ஆளுநர் தமிழிசை மீண்டும் அரசியலுக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறதா?

ஆளுநர் தமிழிசை மீண்டும் அரசியலுக்கு திரும்ப வாய்ப்பு இருக்கிறதா?
கும்மணம் ராஜசேகரன் உடன் தமிழிசை
  • News18
  • Last Updated: September 5, 2019, 3:54 PM IST
  • Share this:
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவின் கும்மணம் ராஜசேகரன் போல இவரும் மீண்டும் அரசியலுக்கு திரும்பலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரளா, மஹாராஷ்டிரா, இமாச்சலப்பிரதேசம் ஆகிய ஆளுநர்களும் மாற்றப்படுள்ளனர்.

கேரளாவின் ஆளுநராக இருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம், மஹாராஷ்டிரா ஆளுநராகவும், தமிழகத்தில் சில காலம் இடைக்கால ஆளுநராகவும் இருந்த வித்யாசாகர் ராவ் மற்றும் தெலங்கானா ஆளுநர் நரசிம்மன் ஆகியோர்களில் ஆளுநர் பொறுப்புகள் முடிவுக்கு வந்தது.


தமிழிசை


பொதுவாக மாநிலங்களில் ஆளுநர்கள் நியமிக்கப்படுவது முழுக்க முழுக்க மத்திய அரசின் முடிவே. ஆளுநர்கள் நியமனத்தின் போது மாநில அரசின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட சில மாநில கட்சிகள் முன்னர் கூறியிருந்தன. ஆனால், மத்திய அரசு இது தொடர்பாக மாநில அரசுகளுடன் பெரும்பாலும் ஆலோசனைகள் நடத்துவது இல்லை.

யூனியன் பிரதேசங்கள் அல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் பெரிய அளவில் மாநில நிர்வாகத்தில் தலையிட முடியாது என்ற நிலையே உள்ளது. எனினும், மாநில அரசியலில் குழப்ப நிலை ஏற்படும் போது, மத்திய அரசு நினைக்கும் முடிவுகளை மாநில ஆளுநர் எடுக்கிறார். இது இப்போதல்ல, காலம் காலமாக இருந்து வரும் நிலைதான்.தொடக்கத்தில், மாநில அரசுகளை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மத்திய அரசு கலைப்பதற்கு ஆளுநர்கள் மிக முக்கியமான உறுதுணையாக இருந்தனர்.

கர்நாடகாவில் 1988-ம் ஆண்டு எஸ்.ஆர் பொம்மை தலைமையிலான ஜனதா கட்சி அரசை, அப்போதைய ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு கலைத்தது. தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று அவர் கூறி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கேட்டும் அரசைக் கலைக்க அப்போதைய ஆளுநர், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இதனை அடுத்து, எஸ்.ஆர் பொம்மை உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கியமாக குறிப்பிடப்படும் இந்த வழக்கில் தான், மாநில அரசுகளை கலைக்க மத்திய அரசுக்கு பல கடிவாளங்களை உச்ச நீதிமன்றம் போட்டது.

எஸ்.ஆர். பொம்மை வழக்கிற்கு பின்னர் மாநில அரசுகளை கலைக்கும் நடவடிக்கைகள் பெருவாரியாக குறைந்தது. எனினும், தேர்தலுக்குப் பின்னர் அரசமைக்க யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்ற சூழலில் ஆளுநர், மத்திய அரசு நினைக்கும் முடிவுகளையே எடுக்கிறார்.

குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால், கர்நாடகாவில் 2018 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், பாஜகவுக்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்திருந்தன.

கர்நாடகா முதல்வராக பதவியேற்கும் எடியூரப்பா


ஆனால், அதிக இடங்களில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைத்தார். மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார்.

15 நாட்கள் அவகாசம் என்பதால், எதிர்த்தரப்பு எம்.எல்.ஏ.க்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்து பெரும்பான்மை வாக்கெடுப்பில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கூறிய காங்கிரஸ் உடனே உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

நள்ளிரவில் நடந்த இந்த விசாரணையில், 24 மணி நேரத்தில் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், தனக்கு பெரும்பான்மை இல்லாததால் எடியூரப்பா ராஜினாமா செய்தார். (பின்னர் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு எடியூரப்பா மீண்டும் முதல்வரானார்)

ஆளுநர் எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்ததுதான் இங்கே மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது. பெரும்பான்மை இல்லை என்று ஆளுநருக்கும் நன்றாகவே தெரியும்? எனினும் 15 நாள் அவகாசம் என்பது எதிர்த்தரப்பு எம்.எல்.ஏ.க்களை உள்ளே இழுக்க தேவைப்படும் கால அவகாசமே. இந்த விவகாரத்தில் மத்திய அரசு நினைத்ததையே ஆளுநர் நிறைவேற்றியுள்ளார்.

இப்படியாக மாநில அரசியலில் தனது நகர்வுகளை மத்திய அரசானது, ஆளுநர்கள் மூலமாக சாத்தியப்படுத்திக் கொள்கிறது. மத்தியில் ஆளும் அரசு ஒருவருக்கு ஆளுநர் பதவி கொடுக்கிறது என்றால், அவர் ஆக்டிவ் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றவராகவே இருப்பார் என்பது பொதுவாக இருக்கும் கருத்து.

பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள்


கட்சிக்காக கடுமையாக உழைத்து, தேர்தல் அரசியல் மட்டுமல்லாமல் இயக்க அரசியலில் பணியாற்றிய சீனியர்கள் பலருக்கும் ஆளுநர் வாய்ப்பு கிடைக்கும். பாஜகவில் அப்படி ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்த பலருக்கு ஆளுநர் பதவி கிடைத்துள்ளது.

இது தவிர தேர்தல் அரசியலில் மிகத் தீவிரமாக இருந்தவர்களுக்கும் பாஜகவில் ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கேரளா பாஜகவில் மூத்த தலைவராக இருக்கும் கும்மணம் ராஜசேகரன் அவர்களில் ஒருவர்.

கும்மணம் ராஜசேகரன்


2019 தேர்தலுக்காக தீவிரமாக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த ராஜசேகரன், 2018 மே மாதம் திடீரென மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த திடீர் ஆளுநர் பதவியை அவரே எதிர்பார்க்கவில்லை.

தனது அதிருப்தியை தெரிவித்தவாறே அவர் ஆளுநராக பதவியேற்க மிசோரத்திற்கு சென்றார். 2019 மக்களவை தேர்தலுக்காக தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக கும்மணம் ராஜசேகரன் திருவனந்தபுரம் தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனை அடுத்து, ஆளுநர் பதவியை ராஜிமானா செய்துவிட்டு, தாமரை சின்னத்திற்கு வாக்குகேட்டு திருவனந்தபுரத்தில் பிரசாரத்திற்கு வந்திறங்கினார் கும்மணம் ராஜசேகரன்.

தேர்தலில் காங்கிரசின் சசி தரூரிடம், தோல்வியடைந்தாலும் 2021-ல் வர உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறார் கும்மணம் ராஜசேகரன்.

கும்மணம் ராஜசேகரன் மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சியின் போது, கர்நாடக முதல்வராக இருந்து பின்னர் மஹாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்ட எஸ்.எம் கிருஷ்ணா, மீண்டும் அரசியலுக்கு திரும்பி வெளியுறவு அமைச்சராக பதவியேற்றார். ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சுஷில் குமார் ஷிண்டே, தேர்தல் அரசியலுக்கு திரும்பி மின்சாரம் மற்றும் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

தூத்துக்குடியில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் தமிழிசை


இவ்வாறாக இருக்கையில், தமிழகத்தில் தாமரையை மலர வைக்க பட்டிதொட்டியெங்கும் சென்று கட்சியை வளர்த்த தமிழிசை, திடீரென ஆளுநராக நியமிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தவே செய்தது.

ஒருவகையில் இது தமிழிசையின் அரசியல் பணிக்காக கிடைத்த கவுரவம் என்று எடுத்துக்கொண்டாலும், இன்னும் குறைந்தது 20 வருடங்கள் தேர்தல் அரசியலில் செயல்படக்கூடிய திறன் கொண்ட ஒருவரை ஆளுநர் பதவியில் அமரவைத்துள்ளனர் என்ற குரல்களும் எழாமல் இல்லை.

இப்படியாக, ஆக்டிவ் அரசியலில் இருந்த ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் தேர்தல் அரசியலுக்கு திரும்புவது புதிது அல்ல என்ற நிலை இருக்கையில், தமிழிசையும் 2021-ம் ஆண்டில் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மீண்டும் அரசியலுக்கு திரும்பினாலும் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

பாஜகவை தமிழகத்தில் பிரபலப்படுத்தியதில் தமிழிசைக்கு முக்கிய இடம் இருப்பதால், தேர்தல் நேரத்தில் அவரால் கட்சிக்கு பலம் கிடைக்குமேயானால், தமிழிசையை மீண்டும் அரசியலுக்கு கட்சித்தலைமை அழைக்க வாய்ப்பு இருக்கிறது.

First published: September 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்