கஜா பாதித்த டெல்டா… நம்பிக்கையோடு மீண்டு(ம்) வரும் மக்கள்...!

கஜா பாதித்த டெல்டா…  நம்பிக்கையோடு மீண்டு(ம்) வரும் மக்கள்...!
  • News18
  • Last Updated: November 18, 2019, 2:31 PM IST
  • Share this:
”டெல்டா மாவட்டங்களில் இப்படியொரு பேரிடரை, இவ்வளவு சேதத்தை யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தங்களது வளங்கள் அனைத்தையும் இழந்து, மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.”

கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி மிக மோசமான பேரிடருடன் விடிந்தது டெல்டா மக்களுக்கு. கோர தாண்டவமாடிச் சென்ற புயலினால் வீடுகளின் கூரைகள் பெயர்த்து வீசப்பட்டன. வீட்டைச் சுற்றியிருந்த மரங்கள்  வீழ்த்தப்பட்டன. குடும்பத்தின் பாரத்தை சுமக்கும் கால்நடைகள் குற்றுயிரும் குலையுயிருமாயின, செத்து மடிந்தன. நேரடியாக பாதிக்கப்பட்டும் அதிர்ச்சியிலும் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும் சேதத்தையும், திருச்சி, கருர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பகுதி சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மொத்தம் 12 மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி (கோப்புப் படம்)


மொத்தம் 2.21 லட்சம் மின் கம்பங்கள் சேதமடைந்தன. மின் இணைப்பு கொடுப்பதற்கு மட்டும் மின்வாரிய ஊழியர்கள் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உட்பட பல்வேறு துறையினர் அர்ப்பணிப்போடு 6 மாதங்களாக தொடர்ந்து களத்தில் இருந்தனர்.

அமைச்சர்கள், அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு மீட்பு & நிவாரணப்பணிகளைத் துரிதப்படுத்தினார்கள். ஆனால், களத்தில் உள்ளவர்களுக்கு மேல் பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை பன் மடங்கு அதிகம். ஆகையால், உடனடி உதவி, நிவாரணப் பொருட்கள் கிடைக்காதவர்கள் அமைச்சர்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டும், சாலை மறியல் போராட்டங்களை நடத்தியதையும் பார்த்தோம்...சரி… கஜா புயல் தாக்கி ஒராண்டாகி விட்டது…. இப்போது எப்படி இருக்கிறது நிலை ? இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி விட்டார்களா? என்று கேட்டால்….பெருமூச்சு மட்டுமே வருகிறது…

Tanjavur, street light post, தஞ்சாவூர், மின் கம்பம்,
கஜா புயலினால் சாய்ந்த மின் கம்பம் (கோப்புப் படம்)


குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் இப்படியொரு பேரிடரை, இவ்வளவு சேதத்தை யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தங்களது வளங்கள் அனைத்தையும் இழந்து, மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

பாதிப்புகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டு, வங்கிக் கணக்கில் வரவும் வைக்கப்பட்டது. ஆனால், பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் அறிவிக்கப்படவும் இல்லை. அறிவித்த நிவாரணம் முழுமையாக கிடைக்கவும் இல்லை என்கிற குரல்கள் இப்போதும் கேட்கின்றன.

கஜா புயலினால் 12 மாவட்டங்களில் சுமார் 1 லட்சம் ஏக்கர் நெற் பயிர், 75 ஆயிரம் ஏக்கர் தென்னை, 20 ஆயிரம் ஏக்கர் மக்காச் சோளம், 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழை, தோட்டக்கலை, பயறு வகைகள், பணப் பயிர்கள் என 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சேதமடைந்தன. வங்கி முதலீடு போல், மண்ணில் முதலீடு செய்யப்பட்ட லட்சக் கணக்கான தேக்கு மரங்கள் அடியோடு விழுந்தன. இவை மட்டுமின்றி தொடர்ந்து பலன் கொடுக்கும் மா, பலா, முந்திரி மற்றும் தோட்டக்கலைப் பயிர்களும் அழிந்தன.

அரசு கணக்கீட்டின் படி 70 லட்சம் தென்னைகளும் விவசாயிகளின் விபரப்படி 1 கோடி தென்னை மரங்களும் விழுந்தன. தென்னை விவசாயிகளுக்கு விழுந்த 1 மரத்தை அப்புறப்படுத்த, ரூ. 1, 100, ஹெக்டேருக்கு ரூ. 1.92 லட்சம் நிவாரணமும் மறு சாகுபடிக்கும் ஹெக்டேருக்கு 72 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டது. இதே போல் வாழை, மா, பலா, தேக்கு மற்றும் நாட்டு மரங்களையும் கணக்கில் கொண்டு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. வீடுகளை இழந்தவர்களுக்கு முதல்கட்டமாக ரூ. 10 ஆயிரம் இழப்பீடும், புதிய வீடுகளும் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

Cyclone Gaja | கஜா புயல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் (கோப்புப் படம்)


தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான நிவாரணம் ஓரளவிற்கு கிடைத்துள்ளது. ஆனால், முழுமையாக கிடைக்கவில்லை. பலருக்கும் இன்னும் பகுதியளவும் கிடைக்கவில்லை. இதனால், மறு சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 4 லட்சம் வீடுகள் சேதமடைந்தன. முதல்கட்ட நிவாரணமும் வழங்கப்பட்டன. ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டன. ஆனால் வீடுகளை தற்காலிகமாக சீரமைத்து பலரும் வசித்து வருகின்றனர். அரசின் நிவாரணம் கேட்டு கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி மாவட்ட ஆட்சியர் வரை தொடர்ந்து அலைந்து கொண்டிருப்போரையும் பார்க்க முடிகிறது. தன்னார்வ அமைப்புகள் செய்த உதவிகள் இப்போதும் பெரும்துணையாக இருக்கின்றன.

அரசின் நிவாரணம், தன்னார்வ அமைப்புகளின் உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் ஆறுதல், நம்பிக்கையாக இருக்கின்றன. அதே நேரத்தில் நிவாரணம் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் கிடைக்கவில்லை. பலருக்கு முழுமையாகவும் கிடைக்கவில்லை. பல இடங்களில் அரசு நிவாரணம் கிடைத்துள்ளது, ஆனால், பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு இன்னும் கிடைக்கவில்லை. இவற்றையெல்லாம் விரைந்து கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே ஓராண்டாகியும் உடனடித் தேவையாக இருக்கிறது.

கஜா புயலால் நாசமடைந்த வீடுகள்


கஜா புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் கேட்ட நிவாரணத்தொகையில் 10 சதவீதம் கூட கிடைக்கவில்லை என்பதும் ஒரு பக்கம் நெருடலாகவே இருக்கிறது.

ஆனாலும் , நம்பிக்கையோடு அடுத்த கட்டத்தை நோக்கி மெல்ல நகரத் தொடங்கியுள்ளனர் டெல்டா மக்கள். யார் கைவிட்டாலும், இந்த மண் நம்மை கைவிடாது என்று மீண்டு(ம்) விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாழ்வாதரத்தை மறு கட்டமைத்து வருகின்றனர். இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில ஆண்டுகள் ஆகும். மெல்ல…மெல்ல உறுதியாக இயல்பு நிலைக்கு திரும்புவோம்…மீண்டும் வளம் பெறுவோம் என்கிறார்கள் நம்பிக்கையோடு…​

- ஜோ. மகேஸ்வரன்
First published: November 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading