2019 மக்களவைத் தேர்தல்: யார் கை ஓங்கப்போகிறது?

விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக-வை தங்கள் பக்கம் இழுக்க இந்த தேர்தலிலும் அதிமுக - திமுக இடையே போட்டி நிலவுகிறது. தேமுதிக தொடங்கப்பட்ட போது இருந்த பலம் தற்போதும் உள்ளதா?

2019 மக்களவைத் தேர்தல்: யார் கை ஓங்கப்போகிறது?
பிரேமலதா, விஜயகாந்த்
  • News18
  • Last Updated: February 23, 2019, 11:56 AM IST
  • Share this:
2019 மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி தமிழகத்தில் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது. இதில் அதிமுக தலைமையிலான அணியில் பாமக, பாஜக போன்ற கட்சிகளும் த.மா.கா மற்றும் புதிய தமிழகம் போன்ற சிறிய கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. திமுக அணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் உள்ளன.

தேமுதிக-வை இழுக்க இருதரப்பும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. கடந்த முறை பாஜக அணியில் 14 இடங்களைப் பெற்ற தேமுதிகவோ பாமகவுக்கு கிடைத்ததற்கு குறையாமல் (ஏழு) தங்களுக்கும் குறைந்தது ஏழு தொகுதிகள் வேண்டும் என அடம்பிடித்து வருகிறது.


முந்தைய தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தொகுதிக்கான பேரத்தில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

தற்போது திமுக, அதிமுக அணிகளில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கடந்த 2016 சட்டப்பேரவை மற்றும் 2014 மக்களவை தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டு பார்ப்போம்.

கடந்த தேர்தகளில் பெற்ற வாக்கு சதவீதம்: தற்போதைய அதிமுக அணியை பொருத்தவரை, 2016 சட்டப்பேரவை தேர்தலில், மொத்த வாக்குகளில் அதிமுக 40.77 சதவீதமும்,  பா.ம.க. 5.32%, பாஜக 2.84%, தமாகா 0.53%, புதிய தமிழகம் 0.51% வாக்குகளையும் பெற்றன. அதிமுக அணியில் உள்ள கட்சிகள் மொத்தத்தில் 49.97% வாக்குகளை பெற்றன.

இதுபோல் தற்போதைய திமுக அணியில் 2016-ல் திமுக 31.64% வாக்குகளும், காங்கிரஸ் 6.42% வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் 0.79% வாக்குகளும், மார்க்சிஸ்ட் 0.71%, விடுதலை சிறுத்தைகள்  0.77% மற்றும் மதிமுக 0.86% என திமுக அணியில் உள்ள கட்சிகள் கூட்டாக 41.19% வாக்குகளைப் பெற்றன.

இதுபோல் 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் அதிமுகவுக்கு 44.34%, பாமக 4.45% பாஜக-வுக்கு 5.48%, புதிய தமிழகம் 0.65% என தற்போதைய அதிமுக அணிக்கு 54.92  வாக்குகள் கிடைத்தன.

2014 மக்களவைத் தேர்தலில், தற்போதைய திமுக அணிக்கு  திமுக 23.61% வாக்குகளும், காங்கிரஸ் 4.32% வாக்குகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு தலா 0.54%  விசிக 1.49% மற்றும் மதிமுக 3.5%  என 34% வாக்குகள் அணிக்கு கிடைத்தது.

இரு தேர்தலையும் ஒப்பிட்டால், 2016 சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய அதிமுக அணியை விட திமுக அணி 8.78% வாக்குகள் குறைவாகவும், 2016 சட்டப்பேரவை தேர்தலில் தற்போதைய திமுக அணியில் உள்ள கட்சிகள் 8.78% வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளன.

இதில் திரிசங்கு நிலையில் இருக்கும் தேமுதிக 2016 மக்களவை தேர்தலில், 2.39% வாக்குகளையும், சட்டப்பேரவை தேர்தலில்5.13% வாக்குகளையும் பெற்றது. தேமுதிக-வின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது.

தமிழகத்தின் முக்கிய தலைவர்கள் மறைவிற்கு பிறகு வரும் தேர்தல்: 

இந்த தேர்தல் சற்று புதிய களத்தில் அமைகிறது. தமிழகத்தில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் மறைந்தது மிகப் பெரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக சந்திக்கும் முதல் பொதுத் தேர்தல் என்பது அதிமுக-வின் முக்கிய பலவீனம். இதுபோல் டிடிவி தினகரனும் வாக்குகளைப் பிரிக்க வாய்ப்புண்டு

பாஜக-வுடன் சேர்ந்திருப்பதால் டெல்டா, தென்மாவட்டங்களில் ஓட்டுக்களை இழக்க வாய்ப்புண்டு பாஜக வருகையால் சிறுபான்மையினரின் வாக்குகள் அதிமுக-வுக்கு கணிசமாகக் குறையக்கூடும்.

அதிமுக-வின் பலத்தை பொருத்தவரை இரட்டை இலை சின்னம் பெரிய பிளஸ். ஆர்.கே. நகர் தேர்தல் விதிவிலக்கு. மேலும் பொங்கலுக்கு ரேஷன் அட்டைக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியது, வறுமைக்கோட்டு்க்குக் கீழுள்ள 60 லட்சம் குடும்பங்களுக்குத் தலா 2  வலுவான கூட்டணி அதிமுக-வுக்கு ஓரளவுக்கு கைகொடுக்கக்கூடும்.

கருணாநிதி இல்லாதது திமுகவிற்கு பலவீனமா?: 

திமுகவை பொருத்தவரை முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் என்பது பலவீனம். பாமக-வை தவறவிட்டது திமுக-வுக்கு நிச்சயம் பலவீனம், கடந்த இரு முறை கோட்டைவிட்டதுபோல் தேமுதிக-வைக் கூட்டணிக்குள் சேர்க்காமல் விட்டால் அது திமுக-வுக்கு பின்னடைவே.

திமுக-வின் பலத்தைப் பொருத்தவரை, அதிமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் சாதகம், பாஜக எதிர்ப்பு உணர்வும், முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளும் சிறுபான்மையினர் வாக்குகளை  கொண்டுசேர்க்கும். இது திமுக-வுக்குப் பெரிய பலம்.

இதுதவிர கமல் ஹாசன், டிடிவி தினகரன் போன்றோரும் இருதரப்பில் இருந்தும் வாக்குகளை பிரிப்பார்கள். கமலுக்கு கிடைக்கும் வாக்குகள் பெரும்பாலும் ஆளும்கட்சிக்கு எதிரானவையாக இருக்கும் என்பதால் திமுக-வுக்கு சற்று பாதகம். இந்த தேர்தல் தினகரனுக்கும், கமலுக்கும் மிக முக்கியமானதாக இருக்கும்.

ரஜினி ஒதுங்கி நின்று ஆழம் பார்க்கிறார் . அவரது ரசிகர்கள் ஆதரவு யாருக்கு என தெரியவில்லை. மொத்தத்தில் இது தமிழகத்திற்கு புதிய தேர்தல் களம். கடந்தமுறை பெற்ற வாக்குகள் ஒப்பீட்டு அளவிற்கே. அரசியல் சூழல் முற்றிலும் மாறியிருக்கிறது.

Also Watch...

First published: February 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்