• HOME
  • »
  • NEWS
  • »
  • special-articles
  • »
  • டாக்டர் அம்பேத்கர் யாருக்கு எதிரானவர்?

டாக்டர் அம்பேத்கர் யாருக்கு எதிரானவர்?

அம்பேத்கர்

அம்பேத்கர்

காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் அம்பேத்கருடன் மாறுபட்டவர்கள். எனினும் அவரின் எதிரிகள் அல்லர். இந்து மதமே வேண்டாம் என்று அதை உதறித் தள்ளிய அம்பேத்கரை சொந்தமாக்கும் இந்து மதவாதிகள் சொல்லும் காரணம், புத்தமதமும் இந்தியாவில் பிறந்தது என்பதுதான்.

  • Last Updated :
  • Share this:
டிசம்பர் 6... இரண்டு முக்கிய காரணங்களுக்காக நினைவுகூரப்படுகிறது. ஒன்று இந்திய சமூகத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதற்காக. இரண்டாவது இந்திய சமூகத்தில் மக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம் ஏற்படாதா என்று ஏங்கிய டாக்டர்.அம்பேத்கரின் நினைவு தினம். தன்னுள் பல கனவுகளைச் சுமந்த அம்பேத்கர் நோய் வாய்ப்பட்டு இருந்தார்.

1956 டிசம்பர் 6-ம் தேதி காலை அந்த மாபெரும் மனிதர் கண் திறக்கவில்லை. பாபர் மசூதியை இடிப்பதற்கு டிசம்பர் 6-ம் தேதியை இந்துத்துவ சக்திகள் தேர்ந்தெடுத்தது தற்செயலானதா? மசூதி இடிப்பு தினம் என்பதால் போர்ச்சூழல் போன்ற பாதுகாப்பு முன்னெடுப்புகள் அம்பேத்கரின் நினைவுகூரலை பின்னுக்குத் தள்ளிவிட்டு விடுகின்றதா?

Ambedkar

கரசேவர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்குப் பின்பும் இடித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் பாயவில்லை என்பது நமது நீதிபரிபாலன முறையில் உள்ள குறைபாட்டைக் காட்டுகிறது. பத்து நாட்களுக்கு முன்பு பல்லாயிரக்கணக்கில் அயோத்தியில் கூடிய விஸ்வ ஹிந்து பரிஷத்தினர் மத்திய அரசாங்கத்திற்கே எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளனர். அவசரச் சட்டம் கொண்டு வந்து ராமர் கோயிலை மசூதி இடித்த இடத்தில் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் 2019 கும்பமேளாவில் கோயில் கட்டும் தினத்தை அறிவிப்போம் என்கின்றனர். இந்து மத உணர்வுகளைத் தூண்டி நடத்தப்படும் அரசியல் இன்று இந்த எல்லைக்குச் சென்றுள்ள வேளையில், அம்பேத்கர் இந்துமதம் குறித்து செய்த மதிப்பீடுகள் மீள்பார்வை செய்யப்படவேண்டும்.

அம்பேத்கர் மறைந்து 62 ஆண்டுகள் ஆகிவிட்டன. பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி 2016-ல் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்திவிட்டது. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் சிறப்புரையும் நிகழ்த்திவிட்டார். அம்பேத்கரின் தந்தை பெயர் ராம்ஜி சக்பால். அந்தப் பெயரிலுள்ள ராம்ஜிக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்கிற அடிப்படையில் டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என அரசு தொடர்புகளில் குறிப்பிட்டாக வேண்டும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை ஒன்றுக்கு இந்துத்துவ சக்திகள் நீல நிறத்தை மறைக்க ஆரஞ்சு வண்ணம் பூசினர். இது சர்ச்சையை ஏற்படுத்தியதால் மீண்டும் நீல வண்ணம் பூசியுள்ளனர்.

Ambedkar

அரசியல் ரீதியாக அம்பேத்கருக்குச் சொந்தம் கொண்டாடுவதில் காங்கிரஸ் கட்சிக்கோ, கம்யூனிஸ்ட் கட்சிக்கோ எந்த உரிமையும் இல்லை. அவர்களை அம்பேத்கர் முற்றிலுமாக வெறுத்தார் என்று ஆர்.எஸ்.எஸ்-ன் இதழ் ஆர்கனைசர் அட்டைப்படச் செய்தியை வெளியிட்டது. தலித் அமைப்புகளோ அம்பேத்கர் இந்துத்துவ எதிர்ப்பாளர்தான் என்று பதிலடி தந்தனர். சமூகத்தின் கீழ்நிலையில் தலித்துகளை வைத்திருப்பது ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க மரபணுவிலேயே உள்ளது என்று ராகுல் காந்தியும் ட்விட்டரில் கருந்து வெளியிட்டுள்ளார்.

கம்யூனிஸ்டுகள், காங்கிரசார் அம்பேத்கருடன் உடன்படவில்லை என்பது உண்மைதான். 1951-ல் பொதுத் தேர்தலில் வடக்கு மும்பையில் காங்கிரஸ் வேட்பாளரால்தான் அம்பேத்கர் தோற்கடிக்கப்பட்டார். அம்பேத்கர் தோல்விக்கு இந்திய கம்யூனிஸ்ட் எடுத்த எதிர் நிலையும் காரணம்தான். சுதந்திரப் போராட்ட காலத்தில் சுயராஜ்யத்தை அம்பேத்கர் ஆதரித்தார் என்ற போதிலும், அந்நியர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதைவிட சமூக ஜனநாயகம்தான் முக்கியமானது என்றார் அம்பேத்கர். இதில்தான் அம்பேத்கருடன் அனைத்து அரசியல் சக்திகளும் உடன்படவில்லை.
1946-ல் அரசியல் நிர்ணய சபை பிரதிநிதியாக ஆவதற்கு போட்டியிட்டபோது கூட சொந்த மாநிலமான மகாராஷ்டிரத்தில் அவர் தோற்கடிக்கப்பட்டார். முதற்கட்டமாக பிரிக்கப்படாத வங்காளத்திலிருந்து முஸ்லீம் லீக் ஆதரவில்தான் அம்பேத்கர் வெற்றி பெற முடிந்தது என்பது அவரைச் சொந்தம் கொண்டாடத் துடிப்பவர்கள் மனதில்கொள்ள வேண்டிய கசப்பான செய்தி.ஒன்றுபட்ட இந்தியாவை உடைத்துவிட்டார்கள் பிரித்துவிட்டார்கள் என்று இப்போதும் இந்துத்துவ அமைப்புகள் பலர் மீது குற்றம்சாட்டுகின்றன. உண்மையில் இரண்டு நாடுகள் பிரிவினைக்கு காரணமாக இருந்ததே இந்து மகாசபையை நடத்தி வந்த சாவர்க்கர்தான் என்பது அம்பேத்கரின் மதிப்பீடு. இந்து ராஷ்டிரத்தில் முஸ்லீம்கள் இரண்டாம் தர நிலையில்தான் இருக்கவேண்டும் என்பதே இந்துத்துவவாதிகளின் வலியுறுத்தல்.

ஜின்னாவும் சாவர்க்கரும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பது போல் தோன்றினாலும் இருவரும் இரண்டு நாடுகள் திட்டத்தில், ஒரு முஸ்லீம் தேசம், மற்றொன்று இந்து தேசம் என்பதில் முழு உடன்பாட்டில் செயல்பட்டனர் என்று அம்பேத்கர் அக்காலத்திலேயே விமர்சித்தார். நாடு பிரிந்தாலும் ‘இந்தியாவில் இந்து ராஷ்டிரம் உருவாவதை எப்பாடுபட்டாவது தடுத்தாக வேண்டும்’ என்றும் அம்பேத்கர் கூறி வந்தார்.

இப்படிக் கூறி வந்த அம்பேத்கரை தங்களுக்கு உரியவராக மாற்ற ஆர்.எஸ்.எஸ் சில காலத்திற்கு முன்பிருந்தே முயற்சித்து வந்திருக்கிறது. பாலா சாகேப் தேவரஸ் காலத்தில் காலை நேர மூதாதையர் வணக்கத்தில் அம்பேத்கரும் சேர்க்கப்பட்டார். இந்து ராஷ்டிரம் என்று ஒன்று அமையுமானால் கால்வாசி பகுதியினராக உள்ள தலித்துகளை ஒதுக்கிவிட்டு அதை அமைக்க முடியாது என்பதே இதன் நோக்கம். அம்பேத்கரோ இந்து என்ற உணர்வு எவரிடமும் இல்லை. ஒவ்வொரு இந்துவிடமும் இருப்பது சாதி உணர்வுதான். சமபந்தி விருந்துகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்காது. மாறாக இந்து சமயத்தின் அடிப்படையாக உள்ள பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பிறப்பின் அடிப்படையிலான நால் வர்ணக் கோட்பாட்டை ஒழிப்பதுதான் சரியான வழி என்று வாதிட்டார்.

Ambedkar

இந்துக்கள் தங்கள் மதத்தை காப்பாற்ற விரும்பினால் அவர்களுக்கு உள்ள ஒரே வழி சாதியை ஒழிப்பதுதான் எனவும் குறிப்பிட்டார். இந்து மதம் ஒரு தரப்பு மக்களை இழிநிலையில் ஆழ்த்தியதால், இந்து மதம் குறித்து எத்தகைய மிகக் கடுமையான கருத்துகளை அம்பேத்கர் வெளியிட்டார் என்பதை நினைவுபடுத்திப் பார்த்தால் இந்துத்துவ சக்திகள் அம்பேத்கருக்கு உரிமை கொண்டாட நிச்சயம் முன்வர மாட்டார்கள்.

‘நான் இந்துவாகப் பிறந்தேன். அதைத் தடுக்கும் சக்தி இல்லை. ஆனால், நான் இந்துவாக சாக மாட்டேன்’ என 1935-லேயே அறிவித்தார் அம்பேத்கர். அதன்பின், 20 ஆண்டுகள் நகர்ந்தன. இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி என்று புகழப்படும் அளவுக்கு பங்களிப்பு செய்தாலும், தலித்துகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படாததைக் கவலையுடன் கவனித்தார் அம்பேத்கர். இறுதியில் 1956-ல் புத்த மதத்தில் முறைப்படி சேர்ந்தார்.

சாதி அடுக்குகளை அப்படியே வைத்துக்கொண்டு சீர்திருத்தங்கள் செய்தால் போதும் என்று மகாத்மா காந்தியடிகள் கூறியதை அம்பேத்கர் ஏற்கவில்லை. என்ன பதில் சொன்னார் தெரியுமா? வேறு ருசிகளை மாற்றிவிட முடியலாம். ஆனால், விஷத்தை அமுதமாக்க முடியாது என்றார் கடுமையான கோபத்துடன். தீண்டத்தகாதோர் எனப்படும் ஒருவர்கூட, இந்த தேசம் குறித்து பெருமை கொள்ளமாட்டர்கள் என்றார்.

Ambedkar

இந்து சமூகக் கட்டமைப்பே ஜனநாயகத்தை மறுக்கும் தன்மையுடையது. இந்து சமூகத்தில் பிறந்த அறிவைப் பெற்ற ஒரு பிரிவினர் அந்த அறிவு ஒளியை பரவவிடச் செய்யாமல் தனக்கு கீழே உள்ளவர்களை இருட்டில் இருக்கச் செய்கின்றனர். அறிவை மட்டுமின்றி அதிகாரத்தையும் வழங்கும் சொத்தை பகிர்ந்து தரத் தயாராக இல்லை. முன்னுதாரணமான ஓர் இந்து எப்படி என்றால், யாருடனும் தொடர்புகொள்ள மறுக்கும் பொந்துக்குள்ளேயே வாழும் எலிக்கு ஒப்பானவர். இந்துகள் தங்கள் நோய்த் தன்மையை உணர்ந்தால்தான் இந்தியர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் நலமும் கிடைக்கும்.

மாமிசம் உண்பது என்று வந்துவிட்ட பின்பு, மாட்டுக்கறி சாப்பிடுவதற்கு மட்டும் எதிர்ப்பு ஏன்? இந்த முரண்பாட்டுக்கு விளக்கம் தேவை என்றார் அம்பேத்கர். அம்பேத்கர், இந்து மதத்தில் சாதிப் பாகுபாட்டை நீக்குவது முடியாத காரியம் என்ற முடிவுக்கு வந்துதான் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு புத்த மதத்தில் ஐக்கியமாக நேரிட்டது. அவர், விரும்பியவாறு சாதிப் பாகுபாட்டை ஒழிக்கிறோம் என உதட்டளவில் பேசி இந்து ஒற்றுமையை கட்டுவதற்குப் பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ்.

Ambedkar periyar

யதார்த்தத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க ஆதிக்க சாதியினரின் அமைப்பு என்ற பிம்பமே நீடிக்கிறது. அம்பேத்கர் இல்லாவிட்டால் நான் தேநீர் விற்றுக்கொண்டே இருந்திருப்பேன் எனப் பிரதமர் பேசுவதாலோ. மகாராஷ்டிரா அரசு அம்பேத்கருக்கு 250 அடி உயரச் சிலை வைப்பதாலோ, தலித்தான ராம்நாத் கோவிந்தை குடியரசுத் தலைவராக ஒரு குறியீட்டு அடிப்படையில் அமர்த்துவதாலோ தலித்துகளின் வாழ்க்கை ‘இஞ்ச்’ கூட உயர்ந்துவிடவில்லை. குஜராத் மாநிலம் உனாவில் தலித் இளைஞர்கள் கட்டி வைக்கப்பட்டு பசுக் குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் போன்றவை நாடு முழுவதும் இன்னமும் நடக்கத்தான் செய்கின்றன. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்ற இடத்தில் கூட ரோஹித் வெமுலா என்ற மாணவர் தற்கொலை செய்வதற்கு இந்துத்துவ சக்திகள் கொடுத்த நெருக்கடியே காரணமாக இருந்துள்ளது.

அம்பேத்கர் மீது புதுநேசம் காட்டப்படுவதின் பொருத்தமற்ற போக்கை இந்துத்துவவாதிகளை அவர்களது செயல்பாட்டால் அம்பலப்படுத்தி வருகின்றனர். சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்டத்தின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்ய இந்துத்துவ சக்திகளே காரணமாக இருந்தனர். அகில இந்திய அளவில் அம்பேத்கரை புகழ்பவர்கள் தமிழ்நாட்டில் பெரியாரை இகழும் விதத்தைப் பார்த்தால் வேதனைதான் மிஞ்சும். பெரியார் சிலைகள் உடைக்கப்பட வேண்டும் என்று பேசுகின்றனர். பெரியாரும் அம்பேத்கரும் சாதி வேறுபாட்டுக்கான காரணமாக உள்ள இந்து மதக் கோட்பாடுகளை துணிந்து எதிர்த்தார்கள். பெரியாரியவாதிகள் அம்பேத்கரை கொண்டாடுவதற்கு ஓர் அர்த்தம் உண்டு. சாதியை ஒழிப்பது எப்படி என்ற அம்பேத்கரின் புத்தகத்தை முதன் முதலில் உடனடியாக தமிழில் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்தவர் பெரியார்.பெரியார் தவிர்த்து மதச்சார்பின்மை கோட்பாட்டை ஏற்கும் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் கூட சில விஷயங்களுக்காக அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடலாம். காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் அம்பேத்கருடன் மாறுபட்டவர்கள். எனினும் அவரின் எதிரிகள் அல்லர். இந்து மதமே வேண்டாம் என்று அதை உதறித் தள்ளிய அம்பேத்கரை சொந்தமாக்கும் இந்து மதவாதிகள் சொல்லும் காரணம், புத்தமதமும் இந்தியாவில் பிறந்தது என்பதுதான். புத்த மதத்தைக் கபளீகரம் செய்ததுபோல் அம்பேத்கரையும் கபளீகரம் செய்யும் முயற்சி வெற்றி பெறாது. அம்பேத்கரின் கருத்துகளை மேலும் மேலும் பரப்புவதன் மூலமே இந்துத்துவ சக்திகளின் மோசடியை முறியடிக்க முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ilavarasan M
First published: