மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்த 44 திட்டங்கள்: செவிசாய்க்காத பெங்களூரு போக்குவரத்து கழகம்

பெங்களூரு சாலை

  • Share this:
-கபில் கஜால்
பெருநகர பெங்களூரு மாநகராட்சி எல்லைப் பகுதியில் ஏற்படும்  மாசு அளவை குறைக்க கபில் கஜால் தலைமையிலான கர்நாடக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 44 திட்டங்களை வகுத்துக் கொடுத்தது. ஆனால் அந்த திட்டங்களை பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுத்தவில்லை என கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

வாகன நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், தனியார் மற்றும் பொதுப்போக்குவரத்து வாகனங்களை கண்காணிக்க ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும், இதை செய்வதன்  மூலம் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் மாநகரின் மாசு அளவை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடியும் என  மாசுக்கட்டுப்பாட்டு துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ள திட்டங்கள், நடைமுறைக்கு ஏற்றதாக இல்லை என கூறப்படுகிறது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 44 திட்டங்களில் 10 திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநில போக்குவரத்துக் கழகம், போக்குவரத்து காவல்துறை, பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம், கர்நாடக மாநில சாலை போக்குவரத்து கழகம் ஆகிய துறைகளுக்கு கொடுத்த காலக்கெடு ஏற்கனவே முடிந்துவிட்டது.

இரட்டை இயக்க பொறிகள் (two stroke)உள்ள வாகனங்களின்  இயக்கத்தை படிப்படியாக  மார்ச் மாதத்திற்குள் குறைக்க மாநில போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தது. இதில் பெங்களூரு மாநகராட்சிக்குள் இயங்கும் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் அனைத்தும் இரண்டு எரிபொருள் (LPG+Petrol) கொண்டு இயங்கும் ஆட்டோ ரிக்‌ஷாக்களாக மாற்றப்பட்டு விட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியமே கூறுகிறது.

ஆனால்  பெங்களூருவில் இரட்டை இயக்க பொறிகள் (two stroke) என்ஜின் கொண்ட ஆட்டோ ரிக்‌ஷாக்கள்  தற்போது இருபத்தி ஐந்து ஆயிரத்துக்கு மேல் இருப்பதாக ஆட்டோ  ரிக்‌ஷாக்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் தரும் தரவுகள் தெரிவிக்கிறது. இந்த சங்கத்தின் செயலாளர் சம்பத் கூறுகையில் “நான்கு இயக்க பொறிகள் (four stroke) என்ஜின் உள்ளதாக தங்களது ஆட்டோக்களை மாற்ற அனைத்து ஆட்டோ ஓட்டுநராலும் இயலாது. ஏனென்றால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டும்  எனவும்  அவ்வாறு கொடுக்க முடியாதவர்களுக்கு அரசு ஏதேனும் மானியம் அளித்தால் உதவியாக இருக்கும்" என தெரிவித்தார்.

வாகனங்களின் மாசு அளவை சோதிக்கும் பரிசோதனை மையங்களில் உள்ள உபகரணங்களின் செயல்திறனை ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது சரிபார்க்க வேண்டும். இந்த பணிகள் டிசம்பர் 2019 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகள் எதையும் மாநில போக்குவரத்து கழகம் செய்யவில்லை.

மாசு அளவை கண்டறிய கணினி இயக்கத்தின் அடிப்படையில் உள்ள ரிமோட் சென்சார் கருவிகளை பொருத்தும் பணிகள் நடைபெறவில்லை. டீசல் வாகனங்களுக்கு மறுபயன்பாடு செய்யும் வகையில் உள்ள துகள் வடிப்பான்களை பொருத்தும் பணிகளும் மார்ச்க்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இந்த பணிகள் அனைத்தும் முழுமையாக நடைபெறவில்லை.

பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம், மின்சார பேருந்துகளை வாங்கும் நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பி.எஸ் 3 வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து பி.எஸ்.4 வாகனங்களின் எண்ணிக்கையை ஜூன் 2019 க்குள் அதிகப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் நகரில் தற்போது 3000 பி.எஸ்.3 மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுவரை ஒரு மின்சார பேருந்து கூட இயக்கப்படவில்லை எனவும் தெரிகிறது.

பி.எஸ் 3 ரக வாகனங்களை 2011 ஆம் ஆண்டு வாங்கியதால் அதன் தேய்மான காலமான 11 ஆண்டுகள் பயன்படுத்த வேண்டியுள்ளது. அல்லது 8.5 லட்சம் கிலோ மீட்டர் ஓடிய பேருந்தை போக்குவரத்து கழகத்தில் இருந்து நீக்க வேண்டும்.

”இயற்கை எரிவாயு மூலம் இயங்கக்கூடிய பேருந்துகளை வாங்க பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகத்திற்கு தேவையான கால அவகாசம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் அதை ஏற்காமல் மின்சார பேருந்துகள் வாங்க இருப்பதாக தெரிவித்தனர். அவர்கள் அதையும் செய்யவில்லை” என மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை அறிவியல் அதிகாரி லோகேஸ்வரி தெரிவித்தார்.

பெங்களூரு மாநகரில் அதிக வாகன நெரிசல் எங்கு ஏற்படுகிறது என ஒரு ஆய்வு நடத்த வேண்டும் என போக்குவரத்து காவல்துறைக்கு கூறப்பட்டிருந்ததது. ஆய்வின் முடிவில், நகரில் 7 இடங்களில் அதிக வாகன நெரிசல் ஏற்படுவதாக போக்குவரத்து காவல்துறை கண்டறிந்தது.

அதிக வாகன நெரிசல் ஏற்படும் சாலைகளாக தும்கூர் சாலை, பெல்லாரி சாலை, கனகபுரா சாலை, மைசூர் சாலை, ஒசூர் சாலை, பழைய மெட்ராஸ் சாலை, பன்னருகட்டா சாலை ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த சாலைகளில் வாகன நெரிசலைக் குறைக்க மாநிலப் போக்குவரத்து கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தினமும் நெடுந்தொலைவு வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை காணமுடிகிறது.

அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும் இணைக்கும் மாநகர பகுதியில் புறநகர் பேருந்துகளுக்கு என பேருந்து நிறுத்தம் கட்ட வேண்டும். அவ்வாறு செய்தால் நகருக்குள் புறநகர் பேருந்துகள் வரும்போது வாகன நெரிசலும் கட்டுப்படுத்தப்படும். ஒசூர் சாலை, பழைய மெட்ராஸ் சாலை, மாகடி சாலை, நெலமங்கலா சாலை, கனகபுரா சாலை, பெல்லாரி - ஹைதராபாத் சாலையில்  அமைந்துள்ள எலகங்கா என்ற இடம் உள்ளிட்ட பகுதிகளில் புறநகர் பேருந்துகளுக்கு என தனி பேருந்து நிறுத்தம் டிசம்பர் 2020 ஆம் ஆண்டிற்குள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்து. ஆனால் இதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் கூட இன்னும் நிறைவடையவில்லை என்பதே கசப்பான உண்மை.

“மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் 44 திட்டங்கள் சரியானதாக இல்லை, அந்த திட்டங்களால் மாற்றம் ஏற்படபோவதில்லை எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர் சந்தீப் அனிருதன் தெரிவித்தார். மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடைமுறைபடுத்த முடியாத திட்டங்களை வகுத்திருக்கவேண்டும் அல்லது இதில் சம்மந்தப்பட்ட துறைகள் சரியாக செயல்படவில்லை. மொத்தத்தில் பெங்களூரு மாநகராட்சியின் மாசு அளவு அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது” என சந்தீப் குற்றஞ்சாட்டுகிறார்.

(இந்த செய்தியின் எழுத்தாளர் 101Reporters.com-ன் அங்கத்தினர்.)
Published by:Karthick S
First published: