தாய்க்கு பெயர் தந்த தனையன்... தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா!

அண்ணாவும் பெரியாரும்

 • News18
 • Last Updated :
 • Share this:
  தலைவரென்பார், தத்துவமேதை என்பார், நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார், சொல்லாற்றல் சுவை மிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார். அத்தனையும் தனித்தனியே சொல்லுதற்கு நேரமற்றோர் அண்ணா என்ற ஒருசொல்லால் அழைக்கட்டும் என்றே அவர் அன்னை பெயரும் தந்தார். அண்ணா மறைந்த போது கருணாநிதி எழுதிய கவிதாஞ்சலி இது.

  உண்மைதான். பேச்சாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், தலைவர் என்று பன்முக ஆளுமை கொண்டவர் அண்ணா. பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்டு, காலம் முழுக்க பகுத்தறிவுச் சிந்தனைகளை மேடை தோறும் முழங்கி வந்த அண்ணா சிறு வயதில் கடவுள் பக்தராகத்தான் இருந்தார். அதிலும் பிள்ளையார் பக்தராக இருந்திருக்கிறார். அண்ணாவின் பக்தி கொஞ்சம் வித்தியாசமானது. கூட்டமில்லாத கோவிலுக்குச் சென்று தனியாக வழிபடுவதில் ஆர்வம் கொண்டவர் அண்ணா.

  1934-ல் அண்ணாவின் முதல் சிறுகதை  ‘கொக்கரக்கோ’ ஆனந்த விகடனில் வெளியானது. அதற்கு அவருக்கு அந்தக் காலத்தில் 20 ரூபாய் பரிசும் கிடைத்தது. புலிநகர், பிடிசாம்பல், திவ்யஜோதி, தஞ்சை வீழ்ச்சி, ஒளியூரில் போன்ற சிறுகதைகள் அண்ணாவின் வரலாற்றுப் படைப்புகள். சமூகச் சிறுகதையானாலும், வரலாற்றுக் கதையானாலும், திரைப்படக் கதையானாலும், அத்தனையிலும் தமிழ்மொழியின் அழகில் பகுத்தறிவுச் சிந்தனையைத் தோய்த்துக் கொடுத்தார் அண்ணா.

  அண்ணாவும் கருணாநிதியும்


  சிறு வயதில் தெருக்கூத்துப் பிரியராக இருந்தார் அண்ணா. அதுதான் அவரைப் பின்னாளில் மிகப்பெரிய நாடகப் படைப்பாளியாக திரைப்பட வசனகர்த்தாவாக மாற்றியது. அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி ஆகிய நாடகங்கள் மிகவும் பிரபலமானவை. அவை பின்னாளில் திரைப்படங்களாகவும் உருமாறின. சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம் ஆகிய இருநாடகங்களையும் எழுதியதோடு முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவும் செய்தார். சந்திரமோகன் நாடகத்தில் கங்கு பட்டராகவும், நீதிதேவன் மயக்கம் நாடகத்தில் இராவணனாகவும் நடித்தார்.

  அண்ணா எழுதி 1948-ல் வெளியான `நல்லதம்பி’ திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் கதாநாயகனாக நடித்திருந்தார். பெரியாரின் பகுத்தறிவுக் கருத்துக்களுக்கு அண்ணா வசன வடிவம் கொடுத்திருந்தார்.

  அண்ணா ஒரு படிப்பாளி. 1928 முதல் 33 வரை பச்சையப்பன் கல்லூரியில் அவர் பயின்ற அந்த ஐந்து ஆண்டுகளில் பாடப் புத்தகங்களைத் தாண்டி நூலகங்களுக்குச் சென்று பல்வேறு புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். சென்னை தங்க சாலையில் இருந்த பண்டின் ஆனந்தம் நூலகம், செயின் சேவியர் தெருவில் இருந்த மாநகராட்சி நூலகம், கன்னிமாரா நூலகம் ஆகிய மூன்று நூலகங்களும் அண்ணாவின் மனம் கவர்ந்த நூலகங்கள்.

  அண்ணாவின் பேச்சைப் பேச்சு என்று சொல்ல முடியாது, அது சொற்பொழிவு. மழையாப் பொழியும் அந்தத் தடங்கலற்ற சொற்களில் அரசியலோடு, அபூர்வமான கருத்துக்களும் வரலாற்றுச் செய்திகளும் மறக்காமல் இடம் பிடிக்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் திமுகவின் பொதுக்கூட்டங்களை மாலை நேரக் கல்லூரிகள் என்று சொன்னார்கள். தமிழில் அடுக்குமொழியில் எப்படி எல்லாம் பேசுவாரோ, அதற்குக் கொஞ்சமும் மாறாமல் ஆங்கிலத்திலும் பேசக் கூடிய வல்லமை படைத்தவர் அண்ணா.

  கம்பராமாயணத்தையும், பெரியபுராணத்தையும் எரிக்க வேண்டும் என்று ரா.பி.சேதுப்பிள்ளையையும் நாவலர் சோமசுந்தர பாரதியையும் எதிர்த்து சொற்போர் புரிந்தார் அண்ணா. அது பின்னாளில் `தீ பரவட்டும்’ என்ற பெயரில் புத்தகமாகவும் வெளிவந்தது. அண்ணாவின் சொற்போரைப் பற்றி கருணாநிதி பின்னாளில் எழுதிய தனது கவிதாஞ்சலியில், சோமசுந்தர பாரதியை அண்ணா சொக்கவைத்தார், பாவம் சிக்க வைத்தார் என்று எழுதினார். மேடைத் தமிழ் வளர்த்தவர் அவர். மேடைகளில் ஒலித்துக் கொண்டிருந்த அக்ராசனாதிபதி என்ற சொல்லை தலைவர் அவர்களே என்று மாற்றியவர் அண்ணா.

  1933-ல் பச்சையப்பன் கல்லூரி இதழில், அண்ணா எழுதிய முதல் ஆங்கிலக் கட்டுரை வெளியானது. மே தினத்தையொட்டி `மாஸ்கோ மாப் பரேட்’ (MOSCOW Mob Parade) என்ற தலைப்பில் அவர் எழுதிய அந்தக் கட்டுரையில், கார்ல் மார்க்ஸ்-ன் உபரி மதிப்புக் கொள்கைதான் சோஷலிசத்தின் முதுகெலும்பு எனக் குறிப்பிட்டார். அது மட்டுமல்ல சொத்து உருவாக்கத்தில் பாட்டாளிகள்தான் மிக முக்கியமான காரணிகள் என்ற கார்ல் மார்க்ஸி-ன் அடிப்படைக் கொள்கையைப் புரிந்துகொண்டு அந்த மாணவப் பருவத்திலேயே எழுதியிருந்தார் அண்ணா.

  1933-ம் ஆண்டுதான் அண்ணாவுக்கு பெரியாரோடு அறிமுகம் ஏற்பட்டது. கோவை மாவட்டம் காங்கேயத்தில் செங்குந்தர் இளைஞர் மாநாடு நடைபெற்றது. பெரியார்தான் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவராக இருந்த அண்ணா அந்த மாநாட்டில் பேசினார். அவரது பேச்சு மூடநம்பிக்கைகளையும் சாதிக் கொடுமைகளையும் சரமாரியாகச் சாடியது. அந்தப் பேச்சைக் கேட்ட பெரியார் மெய்மறந்தார். அண்ணாவைப் பாராட்டிய அவர், படித்து முடித்துவிட்டு என்னோடு சேர்ந்து நீங்கள் ஏன் அரசியல் பணி செய்யக்கூடாது என்று கேட்க, அதில் இருந்துதான் அண்ணாவின் அரசியல் பயணம் ஆரம்பித்தது.

  அண்ணா எம்.ஜி.ஆர்


  1936-ல் பெரியார் வடநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது உடன் சென்ற அண்ணா, அங்கு பெரியாரின் பேச்சை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். கொல்கத்தாவில் இடதுசாரித் தலைவர் எம்.என்.ராயைச் சந்தித்த போதும், அம்பேத்காரைப் பெரியார் சந்தித்த போதும், உடன் இருந்து அவர்களின் உரையாடலை மொழி பெயர்த்தவர் அண்ணாதான்.

  1936-ம் ஆண்டு சென்னை நகரசபைத் தேர்தல் நடந்தது. அப்போது பெத்துநாயக்கன் பேட்டைத் தொகுதியில் நீதிக்கட்சி சார்பில் வேட்பாளராக நின்றார் அண்ணா. அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பாலசுப்பிரமணிய முதலியார் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார் அண்ணா. சேரிப்பகுதிக்கு ஓட்டுக் கேட்கச் சென்ற அவர், அவர்களின் வீட்டில் சாப்பிட்டார். அதோடு, நான் வந்தேன் ஓட்டுக் கேட்டேன். உங்கள் வீட்டில் சாப்பிட்டேன். நாளை காங்கிரஸ்காரர்கள் வருவார்கள். அவர்களையும் உங்கள் வீட்டில் சாப்பிடச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார். மறுநாள்   சீனிவாச அய்யர் உட்பட காங்கிரஸ் பிரமுகர்கள் சேரிக்குச் சென்று பரப்புரை செய்தனர். அங்கிருந்த மக்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுப் போங்கள் என்று கையைப் பிடித்துக்கொண்டு கேட்க, வேறு வழி இல்லாமல் அவர்கள் வீட்டில் சாப்பிட்டார்கள். அந்தத் தேர்தல் பரப்புரையில், அண்ணாவுக்கு ஓட்டுப் போட்டால் ஆலயங்களில் விளக்கு எரியாது என்று காங்கிரஸ்காரர்கள் பிரசாரம் செய்தனர். அதற்கு பதிலளித்த அண்ணா, சென்னையில் உள்ள சேரிகளெல்லாம் இருளில் இருக்கின்றன. எனவே அவர்கள் வசிக்கும் பகுதிக்கு விளக்குப் போட்ட பிறகு பணமும் மின்சாரமும் மிச்சப்பட்டால் கோயில்களில் விளக்கு எரியும் என்றார். இப்படிப் பேசினால் எப்படி ஓட்டுக் கிடைக்கும்? அந்தத் தேர்தலில் அண்ணா தோற்றார். தேர்தல் முடிவு வந்த நேரத்தில் அண்ணாவைக் காணவில்லை. எல்லோரும் தேடிக் கொண்டிருக்க, அவர் சர்வசாதாரணமாக பட்டினத்தார் படம் பார்த்துவிட்டு வந்தார். ஓட்டுக் கேட்பதும், பிரசாரம் செய்வதும் மட்டுமே நமது உரிமை. வெற்றி தோல்வி நம் கையில் இல்லை என்றார்.

  1937-ல் இருந்து 1940 வரை அண்ணா ஈரோட்டில் பெரியார் நடத்தி வந்த குடியரசு, விடுதலை, பகுத்தறிவு ஆகிய பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1938 முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பெரியார் தொடங்கிய போது, அதில் பங்கேற்று நான்கு மாதம் சிறை தண்டனை பெற்றார்.

  1942-ம் ஆண்டு அண்ணா திராவிட நாடு பத்திரிகையைத் தொடங்கினார். அந்தப் பத்திரிகைக்கு சொந்தமாக அச்சகம் இல்லாமல், வேறொரு அச்சகத்தில் அச்சிட்டதால் அதிகம் செலவானது. இதனால் பத்திரிகை நஷ்டத்தில் இயங்கியது. இதை அறிந்த பெரியார், தனது விடுதலைப் பத்திரிகையில் அண்ணாவுக்கு அச்சகம் தொடங்க கட்சிக்காரர்கள் அனைவரும் நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிதி குவியத் தொடங்கியது. நிதி தேவைக்கு அதிகமாகக் குவிந்ததால், அண்ணா, நிதி போதும். இனி யாரும் அனுப்ப வேண்டாம் என்று திராவிட நாடு பத்திரிகையில் எழுதி அதை நிறுத்த வேண்டியதாயிற்று.

  திராவிட நாடு பத்திரிகையில் அண்ணா எழுதிய கட்டுரைகள் வகுப்புக் கலவரத்தைத் தூண்டுவதாகக் குற்றம்சாட்டி 3000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆரியர் திராவிடர் இடையே உள்ள வரலாற்று முரண்பாட்டை விளக்கி அண்ணா படைத்திருந்த `ஆரிய மாயை’ புத்தகம், அந்தக் காலகட்டத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது. அந்தப் புத்தகத்திற்கு 700 ரூபாய் அபராதமும் அதைக் கட்டத்தவறினால் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது. ஆனால் அதன்பிறகுதான் அந்தப் புத்தகம் மேலும் பிரபலமடைந்தது. தடையை மீறி 150க்கும் மேற்பட்ட இடங்களில் அந்தப் புத்தகம் வாசிக்கப்பட்டது.

  அண்ணா தனது அரசியல் பணிக்காக தன்னைத் தேடி வந்த பல வேலை வாய்ப்புக்களை மறுத்தார்.1936-ம் ஆண்டு குமாரராசா முத்தையா செட்டியார் அண்ணாவை உதவியாளராக வேலைக்குச் சேர்த்துக் கொள்வதாகச் சொல்லி அதற்கு மாதம் 120 ரூபாய் தருகிறேன் என்றார். அதை ஏற்கவில்லை அண்ணா. 1937-ம் ஆண்டு அண்ணா குடியரசில் துணை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ஈரோடு வந்த ஜி.டி.நாயுடு, அண்ணாவை, என்னிடம் உதவியாளராக வந்துவிடுங்கள் மாதம் 250 ரூபாயும் காரும் பங்களாவும் தருகிறேன் என்றார். அதையும் அண்ணா மறுத்துவிட்டார்.

  ஆளுநர் ஆய்வு, மாநில உரிமைகளைப் பறிக்கிறது என்று இன்று சர்ச்சை நடைபெற்று வருகிறது. 1952-லேயே ஆளுநர் நியமனக் கண்டனக் கூட்டங்களை நடத்தியவர் அண்ணா. ஆளுநரை மக்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் குரல் கொடுத்தார். அன்றைக்கு அவர் வைத்த இந்தக் கோரிக்கைக்கு இப்போதும் உயிர் இருக்கிறது.

  இந்திய அரசியல் சட்ட நகலை எரித்து பெரியார் ஒரு போராட்டம் நடத்தினார். இது பற்றிக் கருத்துத் தெரிவித்த நேரு, முட்டாள்தனமானது… நான்சென்ஸ் என்றும், பெரியாரை நாடு கடத்த வேண்டும் என்றும் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அண்ணா, நேருவுக்கு எதிராகக் கருப்புக் கொடி போராட்டத்தை அறிவித்தார். 1958 ஜனவரி 6-ம் தேதி நிகழ்ந்த போராட்டம் காரணமாக தமிழகத்தை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. அன்றுதான் நேரு தமிழகம் வந்தார். தடைகளையும் அடக்குமுறைகளையும் மீறி அவருக்கு கருப்புக் கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர் திமுகவினர்.

  அண்ணா ஒரு போராட்டத்தை அறிவித்தால், அவரின் கட்டளைக்கு தட்டாமல் செயல்வடிவம் கொடுத்தார்கள் அவரின் தம்பிமார்கள். ராஜாஜி அரசு கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு, வடநாட்டு நிறுவனமான டால்மியாவின் பெயரை தமிழகத்தில் உள்ள கல்லக்குடிக்கு வைப்பதற்கு எதிர்ப்பு என்று போராட்டங்களை நடத்தியதற்காக அண்ணாவிற்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் அந்தப் போராட்டத்தில் இறுதியில் அண்ணாவுக்கு வெற்றியே கிடைத்தது. கல்லக்குடி என்ற பெயரும் நிலைத்தது. குலக்கல்வித் திட்டமும் கைவிடப்பட்டது.

  அண்ணா


  1965-ல் தமிழகத்தில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் அப்போது பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியை அதிர்ச்சியடையச் செய்தது. இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரையில் ஆங்கிலமே அலுவல் மொழியாக நீடிக்கும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். ஜவஹர் லால் நேருவும் அதற்கு முன் ஆங்கிலமே நீடிக்கும் என்ற உறுதி மொழியை வழங்கினார். இவை எல்லாம் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிகள்.

  1952-ல் சென்னை மாகாணத்தில் இருந்து தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட பகுதியைப் பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் மேற்கொண்டார். 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த அவர் கடைசியாக தனது கோரிக்கைக்காகவே உயிரிழந்தார். அப்போது அண்ணா திராவிட நாட்டில், `செத்துக்காட்டினார் சிந்தை நொந்தோம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அதில் சாவது, சகஜம். ஆனால், `செத்துக் காட்டுவது’ சாதாரண விஷயமல்ல. அதிலும், தன்னுடைய கொள்கைக்காக சாவுக்குத் தன்னைத் தத்தம் செய்யும் `சாக்ரடீசுகளைக்’ காண்பது, அரிது மிகமிக அரிது. அந்த அரிய சாதனையைச் செய்து காட்டிவிட்டார், ஆந்திர வீரர் ஸ்ரீராமுலு’ என்று அண்ணா பொட்டி ஸ்ரீராமுலுவுக்கு புகழாரம் சூட்டினார்.

  அதன்பிறகு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, பெரும்பாலும் தமிழ் பேசும் மக்கள் அடங்கிய பகுதிக்கு சென்னை மாநிலம் என்று பெயர் சூட்டப்பட்டது. அதற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி பொட்டி ஸ்ரீராமுலுவைப் போலவே சங்கரலிங்கனார் என்ற காங்கிரஸ்காரர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். 1956 ஜூலை 27-ம் தேதி விருதுநகரில் ஆரம்பித்த அவரது போராட்டம் 76 நாட்கள் தொடர்ந்தது. இறுதியில் அவரும் பொட்டி ஸ்ரீராமுலுவைப் போலவே உயிரிழந்தார்.

  சங்கரலிங்கனாரின் கோரிக்கையை அடுத்து ஆட்சிக்கு வந்த அண்ணா நிறைவேற்றினார். 1967-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினரானார் அண்ணா. அங்கு அவருடைய ஆங்கிலப் பேச்சும், அவர் எடுத்து வைத்த வாதங்களும் நேரு உள்ளிட்ட அகில இந்தியத் தலைவர்களை அசர வைத்தன. அதே ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற, முதலமைச்சரானார். 1967 மார்ச் 6-ம் தேதி பதவி ஏற்ற அண்ணா, ஒரே மாதத்தில் சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். செயின்ட் ஜார்ஜ் கோட்டை தமிழக அரசின் தலைமைச் செயலகம் எனப் பெயர் மாற்றப்பட்டது. அடுத்த மாதம் ஆகாஷ்வாணி, வானொலி என்றி பெயர் மாற்றம் பெற்றது.

  திருமணம் என்ற சடங்கு ஆணுக்குப் பெண் அடிமை என்று சொல்லாமல் சொல்கிறது. இருவரும் சம உரிமையோடு வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பிரசாரம் செய்த பெரியார், அதற்கான அடையாளத் திருமண நிகழ்ச்சிகளை ஏராளமாக நடத்தினார். அக்கினி குண்டம், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் அர்ச்சகர் மந்திரம் போன்ற எந்தச் சடங்குகளும் இல்லாமல் இரண்டு மாலை ஒரு சொற்பொழிவாளர் இருந்தால் போதும் என்று கூறியவை அந்தச் சுயமரியாதைத் திருமணங்கள். அண்ணா ஆட்சிக்கு வந்ததும், இந்தத் திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பை வழங்கினார்.

  அண்ணாவின் ஆயுளும். அவரது அரசியல் வாழ்க்கையும், ஆட்சியில் இருந்த நாட்களும் அவரது உருவத்தைப் போலவே சிறியதுதான். ஆனால் அவரின் சாதனைகள் அவரின் அறிவைப் போல அளவிட முடியாதவை.

  - சிவஞானம் 
  Published by:Ilavarasan M
  First published: