Home /News /special-articles /

உலகை அச்சுறுத்தும் ஓமைக்ரான்

உலகை அச்சுறுத்தும் ஓமைக்ரான்

Omicron

Omicron

இரண்டாவது அலைக்குக் காரணமான டெல்டா வைரஸ்களை விட 6 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது இந்த உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் (B1.1.529)

உலகமே கொரோனாவைக் கொஞ்சம் மறந்து, இயல்பு  வாழ்கைக்கு தம்மை ஈடுபடுத்திக்கொள்ள முனைந்து கொண்டிருக்கிறது, இல்லை இல்லை.. விட்டது தொட்டது என இன்னும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது என எச்சரிக்கிறது இந்த ஓமைக்ரான் எனும் உருமாறிய புதிய வகை வைரஸ்.

முந்தைய உருமாறிய டெல்டா, பீட்டா வகை வைரஸ்களில் இருந்து மரபணு ரீதியாக சற்றே மாறுபட்டது இந்த ஓமைக்ரான் வைரஸ் என்கின்றனர் விஞ்ஞானிகள். எனினும் அதன் அச்சுறுத்தலின் வீரியத்தை அவர்களால் கணிக்க இன்னும் முடியவில்லை.
தென் ஆப்ரிக்காவில் உள்ள 9 மாகாணங்களில் மிகச் சிறியது கௌடெங், நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 1.5 சதவிகித நிலத்தை மட்டுமே இம்மாகாணம் கொண்டிருந்தாலும், தென் ஆப்ரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் கால்வாசியினர் இங்குதான் உள்ளனர்.

நம்மில் அறியப்பட்ட நாட்டின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பெர்க் இந்த மாகாணத்தில்தான் உள்ளது.
அதெல்லாம் சரி இப்போது எதற்கு தென் ஆப்ரிக்கா, கௌடங் பற்றியெல்லாம் பேச வேண்டும். காரணம் இருக்கிறது. உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் கௌடங் மாகாணத்தில்தான் முதலில் கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் திடீரென கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதைக் கண்ட அந்நாட்டு விஞ்ஞானிகள் சற்றே குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் ஓமைக்ரான் என்ற உருமாறிய வைரஸ் அதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது.
இந்த புதிய வகை வைரசை தென் ஆப்ரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருந்தாலும், அது எங்கிருந்து பரவியது என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை. ஓமைக்ரான் குறித்து உடனடியாக உலக சுகாதார நிறுவனத்தின்(WHO)கவனத்திற்கு கொண்டு சென்றது தென்ஆப்ரிக்கா.

அதைத் தொடர்ந்தே உலகின் பார்வை கௌடங் மாகாணம் மீது படரத் தொடங்கியது. சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஓமைக்கரான் தொற்றாளர்கள் எங்கெல்லாம் பயணித்திருக்கின்றனர் என்ற கேள்விக்கான விடை நீண்டுகொண்டே இருக்கிறது.

அச்சம் கொள்ள வேண்டிய ஒன்றா ஓமைக்ரான் ?

இரண்டாவது அலைக்குக் காரணமான டெல்டா வைரஸ்களை விட 6 மடங்கு வேகமாகப் பரவக்கூடியது இந்த உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் (B1.1.529) என்பதுதான் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் விலகாத கவலை. கோவிட்டை கட்டுக்குள் கொண்டுவர மேற்கொண்ட காக்டெய்ல் மருத்துவத்திற்கோ, ஒரே பண்புகளைக்கொண்ட ஆன்டிபாடிகளை (Monoclonal antibodies) கொஞ்சமும் மதிப்பதில்லையாம் இந்த ஓமைக்ரான் வைரஸ்,  உடலின் எதிர்ப்பு சக்தியை உடைத்தெறியும் அகோர ஆற்றலும், தடுப்பூசி போட்டிருப்போரை தாக்கும் தன்மையும் இந்த வைரஸ் மீதான அச்சத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ஓமைக்ரான் வைரஸ் அச்சத்தைத் தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி என நான்கு சர்வேதச விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி இருக்கிறது. குறிப்பாக தென் ஆப்ரிக்கா, சீனா, நியூசிலாந்து, பிரேசில், ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு விமான நிலையங்களில் அனுமதிக்கப்படுகின்றனர். நெகட்டிவ் சான்றிதழ் இருந்தாலும் கூட, தேவைப்படுவோருக்கு 3 நாட்கள் தனிமை, ஆர்டி பிசிஆர் சோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இவற்றைக் கண்காணிக்க தனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளவதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு 12வது மெகா தடுப்பூசி முகாமை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது, என்றாலும் இஸ்ரேலைப் போல் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் அச்சத்தில் இருந்து விடுபட பூஸ்டர் தடுப்பூசி போடச்சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
மொத்தத்தில் கொரோனாவின் கோரத்தாண்டம் முடிவுக்கு வந்தபாடில்லை.

கட்டுரையாளர் திருப்பதி (இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் கட்டுரையாளரையே சேரும்)
Published by:Arun
First published:

Tags: Corona, Covid-19

அடுத்த செய்தி