அந்த குரோஷிய சிறுவனின் பெயர் லூக்கா மோத்ரிச்!

news18
Updated: July 15, 2018, 7:16 PM IST
அந்த குரோஷிய சிறுவனின் பெயர் லூக்கா மோத்ரிச்!
லூக்கா மோட்ரிக்
news18
Updated: July 15, 2018, 7:16 PM IST
1991-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் குளிர்ந்த அதிகாலை, அந்த முதியவர் தன்னுடைய கால்நடைகளை மலை உச்சிக்கு கொண்டு செல்கிறார். இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு. மழையோ, வெயிலோ ஒவ்வொரு நாள் காலையும் அவர் தன் கால்நடைகளைத் தவறாமல் அழைத்து சென்றுவிடுவார். ஆனால் அன்று தன் கால்நடைகளுடன் மலையுச்சிக்கு சென்றவர் வீடு திரும்பவே இல்லை.

போலீஸ் உடையில் இருந்த சில பேர் அவரை கைது செய்துள்ளனர். அவர்கள் உண்மையில் போலீஸ்காரர்கள்தானா என்பது உறுதியாக தெரியாது. ஆனால் அது பொருட்படுத்தக்கூடிய விஷயமும் அல்ல. ஏன் என்றால் அந்த பகுதிகளில் துப்பாக்கி வைத்திருந்த அனைவரும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள்.

கைது செய்யப்படும் அளவிற்கு அந்த முதியவர் எந்த குற்றசெயலிலும் ஈடுபடவில்லை. அவர் செய்த ஒரே குற்றம் ஒரு குரோஷியனாக பிறந்ததுதான். அவரை கைது செய்தவர்கள் செர்பியர்கள் . தன் இனத்தையோ மதத்தையோ சாராத ஒருவரை வெறுப்பது பிரிவினைவாதிகளுக்கு இயல்புதானே. அந்த முதியவர் அவர்களில் ஒருவர் இல்லை என்பதால் அவரும், வேறு சிலரும் அருகில் இருக்கும் ஜெசெனிஸ் என்ற கிராமத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு சுட்டு கொள்ளப்படுகிறார்கள்.

அவர் அந்த முதியவர் பெரிதும் நேசித்த குடும்பத்தை மட்டும் விட்டுச்செல்லவில்லை, அவர் உயிருக்கு உயிராய் நேசித்த அவருடைய தன் பேரனையும் விட்டுசென்றுக்கிறார். எப்போதும் தன் தாத்தாவின் கால்களையே சுற்றிச் சுற்றி வரும் அந்த பேரனுக்கும் இவருடைய பெயர்தான்.

அந்த முதியவரின் பெயர் லூக்கா மோத்ரிச். அதே பெயரைக்கொண்ட அந்த சிறுவனுக்கு இப்போது 32 வயது. அவன் இன்று ரஷ்யாவில் நடக்கும் ஃபிஃபா 2018 இறுதிப் போட்டியில் குரேஷியா அணியை வழிநடத்த இருக்கிறான்.


லுக்காவின் தாத்தா கொல்லப்பட்ட பின்பு, அவனது வீடு எரித்து சாம்பலாக்கப் பட்டது. ஆதலால் அவர்கள் பல நாட்களுக்கு சொந்த ஊரான சடாரில் உள்ள பாழடைந்த ஒரு ஹோட்டலில் தங்க வேண்டியிருந்தது. வானிலிருந்து குண்டுகள் விழும்போது சிறுவன் லூக்கா தன் நண்பர்களுடன் பதுங்குழிகளுக்குள் ஒளிந்துகொள்வான். குண்டு பொழியும் விமானங்கள் சென்றவுடன். ஹோட்டலின் கார் பார்க்கிங்கில் மற்ற சிறுவர்களோடு கால்பந்து விளையாடுவான். சதா சண்டை நடந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டில் வாழ்வதன் மூலம் தன் வாழ்வின் மீது குவிந்துள்ள இருளை போக்குவதற்கு ஒரே வழி கால்பந்து விளையாடுவதுதான் என்பது சிறுவன் லூக்காவிற்கு எப்படியோ தெரிந்திருந்தது.

போஸ்னியனி-ஹெர்ஸ்கோவினன் லீக் தொடரில் ரின் ஜிஸ்கி மோஸ்தர் அணிக்காக விளையாடிய போது லூக்காவிற்கு 18 வயது மட்டுமே. அப்போது லூக்காவின் அணியிலும் எதிரணியிலும் விளையாடிய அனைவருக்கும் லூக்காவின் ஆட்டத்தை பார்த்து வியப்பு. ஒரு நல்ல கால்பந்தாட்டக் காரனக்கு தேவையான எல்லாத் திறமையும் அந்தச் சிறுவனிடம் இருந்தது.

அந்த போட்டி நடந்து சரியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு உலகப்புகழ் பெற்ற கால்பந்து கிளப்பான ரியல் மேட்ரிட் அணியில் விளையாடிக் கொண்டிருந்தார் லூக்கா. இன்று லூக்கா உலக அளவில் தலை சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர். ஒரு அதி சிறந்த மிட் ஃபீல்டர்.

இது எல்லாவற்றையும் விட அவர் செய்திருக்கும் பெரும் சாதனை, குரோஷியா அணியில் உள்ள மற்ற வீரர்களையும் சிறப்பாக விளையாட வைத்து தன் அணியை இறுதிபோட்டி வரை அழைத்துச் சென்றிருக்கிறார் லூக்கா. நம் தல தோனியை போல் அணியின் வெற்றியை சகவீரர்களிடம் கொடுத்துவிட்டு தள்ளி நின்று ரசிக்கும் ஒரு உன்னதத் தலைவனாக இருக்கிறார் லூக்கா. கோல் அடித்தால் கண்ணி வெடிகுண்டில் கால் வைத்தது போல் அவர் துள்ளுவது கிடையாது. தன் சட்டையை கழற்றி நெஞ்சு புடைக்க கத்துவது கிடையாது, அதே நேரத்தில் தன் அணிக்கு சாதகமான சூழ்நிலை நிலவாதபோது உடைந்து ஒரு ஓரத்தில் நிற்பதும் கிடையாது. இந்த வகையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட நெய்மர், மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற கால்பந்து சூப்பர்ஸ்டார்களும் அவர்களது அணியினர் எல்லாம் ஊர் போய் சேர்ந்துவிட்டார்கள்.
குரோஷிய அணியில் உள்ள அனைவருக்கும் தன் தலைவன் மீது பெரும் அன்பு உண்டு. டென்மார்க் அணிக்கு எதிராக லூக்கா ஒரு பெனால்டி கிக்கை தவறவிட்ட போது, குரேஷியாவின் இவான் ராகிடிக் சக வீரர்களை அழைத்து “லூக்கா பல இக்கட்டான சூழ்நிலையிலிருந்து பல முறை நம் அணியைக் காத்துள்ளான், இந்த முறை நாம் அவனுக்கு கைமாறு செய்யவெண்டும்" என்றிருக்கிறார். அதே போல் ராகிடிக் வெற்றி கோல் அடித்து குரேஷியாவை ஜெயிக்கவைத்தார்.

ஆனால் லுக்கா யார் என்றால், அதே போட்டியில் பெனால்டியில் கோட்டை விட்டாலும், ஷூட் அவுட்டில் கோல் அடித்து மீண்டும் தன்னை நிரூபித்த ஒரு உண்மையான விளையாட்டு வீரன். குரோஷியர்களுக்கு தன் நாட்டு கால்பந்து அணியினர் ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவது மனதளவில் எவ்வளவு நெறுக்கமானது என்பதை நாம் புரிந்துகொள்வது கடினம். கால்பந்து என்பது அவர்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த ஒன்று.
கால்பந்து ஆர்வலர்கள் ஃபிரான்ஸ் அணி சுலபமாக வென்றுவிடும் என்று கணித்திருக்கிறார்கள். உண்மையில் ஃபிரான்ஸ் அணி எல்லா வகையிலும் மிக பலம் வாய்ந்த அணிதான், நாக் அவுட் சுற்றில் நார்மல் டைமிலேயே எல்லா போட்டிகளிலும் ஃப்ரான்ஸ் வெற்றி பெற்றிருக்கிறது, ஆனால் குரோஷியா அணி மூன்று முறை எக்ஸ்ட்ரா டைம் வரை சென்றுதான் போராடி வென்றது.

கால்பந்து ரசிகர்கள் எல்லோருக்கும் ஃபிரான்ஸ் எளிதாக வென்றுவிடும் என்பது தெரியும். அவர்களின் பகுத்தறிவு ஃப்ரான்ஸ் ஃப்ரான்ஸ் என்று கூச்சலிட்டாலும், மனதென்னவோ லூக்காவின் அணியான குரேஷியா வெல்ல வேண்டும் என்றே ஆசைப்படுகிறது.
First published: July 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...