தொடர்ந்து தேயும் தேமுதிக... தேர்தல் தோல்வியை தொடர்ந்து காத்திருக்கும் ஒரு சறுக்கல்...!

பிரேமலதா மற்றும் விஜயகாந்த்

ஒரு காலத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கருதப்பட்ட தேமுதிக, இப்படி சிறு அமைப்பு போல சுருங்கிவிட்டதே என்று தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கடந்த 2009 தேர்தலில் 10.3 சதவிகித வாக்குகளை பெற்றிருந்த தேமுதிக 10 ஆண்டுகளில் 2.39 சதவிகித வாக்குகளை பெற்று சுருங்கியுள்ளது.

திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட தேமுதிக, தற்போது தொடர்ந்து தேய்ந்து சிறு இயக்கம் போல மாறிவிட்டது. பிரேமலதாவின் செயல்பாடுகளே இதற்கு காரணம் என்று தொண்டர்கள் மத்தியில் குரல்கள் கேட்க தொடங்கிவிட்டது.

2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக, 2006 சட்டமன்ற தேர்தலை தனித்தே சந்தித்தது. பெரிய வெற்றி இல்லை என்றாலும், அக்கட்சி மாநிலம் முழுவதும் சுமார் 27 லட்சம் வாக்குகளை பெற்றது. விருதாச்சலத்தில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார்.

தொடங்கப்பட்ட ஓராண்டிலேயே தேமுதிக 8.38 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது. இது அரசியல் களத்தில் மிகவும் கவனிக்கப்பட்டது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு கட்சி வந்துவிட்டதாக பலரும் நம்பினர்.

2019 தேர்தல் பிரசாரத்தில் விஜயகாந்த்


தொடர்ந்து விஜயகாந்த் கட்சியை பலப்படுத்தியதன் விளைவாக 2009 மக்களவை தேர்தலில் 10.3 சதவிகித வாக்குகளை அள்ளியது. மிகக்குறுகிய காலத்தில் அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே இருந்தது ஆளும் ஆட்சியாளர்களை உற்று நோக்க வைத்தது.

தொடங்கிய ஏற்றம்:

பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் 2009 தேர்தலில் பல தொகுதிகளில் வாக்குகளை பிரித்து பலரின் வெற்றியை மடைமாற்றிவிட்டது தேமுதிக. 2011 சட்டமன்ற தேர்தலும் வந்தது, ‘தெய்வத்தோடும் மக்களோடும் மட்டுமே கூட்டணி’ என்று கூறிவந்த விஜயகாந்த், ஜெயலலிதாவுடன் கைகோர்த்தார்.

திமுகவை தோற்கடிக்கவே அவர் ஜெயலலிதாவோடு கைகோர்த்தார். அதற்கான பலனும் விஜயகாந்துக்கு கிடைத்தது. 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வென்று, விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவர் ஆனார். கூட்டணி என்பதால் குறைவான தொகுதியில் போட்டியிட்டதால் அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் 7.9 ஆக சற்று குறைந்தது.

எனினும், வரும் காலங்களில் தேமுதிக தமிழகத்தின் தவிர்க்க முடியாத கட்சியாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், சட்டமன்றத்தில் ஜெயலலிதா உடன் மோதல், அதன் பின்னர் ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களாக ஜெயலலிதா பக்கம் சென்றது என தேமுதிகவுக்கு சறுக்கல் தொடங்கியது. அன்று விழுந்த தேமுதிக தற்போது வரை எழுந்திருக்கவேவில்லை.

மனைவி பிரேமலதா உடன் விஜயகாந்த்


போதாகுறைக்கு விஜயகாந்தின் உடல்நலம் பாதிக்கப்படவே அவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து விலகத்தொடங்கினார். கட்சியை வழிநடத்த அவரின் மனைவி பிரேமலதா வருகை தந்தார். பிரேமலதாவுக்கு அடுத்தபடியாக நம்பர் 2 இடத்தில் அவரது சகோதரர் சுதீஷ் இருந்தார்.

குறையத்தொடங்கிய வாக்குவங்கி:

2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று அதிக இடங்களில் தேமுதிக போட்டியிட்டது. ஆனால், போட்டியிட்ட 14 இடங்களிலும் அக்கட்சி படுதோல்வி அடைந்தது. மேலும், வாக்கு வங்கியும் 5.1 ஆக குறைந்தது.

அப்போதே, விஜயகாந்த் பழைய நிலைக்கு வரவில்லை என்றால் தேமுதிக இனி அவ்வளவுதான் என்ற பேச்சு எழுந்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த பேச்சும் உண்மையாகிப்போனது.

2016 சட்டமன்ற தேர்தலில் விசிக, மதிமுக, இடதுசாரிகள் என மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் மூன்றாவது அணி ஒன்று களமிறங்கியது. தேர்தல் நேரத்தில் விஜயகாந்தும் இந்த அணியில் இணைந்து கொண்டார். 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. விழுப்புரத்தில் போட்டியிட்ட விஜயகாந்தும் தோல்வி அடைந்தார்.

பிரேமலதாவின் கையில் கட்சி:

5.1 சதவிகிதமாக இருந்த தேமுதிகவின் வாக்குவங்கி 2.39 சதவிகிதமானது. இதற்குப் பின்னர், உடல் நலக்குறைவால் சிகிச்சைக்காக விஜயகாந்த் அடிக்கடி வெளிநாடு செல்லவே, பிரேமலதாவின் கட்டுப்பாட்டுக்குள் தேமுதிக முழுமையாக வந்தது.

பிரேமலதா, சுதீஷ் எடுக்கும் முடிவுகளே விஜயகாந்த் வாயிலாக வெளியானது. சில மாதங்களுக்கு முன்னர் கட்சியின் பொருளாளர் ஆனார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒரே நேரத்தில் திமுக, அதிமுக என்று இருபக்கமும் தேமுதிக கூட்டணி பேசியது.

பிரேமலதா விஜயகாந்த், Premalatha Vijayakanth,
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)


7 மக்களவை தொகுதி + 1 மாநிலங்களவை சீட் என்ற நிபந்தனையை அதிமுக ஏற்றுக்கொள்ள மறுக்க தேமுதிக கூட்டணி அமைப்பதில் இழுபறி நீடித்தது. ஒரு கட்டத்தில் திமுக, தேமுதிக உடனான கூட்டணி முயற்சியை நிறுத்திக்கொண்டது.

ஒருவழியாக அதிமுக 4 தொகுதிகளை ஒதுக்கியது. தேர்தல் முடிவுகளில் அதிமுகவே 1 தொகுதி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவ, தேமுதிகவின் நிலை பரிதாபமானது.

அக்கட்சியின் நான்கு வேட்பாளர்களில் வடசென்னை வேட்பாளர் மோகன்ராஜ், திருச்சி வேட்பாளர் இளங்கோவன் ஆகியோர் படுதோல்வியை சந்தித்தனர். இவர்கள் இருவரும் முறையே 13.55 மற்றும் 15.46 சதவிகித வாக்குகளையே பெற்றிருந்தனர்.

இதையும் படிங்க... செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா ஆவேசம் ஏன்?

அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளில் இவர்கள் இருவரும் மட்டுமே குறைவான வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளனர். பலமான கூட்டணி இருந்தும் சராசரி வாக்குகளை கூட தேமுதிக பெறமுடியவில்லை.

2016-ல் 2.39 சதவிகிதமாக இருந்த தேமுதிகவின் வாக்குவங்கி தற்போது 2.19 ஆக குறைந்துள்ளது. ஓப்பீட்டின் படி கடந்த 2009 தேர்தலில் 10.3 சதவிகித வாக்குகளை பெற்றிருந்த தேமுதிக 10 ஆண்டுகளில் 2.39 சதவிகித வாக்குகளை பெற்று சுருங்கியுள்ளது.

பறிபோகும் மாநில கட்சி அந்தஸ்து:

தேர்தலில் கிடைத்த படுதோல்வியை விட மற்றும் ஒரு அதிர்ச்சி தேமுதிகவுக்கு காத்திருக்கிறது. அக்கட்சிக்கான மாநில கட்சி என்ற அங்கீகாரமும் பறிபோகும் நிலை உள்ளது. இதனால், அக்கட்சியால் முரசு சின்னத்தை பயன்படுத்த முடியாமல் போகலாம். தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் மட்டுமே அக்கட்சி போட்டியிட முடியும்.

எல்.கே.சுதீஷ்


மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ள ஒரு கட்சி அந்த மாநிலத்தில் பதிவாகியிருக்கும் ஒட்டுமொத்த வாக்குகளில் குறைந்த பட்சம் 6 சதவிகித வாக்குகளை பெற வேண்டும். மேலும் குறைந்தது ஒரு மக்களவை தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது 6 சதவிகித வாக்குகளையும் 2 சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர் இடங்களில் 3 சதவிகித உறுப்பினர்களை கொண்டிருக்க வேண்டும்.

அல்லது தமிழக அளவில் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியாக இருக்க வேண்டும். ஆனால், இது எதுவும் தற்போது மாநில கட்சியான தேமுதிகவிடம் இல்லை. தொடர்ந்து 3 சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளை பெற்றுள்ள தேமுதிக, இனி மாநில கட்சி அந்தஸ்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

விஜயகாந்த் ஆக்டிவ் ஆக இருந்த போது கணிசமாக உயர்ந்த வாக்குசதவிகிதம், பிரேமலதா தலைமையில் தொடர்ந்து குறைந்துகொண்டே போகிறது. கட்சியை பலப்படுத்தாமல் தேர்தலில் எப்படி வெற்றி கிடைக்கும்? என்று கேட்கிறனர் தொண்டர்கள்.

ஒரு காலத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கருதப்பட்ட தேமுதிக, இப்படி சிறு அமைப்பு போல சுருங்கிவிட்டதே என்று தொண்டர்கள் ஆதங்கப்படுதிலும் நியாயம் இருக்கிறது.

அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்திவிட்டு, தங்களுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் போட்டியிட்டால் குறைந்த பட்சம் வாக்குசதவிகிதமாவது அதிகரிக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

Published by:Sankar
First published: