ஜெயலலிதாவை வீழ்த்திய கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் - பா.ஜ.கவுக்கு சட்டமன்றத் தேர்தலில் கைகொடுக்குமா?

ஜெயலலிதாவை வீழ்த்திய கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் - பா.ஜ.கவுக்கு சட்டமன்றத் தேர்தலில் கைகொடுக்குமா?

பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு

பா.ஜ.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட அறிவிப்பு தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் இலவச அறிவிப்புகள் தமிழகத்தில் கவனம் ஈர்த்துள்ளன. இந்தநிலையில், நேற்று வெளியான பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள கட்டாய மத மாற்றத் தடைச் சட்டமும் அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளது. இந்தநேரத்தில், ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு கொண்டுவந்த கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் அந்த நேரத்தில் எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.

தமிழகத்தில் 1991-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு காலகட்டத்தில் ஜெயலலிதா ஆறு முறை முதல்வராக பதவிவகித்துள்ளார். குறிப்பாக, அவர், 15 ஆண்டுகள் வரை அவர் தமிழகத்தின் முதல்வராக பதவிவகித்துள்ளார். 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அவர் கொண்டு வந்த இரண்டு சட்டங்கள் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அவருக்கு எதிராக மிகப்பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு கட்டாய மதமாற்ற தடை மசோதாவை அறிமுகம் செய்தது. அந்த மசோதாவில், ‘ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்துக்கு கட்டாயப்படுத்தி, ஆசை வார்த்தைகள் கூறி, பண ஆசை காட்டி மதம் மாற்றுவது குற்றச் செயல்.

ஜெயலலிதா


இதுபோன்ற செயலில் ஈடுபட்டு கைதாகும் நபர்களுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 18 வயதுக்கு கீழ்உள்ளோர், பெண்கள் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களை மதம் மாற்றினால், மதம் மாற்றியவர்களுக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அபராதம் 1 லட்ச ரூபாய் விதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மசோதாவுக்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தி.மு.க, காங்கிரஸ், பா.ம.க, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தார்கள். இந்த மசோதாவுக்கு எதிராக கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத அமைப்புகள் 2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. போராட்டத்தின் முடிவில் சென்னையில் பிரம்மாண்டமான மாநாடும் நடத்தப்பட்டது.

தரிசன கட்டணம் ரத்து... ஹிந்துக் கோயில்களுக்கு தனி வாரியம் - பா.ஜ.க தேர்தல் அறிக்கை




கருணாநிதி


இந்த மாநாட்டில் அப்போதைய தி.மு.க தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இருப்பினும், எதிர்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அந்த மசோதா 2002-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா குறித்து பேசிய ஜெயலலிதா, ‘கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் எந்த ஒரு மதத்தையோ அல்லது சிறுபான்மை இனத்தையோ மனதில்வைத்து கொண்டுவரப்படவில்லை. வற்புறுத்தியும், ஆசை காட்டியும், ஏமாற்றியும் மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்கள் மட்டுமே இந்தச் சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள். கடந்த 1981-ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் ஏராளமான பட்டியலின மகள் வற்புறுத்தலின்பேரில் இஸ்லாமிய மதத்துக்கு மாறினர். 1982-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் ஏற்பட்ட கலவரத்துக்கு மதமாற்ற முயற்சிதான் காரணம் என்று கண்டறியப்பட்டது. அதனால்தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்று விளக்கம் அளித்தார். கட்டாய மத மாற்றத் தடைச் சட்டமும் நிறைவேறியது.

இந்தச் சட்டத்துக்கு இந்தியாவைக் கடந்து போப் வரையில் எதிர்ப்பு நீடித்தது. 2003-ம் ஆண்டு ஜூன் மாதம், கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்துக்கு அப்போதைய போப் இரண்டாம் ஜான் பால் கண்டனம் தெரிவித்தார். போப்பின் கருத்துக்கு பதிலளித்த ஜெயலலிதா, ‘இரண்டாம் ஜான் பால் மதத் தலைவராக இருந்தாலும், ஒரு ஜனநாயக அரசு நிறைவேற்றிய சட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என்று காட்டமாக விமர்சனம் செய்தார். கடும் எதிர்ப்புகளை மீறியும் அந்தச் சட்டத்தில் மிக உறுதியாகவே இருந்தார். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் அந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, பா.ஜ.க மட்டும் அப்போது அந்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது.

அதன்பின்னர், 2003-ம் ஆண்டு கோயில்களில் ஆடு, கோழி பலி கொடுப்பதைத் தடைசெய்து சட்டம் இயற்றினார். ஆலயங்களில் உயிர் பலியிடத் தடை என்ற பெயரில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்துக்கும் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், 2004-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஜெயலலிதா அரசே இந்தச் சட்டத்தை நீக்கியது. பின்னர், 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி படுதோல்வி அடைந்தது. தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. இந்த படுதோல்விக்குப் பிறகு, 2004-ம் ஆண்டு மே மாதம் 18-ம் தேதி கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை அவரச் சட்டத்தின் மூலம் நீக்கினார். ஆனால், அதனைத் தொடர்ந்து கூடிய சட்டப்பேரவைத் தொடரில் கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை நீக்கும் சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதனையடுத்து, 2006-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு, ஆட்சிக்கு வந்த உடனே, 2006-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி கட்டாய மத மாற்ற தடை நீக்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பா.ஜ.க தேர்தல் அறிக்கை


தமிழகத்தில் வலிமையான தலைவராக திகழ்ந்த ஜெயலலிதாவையே வீழ்த்திய சட்டம் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம். இந்தநிலையில், பா.ஜ.க அவர்களது தேர்தல் வாக்குறுதியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளது. இது அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்திருப்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் பாதிக்கப்படும் என்று கருத்துகள் எழுந்துள்ள நிலையில், கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட அறிவிப்பு மேலும் பின்னடைவைத் தரும் என்று கணிக்கப்படுகிறது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: