மோடிக்கும் சித்தராமையாவுக்கும் இடையிலான போட்டியாக மாறிய கர்நாடக தேர்தல்

DP Satish | news18
Updated: May 4, 2018, 1:55 PM IST
மோடிக்கும் சித்தராமையாவுக்கும் இடையிலான போட்டியாக மாறிய கர்நாடக தேர்தல்
பிரதமர் மோடி - கர்நாடக முதல்வர் சித்தராமையா
DP Satish | news18
Updated: May 4, 2018, 1:55 PM IST
கர்நாடகத் தேர்தல் மோடிக்கும், ராகுலுக்கும் இடையிலான போட்டியாக இருக்கும் என்று பாஜக தலைமை கருதியது. ஆனால், கர்நாடக தேர்தல் களம் தற்போது பிரதமர் மோடிக்கும், முதலமைச்சர் சித்தராமையாவுக்கும் இடையிலான போட்டியாக மாறி உள்ளது. மாநிலத் தேர்தல் என்பது மாநிலப் பிரச்னைகள் குறித்த விவாதங்களைக் கொண்டிருக்க வேண்டுமே அன்றி, தேசியப் பிரச்னைகளை விவாதிக்கும் களமாக இருக்கக் கூடாது என்று அரசியல் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை தொடங்கியவுடன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஒரு சவால் விடுத்தார். அதாவது, சித்தராமையா அரசின் சாதனைகளை ஒரு 15 நிமிடம் பேப்பர் இல்லாமல் பேச முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். பிரதமரின் இந்த விமர்சனம் வெளியான சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் அதற்கு பதில் கூறியது. ஆனால், பதில் ராகுல் காந்தியிடமிருந்து வரவில்லை. முதலமைச்சர் சித்தராமையாவிடம் இருந்து வந்தது. “கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியின் சாதனைகளை ஒரு 15 நிமிடம் பேப்பரை பார்த்தாவது பேச முடியுமா?” என்று எதிர் சவால் விடுத்ததை காங்கிரஸ் ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ ஆகப் பார்த்தது.

பாஜகவைப் பொறுத்தவரை இந்த தேர்தல் பிரச்சாரத்தை, மோடி - ராகுல் போட்டியாக மாற்ற கடினமாகப் போராடி வருகிறது. மோடியும், சித்தராமையாவையோ அல்லது மாநில காங்கிரஸையோ விமர்சிப்பதைக் காட்டிலும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்வதிலேயே குறியாக இருக்கிறார். எடியூரப்பா தலைமையிலான மாநில பாஜக, சித்தராமையா அரசுக்கு எதிரான விமர்சனங்களை வாக்காளர்களிடம் சரியாக கொண்டு சேர்க்கவில்லை என்பதை பாஜக-வின் தேசிய தலைமை நன்கு உணர்ந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆகவே, சித்தராமையா அல்லது மாநில காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பதைக் காட்டிலும், ராகுல் காந்தியை விமர்சிப்பதே கூடுதல் பலன் தரும் என்று பாஜக தலைமை கருதுவதாகவும், எனவே தற்போது கர்நாடகாவில் நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சாரம், மக்களவை தேர்தல் களம் போல தேசிய அளவிலான பிரச்சனைகளே அதிகம் பேசப்படுகின்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

மோடியா? ராகுலா? என்ற போட்டிக்கு பாஜக இழுக்கிறது என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைமை நன்கு அறிந்து வைத்துள்ளது. எனவே பாஜகவின் இந்த வலையில் சிக்காமல், மோடியை சமாளிக்க சித்தராமையாவை பணித்துள்ளது. சித்தராமையாவும் மோடியை கேள்விக் கணைகளால் துளைத்து வருகிறார். “மாநில பாஜகவுக்கு பெரிதாக மதிப்பு இல்லை. இந்த தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்று தேர்தலுக்கு முன்பே அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே அவர்களின் ஒரே நம்பிக்கை பிரதமர் மோடிதான். இதற்கு முந்தைய பாஜக அரசை பற்றி பேச எதுவும் இல்லை. ஏனென்றால் அது ஊழல் மற்றும் குற்றங்கள் நிறைந்த ஒரு ஆட்சியாக இருந்தது என்பது மோடிக்கும் நன்றாகத் தெரியும்” என்று மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கூறினார். மேலும் பேசிய அவர், சித்தராமையா அரசு சிறப்பாக செயல்பட்டதாகவும், இந்தத் தேர்தலிலும் வெல்லும் வலிமையோடு இருப்பதாகவும் கூறினார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலை மோடி மற்றும் ராகுல் காந்திக்கு இடையேயான போட்டியாக மாற்ற நினைக்கும் பாஜகவின் உத்தி கர்நாடக மக்களிடையே எடுபடவில்லை. “நடைபெறவுள்ள தேர்தல் மாநில சட்டசபைக்கானதே தவிர, நாடாளுமன்றத்திற்கானது அல்ல. இங்கு தேசியப் பிரச்னைகளை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. ராகுல் காந்தியோ, நரேந்திர மோடியோ இங்கு ஒரு பிரச்னை இல்லை. இங்கு சித்தராமையாவா, எடியூரப்பாவா, குமாரசாமியா என்பதுதான் பிரச்னை. அதைப் பேசுங்கள்” என்கிறார் அரசியல் நோக்காளர் ராமசந்திர மகாருத்ரப்பா.

பாஜக, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளுக்குமே மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படும் இந்த தேர்தலில் பாஜக, மோடி மூலம் ஒரு ஆதரவு அலையை உருவாக்கலாம் என்று நம்புகிறது. அதனால்தான், மோடி ஏற்கெனவே ஒப்புக்கொண்ட 5 நாட்களில் 15 பேரணிகள் என்பதை 8 நாட்களில் 21 பேரணிகள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது அக்கட்சியின் தலைமை. அதேபோல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பயன்படுத்தி தனது இந்துத்துவ ஆதரவாளர்களையும் வேகப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. பாஜகவின் முதல்வர் வேட்பாளர் பி.எஸ்.எடியூரப்பா, தேசியத் தலைவர்களை முன்னிறுத்தி பிரச்சாரத்தை நகர்த்திவருகிறார். அதோடு மோடி தலைமையில், அவரை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். “நரேந்திர மோடி எங்களுடைய மறுக்கமுடியாத தலைமை. நாட்டின் உயர்ந்த தலைவர். அவருடைய அதிரடியான பிரச்சாரத்தால் நாங்கள் கர்நாடகாவில் நிச்சயம் ஆட்சியமைப்போம்” என்கிறார் எடியூரப்பா. இந்தத் தேர்தலை, ராகுல் - மோடிக்கு இடையேயான போட்டியாக மாற்ற பாஜக முனைகிறது என்ற அரசியல் நோக்கர்களின் குற்றச்சாட்டை எடியூரப்பா மறுத்துள்ளார். “ராகுல் காந்திக்கு இந்த தேர்தலில் எந்த ஒரு பங்கும் இருக்கப் போவதில்லை. மோடியோடு சித்தராமையாவை ஒப்பிடுவது தவறு. நாங்கள் அவர்களைப் பற்றி கவலைப்படுவதே இல்லை” என்கிறார் எடியூரப்பா.

ஆனால் சித்தராமையா சரியாக மாநிலப் பிரச்னைகளை மட்டுமே பேசிவருகிறார். அவர் ஒரே நேரத்தில் மோடி மற்றும் எடியூரப்பாவை தாக்கிப் பேசி வருகிறார். ஊழல்களையும், ஊழல் தலைவர்களையும் மோடி ஊக்குவிப்பதாக விமர்சனம் செய்கிறார். தேசியப் பிரச்னைகளைப் பேசாமல், மாநிலப் பிரச்னைகளை விவாதிக்கத் தயாரா என்று சவால் விடுக்கிறார். “மோடி நூறு முறை திரும்பத் திரும்ப வந்தாலும், நிலைமை மாறப்போவதில்லை. காங்கிரஸ்தான் இங்கு திரும்ப ஆட்சியமைக்க உள்ளது” என்கிறார் சித்தராமையா. “மாநில பாஜக ஊட்டசத்து இல்லாமல் இருக்கிறது. தேர்தல் வரையாவது கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்க டெல்லியில் இருந்து டானிக் கொண்டுவருகிறார் மோடி” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.
Loading...
- DP Satish, Senior Editor, Network 18
First published: May 3, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்