர்கள் என்று கொளத்தூர் மணி கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ராஜபக்சே, ரணில் விக்ரம சிங்கே, சிறிசேனா மூவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ராஜபக்சே அதிரடியாக செய்ததை ரணிலும் சிறிசேனாவும் அமைதியாக செய்கிறவர்கள் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கூறினார்.

இலங்கையில் தற்போதைய நிலவரங்கள் குறித்து நியூஸ்18 தமிழ் இணையதளத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அளித்த சிறப்புப் பேட்டியில், “ராஜபக்சே மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளதை நாம் எப்படி பார்க்க வேண்டுமென்றால், அவர் சாதாரணமாக இந்தப் பதவிக்கு வந்திருக்கமாட்டார். அவருக்குப் பெரிய பின்புலம் இருப்பதை உற்று கவனிக்க வேண்டும். ராஜபக்சே வெளிநாட்டுக் கல்வி இல்லாமல், உள்நாட்டிலேயே சட்டம் படித்து அரசியலுக்கு வந்தவர்.

அமெரிக்காவும், மேலை நாட்டுக்காரர்களும், சொந்த நாட்டில் படித்து வளர்ந்தவர்கள், தங்களுக்கு இணக்கமாக, சாதகமாகச் செயல்படமாட்டார் எனக்கருதி வெளிநாட்டில் படித்த தலைவர்களை அதிகாரத்துக்கு கொண்டு வர விரும்பியது. நாட்டுப்பற்று இருப்பவர்கள் அயல்நாட்டுக்கு தலையாட்ட மாட்டார்கள் என்பதால், உள்நாட்டில் படித்து வளர்ந்த ராஜபக்சேவை நீக்க, அமெரிக்கா முயற்சி எடுத்தது.இலங்கையின் முன்னாள் அதிபர்களான ஜெயவர்தனே, சந்திரிகா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அனைவரும் வெளிநாட்டில் அரசியலோ, சட்டமோ படித்தவர்கள். பிரமேதாசா, ராஜபக்சே இருவர் மட்டும்தான் சொந்த நாட்டில் படித்து, பதவிக்கு வந்தவர்கள். இதனால், ராஜபக்சேவின் கட்சியை உடைத்து சிறிசேனாவை அதிபராக்கியது அமெரிக்கா. ஆனாலும், சிறிசேனா ஆட்சிக்கு வந்த பிறகும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மென்மையான குரல் இருக்கிறதே தவிர செயல்களில் இவரும் ராஜபக்சேவும் ஒன்றுதான்.

போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை, போரின் போது காணாமல் போனவர்கள் பற்றிய விஷயங்கள் தற்போது பேசப்படுகின்றன. உதாரணமாக தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் 500 ஏக்கர் மட்டும் திரும்பி கொடுத்துவிட்டு, 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இன்னும் சிங்களர்களிடமே இருக்கிறது. எனவே, அங்கு தமிழர்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

சிறிசேனா அரசு சீனாவை அளவுக்கு மீறி இலங்கையில் கால்பதிக்க அனுமதி அளித்திருக்கிறது. இது இந்தியாவுக்கு எரிச்சலாக இருக்கிறது. அங்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் இந்தியாவின் பங்கும் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது இந்தியாவுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும்.

பிரதமராக பொறுப்புகளை ராஜபக்சேவிடம் ஒப்படைக்கும் சிறிசேனா


ராஜபக்சே அதிபராக இருந்தபோது ஐநா மனித உரிமை ஆணையத்தின் தீர்மானத்தை இலங்கை அரசு கொஞ்சம் கூட மதித்தது இல்லை. ஐநா அமைத்த குழுவையும், இலங்கைக்குள் வர அனுமதிக்கவில்லை. ஸ்வீடன், பிரான்ஸ், பிரிட்டன் அமைச்சர்கள் கூட இலங்கைக்குள் வருவதற்கு விசா கொடுக்கப்படவில்லை. அவ்வளவு கடும்போக்கோடு ஆட்சி நடத்தினார் ராஜபக்சே.

சிறிசேனா ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இந்த விவாகாரங்களில் இந்தியாவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. சீனாவுக்கு அளவுக்கு மீறி இடம் கொடுப்பது மட்டுமே இந்தியாவின் தலைவலியாக இருக்கிறது. சமீபத்தில் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்து சென்ற நிலையில், அவர் பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

மகிந்த ராஜபக்சே


ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத ரணில் விக்கிரமசிங்கே, அரசியல் சாசனப்படி, தானே பிரதமர் என்று கூறியுள்ளார். அரசியல் சாசனப்படி இலங்கை நடந்துகொள்ள வேண்டும் என அமெரிக்காவும் ரணிலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளது. நேரடியாக ரணிலை ஆதரிக்கவில்லை என்றாலும் அமெரிக்க அரசின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயம் இதுதான்.

மலையகத்தமிழர் பகுதி எம்.பி.க்கள் மற்றும் இஸ்லாமிய எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எனினும், 16 எம்.பி.க்கள் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கிறதோ அவர்தான் வெற்றி பெற முடியும். இதுதான் இப்போதைய நிலை. இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு சென்றதாகத்தான் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கொளத்தூர் மணி


அமெரிக்காவும் ரணில் விக்கிரமசிங்கேவைத்தான் ஆதரிக்கிறது. தமிழர்களுக்குப் போதிய நன்மைகள் செய்யவில்லை என்பதுதான் ரணில் அரசின் மீதான விமர்சனம். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழர்கள் பகுதியில் உள்ள ராணுவம் வெளியேற வேண்டும், நிலங்களைத் திருப்பித்தர வேண்டும், சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கேட்கலாம்.

இலங்கையில் சீனா ஆழமாக கால்பதித்து வருவது இந்தியாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ராஜபக்சே மீண்டும் பதவிக்கு வந்ததில் நிச்சயமாக இந்தியாவின் தலையீடு இருந்திருக்கும். எங்களைப் பொறுத்தவரை இருவரும் ஒன்றுதான். ரணிலும், சிறிசேனாவும் தமிழர்களுக்கு எதிராக என்ன செய்ய வேண்டுமோ அதனை அமைதியாகச் செய்கிறவர்கள்.

மைத்ரிபால சிறிசேனா - ரணில் விக்கிரமசிங்கே


போர்க்குற்ற விசாரணை தொடர்பான சர்வதேச குழுக்களை இதன் பின்னரும் இலங்கையில் கால்வைக்க அனுமதிக்க மாட்டார்கள். காமன்வெல்த் மாநாட்டுக்கு வந்த பிரிட்டன் பிரதமரையே அவர்கள் அனுமதிக்க மறுத்தவர்கள்.

போர்க்குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே தற்போது முக்கியப் பதவிகளில் இருக்கிறார்கள். இன அழிப்புக்கு தலைமை தாங்கிய ராஜபக்சே, வெளிநாட்டுக்குச் சென்றபோது, ராணுவத்தை கையில் வைத்திருந்த சிறிசேனா, தளபதியாக இருந்து எல்லா அத்துமீறல்களையும் செய்த சரத் பொன்சேகா என அனைவருமே பதவியில் தற்போது இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள எல்லா முயற்சிகளையும் எடுப்பார்கள். அது தமிழர்களுக்கு எதிராகவும் திரும்பலாம். எனவே, தமிழ்தேசிய கூட்டணி மேலே சொன்ன வாக்குறுதிகளை வாங்கிக்கொண்டு ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்கலாம்” என்று கொளத்தூர் மணி கூறினார்.
Published by:Sankar
First published: