Home /News /special-articles /

ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பின் நன்மைகள் - ஒரு பார்வை

ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பின் நன்மைகள் - ஒரு பார்வை

Aadhar Card

Aadhar Card

Aadhaar Voter Id Link | நீதிமன்றம் தடை கொடுப்பதற்கு முன் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். இதனால் அவ்விரு மாநிலங்களிலும் 55 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டனர்.

    இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையில் மாற்றம் கொண்டு வருவதற்குத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்றார்போல, குடிமக்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இதன்படி, ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாலும் இது கட்டாயமாக்கப்படாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வாக்காளர்களில் வெவ்வேறு முகவரிகளில் வசிப்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதன் மூலம் முறைகேடுகள் களையப்படும் எனவும் கூறப்படுகிறது.

    திட்டத்தின் முன்னோடிகள் 

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் நாட்டில் உள்ள பெரும்பாலான போலி வாக்காளர்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றும், தேர்தல் தரவுத்தளத்தை தெளிவானதாக மாற்றும் என்றும் 2012-ஆம் ஆண்டு முதன் முதலாக யோசனையை முன்வைத்தவர் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் HS பிரம்மா. தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவதற்கு முன்பே, 2012-ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக இந்த நடவடிக்கையை முன்மொழிந்தார். இவரை தொடர்ந்து முன்னாள் நிதிச் செயலாளரும், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UDAI) முன்னாள் தலைவருமான அஜய் பூஷன் பாண்டே ஆதார் கார்டு - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு பற்றிய யோசனையை முன் வைத்தார். அதன் பிறகே இந்த யோசனை செயல்வடிவம் பெறத்தொடங்கியது.

    ஆதாரை இணைக்கும் திட்டத்தின் முதல்படி 

    2014 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் தேசிய வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்துதல் மற்றும் அங்கீகரிப்புத் திட்டம் என்று பெயரிடப்பட்டது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்கும் முதல் சோதனையானது ஐஏஎஸ் அதிகாரி அகமது பாபுவால், நவம்பர் 2014-இல் தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மற்றும் ஹைதராபாத் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. இதில் போலி வாக்காளர்கள் விவரங்களை நீக்கி, தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைக்க உதவியது. இதில் வெற்றி காணப்பட்டதை தொடர்ந்து 2015-ஆம் ஆண்டு தேசிய திட்டமாக மாறியது.



    ஆதார் இணைப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு 2015-ஆம் ஆண்டில் ஆதார் எண்ணையும் வாக்காளர் அடையாள அட்டையையும் இணைக்க மத்திய அரசு திட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஆதாரையும் வாக்காளர் அடையாள அட்டையையும் இணைப்பதாகத் தெரிவித்தனர். இதில் தலையிட்ட நீதிமன்றம் ஆதார் விவரங்களை சமூக நலத்திட்டங்களைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என தீர்ப்பளித்து இடைக்கால தடை விதித்தது.

    Also Read : PAN Card ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது? 5 நிமிடம் போதும்...

    2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. நீதிமன்றம் தடை கொடுப்பதற்கு முன் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். இதனால் அவ்விரு மாநிலங்களிலும் 55 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டனர். அப்போதைய ஆந்திர மற்றும் தெலுங்கானாவின் தலைமைத் தேர்தல் அதிகாரி தெலுங்கானாவில் 40 லட்சம் வாக்காளர்களையும், ஆந்திராவில் 25 லட்சம் வாக்காளர்களையும் நீக்கினார். அப்போது வாக்காளர்களுக்குத் தெரிவிக்காமல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.



    2018 தெலுங்கானா சட்டமன்றத் தேர்தல்

    2018 ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலின் போது, தெலுங்கானா தலைமை தேர்தல் அதிகாரி போலி வாக்களார் நீக்கம் குறித்து எச்சரிக்கப்பட்டார். பல அரசியல் கட்சிகள் இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றன.  டிசம்பர் 2018 தேர்தல் நாளில்,  குளறுபடியான தகவல் கொண்ட 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க முடியவில்லை. எனவே வாக்காளர் ஐடிகளை ஆதாருடன் இணைக்க, தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர் தரவையும் ஆந்திர மற்றும் தெலுங்கானாவில் உள்ள அரசாங்கத்துடன் பகிர்ந்துள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுகள் ஏற்கனவே இருக்கும் ஆதார் எண்களை அரசாங்க தரவுத்தளங்களில் இருந்து பயன்படுத்தின. அவர்கள் மக்களிடம் சொல்லவோ அனுமதி கேட்கவோ இல்லை.



    2019 பொதுத் தேர்தலின் போது, வாக்காளர் விவரங்கள், மாநிலக் குடியுரிமை தரவு மையத்தின் அனைத்துத் தரவுகளும் தெலுங்கு தேசம் கட்சிக்கு கசிந்தன. இது தொடர்பாக எதிர்க்கட்சியான YSR காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு புகார்கள் வந்தன. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பொதுவான தரவுத்தளங்கள் இருப்பதால், தெலுங்கானா குடியிருப்பாளர்களின் தரவு கூட கசிந்தது. இது தொடர்பாக ஆந்திர தலைமை தேர்தல் அதிகாரியை விசாரிக்க தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது. இறுதியில் ஆதார் தரப்பில் இருந்தும், தேர்தல் ஆணையத்தின் தரப்பில் இருந்தும் தவறு நடக்கவில்லை என்றும், மாநில தரவு மையத்தில் ஏற்பட்ட குளறுபடியால் வாக்காளர் விவரம் கசிந்ததும் உறுதியானது.



    ஆதார்-வாக்காளர் அடையாள அட்டை இணைப்பின் நன்மைகள் 

    வாக்காளர் பட்டியலைப் பொறுத்தவரையில் அனைத்தும் வெளிப்படையாகவே உள்ளன. இது இணையத்தளத்திலேயே கிடைக்கிறது. இது ஒன்றும் மறைக்கப்பட்ட ஆவணம் கிடையாது. மேலும், தற்போதும் சிலருக்கு நான்கைந்து இடங்களில் வாக்குகள் உள்ளன. இதனை சரி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அளவுக்கு குறைபாடுகள் உள்ளன. எனவே, தவறு நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தல் சீர்திருத்த மசோதாவில் உள்ள நல்ல விஷயங்களில் ஒன்று கள்ள ஓட்டு போட முடியாது என்பதுதான். அதுதான் சில கட்சிகளுக்கு வேதனையைக் கொடுக்கிறது. காரணம், கைரேகையை தணிக்கை செய்ய முடியும். சிம்கார்டு வாங்குவதற்கு கைரேகை கட்டாயமாக்கப்பட்டதால் போலி சிம்கார்டுகள் ஒழிக்கப்பட்டன என்பதையும் பார்க்க வேண்டும்.

    Also Read : போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கா? அப்ப இந்த அப்டேட் பற்றி நீங்க தெரிஞ்சுக்கணும்!

    வாக்காளர்களில் இறந்து போனவர் விவரங்கள், பெயர் சேர்த்தல், நீக்குதல் என அனைத்தையும் சீரமைப்பதற்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் முகாம் அமைத்து இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. அவற்றை எல்லாம் முறைப்படுத்துவதற்கு தேர்தல் சீர்திருத்த மசோதா அவசியமாகிறது. மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்கின்ற இன்றைய எதிர்கட்சிகளின் மனநிலை இந்தியாவின் வளர்ச்சியை பல தசாப்தங்கள் பின்னோக்கி எடுத்து சென்று விடும்.

    கட்டுரையாளர் - எஸ்.ஜி.சூர்யா , தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர்

    (கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரையே சேரும்..)
    Published by:Arun
    First published:

    Tags: Aadhaar card

    அடுத்த செய்தி