• HOME
  • »
  • NEWS
  • »
  • special-articles
  • »
  • கொரோனா கோரத்தில் தவிக்கும் மக்கள்: பாசிட்டிவிட்டி பரப்புதல் அவசியமா?

கொரோனா கோரத்தில் தவிக்கும் மக்கள்: பாசிட்டிவிட்டி பரப்புதல் அவசியமா?

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா மிகத் தீவிரமாக இருக்கும் இந்த காலத்தில் நேர்மறை எண்ணங்கள் நாம் மன அழுத்தத்தில் இருந்து மீள எப்படி உதவும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

  • Share this:
உலகமே இதுவரை கண்டிராத ஒரு பெரும் இன்னலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இது நான்கைந்து தலைமுறைகள் பார்த்திராத அறிவிக்கப்படாத அவசரநிலை. இந்த நிலை இனி ஒரு முறை நம் வாழ்நாளில் ஏற்பட்டுவிடக் கூடாது என ஒவ்வொரு தனிநபரும் எண்ணுமளவுக்கு வாழ்வாதாரத்தை அடித்து துவைத்து கிழித்துப் போட்டிருக்கிறான் கொரோனா எனும் பேரரக்கன். இது உலகப்போருக்கான முன்னோட்டம், பயோ-வார் எனப்படும் கிருமிகளை பரப்பி உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்துதல் என்பன போன்ற எத்தனையோ விளக்கவுரைகள் எழுதப்பட்டு வருகின்றன. ஆனால், நோய் பாதிப்பும் உயிரிழப்பையும் சந்திக்கும் சாதாரண சாமானிய மனிதன் இன்னும் கொரோனாவின் கோரைப்பற்களில் சிக்கி சின்னபின்னமாகிறான்.

பாதிப்பின் வலி, இழப்பின் வலி, அச்சமூட்டும் நோய்த்தொற்று அபாயம் என இவையெல்லாம் சங்கிலித் தொடராக மாறி நாடு முழுவதும் மக்களிடம் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளன. இவை யாவும் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தில் உள்ள அனைவரையும் கடும் சுயநலத்தோடு வாழ்க்கை குறித்த மிகப்பெரும் அச்சத்த பீடிக்க வைத்திருக்கிறது கொரோனா காலம். இந்த எதிர்மறை எண்ணங்கள் கால் சுற்றும் கொடியாக அத்தனை பேரையும் கொத்தாக கட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது. அதை அறுத்தெறிவது எப்படி ?

நாளொன்றுக்கு சராசரியாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்று, 300க்கும் அதிகமான உயிரிழப்பு என்பது தமிழகத்தில் மட்டும். இந்திய அளவில் இது 4 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக குறைந்திருக்கிறது. முதல் அலையில் எங்கோ நடந்த தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் இரண்டாவது அலையில் நமக்கு அருகிலும், நமக்கேவும் நடக்கிறது. இதுதான் அச்சத்திற்கு முதல் காரணம். காலை எழுந்தவுடன் நாம் பார்த்து ரசித்த திரை பிரபலங்கள், படித்து ரசித்த எழுத்து ஆளுமைகள், உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என யாரோ ஒருவரின் மரணச் செய்தி நம்மை கலைத்துப் போட்டு விடுகிறது. என்ன தான் நடக்கிறது நாட்டில் என்று செய்தித் தொலைக்காட்சிகளையும், கொரோனா பாதிப்பு விவரங்களையும் பார்த்தால் அத்தனை அச்சமும், எதிர்மறை எண்ணமும் நம்மை ஒட்டுமொத்தமாக ஆட்கொண்டு விடுகிறது என்பது ஒவ்வொருவரின் எண்ண ஓட்டமும்.

நேர்மறை எண்ணங்கள்


 

நம்மைச் சுற்றியும் எரிந்து கொண்டிருக்கும் தீ அதன் நாக்கால் நம்மை எப்போது வேண்டுமானாலும் தீண்டலாம் என்ற அச்சமும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் சரியானதே. ஆனால், தீ பற்றி விடுமோ என அங்குமிங்கும் ஓடுவது நம்மை இன்னும் அதீத பதட்டத்திற்கும், பாதிப்புக்கும் ஆளாக்கும் என்பது தான் உண்மை. நாம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். அச்சமின்றி அசட்டைத்தனமாக அதெல்லாம் என்ன செய்துவிடப்போகிறது என்ற எண்ணம் எவ்வளவு தவறானதோ, அதை விட தவறானது அதீத அச்சமும், பதட்டமும். அதுமட்டுமின்றி நம் அச்சத்தையும், பதட்டத்தையும் நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் கடத்தி அவர்களையும் அதே நிலைக்கு ஆளாக்குவது என்பது முட்டாள்தனம் அன்றி வேறொன்றும் இல்லை. இதன் முடிவு கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாவது மட்டுமே.

மாதிரிப் படம்


சரி, இதற்கு என்ன தீர்வு. செய்தி தொலைக்காட்சிகளை, பாதிப்பு விவரங்களை பார்க்காமல் இருப்பதா ? அதீத அச்சத்தை ஏற்படுத்தும் பதட்டமான நபர்களிடம் இருந்து தள்ளி நிற்பதா ? அல்லது எதையும் கண்டுகொள்ளாத மோன நிலையில் நம்மை வைத்துக் கொள்வதா ? எதிர்மறை எண்ணச்சிறைகளில் இருந்து விடுபட்டு, நம்மை நேர்மறை சிந்தனைக்கு இட்டுச் செல்லும் பாதை எது என்பது நாம் கண்டறிவது எப்படி ?

மிகவும் எளிது..
அளவுக்கு அதிகமான மனிதாபிமானம்.
பொது நலத்துடன் கூடிய அளவான சுயநலம்.
கொரோனா தொடர்பான உண்மை நிலவரங்களை, அதன் பின்புலத்தை சரியான கண்ணோட்டத்தோடு அணுகுதல்.
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
பாதிப்பு வந்தால் அதனை எதிர்கொள்ளுவது எப்படி என்ற முன்னேற்பாடுகள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் முடிந்தவரை உதவுதல்.
ஊரடங்கு காலத்தில் தவிப்போருக்கு நம்மால் ஆன ஒரு வேளை உணவு வழங்கி பசியாற்றுதல்.
உங்களை சுற்றி இருக்கும் நண்பர்கள், சக பணியாளர்கள், உறவினர்களை உடல் நலன் குறித்து விசாரியுங்கள்.
வலியும், வேதனையும் ஆக்கிரமித்து இருப்பவர்களை ஆற்றுப்படுத்தி அதிலிருந்து தேற்றுவது.
தவறான, போலியான செய்திகளை பரப்பாமல் இருப்பது.
சூழலை பயன்படுத்தி யாரும் தீங்கிழைக்காமல் இருப்பது.
அப்படி தீங்கு விளைவிக்கும் எண்ணத்தோடு இருப்பவர்களை நல்வழிப்படுத்துதல்.
இவை யாவுமே நம்மை நேர்மறை சிந்தனையோடு வைத்திருப்பதற்கான யுத்திகள்.

மனிதகுலம் பேரழிவை சந்திப்பது என்பது புதிதல்ல என்றாலும், தொழில்நுட்பம் ஆகச்சிறந்த வளர்ச்சியை பெற்றிருக்கும் இந்த காலத்தில் இப்படி ஒரு பேரழிவை எதிர்கொள்வது சவாலான ஒன்று தான். ஏனெனில், தொழில்நுட்பம் எந்த அளவுக்கு சாதகமாக பயன்படுத்தப்படுகிறதோ, அதை விட அதிகமாக பாதகத்தை ஏற்படுத்த பயன்படுத்தும் காலத்தில் இந்த பேரழிவை கடந்து வருவது என்பது நெருப்பாற்றை நீந்திக் கடப்பதற்கு இணையானது.

நேர்மறை எண்ணங்கள்


தொழில் இல்லை, வேலை இல்லை, வாழ்வாதாரத்திற்கு பங்கம் ஏற்பட்டிருக்கிறது. முதல் அலையில் விழுந்தவர்கள் எல்லாம் தட்டித்தடுமாறி எழுந்த நிற்க முயன்ற போது ஓங்கி அடித்தது இரண்டாம் அலை. இதையெல்லாம் தாண்டி உளவியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் நிச்சயம் எதிர்மறை சிந்தனைகளில் இருந்து விடுவித்துக் கொள்வது தான் முதலில் செய்ய வேண்டியது.

எத்தனையோ இடர்களில் இருந்து எழுந்து வந்திருக்கிறோம். அது தந்த கூடுதல் பலத்தோடு முன்பை விட பல மடங்கு வீரியத்தோடு போராடி முன்னேறி இருக்கிறோம். அப்படியான ஒரு வேகத்தடையை கடப்பதற்கு கிட்டத்தட்டட முழுதாக இரண்டு ஆண்டுகளை வாரிக் கொடுத்திருக்கிறோம். இதன் இழப்பை ஈடுகட்ட நாம் முன்பை விட நூறு மடங்கு வேகமாக ஓட வேண்டும். அதற்கு நம் முதுகில் மாட்டப்பட்டிருக்கும் பையில் தேவையற்ற சுமையான எதிர்மறை எண்ணங்களை தூக்கி எறிந்து விட்டு, நல்ல எண்ணங்களை நேர்மறை சிந்தனைகளை சுமந்து ஓடுவோம். எதிர் வருவது பேரலையாக இருந்தாலும் எதிர்கொள்ளலாம் வாருங்கள்.

ஆம், பாசிட்விட்டியை பரப்புதல் அவசியம் தான்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: