• HOME
  • »
  • NEWS
  • »
  • special-articles
  • »
  • மாநில சுயாட்சி.. கலகக் குரலா?.. உரிமை முழக்கமா?

மாநில சுயாட்சி.. கலகக் குரலா?.. உரிமை முழக்கமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மாநில சுயாட்சி முழக்கத்தை பேரறிஞர் அண்ணா வலியுறுத்தினார். அதை திராவிட இயக்கங்கள் தொடர்கின்றன.

  • Share this:
திராவிட நாடு  கோரிக்கையை கைவிடுகிறோம். ஆனால், இந்த  கோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்று 1962ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா சொன்னார். இதைத் தொடர்ந்து மாநில சுயாட்சிக் கோரிக்கையை அண்ணா அழுத்தமாக முன் வைத்தார். தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு 16வது பொதுத் தேர்தல் நடைபெறும்  வேளையிலும் மாநில சுயாட்சி பேசு பொருளாக இருக்கிறது. முக்கிய கட்சிகளின் தேர்தல் முழக்கமாகவும் இருக்கிறது.

அது என்ன மாநில சுயாட்சி...? இப்போது மாநில சுயாட்சி இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.கொஞ்சம் விரிவாகவும் பின்னோக்கியும் போகலாம் வாருங்கள்..

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி இந்தியா கூட்டாட்சி (Federalism) நாடாகும். பல மாநிலங்களின் ஒன்றியம் (Union of states) இந்தியா. ஆசிய கண்டத்தில் இருந்தாலும் இந்தியாவை ஒரு துணைக் கண்டம் என்கிறோம். ஏனெனில், ஒவ்வொரு மாநில மக்களும் தனித்த தேசிய இனங்களாக, தங்களுக்கென தனியாக மொழி, பண்பாடு, கலாச்சாரத்தைக் கொண்டு, ஒரு நாடு போன்றுள்ளனர்.
நிர்வாக வசதிக்காக இந்திய ஒன்றிய அரசின் (புரிதலுக்காக இனி மத்திய அரசு என்றே குறிப்பிடப்படும்) அதிகாரப் பட்டியல், மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியல், இரண்டுக்கும் பொதுவான பட்டியல் (Concurrent list) என்று 3 வகையாக அதிகாரங்கள் அரசமைப்பின் 7வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, நாட்டின் எல்லை, பாதுகாப்பு, ராணுவம், நிதி, வெளியுறவு, அணுசக்தி, வான், கப்பல் போக்குவரத்து  உள்ளிட்ட 100 துறைகள் மத்திய அரசிடம் உள்ளன. இத்துறைகளில் மத்திய அரசு மட்டுமே முடிவுகள் எடுக்க முடியும். தேவையான சட்டங்களை இயற்றலாம். ஆரம்பத்தில் 97 துறைகள் இருந்தன.

பேரறிஞர் அண்ணா


காவல், சட்டம் ஒழுங்கு, பொது சுகாதாரம், உள்ளாட்சி, சிறைத்துறை,  பொது வழிபாடு, மது விற்பனை  உள்ளிட்ட 61 துறைகள் மாநில அரசுப் பட்டியலில் உள்ளன. இத்துறைகளில் மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம். தேவையான சட்டங்களை இயற்றலாம். ஆரம்பத்தில் கல்வி, விளையாட்டு, வனம் உள்ளிட்ட 66 துறைகள் இருந்தன. நெருக்கடி நிலை காலத்தில் (1976ல்) கல்வி உள்ளிட்ட 5 துறைகள் பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்டன. இப்போதும் தொடர்கிறது. வனம், மின்சாரம், தொழில் உள்ளிட்ட 52 துறைகள் பொதுப்பட்டியலில் உள்ளன. இத்துறைகள் குறித்து இருமாநில அரசுகளும் சேர்ந்து முடிவு செய்யலாம். சட்டம் இயற்றலாம்.

ஜனநாயகத்தின் அடிப்படையான அதிகாரப் பகிர்வு என்பது   நடைமுறையில் இல்லாமல், மத்திய அரசிடமே அதிகாரங்கள் குவிந்துள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாகவே இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலும் அவர்களின் இசைவு பெற்றே செயல்பட வேண்டியுள்ளது. இது முழுமையான கூட்டாட்சி அல்ல. கூட்டாட்சி போன்றது (Quasi federal)   என்று K.C.வியார் போன்ற அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தெளிவாக சொல்வதென்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருந்தாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் செயல்பட முடியும். குறிப்பாக முதலமைச்சர் இருக்க, மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர் ஒப்புதலின்றி எதுவும் இங்கு நடைமுறைக்கு வராது. இன்னும் குறிப்பிட்டு சொல்வதென்றால், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் (NEET) தேர்வை ரத்து செய்யக் கோரியும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்தும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் மத்திய அரசின் ஒப்புதலின்மையால் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள  பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்கள், பல்கலைக்கழகங்களின் வேந்தருமாகவும் உள்ள மாநில ஆளுரின் ஒப்புதலின்றி நடக்காது. பிற மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பா,  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட போது எழுந்த சர்ச்சைகள். எண்ணெய் எடுப்பு போன்ற திட்டங்களுக்கு மாநில அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அனுமதி தேவையில்லை என்கிற நிலை. விவாதத்திற்குள்ளாகியுள்ள புதியக் கல்விக் கொள்கை. கல்வித்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் வலிந்து திணிக்கப்படும் இந்தி.மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில்  3 வேளாண் திருத்தச் சட்டங்களை இயற்றியுள்ளது. உள்ளிட்டவை பெரும்பான்மை மக்களின் விருப்பத்திற்கு மாறாக மட்டுமின்றி மாநில அரசின் உரிமையை புறக்கணிப்பதாகவும் உள்ளன.

மத்தியில் ஆளும் கட்சி அல்லது அக்கட்சி கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. அங்கு மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது என்பதையும், வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றை மத்திய அரசுகள் தவறாகப் பயன்படுத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து கொண்டிருக்கிறது. அதிக வரி வருவாயை மத்திய அரசுக்கு கொடுத்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மிகக் குறைவாக திரும்ப கிடைக்கிறது. குறிப்பாக, GST வரி வருவாயில் தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய தொகையை மத்திய அரசு தரவில்லை என்றும் நிதிநிலை அறிக்கையில் துணை முதலமைச்சரே தெரிவித்துள்ளார். ஒக்கி, கஜா, நிவர், புரேவி என புயல் சேதத்திற்கு கேட்டதை விட சொற்ப அளவே நிவாரண நிதி கொடுத்தது மத்திய அரசு.

அண்மைக்காலமாக தமிழ்நாடு மட்டுமின்றி மேற்கு வங்கம்,  மகராஷ்ட்ரா, ஆந்திரா,  தெலங்கானா, டில்லி, புதுச்சேரி மாநிலங்களில் மத்திய அரசு மற்றும் ஆளுநர்களின் தலையீடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. டில்லி மாநில அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்  அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதையடுத்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின், அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்துக் கொண்டுள்ளது.

*நாட்டின் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மத்திய அரசு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
*சுதந்திரத்திற்கு பிறகு மத்திய, மாநில அரசுகளின் உறவு தற்போது மிகவும் மோசமாகியுள்ளது* என்று தெரிவித்துள்ளதை எளிதில் கடந்து போக முடியாது. எனவே, வெளியுறவு, பணம் அச்சடிப்பு, எல்லைப் பாதுகாப்பு, ராணுவம், தொலைத் தொடர்பு  உள்ளிட்ட துறைகளை மத்திய அரசும்கல்வி, மருத்துவம், வேளாண்மை,  காவல், வருவாய் ஈட்டல்  உள்ளிட்ட துறைகள் முழுமையாக மாநில அரசின் தன்னாட்சி அதிகாரமாக இருக்க வேண்டும். இவற்றை உணர்ந்து மாநில சுயாட்சி முழக்கத்தை பேரறிஞர் அண்ணா வலியுறுத்தினார். அதை திராவிட இயக்கங்கள் தொடர்கின்றன.

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்கிற முழக்கத்தையும் முன் வைத்துள்ளனர். அண்ணாவிற்கு பிறகு முதலமைச்சராகிய மு.கருணாநிதி, மாநில சுயாட்சி மாநாட்டை நடத்தினார். அண்டை மாநில முதலமைச்சர்களின் ஆதரவையும் பெற்றார். மாநில சுயாட்சி  குறித்து ஆராய அமைக்கப்பட்ட நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையிலான குழு 1971ம் ஆண்டு மே 27ம் தேதி 380 பக்க பரிந்துரையை  அறிக்கையாக கொடுத்தது. இதில், அரசமைப்புச் சட்டத்தில் 7வது அட்டவணையில் உள்ள அதிகாரங்களை திருத்தம் செய்ய வேண்டும்.  மாநிலங்களுக்கு சட்டமியற்றும் அதிகாரம் வேண்டும். மாநில அரசுகளிடம் கலந்தாலோசனை செய்த பிறகே ஆளுநர்களை நியமிக்க வேண்டும். நதிநீர்ப் பிரச்சினைகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும். வரி வருவாய் மாநிலங்களுக்கு கிடைக்க, சில வரிகளை மாநில அரசுகளே வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை முக்கியமானவை.

இந்த அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து, நீதிபதி ராஜமன்னார் குழு அறிக்கை அப்போதையை பிரதமர் இந்திராகாந்தியிடமும் கொடுக்கப்பட்டது. இதையடுத்து  மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய சர்க்காரியா குழுவும் அமைக்கப்பட்டது. நீதிபதி ராஜமன்னார் குழு பரிந்துரை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த சர்க்காரியா  குழு விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஆனாலும் மாநில சுயாட்சி நீண்ட கால கோரிக்கையாகவே தொடர்கிறது.

மாநில சுயாட்சி... இது தமிழ்நாட்டின் குரல், கோரிக்கை மட்டுமல்ல, ஆந்திராவின் என்.டி.ராமராவ், கர்நாடகத்தின் ராமகிருஷ்ண ஹெக்டே, மேற்கு வங்கத்தின் ஜோதிபாசு, காஸ்மீரின் பரூக் அப்துல்லா, அசாம், கேரளம்  என பிற மாநிலங்களும் அவற்றின் முதலமைச்சர்களாக இருந்தவர்களும் மாநில உரிமைகள் குறித்து அவ்வப்போது பதிவு செய்துள்ளனர். அண்ணாவிற்கு முன்பே பிளவு படாத பொதுவுடமை இயக்கத்தின் மத்திய குழு மாநிலங்களுக்கான அதிகாரப் பரவலை வலியுறுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,ஒரே நாடு ஒரே ரேசன், ஒற்றை ஆட்சி, ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம் என்று சர்ச்சையான விடயங்கள் வேகமெடுத்து வரும் நிலையில், மாநில சுயாட்சிக்கான குரல் மீண்டும் வலுவாக எழுந்துள்ளது. மாநில சுயாட்சி மாநில உரிமைக்கானது மட்டுமல்ல. இந்தியாவின் பல்வேறு மொழி, இன, கலாச்சார, பண்பாட்டு  அடையாளத்தைக் காப்பதாகும். இது பிரிவினைக்கான கோரிக்கையும் அல்ல.  அதிகாரத்தை பரவலாக்கி, அமெரிக்கா, கனடாவைப் போல் இந்தியாவையும் வலுவாக்கும் முயற்சி. எனவே மாநில சுயாட்சி என்பது கலகக் குரல் அல்ல. உரிமை முழக்கமாகும். நாட்டை வலுப்படுத்த, பன்முகத் தன்மையைக் காக்க. வளர்ச்சியை முன்னெடுக்க....*மாநில சுயாட்சி* காலத்தின் தேவையாகும் என்கிறார்கள்.

மாநில சுயாட்சியை  முன்வைத்த, இப்போதும் முன்வைக்கும் தலைவர்கள். மாநில சுயாட்சிக் குரல் வலுவாக எழுந்தாலும், சீனா, பாகிஸ்தான் யுத்தங்களின் போது அதிகமான நிவாரண நிதியை சேகரித்து கொடுத்து, இந்தியாவின் ஒற்றுமைக்கு இலக்கணமாக இருந்தது தமிழ்நாடு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: