”போராட்டம் சம்பள உயர்வுக்கானது மட்டுமல்ல” மக்களுக்கு ஒரு மருத்துவரின் விளக்கம்

சென்னையில் மருத்துவர்கள் போராட்டம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  டாக்டர்களின் போராட்டம் அவர்களின் சம்பள உயர்வுக்கானது மட்டுமல்ல (டாக்டர்களின் ஊதியம் மிக சொற்பமாக இருந்தாலும் கூட அது மட்டுமே அவர்களின் பிரதானமான கோரிக்கை அல்ல).

  தமிழ்நாட்டின் வலிமையான மருத்துவ கட்டமைப்பிற்கு ஆபத்தானதாக இருக்கும் அரசின் சமீபத்திய இரண்டு கொள்கை முடிவுகளை திரும்பப் பெற வலியுறுத்துவதும் இந்த வேலை நிறுத்தத்தின் பிரதானமான கோரிக்கை.

  டாக்டர்களின் வேலைநிறுத்தத்தில் உள்ள இரண்டு முக்கியமான கோரிக்கைகளை பார்ப்போம்:

  ஒன்று, அரசு பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு நடைமுறையில் இருந்து வந்த முதுநிலை படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு சமீபத்தில் நீக்கப்பட்டது. இதை திரும்பப் பெற்றுக்கொண்டு முதுநிலை படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு அரசு மருத்துவர்களுக்கு உறுதி செய்ய வேண்டும் என்பது ஒரு முக்கியமான கோரிக்கை. இந்தக் கோரிக்கை டாக்டர்களுக்கான கோரிக்கை மட்டுமல்ல மக்களுக்கான கோரிக்கை. அது ஏன் என பார்ப்போம்..

  அடிப்படை மருத்துவ கட்டமைப்பில் தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது, ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் தமிழ்நாட்டில் இருக்கிறது. கிராமப்புற, பொருளாதார நலிவடைந்த மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிக முக்கியமானது.

  மருத்துவமனையில் நிகழும் பாதுகாப்பான பிரசவங்களில் எண்ணிக்கை வேறு எந்த மாநிலத்தை விட இந்த அதிகம், தடுப்பூசிகளை அத்தனை மக்களுக்கும் கொண்டு சேர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம், அதேபோல தொற்றுநோய்களை தடுப்பதில், குழந்தைகளுக்கான சத்துணவை மேம்படுத்துவதில் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிக மிக அவசியம்.

  தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பிற்கு இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான் வலிமையான அடித்தளத்தை கொடுக்கின்றன. ஏன் தமிழ்நாட்டில் மட்டும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இவ்வளவு சிறப்பாக செயல்படுகிறது என்றால், இங்கு எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான மருத்துவர்கள் இருக்கிறார்கள், சில மேம்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் துறைசார் வல்லுநர்கள் கூட இருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் கொடுக்கப்பட்ட 50 சதவீத இட ஒதுக்கீடு.

  எம்.பி.பி.எஸ் முடிக்கும் ஒரு மாணவன் இந்த இட ஒதுக்கீட்டுக்காக அரசுப்பணியில் சேருகிறான் இரண்டு வருட அரசு பணிக்கு பிறகு அவன் முதுநிலை படிப்பிற்கு சேருகிறான். ஆனால், இந்த இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டால், அரசு பணியில் சேரும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும், ஏனென்றால் எம்.பி.பி.எஸ் முடிக்கும் ஒரு மாணவன் முதுநிலை படிப்பிற்கு தயார் செய்வதையே விரும்புவான் அல்லது வெளிநாடுகளுக்கு செல்ல முற்படுவான்.

  இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் விளைவாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் முழுமையாக செயல்படாமல் முடக்கப்பட்டு விடும். அவை முடங்கிப் போனால் நமது சுகாதார அமைப்பின் அடித்தளமே பலவீனமாகிவிடும். இதனால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கான சுகாதார அமைப்பு இல்லாமல் போய் விடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

  மருத்துவத்துறையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணமே நமது வலிமையான இந்த ஆரம்ப சுகாதார நிலையங்கள் தான், அவை முடங்கி போகும்போது தமிழ் நாட்டு மருத்துவ கட்டமைப்பே முடங்கிப் போகும் அபாயம் இருக்கிறது.

  இதைக் கருத்தில் கொண்டுதான், அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி மருத்துவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

  இரண்டாவது முக்கியமான கோரிக்கை:

  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை இருக்கவேண்டும் என்பது.

  சமீபத்தில் தமிழ்நாடு அரசு மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் (MCI) குறைந்தபட்ச நெறிமுறைகளின்படி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருந்தால் போதும் என்று முடிவுசெய்தது. இதன் விளைவாக ஏராளமான பணியிடங்கள் குறைக்கப்பட்டன. பத்து டாக்டர்கள் இருந்த இடத்தில் இரண்டு அல்லது மூன்று டாக்டர்களே இருக்கும் நிலைக்கு நமது மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மாறியுள்ளன.

  இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் ஏராளமான நோயாளிகளை கையாளுவதற்கு தேவையான மருத்துவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையும், அறுவைசிகிச்சைக்கு நீண்ட நாட்கள் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நம்பியிருக்கும் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் போன்ற ஒரு உயர்மட்ட அரசாங்க referrel சென்டரில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை வந்தால் அது ஒட்டுமொத்த பொதுமருத்துவ கட்டமைப்பையும் சீர்குலைத்துவிடும். பொதுமருத்துவ கட்டமைப்பின் சீர்குலைவு என்பது மக்களின் அன்றாட வாழ்வில் நேரடி தொடர்புடையது. அதனால் அதற்கு எதிராகவும் மருத்துவர்கள் இந்த வேலைநிறுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள்.

  அதனால் அரசு மருத்துவர்களின் இந்த வேலை நிறுத்தம் என்பது, சீர்குலைந்து கொண்டிருக்கும் பொது மருத்துவ கட்டமைப்பை வலிமை படுத்துவதற்கானது. இன்னும் குறிப்பாகச் சொன்னால் இந்தப் போராட்டம் என்பது மக்களுக்கான போராட்டம்.

  மருத்துவர்கள் சுயநலமாக மக்களிடமிருந்து அந்நியப்பட்டு இந்த போராட்டத்தை நடத்தவில்லை, வலிமையான தமிழ்நாட்டு மருத்துவக் கட்டமைப்பை பாதுகாக்க வேண்டியும், மக்களுக்கான அடிப்படை மருத்துவ உரிமைகளை உறுதி செய்ய வேண்டியுமே அவர்கள் போராடுகிறார்கள். எனவே மக்கள் மருத்துவர்களின் பக்கம் நிற்பது இன்றைய காலத்தின் அவசியமான ஒன்று.

  - டாக்டர் சிவபாலன்

  Also See..

  Published by:Sankar
  First published: