வேலை மட்டுமா பறிபோகிறது…? தவிக்கும் தமிழக இளைஞர்கள்

மண்ணின் மைந்தர்களுக்கே அரசு வேலைகள் என்பதில் குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னுதாரணமாக இருக்கின்றன.

வேலை மட்டுமா பறிபோகிறது…? தவிக்கும் தமிழக இளைஞர்கள்
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: May 3, 2019, 11:45 AM IST
  • Share this:
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, ”தமிழ்நாட்டின் வளங்கள் சுரண்டப்படுகின்றன. தமிழர்களின் வேலைகள் பறிக்கப்படுகின்றன. பிற மாநிலத்தவர்கள் திட்டமிட்டே திணிக்கப்படுகிறார்கள்” என்கிற குரல்கள் அதிகமாக கேட்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் பதிவு செய்து விட்டு, நம்பிக்கையோடு காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வரும் நிலையில், இந்த அவலக் குரல், அபாயக் குரலாகத்தான் கேட்கிறது.

அண்மையில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற் பழகுநர் தேர்வில் மொத்தமுள்ள 1765 இடங்களில் 1600 இடங்களில் பிற மாநிலத்தவர்களுக்கு. தொடர்ந்து நடைபெற்ற பணி நியமனத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி சென்னை பெரம்பூர், கோவை என ரயில்வே பணிகளில் பிற மாநிலத்தவர்களே 90 விழுக்காடு நியமனம் பெற்றுள்ளனர்.


படிக்க... ஃபோனி புயல் தமிழகத்தை ஏமாற்றவில்லை... காப்பாற்றியிருக்கிறது...!

ரயில்வே தொழிற் பழகுநர் (ஆக்ட் அப்ரண்டிஸ்) பயிற்சி முடித்து சுமார் 15 ஆயிரம் பேர் பதிவு செய்து 14 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் காத்திருக்கின்றனர். வேலை கிடைக்காததால் 28 பேர் உயிரையும் இழந்துள்ளனர். ரயில்வே துறையில் இழைக்கப்படும் துரோகம் குறித்து தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றோர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முறையிட்டுள்ளனர்.

போட்டித் தேர்வுகளை எழுதித்தானே வருகிறார்கள். திறமையிருக்கு வருகிறார்கள் என்று சொல்வோருக்கு…தேர்வில் முறைகேடுகள் செய்துதான் பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் நியமிக்கப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.கடந்த ஆண்டு நடைபெற்ற அஞ்சல்துறையின் தபால்காரர் (போஸ்ட்மேன்) பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் பாடத்தில், தமிழ்நாட்டு இளைஞர்கள் தேர்ச்சி பெறாமல் போக, தமிழைப் பேசவே தெரியாத வட மாநில இளைஞர்கள் தேர்வாகியது எப்படி என்கிற கேள்வியும் எழுகிறது.

படிக்க... இளநீரை தினமும் குடிப்பதால் ஆபத்தா?

நடப்பாண்டில், இதே அஞ்சல் துறையில் தற்போது 4, 452 பணியிடங்களுக்கான தேர்விற்கு, வட மாநிலங்களில் ஒரு மாதம் முன்பே அறிவிப்பு கொடுத்து விட்டு, தமிழ்நாட்டில் 10 நாள் இடைவெளியில் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க சென்றால், சர்வர் மக்கர் பண்ணியதையும் குறிப்பிடுகிறார்கள் பாதிக்கப்பட்ட இளைஞர்கள். ரயில்வே, அஞ்சல் துறை மட்டுமின்றி பிற மத்திய துறைகளிலும் இந்த போக்கு தலைதூக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள வேலைகளைக் குறி வைத்து வட மாநிலங்களில் பல்வேறு தனியார் பயிற்சி மையத்தினர் முகவர்களாக செயல்படுகின்றனர். பல்வேறு முறைகேடுகள் மூலம் தகுதியே இல்லாதவர்கள் இங்குள்ள வேலைகளில் பணி நியமனப் பெற்று வருகின்றனர்.

எனவேதான் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான இடங்களில் பிற மாநிலத்தவர்கள் முறைகேடாக திணிக்கப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை வைக்கிறோம் என்கிறார்கள் வேலை வேண்டி நிற்கும் இளைஞர்கள்.

மத்திய அரசு வேலைகள் பறிபோவது ஒருபுறமிருக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் பிற மாநிலத்தவரும் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வு பெற்ற 2 ஆண்டுகளில் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டு அரசு அலுவலகங்களிலும் கடைநிலைப் பணியாளர் இடத்திற்கு கூட பிற மாநிலத்தவர்களை சேர வழி வகுத்துள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

படிக்க... இந்தியாவில் நதி நீர் இணைப்பு சாத்தியமா?

இந்நிலையில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளை தரும் குடிமைப்பணி தேர்வில் கடந்த 2010-ம் ஆண்டில் 12 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டு இளைஞர்களின் தேர்ச்சி, இப்போது 5 விழுக்காடாக குறைந்துள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

நாளுக்கு நாள் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், படித்த தகுதியுள்ள இளைஞர்கள் உள்நோக்கத்தோடு புறக்கணிக்கப்படுவது மிகவும் மோசமான போக்கு. இந்த போக்கு ஆபத்தான பின்விளைவுகளைத் தரும் என்பது மட்டுமல்ல, 1956ம் ஆண்டு இயற்றப்பட்ட மொழி வழி மாநிலங்கள் சட்டத்திற்கு எதிரானது என்றும் எச்சரிக்கிறார்கள்.

அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பண்பாடு, கலாச்சாரத்தை வளர்க்கவே மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால், நடைமுறையில் இதற்கு எதிராக இருப்பது பெரும் முரணாக இருக்கிறது.

தமிழ்நாடு தமிழருக்கே, தனித் தமிழ்நாடு என்று முழங்கிய மாநிலத்தில், எங்கள் வேலையை எங்களுக்கே கொடுங்கள் என்று கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் 90 விழுக்காடு தமிழ்நாட்டினருக்கே வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

மண்ணின் மைந்தர்களுக்கே அரசு வேலைகள் என்பதில் குஜராத், கர்நாடகம், மகராஷ்ட்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னுதாரணமாக இருக்கின்றன. எனவே தமிழ்நாடு அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. பறிபோவது இளைஞர்களின் வேலைகள் மட்டுமல்ல...

பல்வேறு பிரச்னைகள் குறித்தான சிறப்பு கட்டுரைகள் படிக்க இங்கே கிளிக் செய்க...
First published: May 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்